Thursday, January 31, 2008

காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ? - எழுத்துச்சித்தரின் பதில்கள்


ஐயா, உங்கள் பார்வையில் …..

1) அழகு என்பது என்ன ?


கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.

2) காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?

மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.

3) கடவுள் உண்டா ?

உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.

4) பணம் முக்கியமா ?

முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.

5) அரசியலில் ஈடுபடுவீர்களா ?

அரசியலில் ஈடுபட எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்னால் சிலவற்றைத் தான் தாங்க முடியும். சில விஷயங்களிலிருந்து விலகியிருக்கத் தான் விருப்பம். உதாரணத்திற்கு மேடைப் பேச்சு எனக்கு விருப்பமில்லாத
விஷயம். பேசாத அரசியல்வாதி எங்கேனும் உண்டா.

6) படிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

வெறும் ஏட்டுக் கல்வி எதற்கும் உதவாது. அனுபவ அறிவும், ஆன்றோர் வாக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தவரை நன்கு உயர்த்தும். ஏட்டுக் கல்வியும், அனுபவ அறிவும், ஆன்றோர் சொல்லும் ஒன்று கலந்து உள்ளே ஏற்படுத்தும் தெளிவே படிப்பு. இந்தத் தெளிவு தான் வாழ்க்கைக்கு கைவிளக்கு.

7) வரலாறு பாடமாக படிப்பது அவசியமா?

அவசியம். பாடமாகப் படிக்க ஆரம்பித்து , வரலாறு அறிவதில் ருசி ஏற்பட்டு, அதன் மூலம் ஏற்படும் பிரமிப்பை அனுபவிப்பது நல்லது. என் தகப்பன்,நான், என் பிள்ளை, பேரன் இவர்கள் மட்டுமே உலகம் என்று கொள்வது பேதமை. பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மனிதர் மிக நாகரிகமாக வாழ்ந்ததற்கு அடையாளங்கள் உள்ளன. வரலாறு புரியும் போது இனி வருவது பற்றி கவலையும் ஏற்படும். இந்த கவலையே அடுத்த தலைமுறையினரின் மீது அக்கறையாக மாறும்.

Wednesday, January 16, 2008

பாலகுமாரன் ஏன் ஆன்மீகவாதியானார்


எங்கள் குருநாதர் எழுத்துசித்தரிடம் நாங்களும் எங்களைப்போன்ற பலரும் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்


1.அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்?

அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை ஒத்துதான் இருக்கிறது। காமம் என்பதை தவறு என்று ஒருபோதும் இந்துமதம் என்கிற சனாதன தர்மம் சொன்னதேயில்லை.

காதலின் வெளிப்பாடு காமம். அது நெறிமுறைப்பட்டதாக இருப்பின், மிகச்சிறந்த அனுபவமாக, நிம்மதி தரும் விஷயமாக உடம்பையும், மனதையும் குளிர வைக்கின்ற ஒரு தந்திரமாக செயல்படுகிறது.

தந்திரா என்று வழங்கப்படும் சனாதன தர்மத்தின் ஒரு கொள்கை காமத்தை காதலோடு ஈடுபடசெய்கிறது. அடுத்த உயிரின் மீது, மனிதர் மீது கருணையும்,மதிப்பும் கொண்டிருந்தால் தான் அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருக்கும். அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருந்தால் தான், இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் எந்த விஷயமும் சிறப்பாக அமையும்.

காதல் இத்தகையது. நேசிப்பது என்பது உண்மையாக இருந்துவிட்டால் அதே விதமான அன்பு வெகு வேகமாக திரும்ப கிடைக்கும். திக்குமுக்காட வைக்கின்ற அந்த அன்பை அனுபவிப்பதுதான் ஆன்மீகம்.

காமம் என்ற வார்த்தைக்கு ஆசை என்று பொருள், எந்த ஆசையையும் சுயநலத்தோடு நிறைவேற்றிக்கொள்ள விரும்பும்போது, அடுத்தவர் என்ன அவஸ்தைப்பட்டாலும் சரி. எனக்கு வேண்டியதை நான் எடுத்துக்கொள்வேன் என்று ஆத்திரத்தோடு அணுகும் போது அந்த அனுபவம் கசப்பானதாக மாறிவிடுகிறது. காமம் அதாவது ஆசை தவறென்று பிதற்ற வேண்டியிருக்கிறது.

உனக்கு இன்று என்னாயிற்று, தலைவலியா, மூச்சுத்திணறலா, தூங்கு என்று மனைவியை தூங்க வைத்து தலைக்கு தைலம் தடவி, காது வரை கம்பளி போர்த்தி கருணையோடு நடத்தினால், உடல்நலம் தேறிய போது மனைவிக்கு உவகை பொங்கும். பதிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். நிச்சயம் செய்வாள்.

அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது, எ ங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கும்.

நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன்। அவ்வளவே .அங்கு அன்பு தானாக இருக்கும். அன்புதான் ஆன்மீகம்.



2. உங்களின் இந்த ஆன்மீக வளர்ச்சிக்கு காரணம் யார்? உங்கள் குருவா?

இல்லை.
ஆரம்பத்தில் என் தாயார் இந்து சமயத்தில் அதிகம் நாட்டம் வர காரணமாய் இருந்தார். என் தாயார் ஒரு தமிழ் பண்டிதை . 36 வருடம் தமிழ் பண்டிதையாக பணிபுரிந்தவர். எங்கள் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக புத்தகங்கள் இருக்கும். தேவார திருவாசகங்களை 10 வயதிற்குள் அதிகம் மனப்பாடம் செய்தேன். தினமும் மாலையில் வட்டமாக அமர்ந்து பக்திப்பாடல்கள் பாடுவது வழக்கம், அப்போது புரியாமல் மனனம் செய்த பாடல்கள், இப்போது புரிந்து பெரிய உவகையை கொடுக்கின்றன.

வாழ்வின் பிற்பகுதியில், திருவண்ணாமலை மகான் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அன்பால் பல ஆன்மீக அனுபவங்களும், தெளிவும், திடமும் ஏற்பட்டன, எல்லாவற்றிற்கும் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு.

உண்மையான தேடல் உள்ளே இருக்க வேண்டும். என்ன இந்த வாழ்க்கை? ஏன் இந்த பிறப்பு என்ற கேள்வி எழ வேண்டும். சுக சவுகரியங்களில் திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறபோது, மிகப்பெரிய கேள்வி எழும்போது அந்த விடை தேடலில் சிலருக்கு சில சமயம் வெற்றி கிடைத்து விடுகிறது.

Wednesday, January 9, 2008

பிரார்த்தனை என்பது என்ன? அது எங்கிருந்து யாரை நோக்கி துவங்குகிறது? பதிலளிக்கிறார் எங்கள் குருநாதர் எழுத்து சித்தர்.


கடவுள் என்ற விஷயத்தை வேத விவகாரமாக எடுத்துக்கொண்டு தனக்குள் மூழ்கி, மற்ற எண்ணச்சலனங்களை நிறுத்தி, தான் எது என்பதை அறிந்து கொண்டு தெளிவது மிகுந்த சிறப்புடையது। ஆனால். அது எளிதில்லை. எல்லோராலும் கைகொள்ளும் விஷயமில்லை.
அதற்கு பதிலாய் உலக வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடி அது நிறைவேறுவதற்காக, எங்கும் பரந்து எல்லாமுமாய் இருக்கின்ற இறைவனை நோக்கி கைகூப்பி எனக்கு இதைக் கொடு என்று இறைஞ்சுவது மனிதர்கள் இயல்பு. எது எல்லாமுமாய் எங்குமாய் இருக்கின்ற இறைவன் என்று யோசித்து உள்ளுக்குள்ளே அதைத் தேட முற்படும்போது, தன்னுடைய மனதின் மீது மனம் பலமாகப்படுகிறது ஒரு புள்ளியில் மனம் ஆழ்ந்து நிற்கிறது. அதனால் பதட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படுகிறது. தனக்குள்ளே தானே, தன்னைப்பற்றி யோசித்து, தன்மீது அதிகப்படியான நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

விநாயகா.. வெங்கடாஜலபதி.. மூகாம்பிகைத்தாயே.. என்று கை கூப்புகிற போதே நான் என்னை நோக்கி கைகூப்பி, என்னைப்பற்றி எனக்கே சொல்கிறேன். எனக்கு இது வேண்டும். இதிலிருந்து என்னைக் காப்பாற்று என்று சொல்கிறபோது அந்த விஷயம் நோக்கி நான் அதிகம் மும்முரமாகிறேன். அதற்காகக் கடுமையாக உழைக்கிறேன்.

பிரார்த்தனை என்பது நெஞ்சோடு புலத்தல். தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல். தனக்குத்தானே பேசி தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுதல். தனக்குத்தானே பேசிக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ளுவதற்கு கடவுள் என்கிற உருவமற்ற, எங்கும் நிறைந்த ஒரு சக்தி மனித குலத்திற்கு அவசியம். இதன் பொருட்டுதான் இந்தக் கடவுளைப்பற்றி பிரசாரம் செய்திருப்பார்களோ, தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பார்களோ, ஆலயம் என்ற ஒரு இடம் கொடுத்திருப்பார்களோ. ஹோமம், யக்ஞ்ம் என்ற நியதியை ஏற்படுத்தியிருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.

பிரார்த்தனைதான் உண்மையான ஹோமம்। உடம்புதான் ஆலயம். உள்ளே “தான்” என்று கொள்கின்ற அந்த நினைப்புதான் கடவுள். தன்னை நோக்கி தான் பேசுதலே மிகப்பெரிய மந்திரஜபம்.
தன்னுள் மூழ்கி தான் யாரென்று தேடமுடியாதவரை ஞானிகளும், ஞானிகள் ஏற்படுத்திய மதங்களும் இப்படித்தான் வழிப்படுத்துகின்றன। பிரார்த்தனை செய் என்று தூண்டுகின்றன. செய்வன திருந்தச்செய் என்பது மகா வாக்கியம்.
பிறருக்கான வேலையில் கூட ஏமாற்றுதல் இருக்கலாம். தனக்குத்தானே பேசிக்கொள்வதில் ஏமாற்றுதல் இருந்தால், அதைவிட முட்டாள்தனம் உண்டா? தான் செய்கின்ற பிரார்த்தனையில் கூட அக்கறையின்மையும் ஒருமுகப்படுத்தலும், கவனமும் இல்லாமலிருப்பின் வாழ்வதில் அர்த்தமுண்டா.

என்ன வேண்டும் என்பதைகூட சரியாகக் கேட்கத் தெரியாவிட்டால், உண்மையாகக் கேட்கத்தெரியாவிட்டால் வாழ்க்கை மிகப்பெரிய அபத்தமாகப் போய்விடும்.

பிரார்த்தனை செய்ய யார் கற்றுக் கொடுகிறார்கள்? யார் தூண்டுகிறார்கள்?.

தாயோ.. தந்தையோ.. நண்பரோ இதற்கு உதவி செய்ய முன்வரினும் உங்களுடைய துக்கம்தான், உங்கள் துக்கத்திலிருந்து எழுகின்ற உங்கள் ஆசைதான் உங்களை பிரார்த்தனை செய்ய மும்முரப்படுத்தும். பிரார்த்தனைகள் மேம்போக்காக இல்லாமல் ஆழமாய் இருக்க நம்முடைய வேதனைகள் உதவி செய்யும்.

(பாலகுமாரன் – சில கோயில்கள் சில அனுபவங்கள் - குமுதம் பக்தி - ஜனவரி 1-16-2008)