Wednesday, December 2, 2009

திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்




திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.


புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்து விட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.


இது எப்படி சாத்தியம்? கேட்டார்கள். “இந்தப் பெயரைச் சொன்னால் போதும்.. எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.


அவை கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் . இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது “கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயர் எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார் என்பார்.


இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.


கணவன் மனைவிக்குள் சண்டை, மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார். ‘ரொம்ப நல்லது, செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.

என்னாயிற்று..?

எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி..


“பகவான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்தேன், வேலை செய்யவில்லை. மாறாக என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்துவிடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார். உங்களுடைய பக்தராக”,என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு செளக்கியமாக வாழ்ந்தது.
பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்.. வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்.. அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் ‘ராம ராம ராம’ என்றும் ‘ஓம் ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.

ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, யோகி ராம்சுரத்குமாரை தரிசித்து விட்டுப் போகலாம் என்று வந்தார். தான் திருப்பதிக்கு போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்கு போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் சரியென்று சொல்லி, ‘வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்த பிச்சைக்காரன் யார் என்று கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்க சொன்னது ஞாபகம் வந்தது. ‘பெருமாளே.. திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?’ என்று உரக்க வினவினார்.

“ நேனே” என்று கருவரையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாக புரிந்தது.

இந்த கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்து போய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு..
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான், அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக் கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.


வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.

மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.

‘உனக்கு என்ன வேண்டும்..?’

‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. என்க்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா ? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக.

அவர் பதறினார். இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா? என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார். எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுக்கோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துக்கள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது, உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.

ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளொளியைப் பெருக்கி, இறை தரிசனம் காட்டினார்.

யோகி ராம்சுரத்குமார்....20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.


திருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

“ யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்! ”

என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.