Thursday, October 29, 2009

இராஜராஜ சோழன் என்கிற பெருமிதம்





இன்று ஐப்பசி சதயம். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவரின் பிறந்த நாள். செயற்கரிய செயலை தன் வாழ்நாளில் முடித்து இறவாப்புகழ் பெற்று தன் மக்களோடு இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாமன்னனுக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி.

சோழம் ! சோழம் ! சோழம் !

Tuesday, October 27, 2009

வெற்றி வேண்டுமேனில் - காதல் செய்வீர் உலகத்தீரே

யாரையாவது காதலித்தே ஆகவேண்டும் என்கிற பேராவல் சுமதிக்குள் கிளர்ந்தது. இதற்கு காரணம் ஒரு நடிகர். அவரின் உயரம், அகலம், கள்ளச் சிரிப்பு, கனமான நடை, சரளமான ஆங்கிலம், அவ்வப்போது தலைகாட்டும் கொச்சையான இந்தி, கொச்சையான கொஞ்சும் தமிழ். ‘ஐய்யோ...ஹி ஈஸ் சிம்பிளி கிரேட் யா’ என்று எல்லோர் போலவும் கூவினாள்.

சுமதிக்கு வயது இருபத்தியொன்று. நல்ல உயரம், வளைவான உதடுகள். எடுப்பான அங்கங்கள், ஸ்டைலான மேனி, துருதுரு கண்கள். கொஞ்சம் செம்பட்டையான நீளமுடி. ஆனால் உடலோ கருப்பு, மாநிறத்திலும் சற்று மங்கல். “நீ மட்டும் சிவப்பா பொறாந்திருந்தேன்னா என்னைய மாதிரியே உனக்கு பதினாறு, பதினேழு வயசுலயே கல்யாணம் ஆயிட்டிருக்கும். கொஞ்சம் நிறம் மட்டமா பொறந்துட்டதால, காலேஜ் படிக்கிறே...” அம்மா மெல்லிய பொறாமையோடு பேசுவாள்.

ஜீன்சும், முக்கால் ‘டி-ஷர்ட்டும்’ போட, அவளை வீடு அனுமதித்ததில்லை. கல்லூரியிலும் அவ்வித உடைக்கு கடும் தடை இருந்தது. ஆனாலும் அந்த மாதிரி உடைகள் அவளிடம் இரண்டு இருந்தன. புது நடிகர் ஒருவர் கல்லூரிக்கு வருகிறார் என்றும், மாணவிகள் புதுமையாக ஆடை உடுத்தி வருவது பற்றிதான் பேசினார்கள். என்ன உடையில் வரப்போகிறேன்? என்ன ஸ்டைல்? என்ன நிறம்? என்ன விதம்? என்று உரக்க கூவலாய் விவரித்தார்கள்.

இதை அம்மாவிடம் அன்று மாலை கிட்டதட்ட அதே கூச்சலுடன் சுமதி விவரித்ததும், அம்மா திகைத்தாள். “என்னடி அசிங்கம், இது? நடிகர் வர்றாருன்னு ஒரு டிரஸ்சா? என்ன அர்த்தம். நடிகர் மயங்கிடுவாரா? ‘இவ வேணும்’னு கைகாட்டி உன்னை கூட்டிக்கிட்டு போயிடுவாரா? முட்டா பொண்ணுங்களா. அந்த நடிகருக்கு கல்யாணம் ஆகி, குழந்தை இருக்கு தெரியுமில்லா...”

“ஆக நடிகருக்கு கல்யாணம் ஆனது எங்களுக்கு மறந்துடுச்சு. எங்களைப் பார்த்ததும் அவருக்கு, தன் கல்யாணம் மறக்கணும். அடடா... தப்பு பண்ணிட்டோமே... லட்டு லட்டா பொண்ணுங்க இருக்கே, எதைப் ‘பிக்கப்’ பண்ணுறதுன்னே தெரியலையேன்னு உள்ளே தவிக்கணும்”

“அடி செருப்பால...நினைப்பு பொழப்ப கெடுக்குதுடி”
அம்மா கத்தினாள்
“எங்க பொழப்பே அதாம்மா.”
“எது?”
“ஜாலியா கத்தறது, பாடுறது, ஊர் சுத்தறது. எல்லாரையும் பார்க்க வைக்கறது, பசங்க என்னமா ஜொள்ளு விடுறாங்க தெரியுமா? சாவறானுங்க. காலேஜ், பஸ் ஸ்டாண்ட் முழுக்க பையனுங்கதான். எந்த பஸ் வந்தாலும் ஏறமாட்டான், எங்களையே பார்த்துகிட்டிருப்பானுங்க.
“போதும்டி... கேவலமா இருக்கு.”
“என்ன கேவலம்? உன்னை மாதிரி பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி, ரெண்டு பெத்தபிறகு எவன் திரும்பி பார்ப்பான்?”
“எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வைக்க முடியுமோ அத்தனை பேரை திரும்பிப் பார்க்க வச்சுட்டு, எவனையாவது கல்யாணம் பண்ணிக்கணும்.”

இது பெரிய குற்றமில்லை... வக்கிரமான எண்ணமில்லை. ஆண்களால் பார்க்கப்படவே கூடாது என்கிற தீர்மானங்கள் ஏதுமில்லை. சுமதி அடிக்கடி சொல்வதுபோல், ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ என சிறிது நாள் ஆட்டம். ஆனால், வாழ்க்கை - கண்ணாடிப் பாத்திரம். எவர் லேசாய் இடித்தாலும் நொறுங்கிப் போகும். இதைச் சொன்னால் அந்த வயதுப் பெண்ணுக்குக் காதில் ஏறாது.

ஏனெனில், சுமதி போன்ற பெண்களுக்குக் காதல் என்பது கவர்ச்சியால் ஏற்பட்ட உருவகம். ஆனால், கவர்ச்சி என்பது மனம் செய்யும் கனவு. அழகு என்பது மெல்லிய தோலால் செய்யப்பட்டது. தோலுக்கு அடியில் சதை, ரத்தம், நரம்பு, எலும்பு என்று பலதும் நிரந்தரமாய் குடி இருக்கின்றன. திமிறிய உடம்பும், சிரிப்பும், துள்ளலும் முதலில் காட்சியாகின்றன. வியக்க வைக்கின்றன. பிறகு, பேச்சு கவர்கிறது. அதன்பின் நடவடிக்கைகள் காதலுக்கு வலுவேற்றுகின்றன. காதல் என்பது தன்னைத்தானே கொண்டாடிக் கொள்வது. தான் காதலிக்கப்பட தகுதியானவன் என்கிற நினைப்புதான் இன்னும் தேட வைக்கிறது.


‘ஐய்யோ, செம ஜொள்ளுவுடுது’ என்றோ, ‘பாப்பா வழியுது கண்ணா’ என்றோ பெருமிதம் கொள்வது, ‘தான்’ என்ற அகம்பாவத்தின் இன்னொரு விளைவு-காதல். தன் திறமைபற்றி, அழகுபற்றி, உயரம்-அகலம் பற்றி, வலுவு பற்றி சந்தேகம் உள்ளவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.


தரையில் அமர்வதைவிட, குதிரையில் ஏறி அமர்வது ஒரு தனி கம்பீரம், சுகம். ஆனால் குதிரையேற்றம் கற்றுக்கொண்டு குதிரையேறுவது நல்லதல்லவா? இல்லையெனில், எங்கேனும் விழுந்து வாரி வேதனைப்பட வேண்டுமல்லவா?



காதல் என்பது என்ன என்று புரிந்து கொள்ளாது போவதாலேயே காதல் தோல்விகள் ஏற்படுகின்றன. காதல் என்பது மதித்தல். அடுத்தவரின் மன உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை, திறமைகளைப் புரிந்து மதித்தல், பாராட்டுதல், பாராட்டப் பெறுதல். உற்சாகமடைதல், உற்சாகப்படுத்துதல். வேறுவிதமாய் சொல்வதென்றால், காதல் என்பது அடுத்தவரைக் கவனமாய் பார்த்தல். பரிசீலித்தல்.

ஆனால், சுமதி போன்ற பெண்கள் தங்கள் மேனியெழிலில் மற்றவர் மயங்குதலே காதல் என்று மயங்குகிறார்கள். யார் அதிகம் புகழுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, அவர்களை அறியாமல் ஏற்படுகிறது. அதிகம் புகழுகிறவர்கள் நல்லவர்களா என்கிற கேள்வி வருவதே இல்லை.

ஒரு கல்லூரியில் பேராசிரியர் என்கிற பச்சைப்பொய்யோடு ஒரு முன் வழுக்கைத் திருடன் அறிமுகமாகிப், சுமதியை வானளாவப் புகழ்ந்து, மோட்டர் சைக்கிளில் ‘மாயாஜால்’ அழைத்துப் போய்-கண்ணாடிப் பானையில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவ்வப்போது அசிங்கமாகப் பேசி, கொஞ்சம் தொட்டு, பிறகு நன்கு தொட்டு சூடேறவிட்டு, நாலு நாட்கள் ஏங்கவிட்டு, தேர்வு தாள் திருத்தத்துக்கு மதுரை போனதாய் சொல்ல-‘உங்க பேப்பர் எல்லாம் மதுரைக்குத்தான் வருது. எல்லோரையும் எனக்குத் தெரியும், பொருளாதாரத்துல நீ தங்கப்பதக்கம்’ என்று பேசி, பதிலுக்கு ‘நீ முத்தம் கொடு போதும்’ என்று வளைத்து ஒரே மாதத்தில் குறி வைத்து அவளை வீழ்த்தினான். அவள் அழுதாள்.

“என்ன ருசி... இந்த பத்தொன்பது வயதுக் குட்டி.” அவளைத் தொடர்ந்து உண்ணத் திட்டமிட்டான். ஒரு கிராமத்துக் கோயிலில் தாலி கட்டினான். சாமிக்கு சாராயம் வாங்க இருநூறு ரூபாய் கொடுத்தான். அவனும் குடித்து, அவளையும் குடிக்க வைத்தான். மூன்று நாட்கள் விதம் விதமாய் கிடந்தார்கள்.
வீடு அலறியது. தேடியது. நண்பிகளை விசாரித்தது. விவரம் தெரிந்து போலீசுக்குப் போனால், பத்திரிகைக்கு செய்தி போகும். பிறகு, வீட்டு மானம் போகும் என்று தாங்களே தேடினார்கள். அவள் வந்தவுடன் மூலைக்கு ஒருவராய் நின்று விளாசினார்கள். ஒரு அடி, தலையில்பட்டது. சுமதி மயக்கமானாள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அதற்குள், அவன் அவளைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை கல்லூரியிலும், வீட்டருகிலும் பரப்பினான். வீடு ஒளியிழந்தது.


ஆனால், கடவுள் மிகப்பெரியவர். இன்னொரு பெண்ணிடம் இவ்விதமே அவன் முயற்சிக்க, அவனுடைய பல்வேறு தகிடுதித்தங்கள் செய்தியாயின. சிறைக்குப் போனான். அவனுக்கே கால்ல, கையிலே விழுந்து கட்டிவச்சுடலாம் என்கிற நினைப்பை அறுத்துவிட்டு, சுமதிக்கு வேறு இடம் பார்த்தார்கள். புரிதல் உள்ள ஒருவன் புருஷன் ஆனான். அவள் வாழ்க்கை மறுபடியும் வண்ணத் தோட்டமாயிற்று.

காதல் என்பது மதித்தல், மதிப்பவரை ஏமாற்ற இயலுமா? ஏமாற்றினால் மதித்தல் என்பது உண்டா. மதித்தல் எப்படி ஏற்படும்? உன்னால், உன் உதவியால் நான் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட, மதித்தல் நிகழும். “நான் சுமாரா தான் சமைப்பேன். அதுவும் குழம்பு செய்ய வரவே வராது.” என மனைவி சொன்னால், கணவன் என்ன செய்ய வேண்டும்?

“அப்ப குழம்பே வேணாம்” எனக்கும் குழம்பு அவ்வளவா பிடிக்காது என்று பேசலாம். அல்லது, “குழம்பு செய்யறது பெரிய விஷயமா. சமையல் புத்தகத்தை எடு, துவரம்பருப்பு எங்கே” என கணவனும் களத்தில் இறங்கி, மனைவிக்கு உதவி செய்யலாம். குழம்பு தேனாய் இனிக்கும்.

காரக்குழம்பு, முருங்கைக்காய், மசாலா குழம்பு என்று பலவித பக்குவம், போட்டி போட்டு செய்யத் தோன்றும். எனக்குக் குழம்பு செய்யத் கற்றுக்கொடுத்தீங்க அல்லவா. உங்களுக்கு உடுத்த சொல்லித் தருகிறேன்.
மனைவி, கணவனுக்காகத் திட்டமிடலாம்.

அலுவலகத்துக்கு சீருடை, ‘அதனாலென்ன? அதையே ‘டிரிம்’மா போட்டுக்கலாம். வெளிர்நிற ‘டீசர்ட்’, ஜீன்ஸ், கல்யாண வீட்டுக்கு வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டை. பதக்கம் தர்றாங்களா? கோட் சூட்’ல போங்க. வீட்டுல லுங்கி வேணாம். தடுக்கும். அரைக்கால் சட்டை’என்று சொல்லலாம்.

மதித்தல்தான் அன்பு, அன்புதான் ஒருமுகப்பட்ட அக்கறை. மதித்தல், பொய் சொல்லாது. புறங்கூறாது. அது மிகுந்த சகிப்புத்தன்மை உடையது. கனிவுமிக்கது.

கணேஷ், அலுவலகத்தில் தன் உதவியாளராய் இருந்த விஜயலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க, அவள் திகைக்க, அப்புறம், ‘இத்தனை தெளிவாய் நீ வேலை செய்யுறே. அதான் பிடிச்சுப் போச்சு’ என்று கணேஷ் காரணம் காட்ட,
“நான் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க பி.ஏ.வாக நினைக்கிறீங்க” என்று விஜி மறுக்க, “பி.ஏ.தான் வீட்டுல” என்று அவன் விளக்க, பதினான்கு மாதங்கள் யோசித்து, காத்திருந்து, கல்யாணம் செய்துகொண்டார்கள்.

அந்த பதினான்கு மாதங்கள் பரஸ்பரம் புரிந்துகொண்டார்கள். தங்களைக் கணவன் மனைவியாய் தயார் செய்து கொண்டார்கள். காதல் என்பது திருமண ஒத்திகை. ஒத்திகையில் உண்மையாய் இருந்தால் தான் நீண்ட நெடிய திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொய் சொல்லி, ஏமாற்றிய ஒத்திகை, வாழ்க்கை நாடகத்தை கலைக்கும். பாதியில் நிறுத்தச் சொல்லும். பரிகசிப்பாய் போகும்.

பொய்யற்று இருப்பது ஒரு சுகம்.

வெற்றி வேண்டுமெனில், பொய்யற்ற காதலைப் பழகுங்கள். காதலால் வெற்றியும், வெற்றியால் காதல் பலப்படுத்தலும் எளிதாய் நிகழும்.

Monday, October 26, 2009

உடையார் - சில எதிரொலிகள்




தமிழ் மொழியில் தொகை என்று இலக்கணக் குறிப்பொன்றிருக்கிறது. சொல்லுக்கு முன்பும் பின்பும் தொகை இடம்பெறும். ( உ-ம்.)நம்பினார் கெடுவதில்லை. எதை நம்பினால் இறையை, உண்மையை நம்பினால் கெடுவதில்லை. அதுபோல் தாங்கள் எழுதிவரும் தமிழ் மண்ணின் மாமன்னன் அருண்மொழி என்ற இராசராசச் சோழன் கதையின் தலைப்பையும் நான் தொகையாக உருவகப்படுத்துகிறேன்.

அன்புடையார், பண்புடையார், பக்தியுடையார், பரிவுடையர், பற்றுடையார், அறிவுடையார், நன்றியுடையார், செல்வமுடையார், மனமுடையார், மக்கட்பண்புடையார், பெரும்பேறுடையார், நலமுடையார், அகமுடையார் இவையனைத்தும் அந்தப் பேரரசனுடைய தொகை மொழியாகக் கொள்ளலாம் என்பது என் உள்ளக்கிடக்கை.

ஒன்று செய்வோம்: நன்று செய்வோம்: இன்றே செய்வோம்’ என்ற எண்ணமுடன் பெருவுடையாருக்குக் கற்றளி எழுப்பிய இராஜராஜ சோழக் சக்கரவர்த்திக்கு நாம் என்ன கைமாறு செய்யமுடியும்.

இன்றைக்கு 1002 ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு நவீன வசதியும் இல்லாமால் மக்கள் மேலும், இறைவன் மேலும் வைத்த நம்பிக்கையால் மட்டுமே மாபெரும் கோயில் கட்டி சாதனை படைத்த மன்னனுக்கு நாம் மரியாதையை எப்படிச் செலுத்துவது?.

அன்பே சிவம்.

உடையார் பற்றிய ஒரு முன்னுரையில் தாங்கள் எழுதும் பொழுது சோழ சாம்ராஜ்யத்தில் இக்கோயிலுக்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்ற பிரம்மை தோன்றுவதாகக் கூறுகிறீர்கள். அது பிரம்மையல்ல. உண்மையென்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கும் அப்படி ஒரு பிரம்மை வந்தது.

உடையாரைப் படிக்கும் முன் எனது விபரம் தெரிந்த வயது முதல் சுமார் 10 வயதிலிருந்து 39 வயது வரை பத்து தடவை பிரகதீச்சுரம் சென்றுள்ளேன். அப்பொழுதெல்லாம் சிவபெருமானையும், நந்தியையும் பெரியநாயகி தாயாரையும் வியந்திருந்து அனுபவித்திருக்கிறேன்.

உடையார் படித்த பின்பு அம்மன்னனுடைய முயற்சிகளையும் கட்டுப்பாட்டுடன் சிற்பி, அந்தணர்,அரசர், படைக்கைதிகள், பாணார்கள், தளச்சேரி பெண்டிர், பொதுமக்கள், யானை, குதிரை, மாடு, கொல்லர், தச்சர், ஆதூரச் சாலையினர், பெண்டிர், புலவர் என்று அனைவரையும் அரவணைத்து, அனைவர் பிரச்சினைகளையும் சமாளித்து, திறம்பட சந்திராதிசூரியர் உள்ளவரை நிலைபெறும் வகையில் செய்த கற்றளியின் மேல் நாம் பாதம் வைத்து நடக்கவே மனம் பதறுகிறது. எத்தனைப்பேர் உழைப்புடையது. நாம் முடிந்தால் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கைலாசம் சென்றதுபோல்தான் நடக்கவேண்டும்.

நீங்கள் எழுதுவது கற்பனை கதை அல்ல. நேரடி ஒலி., ஒளிபரப்பு மட்டுமே செய்ய முடிவதைத் தங்கள் எழுத்துகளில் கொண்டு வருவதால் தாங்கள் எழுத்துச் சித்தர் என்பது மிகையாகாது. திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அருளைவிடவும், அகிலாண்டேசுவரித் தாயின் கருணை என்பால் சுரந்ததன் விளைவே தங்களைக் கோவிலில் சந்திக்க நேர்ந்தது. நன்றி.

என்னையும், மனைவியையும், மகனையும் எழுத்துச் சித்தருடைய கைகளும் மனமும் வாழ்த்தியதால் மனம் அடைந்த ஆனந்த பரபரப்பு பத்து தினங்களாகியும் அடங்கவில்லை. கமலா அம்மையார், சாந்தா அம்மையார், சகோதரி ஸ்ரீகெளரி அவருடைய கணவர் கணேஷ், தங்கள் பேரன் ஆகாஷ், இனிய சகோதரன் சூர்யா மற்றும் தங்களுடைய நலமே நான் இறைவனிடம் வேண்டுவது.

பொன்சந்திரசேகர், மற்றும் இதழியல் துறை நண்பர்களுக்கும் நன்றி. உடையார் நினைவாக என் மகன் எடுத்த புகைப்படம் அனுப்பியுள்ளேன். கிடைத்தபின் பதில் எழுதினால் மிகக் கொடுத்து வைத்தவனாவேன்.

நன்றியுடன்
சு.ஞானபாஸ்கரன்

Sunday, October 25, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - என்னை நெகிழ்த்திய சம்பவம்

ஜனனம் என்கிற படத்திற்காக திருச்சியில் ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருந்தேன். சினிமா நண்பர்கள் சற்று தாமதமாக தூங்கி எழுவார்கள். ஒன்பதரை மணிக்கு ஒன்று கூடுவார்கள். விடியலில் எழுந்து விடுவது என் பழக்கம் என்பதால் எழுந்து குளித்து பூஜை முடித்து ஏதேனும் கோயிலுக்குப் போய் எட்டு எட்டரை சிற்றுண்டிக்காக ஹோட்டலுக்குத் திரும்பி விடுவேன். ஹோட்டல் வாசலில் நின்றபடி எதிர்ப்பக்க சினிமா போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஆட்டோ வேகமாக கடந்து போயிற்று. அதே வேகத்தில் கிறீச்சிட்டு நின்றது. வட்டமடித்து திரும்ப என்னிடம் வந்தது.

ஆட்டோவிலிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இறங்கினார். படித்தவர் போலும், எங்கோ வேலை செய்பவர் போல காணப்பட்டார். அவர் தோளில் வேலைக்குப் போகும் பெண்கள் வைத்திருந்த பை இருந்தது. மெல்லத் தயங்கியபடி கீழிறங்கி ‘நீங்கள் பாலகுமாரன் தானே’ என்றார். ‘ஆமாம்’ என்று சொன்னேன். ‘இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று வியப்போடு கேட்டார்.

‘ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருக்கிறேன். போஸ்டரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன விஷயம்’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

அவர் தன் பெயரையும், உத்தியோகத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைச் சந்தித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று கூவினார். வாசகர்கள் என்னைச் சந்திக்கும்போது, சிலர் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். எனினும் இந்த அம்மாள் சட்டென்று கண்ணீர் பெருக்கெடுக்க கைகூப்பி உதடு துடிக்க நின்றது சற்று வித்தியாசமாக இருந்தது.

‘ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நான் ஒரு சாதாரண எழுத்தாளன்’ என்று அமைதியாகச் சொல்ல, அந்த அம்மாள் வேகமாக தலையாட்டி மறுத்தார்.

‘ நீங்கள் யாருக்கு சாதாரண எழுத்தாளன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் வீட்டில் உங்களை வேறுவிதமாக நாங்கள் கொண்டாடுகிறோம். குறிப்பாக என் தாய் உங்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாள். அனேகமாக தினமும் பாலகுமாரன் புத்தகம் புதிதாக ஏதாவது வந்திருக்கிறதா என்று கேட்பார். வரவில்லை என்றதும், ஏதேனும் ஒரு படித்த புத்தகத்தைச் சொல்லி, அதைக் கொடு . படித்துப் பார்க்கிறேன் என்று அந்தப் புத்தகம் வாங்கி பாதியிலிருந்து படிக்க ஆரம்பிப்பார். பலமுறை படித்த புத்தகங்கள். இருப்பினும் கையில் பென்சிலோடு உட்கார்ந்து அடிக் கோடிட்டு அந்தப் புத்தகத்தை அனுபவித்துப் படிப்பார். அப்படிப் படிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய டைரியில் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். மகனைப் பற்றியோ, மகளைப் பற்றியோ, புருஷனைப் பற்றியோ, வேறு உறவுகள் பற்றியோ அவர் அதிகம் எழுதவில்லை. வந்தார்கள், போனார்கள் என்ற விவரம்தான் இருக்கும். ஆனால் உங்களைப்பற்றி மட்டுமே நிறைய அபிப்ராயங்கள் சொல்லியிருக்கிறார்.
அம்மாவின் டைரியை படிப்பதற்காக நான் எடுத்து வந்தேன். இதோ பாருங்கள்’, என்று பையிலிருந்த ஒரு நீலநிற டைரியை பிரித்துக் காண்பித்தார்.
அந்த டைரியில் அழகான கையெழுத்தில் நிறைய என் கதைகளைப் பற்றிய அபிப்ராயங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘சபாஷ்.. பாலகுமாரா.. சபாஷ். நீ அபிராமிபட்டரா’ என்று கேள்வி ஆச்சரியக்குறி எல்லாம் போட்டிருந்தது.

‘உன் கேள்வி பதிலைக் கூட தனிப்புத்தகமாகப் போடலாம். எத்தனை விஷயங்கள் சொல்லித் தருகிறாய்’ என்று எழுதியிருந்தது.

என் தாயார் இறந்தபோது குமுதத்தில் நான் உருக்கமாக எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றிய அபிப்ராயம் இருந்தது.
‘பாலகுமாரன் தாயார் கொடுத்து வைத்தவள். புண்ணியவதி. இந்தக் கட்டுரை முடிவில் இதை படிக்க அம்மா இல்லை என்று பாலகுமாரன் எழுதியிருக்கிறார். அந்த அற்புதமான கட்டுரையை எப்படி அவன் அம்மாவால் படிக்காமல் இருக்க முடியும். அவன் அம்மா இந்தக் கட்டுரையையும் படித்திருப்பாள். படித்து நெகிழ்ந்திருப்பாள். என் மகனே.. என் மகனே.. என்று அவனை கட்டித் தழுவி கொஞ்சியிருப்பாள். பாலகுமாரனுக்கு இது தெரியாது போயிருக்கும். சூட்சுமமாக அவனை நிச்சயம் ஆசிர்வதித்திருப்பாள். பாலகுமாரன் தாய் புண்ணியவதி’ என்று எழுதியிருந்தது.

நான் சற்று மனம் தடுமாறினேன்.
கடவுளே.. யார் யார் மனதையோ நான் தொட்டிருக்கிறேன் என்று நெகிழ்ந்தேன்.

‘அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள் சொல்லுங்கள். உங்கள் வீடு எங்கே இருக்கிறது. அவரை நான் பார்க்கலாமா’ என்று கேட்டபோது அந்த பெண்மணி திகைத்து என்னை பார்த்தாள்.

“என் அம்மா இறந்து மூன்று மாதம் ஆகிறது. மாதாந்திரச் சடங்குகள் அவளுக்காகச் செய்து வருகிறோம். இன்றைக்கு அந்தச் சடங்குகளை முடித்துவிட்டு நான் தாமதமாக அலுவலகத்திற்குப் போகிறேன். அதனால்தான் உங்களைப் பார்த்தேன். உங்களை இந்த நாளில் அம்மாவின் டைரியோடு நான் சந்திக்க முடிந்தது ஆச்சரியம். அம்மாவே உங்களை சந்தித்தாள் என்பது போல எனக்குத் தோன்றியது. என் அம்மா மட்டும் இந்த இடத்தில் உங்களைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியாது. அந்த எழுபத்தியாறு வயது கிழவி உங்களை காலில் விழுந்து நமஸ்கரித்திருப்பாள். கட்டித் தழுவி முத்தமிட்டு ஆசிர்வத்திருப்பாள்” என்று சொல்லி அழத் துவங்கினார்.

ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு பெண்மணி, என் எதிரில் குலுங்கி குலுங்கி முகம் பொத்தி அழ, சுற்றி இரண்டு மூன்று ஆட்கள் நின்று பார்த்தார்கள். நான் மெளனமாக அந்த துக்கத்தை ஏற்றுக் கொண்டேன். அவர் ஆத்மா சாந்திடைய பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன்.

அவர் அழுததற்கு மன்னிப்பு கேட்டு, முகம் துடைத்துக் கொண்டு, என்னிடம் விடைபெற்று ஆட்டோ ஏறி பறந்து போனார். நான் சற்று தள்ளாட்டமாக ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

ஒருவர் மனமுவந்து பாராட்டியிருப்பதை அவர் இறந்த பிறகு அறிந்து கொள்வது என்பதை நான் அப்பொழுது தான் முதன்முதலில் உணர்கிறேன். ஒரு சந்திப்பு நிகழாமலேயே போய்விட்டது என்று ஒரு துக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்னொரு ஜென்மத்தில் நானும், அந்த அம்மாவும் நிச்சயமாக எங்கேனும் சந்திப்போம், உறவாகவோ, நட்பாகவோ, ஒருவரையொருவர் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது.

எல்லா நம்பிக்கையும் அன்பின்பாற்பட்டது.

Friday, October 23, 2009

சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்


காசு சம்பாதிப்பது கடினமாக இருக்கிறதே.....

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது. அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை.

வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும். எது முக்கியம், ஓய்வா, உழைப்பா. எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரம் போல பல பேர் பயன்படுத்துகிறார்கள். “வாழையடி வாழை” என்ற நாவல் முடித்த மறுநாள் நான் அடுத்த நாவல் ஆரம்பித்து விட்டேன். அடுத்த நாவல் முடித்த பிறகு சினிமா விவாதங்களில் கலந்து கொண்டேன். சினிமா விவாதங்கள் முடித்த பிறகு இன்னொரு கம்பெனிக்கு பயணப்பட்டு விட்டேன். பயணத்தின் போது அடுத்த நாவல் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். ஆனால் எவ்வளவு காசு வேண்டும் என்பது முக்கியமான விஷயம். அளவில்லாத காசுக்கு ஆசைப்பட்டோம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. போதும் என்று ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். கோடு இல்லாத போது எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்வின் எல்லா சந்தோஷங்களும் குறைவானதாகவே தோன்றும்.


“ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று சொல்லுகிறார்களே.. அப்போது குரு மீது கூட பற்று வைக்கக் கூடாதா?

கூடாது.

குருவிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நன்கறிந்தவர்கள், தவத்தில் முதிர்ந்தவர்கள் குருவிடமிருந்து விலகி விடுவார்கள். என்னுடைய குருநாதர் யோகி ராம்சுரத்குமார் கஞ்சன்காடு என்ற இடத்தில் உள்ள ஆனந்தாசிரமம் என்ற ஆசிரமத்தின் தலைவரான பப்பா ராமதாஸ் என்பவரை குருவாகக் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் பப்பா ராமதாஸ், யோகிராம்சுரத்குமார் அவர்களை தன் ஆசிரமத்திலிருந் நகர்த்தி வைத்து விட்டார். அப்படி நகர்த்தி வைத்தததே யோகிராம்சுரத்குமாரின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

வன்முறையை அதிகமாகக் தூண்டுபவர்கள் யார்? அரசியல்வாதிகளா? மதவாதிகளா?

இரண்டு பேர்களும்தான்.

யாருக்கு ஜெயிக்க வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறதோ, யாரிடம் நான்தான் மிக முக்கியமான நபர் என்கிற அலட்டல் அதிகமாக இருக்கிறதோ, யாருக்கு தனக்கு அதிகம் தெரியும் என்கிற கர்வம் இருக்கிறதோ அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சந்தேகம் உள்ளவர்களுக்கு வன்முறை வராது. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்விக்கு வன்முறை மிகப்பெரிய ஆயுதம். ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்று இங்கே எவருமில்லை.

புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வர சிறந்த வழி எது?

உங்களை சுற்றியுள்ள உலகத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், ஒவ்வொரு பிரச்சனகளைச் சந்திக்கின்ற போதும் உங்கள் மனது என்னவெல்லாம் கூச்சல் போடுகிறது, எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தால், உங்களையும் பிறரையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாலே புரிதல் ஏற்பட்டு விடும். உங்கள் மனதை எப்போது கவனிக்க முடியும் தெரியுமா... நட்போ, உறவுகளோ இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது தனியாக இருங்கள். போகப் போக உங்களைக் கவனிக்க முடியும்.


ஒழுக்கம் குறித்து அதிகம் பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சந்தேகப்படுவேன். எதை ஒழுக்கம் என்று சொல்கிறார் என்று அவரை ஆராய முயல்வேன்.

ஆண், பெண் உறவு மட்டுமே ஒழுக்கம் என்று பேசுகின்ற கசடர்கள் பல்வேறு நிலைகளில் ஒழுக்கக்கேடர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சமூகத்தில் பெரிய மனிதர்களாக, பெரிய பட்டாளத்தை தன்னோடு வைத்திருப்பவர்களிடம் இந்த நம்பிக்கை துரோக ஒழுக்கக்கேட்டைப் பார்க்கிறேன். பொய்யான பிரியமும், போலியான பேச்சும், ஆள் பார்த்து முகமன் சொல்வதும், காசுக்காக கள்ளனை தர்மதாதா என்று சொல்வதும் மிக பெரிய ஒழுக்கக் கேடுகள். ஞானமற்றவரின் செய்கைகள். இவர்கள்தான் புலனடக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். அவர்கள் சமூகத்தின் சாபங்கள். அவர்களிடமிருந்து நான் அதிகம் விலகியிருக்கவே விரும்புகின்றேன்.

Tuesday, October 20, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்

பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு படத்துவக்க விழா. அழைப்பு வந்திருந்தது. இவர் தலைமை, இவர் முன்னிலை, இவர் தயாரிப்பு, இவர் இயக்கம், இவர் இசை என்றெல்லாம் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தாலும், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துபவர் ரஜினிகாந்த் என்று பெரியதாய்-நாடு மையமாய்-கண்ணைப் பறிக்கிற விதத்தில் இருந்தது. அடடே, பார்த்து நெடுநாளாயிற்று. பேசி வெகுகாலமாயிற்று. இன்று சற்று நெருங்கி நின்று ‘ஹலோ’ சொல்ல வேண்டும். முடிந்தால் பேச வேண்டும்.

ஓரமாய் நிற்பதை மாற்றிக் கொண்டு, அவர் வரும் வழியில் சரியான கோணத்தில் நின்று கொண்டேன். அருகே வந்து பேசுபவர்களிடம் குறைவாகப் பேசி, அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டூடியோ வாசலுக்கு வந்துவிட்டதாய் சொன்னார்கள். சட்டென்று பரபரப்பானார்கள். ஓரமாய் வைத்திருந்த பூக்கூடை நூறு. மடமடவென்று எடுத்துக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அதட்டி மிரட்டி சத்தம் போட்டு வரிசையானார்கள், வரிசையாகும் முயற்சியில் என்னைப் பின்னடையச் சொன்னார்கள். பின்னடைந்து படியேறினேன். இடதும் வலதுமாய் இளைஞர்கள்-சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் ஒரு நூறு நூற்றிருபது பேர் இருப்பார்கள்.

அவர் வண்டியிலிருந்து இறங்கி நிமிர்ந்து மலரச் சிரித்து கைகூப்ப, பெரிய கைதட்டல். இரண்டு வரிசையாய் நின்ற நண்பர்களுக்கு இடையே நடக்க, பூக்கூடையிலிருந்து ரோஜாப்பூ மழையாய் கொட்டப்பட்டது. தூவப்பட்டது. சில கணங்களுக்கு எங்கும் பூ. இருபதடி உயரத்தில் எல்லா நேரமும் அந்தரத்தில் பூக்கள் இருந்தன. தரைபட்டு, துள்ளி வாசம் எழுப்பின. பூக்கள் வீசப்பட்டு தன்மேல் பொழிவது கண்டு சட்டென்று ஒரு தயக்கம் அவருக்கு-என்ன இது என்ற பார்வை. உடனே சிரிப்பு.

சரி இப்படி ஒரு அன்பா. சரி என்று கைகூப்பி ராஜநடையுடன் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வர, மற்றவர்கெல்லாம் மனசுள் என்ன தாக்கியது. ரஜினிகாந்த் மனிதர்தானே தெய்வமாய் போற்றுகிறார்களே. ரஜினிகாந்த் நடிகர்தானே, ஒரு அரசருக்கு உரிய வரவேற்பு தருகிறார்களே. மலர் மழையில் நடந்து வருமளவுக்கு என்ன உயர்த்தி... இது அன்பின் வெளிப்பாடா. சட்டென்று ஒரு புதுவிதமான காட்சி கண்ட திகைப்பில், திகைப்பின் விளைவாய் உள்ளே பொறாமை பொங்கியது.

இது என் புத்தி, எங்கே முதன்மை எவருக்கு நடந்தாலும் அது நானாய் இருக்க வேண்டும். எனக்கும் நடக்க வேண்டும் என்கிற புத்தி. இதைச் சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை, உற்றுப் பார்த்தால் உங்களில் நிறையப் பேருக்கு புத்தி இப்படித்தான் இருக்கும். உண்மையை மட்டும் சொல்வது என்று ஊரார் தீர்மானித்தால் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு பேர் இப்படித்தான் சொல்வார்கள்.

நான் மனசுள் பொங்கும் உணர்வுகளை காமம், காதல், பொறாமை, ஏக்கம், பேராசை இவைகளைத் தடுப்பதில்லை. ச்சீ வெளியே வராதே என்று எண்ணங்கள் வந்தால் அடக்குவதில்லை. மாறாய் அனுமதித்து விடுவேன். அது...அந்த எண்ணம் செலவாகும் போது மனம் கூர்மையாகி ஆராய்ந்து அலசி சுத்தம் செய்துவிட்ட பிறகே அனுமதிப்பதுண்டு. சட்டென்று ரஜினிகாந்த் மீது பொறாமை வந்தது. பொறாமைப்படுகிறோமே என்று வெட்கமும் வந்தது.

டேய் தம்பி, மனசுத்தம்பி, எதுக்கு பொறாமை, அவரை ஜனங்கள் விரும்ப ஆயிரம் காரணங்கள் இருக்கும். உனக்கு எதுக்கு பொறாமை. வரிசையில் நின்ற இளைஞர்களுக்கு அவர் பல்வேறு உதவிகள் செய்திருக்கக்கூடும். இது தெரியாமல் ஏன் புழுக்கம். உனக்கு அவர் கெடுதல் எதுவும் செய்ததுண்டா, இல்லையே. அப்படியிருக்க எதனால் புழுக்கம். முதலில் மற. புழுக்கம் விடு. உண்மையில் உன் உணர்வு பொறாமையல்ல. நீ பயந்து விட்டாய். நூறு பேர் ரோஜா தூவி மொத்த சூழ்நிலையையும் கண நேரத்தில் மாற்றியது உன்னை அதிர அடித்துவிட்டது. பெரிய ஆளுயர மாலைபோட்டிருந்தாலோ, சரிகைச் சால்வை சார்த்தியிருந்தாலோ, கற்பூர ஆரத்தி காட்டியிருந்தாலோ உனக்கு அதிர்ச்சி ஆகியிருக்காது. பூமழை ‘ஹா’ என்று வியக்க வைத்துவிட்டது. வியப்பு வழியே வந்த பொறாமை இது.

டேய் தம்பி, மனசுத் தம்பி தணிந்து போ, கேட்டு நடந்திருக்குமா, திட்டமிட்ட செயலா. அந்த மனிதனை உனக்குத் தெரியும். ‘ஹலோ’ என்று தானாய் நாலடி முன் வந்து கைகுலுக்கும் ஆள். ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று யார் கேட்டாலும், எப்போது கேட்டாலும், எத்தனை நேரமானாலும் அலுக்காது சம்மதம் சொல்கிற நடிகர். சிறிது முகவாட்டம் தெரிந்தாலும் உடன் வேலை செய்யும் தோழர்களிடம் என்ன காரணம் என்று உடனே தயங்காது கேட்கும் மனிதன். இங்கு இப்படி மனிதர்கள் அபூர்வம். அதனால்தான் இந்த பூமழை பூப் போன்ற அன்புமழை.

பொறாமை விட்டு உற்றுப்பார். உன்னை, ரஜினியை இடைவிடாது பார். உனக்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும், உன் அருகே அவர் பிறரோடு பேசுவதைப் பார்க்க கிடைத்தாலும் உற்றுப்பார்.

அப்படி என்ன உயர்வு, கவனி.

மனிதர்கள் இயற்கையின் குழந்தைகள். பூமி, வாயு, அக்னி, நீர், ஆகாயம் என்று இயற்கைச் சக்திகள் கலந்தவர்கள்.சூரியனின் உதயம், சந்திரனின் குளுமை, நீரின் சலசலப்பு, ஆகாயத்தின் பெரும் சக்தி, வாயுவின் அலையல்-எல்லாம் மனிதர்களில் உண்டு.

மனிதரை கவனிப்பது இயற்கையைக் கவனிப்பது போல.

ரஜினிகாந்த் என்ற மனிதனை, அந்த மனிதனை நேசிக்கும் மனிதர்களைக் கவனி. ரஜினிகாந்த் உன் சகஜீவி. தென்னிந்தியா முழுவதும் வளைத்துப் பிடித்த ராஜராஜ சோழன். மராட்டாவிலிருந்து நகர்ந்து, கர்னாடகத்தில் குடியேறி, தமிழ் தேசம் வளைத்த சாளுக்கியன். அன்பான புலிகேசி.

இவரைத் தெரியாது என்று தென்னிந்தியாவில் எவராவது சொல்வார்களா, சகலருக்கும் தெரிந்த முகம். சகரும் பல தடவை உச்சரித்த பெயர். ஆறு மாதக் குழந்தையிலிருந்து அறுபது தாண்டிய பெரியோர்கள் வரை பார்த்துப் பரவசப்பட்ட முகம். டேய் தம்பி, மனசுத் தம்பி உற்றுப்பார். ரஜினிகாந்த் நெற்றியை, கண்களை, புருவத்தை, மூக்குக் கூர்மையை, கை விரல்களை, உள்ளங்கையை, தோல் நிறத்தை, நிற்பதை, நடப்பதை, முக அசைவை, கண் உருளலை, மூச்சு விடுதலை உற்றுப்பார்.

எதனால் இது இப்படி ஒரு சிறப்பு பெற்றது. ஒட்டாது உற்றுப்பார். ஐயோ என்று ஆங்காரப்படாதே. ஆஹா என்று கொண்டாடவும் செய்யாதே, ஓதுங்கி நின்று உற்றுப்பார். விருப்பு-வெறுப்பின்றி ரஜினியை ஸ்வீகரி. இப்படி தீர்மானம் செய்த ஆறாம் மாதம் மறுபடி சந்தித்தேன். மிக நெருக்கமாய் மூச்சு விடுகிற ஓசை கேட்கும் தூரத்தில் சந்தித்தேன்.

Monday, October 12, 2009

உடையார் - சில எதிரொலிகள்



சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை-20

அன்புள்ள பாலகுமாரா,

என்றேனும் இன்னும் ஒரு முறை தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசிக்க நேர்ந்தால் என் மனமும் மூளையும் பிரகதீஸ்வரரைப் பார்க்குமா? சந்தேகமே. உடையாரைப் படித்தபின் பார்வை கட்டாயம் வேறாகி விடும். இந்த இடத்தில்தான் பெருந்தச்சர் காப்புக்கட்டிக் கொண்டு பிரக்ஞை செய்திருப்பாரோ? இங்குதான் முதன்முறை மண் தோண்டப்பட்டு இருக்குமோ? இதற்கடியில் இராஜராஜன் பட்ட மகிஷியும் மற்ற மனைவியரும், தங்க வளையல்களையும், சங்கிலிகளையும் இதர நகைகளையும் அஸ்திவாரக் குழியில் போட்டிருப்பார்களோ? இந்தப் பிள்ளையார் அருகில் தான் யானை முதல்பலியாக இறந்து விழுந்திருக்குமோ? இங்கேதான் தோண்டிய மண்ணைக் கொட்டி இருப்பார்களோ? இங்கேதான் பாண்டிய வீரன் மதுகொடுக்கப்பட்டு பிதற்றியிருப்பானோ? என்று தான் யோசிக்கத் தோன்றும்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால், சீராளனும் உமையாளும் அருகே வந்து நிற்பார்கள். திரிபுராந்தகரையும், அவருக்கு உதவி செய்யும் பார்வதி சுப்ரமண்யர் பிள்ளையாரையும் வேறு கோணத்தில், நீ பார்த்த கோணத்தில் பார்க்கத் தோன்றும். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கையில், நீலநிற வானத்தின் கீழ் பொன் தகடுகள் போர்த்திய பெரிய கோபுரம் ஒருநாளில் ஜொலித்திருக்கும் எனத் கற்பனை செய்யத் தோன்றும்.

பெரிய கோயில் ஒரு பிரம்மாண்டம் என்றால், அந்தக் கட்டிடப்பணி அதைவிடப் பிரம்மாண்டம். அந்தக் கட்டிடப் பணியினைக் கற்பனை செய்து, (ஓரளவு ஆதாரங்கள் கிடைப்பினும்) புஸ்தகமாக்கியிருப்பது இன்னொரு பிரம்மாண்டம்.

படிப்பவர்க்கு மலைப்பை உண்டு பண்ணுவது, உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் மட்டுமல்ல; பாலகுமாரனும்தான்.

அனேகமாய் எல்லாப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரணகளம்தான். தேசத் தந்தை மகாத்மாகாந்தி, தந்தை என்ற பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினாரா, இல்லையா? என்று பட்டிமன்றம் போட்டுக் காந்தியைப் பரிகசிக்கிறார்கள். பெண் விடுதலை பாடிய பாரதி பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்றி இருந்தால் அவர் வெறும் சுப்பையா. தேசியகவி சுப்ரமண்ய பாரதி ஆகி இருக்கமுடியாது

நாலு பிள்ளைகளுக்கும் வசதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அவர் வெறும் மோகந்தாஸ் காந்தி, மகாத்மா காந்தி இல்லை. அம்மங்கையைப் பற்றி நினைத்து அவளுக்காக வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால், குந்தவையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் என்றோ இராஜராஜன் மக்கள் மனத்திலிருந்து இறங்கியிருப்பான். இன்றளவும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

இது அருள்மொழி என்ற தனிமனிதனின் கதை அல்ல; ஒரு சமுதாய அலசல். அந்தணர்கள், கல்தச்சர்கள், மறவர்கள், தேவரடியார்கள் என்று பிரிந்திருந்த தமிழ்ச் சமுதாயத்தின் வக்கரிப்புகளுக்கிடையே, கொக்கரிப்புகளுக்கிடையே இழிபடாமல் அத்தனை பேரையும், அணைக்க வேண்டிய இடத்தில் அணைத்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அனைவர்க்கும் மேலாய் உயர்ந்து நின்று, உயர்ந்த கோயிலைக் கட்டமுடிந்தது என்றால் அது அந்த மஹாமனிதனின் மஹாகெட்டிக்காரத்தனம்.

சோழர் காலத்தில் ஒற்றர் படை மிக அதிகம் எனப் படித்திருக்கிறேன். அந்த வலை படர்ந்து விரிந்து கிடந்ததை ஒற்றனுக்கு ஒற்றன் அவனுக்கு இன்னொரு ஒற்றன் என்று எக்கசக்கமாய் ஒற்றர்கள் இருந்ததைக் காட்டியிருக்கிறார்கள். கற்பனைப் பாத்திரமென்றாலும் வைஷ்ணவதாஸன் கண்கலங்கச் செய்துவிட்டார். அவர் மனைவியை என்ன செய்ய போகிறாய்? அவளுக்கு நற்கதிகாட்டுவாய்.

சோழர்களின் மிகக் கொடுமையான போர் முறை பற்றி பல சரித்திர நூல்கள் கூறுகின்றன. அதற்கு இக்கதையில் சரியான காரணம் காண்பித்திருக்கிறாய். கோயில் கட்டுதல் ஒரு மிகப் பெரிய விஷயம் என்றால் மேலைச் சாளுக்கிய போர் இன்னொரு மகா பெரிய விஷயம். அதற்கு எத்தனை எத்தனை ஏற்பாடுகள். Picturesque Description என்று சொல்வார்கள். போர்ப்படை கம்பீரமாய் கண்முன்னே அணி வகுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.

உனக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன், தீர்த்த யாத்திரை என்ற தலைப்பில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று பற்றிய இசை நாடகத்தை எங்கள் பள்ளியில் அரங்கேற்றியபோது நீ தலைமை தாங்க வந்திருந்தாய். இந்தச் சிறிய அரை மணி நேர விஷயத்திற்கு நான் ஒரு மாதம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த அல்ப விஷயத்திற்கே இப்படி என்றால் நெடுந்தூரப் பயணத்திற்கு எத்தனை எத்தனை ஆயத்தங்கள், எத்தனை பாடுகள், உணவு, உடை, உளவுப் பிரிவு, வைத்தியம் இத்யாதி இத்யாதி. சிவகைங்கர்யம் என்ற உயரிய லட்சியமும் சில நல்லவர்களின் வல்லவர்களின் ஒத்துழைப்பும் அவனை வெற்றி பெற வைத்தன.

நெடுநாட்களாய் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்கும் விஷயம். சுவைமிகுந்த நமது சரித்திரம் facts of figure ஆகப் பாடப் புத்தங்களில் வறண்டு கிடப்பதேன்? பாவம் குழந்தைகள் விஷயங்களை மனப்பாடம் செய்து கக்குகின்றன.

தஞ்சை பெரிய கோயிலை தரிசிக்க, அதை தரிசிப்பதின் மூலம் இராஜராஜனைத் தரிசிக்க நம் குடும்பம் முழுவதும் கெளரி, கணேஷ், ஆகாஷ், கமலா, கிருஷ்ணா, சாந்தா, சூர்யா, நீ, நான், லலிதா அனைவரும் தஞ்சை போனால் என்ன? நம் குடும்பம் மட்டுமல்ல; தமிழ்குடும்பம் ஒவ்வொன்றும் உடையார் நாவல் படித்ததும் தஞ்சை போகும். இராஜராஜனைத் தரிசிக்கும்.


சோழம்! சோழம்! சோழம்!

இப்படிக்கு
என்றும் அன்புடன்
ரவி
(சிந்தா ரவி )

என்னைச் சுற்றி சில நடனங்கள் - பணமும் என் மனமும்...



என் அனுபவத்தில் மனித வாழ்க்கையில் சந்தோஷம் தான் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்குமெனில், பணம் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்காதெனில், பணம் எனக்கு தேவையற்ற விஷயம். பணம், சந்தோஷம் தருமா, தராதா என்பது நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயம்.

‘எத்தனை வந்தாலும் போதவில்லை’ என்று பல பேர் புலம்புவதை நான் காதார கேட்டிருக்கிறேன். அது எப்படி என்று வியந்திருக்கிறேன்.

பத்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தவருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தபோது போதவில்லையா. இருபதாயிரம் ரூபாயாக வருமானம் உயர்ந்தபோது இன்னும் மூச்சு திணறலா. இருபதாயிரம் ரூபாய் வருமானம் தாண்டி முப்பதாயிரம் வந்தபோது சுற்றிலும் நிறைய கடனா. ‘ஆமாம்.. ஆமாம்’ என்கிறார்கள் பலபேர். என் வாழ்க்கையை நான் உற்றுப் பார்த்தபோது எனக்கு இதற்கு விடை கிடைத்தது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று பள்ளியிறுதித் தேர்வில் தேறினேன். அப்போதே டைப் ரைட்டிங் ஹையர் முடித்து, அடுத்த வருடம் ஷார்ட்ஹேண்ட் பரீட்சையும் எழுதி ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்குச் சம்பளம் நூற்று எழுபத்தைந்து ரூபாய். வீட்டிற்கு கொண்டு போய் அப்படியே காசைக் கொடுத்துவிட, நூற்றைம்பது ரூபாய் அம்மா எடுத்துக் கொண்டு இருபத்தைந்து ரூபாய் எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்த இருபத்தைந்து ரூபாயை எனக்கு செலவு செய்யத் தெரியாது. அடிக்கோடிட்டுச் சொல்கிறேன். அந்த இருபத்தைந்து ரூபாயை எப்படி செலவு செய்வது என்று எனக்குத் தெரியாது.

ஒரு மசால் தோசை இரண்டனா. ஒரு மைசூர்பாகு நாலணா. பாதாம் ஹல்வா முக்கால் ரூபாய். இத்துடன் காபியும் சாப்பிட்டுவிட்டு நான் பொஹேவ்.. என்று பெரிய ஏப்பத்தோடு வெளியே வருவேன். மனம் நிறைய சந்தோஷம் தளும்பும். மனதில் கர்வம் ஏறி கிறுகிறுக்க வைக்கும். அப்பேர்பட்ட அற்புத அனுபவத்திற்கு என்னை ஆளாக்கிய கடவுளுக்கு மனம் நன்றி சொல்லும்.
இந்த சம்பளத்தை கொடுத்த கம்பெனிக்கு இன்னும் உண்மையாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஏக்கம் படரும். எட்டரை மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கு போயிடணும் என்று உள்ளுக்குள் ஆவேசம் பீறிட்டுக் கிளம்பும்.
வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, நல்ல செருப்பு, ரூபாய்க்கு நாலு என்று வாங்கின கைக்குட்டைகள், பாக்கெட்டில் கொஞ்சம் சில்லரை. மிக மிக ஆனந்தமான நாட்கள் அவை. ஆனால் நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்திலிருந்து அறுநூறு ரூபாய், எழுநூறு ரூபாய் சம்பளத்திற்கு தாவியபோது போதவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டது. ராலே சைக்கிள் வாங்கி அதற்குப் பிறகு லாப்ரெட்டா ஸ்கூட்டர் வாங்கி வாழ்க்கையின் தேவைகள் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டபோது எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை ஏற்பட்டது. லட்ச ரூபாய் வருமானம் தாண்டிய போதும் பட்ஜெட்டில் இடித்தது. நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தின் சந்தோஷம் அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் வரவேயில்லை.

என்னிடம் என்ன தப்பு. நான் யோசித்தேன். என்னிடம் தவறு இல்லை. நான் பிரம்மாண்டமாக பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்டேன். என் தேவைகள் அதிகரித்து விட்டன.

‘காசு சேர்த்து வீடு வாங்கறதுங்கறது முடியாதுடா. கடன் வாங்கி கமிட் பண்ணிக்கோ. இங்க ஓடி, அங்க ஓடி காசு சம்பாதிச்சு அந்த காசைக் கொண்டு போய் கடனை அடை. பத்து வருஷத்துல வீடு உனக்குச் சொந்தம் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆஹா.. சொந்த வீடா. எனக்கா.. முடியுமா.
திகைப்பு ஏற்பட்டது. என்னுடைய இளம் வயதில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லுகின்ற பழமொழி ஒன்று உண்டு.

‘கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு நூறு வீடு’.

நானும் இதைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், சொந்தமாய் வீடு வாங்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்ட போது , இந்தப் பழமொழிகள் உடைத்து எறியப்பட்டன.


‘எத்தனை நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட போய் வாடகை கொடுத்துட்டு கை கட்டிண்டு நிக்கறது. என் வீடு, என் இடம்னு ஒன்று வேண்டாமா.’ என்ற அகங்காரம் தோன்றியது.


வீட்டிற்கு பெரிதாகக் கடன் வாங்கி சிறிது சிறிதாக அடைத்தாலும், ஒரு மாதம் கூட தவறக்கூடாது. யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று நாலாபுறமும் ஓடி கடன் அடைக்கிற போராட்டத்திலும் வெற்றி காண முடிந்தது. அதிலும் சுவை இருந்தது.


“என்னய்யா சினிமாக்கெல்லாம் டயலாக் எழுதற. ஸ்கூட்டர்ல போற. கார் வாங்குய்யா.” என உசுப்பேற்றுவார்கள். அதற்கு நடுவே காரில் போய் போய் பழக்கமாகிவிட்டதல்லவா.. கார் சுகம் தெரிந்து விட்டதல்லவா. இதுவரை காரையே அதிகம் ஏறிட்டுப் பார்க்காத புத்தி. எதிரே போகின்ற கார் எவருடையது என்று குறிப்பெடுத்துக் கொள்கிறதல்லவா.. இந்த புத்தி வந்த பிறகு சொந்தமாகக் கார் வாங்க வேண்டுமென்ற ஆசையும் வந்துவிட்டது. மறுபடியும் கடன். இன்னும் அதிக ஒட்டம். இன்னும் அதிக சம்பாத்தியம். அந்தக் கார் பழையதாகி விட இன்னொரு கார். கார் மட்டுமே போதாது ஸ்கூட்டர். மயிலாப்பூரைச் சுற்றிவர ஸ்கூட்டர்தான் செளகரியம்.

வருமானம் பெருத்ததால் செலவுகள் பெருத்ததா. செலவுகள் பெருத்ததால் வருமானம் பெருத்ததா. நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா.. இரண்டும்தான் என்று மனம் முடிவு செய்தது.

ஆனால், இந்த எலி ஓட்டத்தில் இறங்கி ஆயிற்று. இனி நிற்க முடியாது.

‘மின் விசிறி இல்லாமல் வராண்டாவில் அரை நிக்கரோடு வெறும் மார்போடு படுத்துக் கிடந்த காலங்கள் முற்றுலும் மறைந்து போய் ஏ.சி. குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குகின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆனால், எந்த இடமும் என் கையை அத்துமீறாமல் இருக்கிற வண்ணம் நான் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். கடனைத் திருப்பி அடைப்பதில் மிகப்பெரிய மும்முரம் காட்டினேன்.

கடனைத் திருப்புவதில் சின்ன பிசகும் ஏற்படக்கூடாது என்பதில் கண்குத்திப் பாம்பாக இருந்தேன். அந்த நேர்மை மிக முக்கியம் என்று நினைத்தேன். ‘ஏமாற்றிய பணக்காரனாக இருப்பதைவிட, பொய் சொல்லி வாழ்வதைவிட , சீட்டுகள் நடத்தி ஏமாற்றி ஜொலிப்பதை விட உண்மையாக இருப்பதுதான் அழகு.’ என்பதை என் நெஞ்சு உணர்ந்திருந்தது. எனவே, எதற்குக் கடன் வாங்கலாம். எவ்வளவு கடன் வாங்கலாம் என்கிற ஒரு கணிதம் எனக்குள் நிரந்தரமாக இருந்தது.

குவாலிஸ் வாங்கலாம் என்று வீடு சொன்னபோது, இல்லை.. நமக்குண்டான மரியாதை மாருதி ஜென் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். பலபேருக்கு வருத்தம். ஆனால், என் யோக்கியதை என்ன என்பது எனக்குத் தெளிவாக தெரிந்திருந்தது.

“என்ன சார். உங்கள் பிள்ளை கார்ல போறான். நீங்க ஸ்கூட்டர்ல போறீங்க.” என மயிலாப்பூர்வாசிகள் கேட்பார்கள். “அவங்கப்பா பணக்காரர். அதனால அவன் கார்ல போறான். எங்கப்பன் ஏழை.அதனால நான் ஸ்கூட்டர்ல போறேன்..” என்று நான் பதில் சொல்வேன்.

வழக்கமான ஜோக் தான். ஆனால், உண்மையும் இருக்கிறது.

“இதற்கு காரணம் என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்படுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.

மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தும், மகனுக்கு நல்ல மேற்படிப்பு ஏற்பாடு செய்து திருப்தியாக இருக்கக் காரணம் குடும்பக் கட்டுப்பாடு. அதனால் குழந்தைகளை செளகரியமாக வளர்க்க முடிந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த இடத்தையும் பார்க்கவில்லை. ஆனால், மெரினா பீச்சில் என் குழந்தைகளோடு நான் பேயாட்டம் ஆடியிருக்கிறேன். கழுத்துவரை அலையில் நின்று கும்மாளமிட்டிருக்கிறேன். ஐம்பது ரூபாய் செலவில் போதும் போதும் என்ற சந்தோஷம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு காசு கொடுக்காமல் சினிமா கம்பெனிகள் ஏமாற்றியிருக்கின்றன. ஆனால், நான் யாரையும் ஏமாற்றியதில்லை. அடைக்க முடிந்த கடன்களையே வாங்கியிருக்கிறேன். அந்த அளவில் வளர்ந்திருக்கிறேன்.

மாமனாரைத் துன்புறுத்தி தங்க பிரேஸ்லெட்டும், தடித்த செயினும் மாட்டிக் கொள்ளவில்லை. நண்பர்களை ஏமாற்றி, ஊரார் காரை என் கார் என்று சொல்லவில்லை. யார் சொத்தையோ என் சொத்து என்று போலிப் பத்திரம் காட்டவில்லை. எனவே, என்னுடைய மனம் சந்தோஷமாக இருப்பதை முகம் வெளியே காட்டுகிறது. முகத்தில் இருக்கின்ற நம்பிக்கை நல்லவர்களை அருகே வரவழைக்கிறது. நல்லவர்கள் அருகே இருப்பதால் என்னுடைய நாணயம் இன்னும் வலுவாகிறது.

ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை ஆனபோதும் அறுவை சிகிச்சையான முப்பதாம் நாளே நான் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். அதற்குக் காரணம் என்னைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும், அந்த நல்லவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் நான் நடந்து கொள்வதும் தான். ஏதாவது ஒரு இடத்தில் ஏமாற்றினாலும்கூட அதன் விளைவு பல இடங்களுக்கு பரவி நம் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. மற்றவர்க்கு ஏற்பட்ட அவநம்பிக்கை நமக்குள் நமக்கே தெரியாமல் பொதிந்து கொள்கிறது.

அவநம்பிக்கை கொண்ட மனது எந்த குற்றத்திற்கும் தயாராகி விடும்.

ஆரவாரமில்லாத செல்வ செழிப்பே உன்னதமானது என்பது என் அபிப்ராயம்.

எனவே செல்வம் துக்கமில்லை. நம்பிக்கை.