Saturday, June 28, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2

பாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.


கிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே? இதில் என்ன லாபம்?
பாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.

பெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.

மனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.


கிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன?


பாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.

இந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.

நடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்சியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.

கிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே। இது புது டிரண்டாக இருக்கிறதே। இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்

4 comments:

  1. Vanakkam.Naan oru balakumaran saarin verian.Dhayavu seidhu avar navalgalai free aga net il vidungal.Please.....

    ReplyDelete
  2. ஆஹா பிரமாதம் நன்றி.
    கேள்விகள் அபாரமானவை.
    பதில்கள் அம்ருதமானவை.
    என் நமஸ்கரங்கள்.
    இந்த பதில்களின் ஆழத்தை, அது காட்டும் தெளிவை எங்களுக்கு கருணையோடு பகிர்ந்துகொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்.
    இறையருள் காக்கும்.
    நன்றி.
    மிகுந்த நன்றி.
    மிக ஆவலோடு அன்றாடம் காத்திருந்து உங்கள் பதிவுகளை பொக்கிஷமாக பெற்று பாதுகாக்கிறேன்.
    ஐயாவுக்கு எங்கள் அன்பையும் நமஸ்கரங்களையும் சமர்ப்பிக்கவும்.
    மிகுந்த நன்றி.
    ஸ்ரீனிவாசன்.

    ReplyDelete
  3. Puranam enbadhu verum Karpanai Kadhaiaala adhu vazhagayayai nangu vazhantha manithargalai pattryia padhivu thathuva surangam.

    Indhu madhathin puranangal manithargalin gunadisyangalai eppadi pan mugamaga edhuthu uraikirathu endra ungalin vilakam megavum arumai.

    ReplyDelete
  4. we are waiting for the next publish...

    ReplyDelete