Tuesday, July 21, 2009

உடையார் - சில எதிரொலிகள்

இனிய தோழமைக்கு வணக்கம்.

மயிலை முண்டகக்கண்ணி அம்மன் சந்நிதியில் “உடையார்” மூன்றாம் பாகம் புத்தகத்தை ஆசி பெற வைத்த போது, ‘இவ்வளவு பெரிய புத்தகத்தை நானா எழுதினேன்’ என்று கர்வப்பட வேண்டிய வேளையில் குழந்தையின் குதூகலத்தோடு வியந்தது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.

சிறு வயதில் சரித்திரம் இராஜராஜனை ‘ஒரு மாமன்னன்’ என்று சொல்லிக் கொடுத்தது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ பல படிகள் உயர்ந்து சென்று, இராஜராஜனோடு நாமும் வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று ஒரு ‘Dream Boy’ ஆக கற்பனை செய்து கிறங்கிப் போகும் கிக் கொடுத்தது.

ஆனால், உங்கள் உடையார் நெருக்கமாகத் தொடுத்த பூமாலையைப் போல சம்பவங்களையும், சரித்திரத்தையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து ஸ்ரீ இராஜராஜத் தேவரின் வாழ்க்கை பற்றி அவருடனேயே வாழ்ந்து அனைத்தையும் பார்த்து பதிவு செய்தது போல் கதை சொல்லி இருக்கும் சாமர்த்தியம் அப்பப்பா. ‘எப்படி பலப்பல விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கோர்வையாக உங்களால் எழுத முடிந்தது’ என்று வியக்க வேண்டியவர்கள் நாங்கள்தான். நீங்கள் இல்லை.

சேர தேச காந்தளூர்ச்சாலை கடிகைப் போரில் அந்தணர்களைக் கொன்ற பாபம் நீங்க, குருநாதர் கருவூர் தேவர் சொற்படி இராஜராஜன் வேண்டிக்கொள்ள, தஞ்சை பெரிய கோயிலுக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது.

இறை மிகப் பெரியது. அதற்கு முன்பு நாம் தூசு என்று சரணடைதல் வர, அமைதி வரும். சக உயிரின் துடிப்பும், துயரமும் புரியும். புரிதல் அதிகரிக்க தோழமை கெட்டிப்படும். பகை அழியும். அன்பு மலரும்’.

இந்த உண்மையை மிகப் பெரிய கோயிலாகக் கட்டி மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பாரத தேசத்தின் வட பகுதியிலுள்ளவர்கள் கயிலாயத்தை எளிதாக தரிசனம் செய்யலாம். ஆனால் தெற்கே உள்ளவர்களுக்காக மேரு மலையையொத்த கோபுரம். விமானம். உள்ளே மிகப்பெரிய லிங்கம், கயிலாயத்தில் இருக்கும் மானசரோவரைப் போலவே கோபுரத்திலிருந்து விழும் நீரும், அபிஷேக நீரும் வாய்க்கால்கள் வழியாகக் சென்றடையும் குளங்கள் என தஞ்சை பெரிய கோயிலை தக்ஷிண கயிலாயமாக கட்டுவதற்காகவே போர். போரில் கிடைத்த செல்வங்கள். அடிமைகள். அந்த பல்லாயிரக்கணக்கான அடிமைகளை அன்பால் ஆளுமை செய்து நேர்த்தியுடன் வாழ்ந்து, தன் சந்ததி மட்டுமல்லாது சோழ தேசத்தின் நாகரிகமான சைவமும், தமிழும் பல்லாண்டு வாழ வைத்த உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவரை நீங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

ஒரு உயர்ந்த செயல் ஒருவரால் மட்டும் முடிவதில்லை. கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு பல பேருடைய ஒருங்கிணைந்த செயல்களால் முடிகிறது என்பதைத் தந்தையின் கனவைப் புரிந்து கொண்டு சோழ தேசத்தைப் புலி போல் காத்த இராஜேந்திரன், சக்கரவர்த்தியின் நிழல் போல் தோள் கொடுத்து அவர் காரியம் எல்லாவற்றிலும் கைகொடுத்த பஞ்சவன் மாதேவி, மிகக் கூர்த்த அறிவுடைய சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர், சோழ மண்ணின் மீது காதலோடு இருக்கும் அருண்மொழி, இறையுணர்வோடு மனிதத்தை வளர்க்கும் கருவூர்தேவர், நல்வழி காட்டும் குலகுரு ஈசான சிவ பண்டிதர், குஞ்சரமல்லர், நித்தவினோதப் பெருந்தச்சர், ஓவியன் சீராளன், ஒற்றன் வைஷ்ணவதாசன் மூலமாக அற்புதமாக உணர்த்தி இருக்கிறீர்கள்.

ஒரு சக்கரவர்த்தி நேரடியாக கோயில் கட்டும் வேலையில் ஈடுபடும்போது, ஏற்படும் சமூக மாற்றங்கள், பல்வேறு சமூகத்தினரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களால் ஏற்படும் குழப்பங்கள். அதை இராஜராஜன் எதிர்கொள்ளும் விதம், எடுக்கும் முடிவுகளோடு கதை சொல்லி இராஜராஜனை, ஒரு மாமன்னனை, அவருடைய குணாதிசயங்களோடு முழுமையாகப் புரிந்துக் கொண்டு பாரட்ட வழிவகுத்துள்ளீர்கள்.

இவ்வளவு விஷயங்களையும் மனதில் தேக்கிக் கொண்டு, பலப்பல தகவல்களை மறக்காமல், பைபாஸ் சர்ஜரி, கண்புரை நோயிற்கான அறுவை சிகிச்சை போன்ற பலவிதமான இடர்பாடுகளுக்கு நடுவே, ‘இராஜராஜனுடைய சரித்திரத்தை நிச்சயம் எழுதி முடிக்க முடியாது’ என்ற சூளுரைகளுக்கிடையே, உங்களால் ஆறு பாகத்தில் உடையாரை எப்படி எழுத முடிந்தது என்ற என் கேள்விக்கும் ஒருநாள் விடை கிடைத்தது.

உங்களுக்கு Cataract Operation செய்வதற்கு முன்பு கண்கள் சரியாகத் தெரியாத நிலையில், படிக்க இயலாமல், உடையார் நான்காம் பாகத்தில் பஞ்சவன் மாதேவி ஈசான சிவபண்டிதரோடு பேசும் இடம் என்னைப் படித்துச் சொல்ல சொன்னீர்கள். நான் ஒரே ஒரு முறை படித்த அந்த விஷயங்களை கிரகித்துக் கொண்டு, அதில் வரும் தேவாரப் பாடல் சரியாக பொருந்தவில்லை என்று ஐந்து பக்கங்களுக்கான விஷயத்தை ஒரு விநாடி கூடத் தயங்காமல், யோசிக்காமல் உடனடியாக மாற்றி அருவியாக டேப் ரெக்கார்டரில் நீங்கள் தெளிவாக பதிவு செய்த நிகழ்ச்சி “இது முப்பது வருடத் தேடல். சோழ தேசத்தின் மீது உங்களுக்கு இருக்கும் மாறாத காதல்” என்பதை புரிய வைத்தது. வாழ்க உங்கள் காதல்.

தஞ்சை பெரிய கோயிலின் ஒவ்வொரு கல்லையும் காண்பித்து, இதை நார்த்தாமலையில் இருந்து இப்படித்தான் கொண்டு வந்திருப்பார்கள் என்று படம் போட்டு விளக்கி, கற்களை ஒன்றோடொன்று பொருத்தி கட்டிய விதத்தை விளக்கி , விமானத்தில் ஏற்றாத மூளியான நந்தியைக் கொண்டு விமானத்தின் எடையை, பரிமாணத்தைச் சொல்லி, விமானத்தின் உட்புறம் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், நாட்டிய முத்திரைகளோடு இருக்கும் புடைப்புச் சிற்பங்கள், விமானத்தின் உட்புறத்தில் காணப்படும் பிந்து போன்ற அமைப்பைக் காண்பித்து, கோவிலை சுற்றி இருக்கும் கல்வெட்டுகளைப் படித்துக் காண்பித்து, சுற்றுசுவர்களில் இருக்கும் புடைப்பு சிற்பங்களை ஏன் அங்கு அமைத்திருக்கக்கூடும் என்று விளக்கி, நுழைவாயில் கோபுரங்களின் மீதிருக்கும் ஒவ்வொரு சுதை சிற்பத்தையும் பற்றி சொல்லி என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.

சாரம் கட்டாமல் மண் மூடி ஏற்றிய விதத்தை விளக்கி, கட்டி முடித்த பின் கொட்டப்பட்ட மண்மேடாக இன்றும் காட்சியளிக்கும் இடத்தைக் காண்பித்த போது திகைப்பாக இருந்தது. உடையாருக்காக நீங்கள் சேகரித்த விவரங்களில் நாற்பது பங்கு தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மீதி அறுபது சதவிகிதம் எழுதப்படாமல் இருக்கிறது என்பது புரிந்தது. ஏனோதானோ என்று வேலை செய்யாமல், அந்த வேலைக்குத் தேவையான முழு முயற்சியும் சிறிதும் அயற்சியில்லாமல் எடுக்கும் உங்கள் நேர்மையை என்னவென்று சொல்ல.......

இராஜராஜன் மூன்று தேவியரோடு தில்லை நடராஜரை தரிசிக்கும் ஓவியக் காட்சி காணக்கிடைக்காத ஒன்று. ‘என் ஐயன், நம் அரசன் இராஜராஜ சோழன் இப்படித்தான் இருந்திருக்கிறார்’ என்று அந்த ஓவியத்தின் கால் தொட்டு நீங்கள் நெகிழ்ந்த போது, அதுவும் ஒரு காணக்கிடைக்காத காட்சி என்று மனம் நெகிழ்ந்தது.

‘தஞ்சைப் பெருவழி என்பது இதுதான்; குடந்தையிலிருந்து இப்படித்தான் இராஜராஜன் வந்திருப்பார்; இங்குதான் தஞ்சை அரண்மனை இருந்திருக்கும்; இது மறவர்களின் படை வீடு; இது அந்தணர்களின் அக்ரஹாரம். இது குதிரை கட்டும் இடம்; இங்கு யானைகள் சோதனை செய்யப்பட்டு இப்படித்தான் சென்றிருக்கும். வீரர்கள் சோதனை செய்து இப்படித்தான் அனுப்பியிருப்பார்கள்; கருமார்கள் வேலை செய்த இடம் இதுதான். பார் இந்த மண்ணின் கருமை நிறத்தை’ என்று தஞ்சையில் ஒரு நாகரிகம் இருந்த தடங்களை ஆயிரம் வருடங்களுக்கப்பால் ஒவ்வொரு இடத்தையும் நீங்கள் விளக்கி, பரவசப்பட்டு, ‘அப்படி நீங்கள் பரவசப்படுவது முதன் முறையல்ல; அந்த இடங்களை முப்பது வருடங்களில் கையில் காசு கிடைத்த போதெல்லாம் அந்த இடங்களை சுற்றிப் பரவசப்பட்டிருக்கிறீர்கள்’ என்று சொன்ன போது, தமிழர் நாகரிகம் மீது குறையாத உங்களின் ஆர்வம் ஆச்சரியத்தைத் தந்தது.

பழையாறை தாண்டி உடையாளூர் சிவன் கோவிலில் சோழப் பரம்பரையினர் இங்கு தான் நின்றிருப்பர் என்று விலகி நின்று வணங்கிய பாங்கும், பால் குளத்து அம்மன் கோலிலிலிருந்த உருளைத் தூணில் பொறிக்கப்பட்டிருந்த இராஜராஜனின் மறைவு செய்தியைத் தடவித் தடவி மன்னனின் மறைவு சிறிது நாட்களுக்கு முன்பு தான் நிகழ்ந்தது போல் கண் கலங்கிய காட்சியும் இன்னும் கண் முன்பே நிற்கிறது.

பஞ்சவன் மாதேவிக்கு பட்டீஸ்வரத்திற்கருகே ஒரு பள்ளிப்படை வீடு உள்ளது; அந்திசாயும் வேளையில் தான் அவள் தரிசிக்க விடுவாள் என்று பரிதவிப்போடு சென்று சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்த பள்ளிப்படை கோவிலை சுத்தம் செய்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வளையல், மஞ்சள் குங்குமம் சார்த்தி ‘அம்மா, உடையாரை நல்லபடியாக முடித்துக் கொடும்மா’ என்று வேண்டி நின்றபோது, சோழ தேசத்தின் மீதுள்ள உங்கள் பக்தி புரிந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் கட்டிய அமண்குடி கோவிலில் நடந்த நிகழ்ச்சி இன்னும் புதிராகவே உள்ளது.

துர்க்கை அம்மனை வழிபட்டு கோவிலைச் சுற்றி வந்த சமயம் கோவிலின் ஒரு மூலையில், இருளில், கிட்டதட்ட தொண்ணூறு வயதுடைய அந்தணர் ஒருவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இருளில் அந்த இடத்தில் அவர் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ள டார்ச் லைட் வீசி பார்த்த போது, அவர் அதை விரும்பாமல் கோயிலின் சுவர் நோக்கி சென்று மறைந்தார். மறுபடியும் பார்க்கும் போது அங்கு வெறும் லிங்கம் மட்டுமே இருந்தது. வெடவெடவென்று பயந்து நடுங்கிக் கொண்டு உங்களைப் பார்த்த போது உங்கள் முகமும் தீர்க்கமாக இருந்தது. ‘இங்கு இப்படித்தான்’ என்று எந்த பதட்டமும் இல்லாமல் நீங்கள் கூறிவிட்டு சென்று விட்டீர்கள்.

‘இது சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் மிகக் காதலாகக் கட்டிய துர்க்கை அம்மன் கோவில். பிரம்மராயர் ஒரு அந்தணர். இந்த கோவிலை விட்டு அவர் வேறு எங்கும் போக மாட்டார்’ என்று எப்போதோ நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது.

சோழர்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், இடங்கள், கல்வெட்டுகள், சோழ சரித்திரம் மீது மிகப் பெரிய காதல் கொண்ட நண்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற பல உதவிகளோடு, சோழ தேசத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து வேறு ரூபத்தில் இருக்கும் சக்திகளும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கின்றன என்பது புரிய, உடையார் வெறும் நாவலல்ல என்பது விளங்கியது.

உங்கள் படைப்புகளில் மகுடமாகத் திகழும் உடையாரை நீங்கள் எழுதவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, நீங்களும் சோழர்களோடு வாழ்ந்திருக்கிறீர்கள்; அவர்களோடு இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்ந்ததை, பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை.

இந்த விளம்பர யுகத்தில், இந்த பிரம்மாண்டமான வேலையை செய்துவிட்டு ‘நானா இதைச் செய்தேன்’ என்று குழந்தையைப் போன்று வியந்த எளிமை உங்களுக்கு உங்கள் குரு யோகி ராம்சுரத்குமார் தந்த வரம்.

உயிரோடு கலந்திருக்கும் உடையார் வேலைக்கு நடுவில் நீங்கள் மேற்கொண்ட சினிமா பணிகளையோ, “வாழையடி வாழை” போன்ற சமூக நாவல்களையோ செய்தபோது, உடையாரைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டு, செய்யும் வேலையிலேயே முழுமையாக எந்த சிதறலுமின்றி ஈடுபடும் உங்கள் சிரத்தை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஒரு உன்னத கலைஞனின் உயர்ந்த படைப்பை, படைக்கும் விதத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி.


என்றென்றும் அன்புடன்
ஜி. சம்பத்லஷ்மி


Thursday, July 16, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - நான் சுயம்பு அல்ல

இந்த ஐம்பத்தைந்து வயதில் வாழ்க்கையில் ஒரு நிலையை எட்டிவிட்ட சுகத்தில் ஏதோ சிலவற்றை சாதிக்க முடிந்தது என்கிற மெல்லிய சந்தோஷத்தில் நடந்தவற்றை, கடந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னை தடவித் தடவி வளர்ந்திருக்கின்றன. அதில் ஒரு கை தழும்பாய் என் நெஞ்சில் இன்னமும் இருக்கிறது.
அந்த கைக்குப் பெயர் பால்யூ. என்னுடைய இருபத்து மூன்று, இருபத்து நான்கு வயதில் நான் மிகத் துடிப்பாக இருப்பேன். எதிர்த்து பேசினாலும் மிக மரியாதையாக எதிர்த்துப் பேசுவேன்.
அந்த கட்டுரைத் தொடர் மிக அழகாக அந்த விஷயங்களை வெளியிட்டிருந்தது.
ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழும் என்.பி. என்று பெயரிருக்கும்.
படித்தவுடன் மனதில் பதிகின்ற பெயர் அது. புதுமையான சப்தம் அது. அதனாலேயே அந்த பெயர், வெகு எளிதாய் எல்லோருக்குள்ளும் பதிந்தது. பதிந்தது மட்டுமல்லாமல் அந்தக் கட்டுரையின் சிறப்பால் அந்தப் பெயருக்கு ஒரு மதிப்பு கூடியது. அந்த என்.பி. ‘பால்யூ’ என்று எனக்கு சொல்லப்பட்டதும் நான் மிக சந்தோஷமாக ஓடிப்போய் அவரை நமஸ்கரித்தேன்.
இந்த கட்டுரைகளைச் சொன்னேன். அவர் ‘அப்படியா, மிக்க நன்றி’ என்று தானே சொல்லவேண்டும். இல்லை. ‘இதெல்லாம் நான் செய்யவில்லை. எங்கள் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி செய்கிறார். அவருடைய உத்தரவின் பேரில், அவருடைய ஆலோசனையின் பேரில், அவர் வழிகாட்டலின் பேரில் இதை வெறுமே கட்டுரையாக நான் எழுதிக் கொடுக்கிறேனே தவிர, இந்த மொத்த மதிப்பும் எங்கள் ஆசிரியருக்குத் தான் போய்ச் சேர வேண்டுமென்று அமைதியாகச் சொன்னார்.
ஆனால் பால்யூ மனிதர்களைப் பார்க்கும் விதமும், விசாரிக்கும் விதமும் எனக்கு புதிதாக இருந்தன.
அது நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டல். ஏதோ ஒரு திருமணத்திற்குப் போய் விட்டு நான் திரும்புகிறேன். என்னுடைய ஸ்கூட்டரை எடுக்க ஸ்கூட்டர் ஸ்டாண்டுக்கு வந்தேன். அதே இடத்திற்கு பால்யூவும் தன்னுடைய மொபட் எடுப்பதற்காக வந்தார்.
வணக்கம் சொன்னேன். வெகு நாளாயிற்று சந்தித்து என்று குசலம் கேட்டேன். அவரும் மிக சந்தோஷமாகவே பேசினார். “சுவாரசியமாக எழுதினால் குமுதம் ஏற்றுக் கொள்ளுமா. அந்த கோட்டைக்குள் புக முடியுமா” என்று அந்த ஹோட்டல் வாசலில் நின்று பால்யூவிடம் கேட்க, “கோட்டை என்று எந்த இடமும் இல்லை. எதற்குள் நுழைய வேண்டுமென்றாலும் அதற்குண்டான விஷயங்களை செய்தால் நுழைந்து விடமுடியும். உங்களுடைய எழுத்து சுவாரசியமாக இருக்கிறது என்று குமுதம் சுற்றி சுற்றி வந்து விஷயங்களை வாங்கும்.
குமுதம் என்ன விரும்புகிறது என்பதை திரும்ப திரும்ப குமுதம் படித்து புரிந்து கொள்ளுங்கள். இதில் கர்வம் பார்க்காதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்பதை இப்பொழுதே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இலக்கிய ரீதியாய் பத்திரிகையில் எழுதுவது ஒரு வழி. குமுதத்தில் எழுதுவது இன்னொரு வழி. ஆனந்த விகடனில் எழுதுவது இன்னொரு வழி. எந்த வழி உங்களுக்கு வேண்டுமென்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
வாசலுக்கு வந்து உள்ளுக்குள் வரவேண்டும் என்று கேட்டால், மாட்டேன் என்று யார் சொல்வார்கள். அதேபோல வாசலுக்கு வந்து வரட்டுமா என்று கேளுங்கள்.” என்று சொல்ல, நான் இதை சுப்ரமணியராஜுவிடம் தெரிவிக்க, நாங்கள் இரண்டு பேரும் குமுதம் போனோம்.
அங்கு போய் வாசலில் நின்று ஆசிரியரிடம் போனில் பேசினோம்.
“எங்கிருக்கிறீர்கள். இங்கு வர எவ்வளவு நேரம் ஆகும்.” என்று குமுதம் ஆசிரியர் கேட்க, “ஒன்றரை நிமிடம் ஆகும்” என்று நாங்கள் பதில் சொல்ல, அவர் திகைத்தார்.
“வாசலில் நின்று பேசினால் வரக்கூடாது என்று என்னால் சொல்ல முடியுமா, வேலைகள் அதிகமிருக்கின்றன. இருப்பினும், ஐந்து நிமிடங்கள் சந்திக்கின்றேன்.” என்று நேரம் ஒதுக்கி அவர் காத்திருந்தார்.
நாங்கள் அவரிடம் போய் வணக்கம் சொன்னோம்.
குமுதம் பற்றிய எங்களுடைய அபிப்ராயத்தை வேகமாகவும், தெளிவாகவும் சொன்னோம். அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். “உண்மையாக பேசுகிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. குமுதம் இலக்கியப் பத்திரிகையாக மாற சொல்கிறீர்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை. இலக்கியத் தரமாக, அதே சமயம் எளிமையாக நீங்கள் எழுதிக் கொடுங்கள். அவை படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் போடுகிறேன்.
எப்பொழுது தருவீர்கள் உங்கள் சிறுகதைகளை.” என்று கேட்டார். என்று கேட்டார். நாங்கள் பேசாதிருக்க “நாளை தர முடியுமா. ஒரு வார பத்திரிகை அப்படித்தான் கேட்கும்.” என்று சொன்னார். நான் சரி என்று சொன்னேன்.
மறுநாள் கொண்டு போய் இரண்டு சிறுகதைகள் கொடுத்தேன்.
இதுதான் என்னுடைய வெற்றி. இந்த வெற்றிக்கு காரணம் பால்யூ.
இடதா, வலதா என்று தீர்மானம் செய் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது பால்யூ. வழிகாட்டியது பால்யூ. இந்த இடம்தான் என்று தேர்ந்தெடுத்தப் பிறகு அந்த இடத்திற்கு சிறிதளவும் வஞ்சனை செய்யாது அதை முழுமையாக ஆக்ரமிப்பதற்கு முயற்சி செய்’ என்று சொல்ல, நான் அதேவிதமாக முயற்சி செய்தேன்.
சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் கவனமாகவும் எழுத முயற்சி செய்தேன். என் இலக்கியத்தரத்தை சற்றும் நழுவ விடாமல் தெளிவாக, எளிமையாக எழுத, என் எழுத்துக்கள் குமுதத்தில் பிரசுரமாக, அவற்றை படித்துவிட்டு குங்குமத்தில் அப்பொழுது ஆசிரியராக இருந்த சாவி எங்களை ‘குங்குமம்’ தயாரிக்க சொன்னார்.
அந்த குங்குமம் தயாரிப்புக்கு பிறகு வாரப் பத்திரிகைகள் ஒவ்வொன்றாய் எங்களை அணைத்துக் கொண்டன.
நான் இன்று சிறப்பாக இருப்பதற்கு காரணம் அந்த நியூ உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வாசலில் ஸ்கூட்டர் ஸ்டாண்டிற்கு அருகே பல நூறு ஸ்கூட்டர்களுக்கு நடுவே என்னிடம் அமைதியாகவும் தெளிவாகவும் அன்று பால்யூ கொடுத்த உபதேசமே.
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னிடம் படர்ந்திருக்கின்றன. பால்யூவின் கை அதில் தழும்பாக இருக்கிறது. என்னால் பால்யூவை, பால்யூவின் உபதேசத்தை மறக்க இயலாது. அன்று முதல் இன்று வரை பால்யூவை எங்கு சந்தித்தாலும் நான் மரியாதையாக எழுந்து நின்று கை கூப்புவது வழக்கம்.
இது என் உள்ளிருந்து கிளம்புகின்ற நன்றி. அவர் பெயரைக் கேட்டதும் எனக்குள் தோன்றும் பிரேமை. ஒரு மூத்த சகோதரன் என்கிற இனிய உணர்வு.
பால்யூ ஒரு அனுபவக்கடல். பத்திரிகை உலகில் அவர் சாதித்த விஷயங்கள் மிக ஏராளம். சிலவற்றை என்னிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அவர் பரிமாறிக் கொள்ளாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நாள் இதை அவர் விரிவாக எழுதவும் கூடும். எழுத வேண்டுமென்பது என் விருப்பம்.

Friday, July 10, 2009

சிவனுக்கு மதுரை என்றால் பிடித்தமா? சோழர்கள் அந்நியமா?

சோழர்கள் பல கோவில்கள் கட்டினார்கள். கற்றளிகள் எழுப்பினார்கள். ஆனால் திருவிளையாடல் புராணம் என்று சிவன் விளையாடியது மதுரையில் தானே? சிவனுக்கு மதுரை என்றால் பிடித்தமா? சோழர்கள் அந்நியமா?



இல்லை. அது அப்படி அல்ல. சோழ நாகரிகமும், பாண்டிய நாகரிகமும் வெவ்வேறு ஆனது.

சோழ நாகரிகம் அந்தணர்களுடைய பாதிப்பால் வடமொழியில் ஈடுபாடு வைத்து, ஆகம விதிமைகளை முன்னிறுத்தி, கோவில்கள் எழுப்பி, பூஜை புனஸ்காரங்கள், ஹோம யக்ஞாதிகளை முக்கியமாக வைத்து, பிறகு தனித்திருந்து ஜபம் செய்தலை தன்னுடைய இயல்பாக, கொள்கையாக வைத்தது.

ஆனால் பாண்டிய மக்களுக்கு வேத விஷயங்களில் ஈடுபாடு இல்லை. அந்த விவாதங்களில், விவகாரங்களில் மனம் செல்லவில்லை. தங்களுக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொரு ஆள் இருப்பதை பாண்டிய மக்கள் விரும்பவில்லை. சிவன் தன் வீட்டுப்பிள்ளை, தன்னோடு விளையாடும் பிள்ளை என்ற நினைப்பை கொண்டவர்கள். விதியின் விளையாட்டை இறைவன் விளையாட்டாக கருதியவர்கள். எப்பொழுதும் இடையிறாது இறைவனோடு இருக்கிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர்கள். இதனால் சிவன் விளையாட்டை திருவிளையாடற் புராணம் என்று சொல்லி மிகச் சாதாரண, மிக உயர்ந்த, பொருளாதாரத்தினால் நலிந்த, மேம்பட்ட மக்களோடு இறைவன் நேரடியாய் வந்து பழகுகிறான் என்பதை கதையாக்கி அனுபவித்து வளர்த்து வந்தார்கள்.

வேத வழி சோழ வழி. பக்தி நெறி பாண்டியன் வழி. இரண்டும் கடவுளுக்கு அருகே வெகு வேகமாக இழுத்துப் போகக்கூடிய வல்லமை உடையவை.

சீன ஸென் கதைகளை பற்றி உயர்வாக சொல்கிறார்களே. உங்களுக்கு அவைப் பற்றி ஏதும் தெரியுமா?


ஆஹா என் இளம் வயதில் பல ஸென் கதைகளை கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவை நீதி நியாயம் சொல்கிற கதைகள் அல்ல. கேட்டுவிட்டு மறந்து விடுகின்ற விடுகதைகள் அல்ல. ஆழ்ந்த தத்துவம் உள்ள அடக்கமான திருக்குறள் வடிவான கதைகள். இரண்டு வரியில் பெரிய தத்துவத்தை திருக்குறள் சொல்லவில்லையா. அதே போல ஒரு சிறுகதையை சொல்லி வாழ்வின் தத்துவத்தை, பிரமாண்டத்தை ஸென், க்வான் என்படும் இந்தக் கதைகள் முயற்சி செய்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். அது ஒரு மிகப் பெரிய மடாலயம். அதில் பல சீடர்களோடு ஒரு தலைமை துறவி இருந்தார். ஒவ்வொரு சீடராக ஞானம் பெற்று, குருவிடம் விடை பெற்று வெளியேறினார்கள். ஒரு சீடர் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படவில்லை.அடுத்த வருடம் போகலாம், அடுத்த வருடம் போகலாம் என்று பல வருடங்கள் அந்த சீடனை இருக்க வைத்துவிட்டார்கள். அந்த சீடன் மனம் நொந்தான். ஒரு வருடத்தில் சின்ன பையன்கள் எல்லாம் வெளியேறி விடுகிறபோது, பண்ணிரண்டு வருடம் வேலை செய்தும் என்னை வெளியேற்றவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான். கோபமானான். நேரே குருவிடம் போனான்.
‘நான் நன்றாக பெருக்குகிறேன், நன்றாக வேலை செய்கிறேன், சுத்தமாக தோட்ட வேலை செய்கிறேன். உங்கள் துணிகளை எல்லாம் துவைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுத்தம் செய்து வைக்கிறேன். அவ்வப்போது சமையலும் செய்து வைக்கிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறேன். இவ்வாறெல்லாம் பணி செய்வதால் என்னை வெளியே அனுப்பாமல் நீங்களே எப்பொழுதும் என்னை வேலைக்காரனாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேலைக்காரனாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. இங்கு வந்தது ஸென் தெரிவதற்கு எனக்கு எப்பொழுது ஞானம் வரும். எப்பொழுது வெளியே அனுப்புவீர்கள். அவர்கள் எல்லாம் ஞானிகளா, நான் இல்லையா’ என்று உரத்த குரலில் கத்தினான்.

அவன் பேசத் துவங்கும் போதே குரு கெட்டிலில் உள்ள தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான். தொடர்ந்து குருவும் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் இடையறாது கத்திக் கொண்டிருந்தான். குருவும் இடையறாது தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார். தேநீர் கோப்பையில் வழிந்து, போப்பையிலிருந்து தட்டில் விழுந்து, தட்டிலிருந்து மேஜையில் விழுந்து, மேஜையிலிருந்து தரையில் விழுந்து மொத்த தேநீரும் கொட்டும் வரை குரு அசையவில்லை. தேநீர் மொத்தமும் கீழே வழிந்து ஓடியது. அந்த தேநீர் குவளையை டக்கென்று ஒரு சத்ததோடு அவர் மேஜையில் வைத்தார். அந்த சீடன் விழித்துக்கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. ‘எனக்கு ஞானம் வந்து விட்டது’ என்று சொன்னான். குரு அவனை வணங்கி ‘போய் வா’ என்று விடை கொடுத்தார்.

என்ன புரிகிறது. உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருந்து, இடையறாது மனம் பேசிக் கொண்டிருந்தால். மனம் பேசுவதை வாய் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. உள்ளே இருப்பது மொத்தமும் வெளியே கொட்டி விடப்பட்டால், அப்பொழுது டக்கென்ற காலி ஓசை கேட்கும். உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. இது போல பல கதைகள் இருக்கிறது.

இன்னொரு கதையும் சொல்வேன்.

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

Friday, July 3, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள்

முதல் கதை உருவானது எப்படி

இந்த இரண்டாயிரத்து இரண்டில் என் வயது ஐம்பத்தியேழு. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு பரபரப்பு. உடம்பில் ஒரு அதீத துடிப்பு என்னை அவஸ்தைக்குள்ளாக்கியிருந்தது. நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் ஒரே இரவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தேன். புகழ் என்கிற விஷயத்தின் மீது அடங்காத தாகம் இருந்தது. ஆத்திரம் இருந்தது. எல்லோரும் என்னை கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெரிய ஏக்கம் இருந்தது.

நான் அறிந்து கொண்டது மிக குறைவு. ஆனால் அதிகம் தெரிந்து கொண்டு விட்டதான ஒரு பிரமையில் இருந்தேன். ஒரு ஆங்கில புத்தகத்தைப் பற்றி யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு, அந்த ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பை மற்றவரிடம் சொல்லி, ‘இதை படித்திருக்கிறாயா’ என்று நான் படித்தவன் போல பீற்றிக்கொண்டேன்.

உண்மையும் இல்லை, உழைப்பும் இல்லை, ஆனால் உயர வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. எனக்கருகே இருந்த பல நண்பர்களுக்கு உயர வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதனால் தனித்து விடப்பட்டேன். ‘வெளியே எங்கும் போகக்கூடாது. மற்றவரோடு அதிகம் பழகக்கூடாது’ என்ற தந்தையின் கட்டளையால் வெளியுலகம் தெரியாமல் இருந்தது.

யார் நல்லவர்.. யார் கெட்டவர்.. எவருக்கு என்ன தெரியும்.. எவருக்கு எது தெரியாது’ என்று புரியாமல் இருந்தது. நான் மிக நன்றாக பாடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கேயோ பிசகியது. ஒவியம் வரையத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில கோடுகள் தவறாகவே விழுந்தன. தட்டிக் கொடுத்து வழி நடத்துபவர் என்று எவருமே இல்லை.

‘அவன் அந்த வேலையில் சேர்ந்துட்டான், இவன் இந்த வேலையில் சேர்ந்துட்டான்’ என்று நூற்றிநாப்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தவனை மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்று எனக்கு காண்பிக்கப்பட்டார். துணிந்து எந்த காரியத்திலும் ஈடுபட முடியாதவர்கள், நல்லவர்கள் என்று வர்ணிக்கப்பட்டார்கள்.
நான் வேலை செய்த சிம்சன் குரூப் கம்பெனியில் ஒரு தகராறு நடந்தது. தொழிலாளர்களுக்கு, முதலாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது அரசுக்கெதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்து, முதன் முதலாக சந்தித்த எதிர்ப்பு அது. மிக வேகமாக அதை அடக்க வேண்டுமென்று அரசு நினைத்தது. அந்த போராட்டத்தின் நீள, அகலம் தெரியாமல் அதில் ஈடுபட்டேன், மிகக் கடுமையாக போலீஸாரால் தாக்கப்பட்டேன்.

‘ஓடிப் போயிடு, ஆளுங்கட்சிக்காரங்க கொன்னுருவாங்க, இல்லை, போலீஸ்காரங்க அடிச்சு உள்ள போட்டுருவாங்க, எங்கனா தப்பிச்சுக்க.’ என்று பயமுறுத்த, அந்த பயமுறுத்தலை உள்வாங்கிக்கொண்டு, நான் சிறிதளவு காசோடு ஊரைவிட்டு வெளியேறினேன். கிட்டதட்ட இரண்டு மாத அலைச்சல்.

எங்கெங்கோ, எந்தெந்த இடத்திலோ வாழ்க்கை. அந்த நேரம் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்பவரின் புத்தகம் கிடைத்தது. அதைப் படிக்க படிக்க நான் தெளிவடைந்தேன். ‘நான் உண்மையாக இருக்கிறேனா’ என்று எனக்கு நானே சோதிக்கின்ற, கேள்வி கேட்டு கொள்கிற, ஆழ்ந்து உற்றுப் பார்த்து கொள்கிற ஒரு வார்த்தையை அந்த புத்தகம் அதாவது, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தான் சொல்லிக் கொடுத்தார்.




"தொழில் நுட்பத்தில் மனிதன் நம்பவே முடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளான். ஆனாலும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே இன்றும் சண்டையிட்டுக் கொண்டு, பேராசையுடையவனாக, பொறாமையுடையவனாக, பெரும் துக்கத்தைச் சுமந்து கொண்டு வாழ்கிறான்”
--- ஜே. கிருஷ்ணமூர்த்தி


‘எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் நான் இன்னவிதம் என்று ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனைகளையெல்லாம் உடைத்தெறிந்து ‘உண்மையில் எனக்கு என்ன தெரியும். நான் யார்’ என்று ஆராய, ஒன்றுமே பிடிபடாமல் ஒரு வெறுமை ஏற்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல என்னை நான் பலப்படுத்திக் கொள்ளத் துவங்கினேன். எவரோடும் பேசாமல் எதிரே நடப்பதை உற்றுப் பார்க்க துவங்கினேன். நடந்தவைகளை எண்ணிப் பார்த்தேன்.

அடி தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அடி தாங்க முடியாத அலட்டுகிற ஒரு மனிதனைப் பற்றி, சிந்தித்து கதையாக்கினேன். அதற்குத்தான் ‘மெர்க்குரி பூக்கள்’ என்று பெயர்.

‘எழுத்து ஒரு தந்திரம். இசை ஒரு தந்திரம். சினிமா ஒரு தந்திரம். எல்லா கலைகளுக்கு பின்னாலும் தந்திரம் இருக்கிறது. தந்திரமற்ற வாழ்க்கை இருக்குமோ’ என்று யோசித்தேன். ‘சந்தேகமற்று மற்றவர்களை நம்பினால் என்ன ஆகும்’ என்று சோதனை செய்து பார்த்தேன்.

என்னை வந்து சந்தித்தவர்களை முழுவதும் நம்பினேன். முகத்தில் குத்து விழுந்தபோதும் நம்பினேன். உள்ளே அமைதியாக இருந்து, மற்ற வாழ்க்கையின் தந்திரங்களை, மற்ற மனிதர்களின் ஆசாபாசங்களை உற்றுப் பார்க்க, எழுத நிறைய கிடைத்தது. எழுத எழுத மனம் பக்குவப்பட்டது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. என் வேலை என்ன என்று தெரிந்து.. நான் எழுத்தாளன் என்பதை புரிந்து கொண்டேன். மற்ற வேலைகளில் அவ்வப்பொழுது பேராசையின் காரணமாக மூக்கு நுழைத்தபோதும் மெல்ல பின்வாங்கி ‘என் வேலை எது’ என்று தெரிந்து.. அதில் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறேன். என் எழுத்தும் மற்றவரை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது.