Friday, February 12, 2010

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -4

“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் ரஜினிகாந்த் கேட்டார்.


நான் சொன்னேன்.........


என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று யாரேனும் கேட்டால் அதற்குப் பதில் சொல்வது சரியா..தவறா.

தயங்காமல் பதில் சொல்வதுதான் சரி என்பது என் வாதம். மற்றவரைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு அவருக்கு விளக்கிச் சொல்லும்படியான அறிவு ஒருவருக்கு உண்டா.

இருக்கலாம்; இல்லாது போகலாம். ஆனால் கேட்டவுடன் பதில் சொல்லிவிடுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.

நமக்குப் பதில் சொல்லத் தகுதியிருக்கிறதா என்று யோசிப்பதை விட, தவறாக அவரைப் பற்றி அபிப்பிராயம் சொல்லி விடப் போகிறோமே என்று கவலைப்பட்டு அடக்கிக் கொள்வதை விட, கேட்டவுடன், ‘நீ இப்படி, இவ்விதம்’. என்று பதில் சொல்வது உத்தமம் என்பது என் எண்ணம். காரணம் ஒருநாளும் மற்றவரைத் துல்லியமாக எடை போட்டுக்காட்ட இன்னொருவரால் முடியாது. அதே சமயம் நம்மை அபிப்பிராயம் கேட்பதற்கு கர்வப்பட்டு விடவும் கூடாது. அந்த நேரம் அந்த மனிதர் பற்றி மனதில் என்னவித எண்ண அலைகள் ஓடுகிறது என்று உற்றுக் கவனிக்க, இதுவரை அவர் பழகி வந்ததால் உள்ளே ஏற்பட்டிருக்கும் ஒரு அபிப்பிராயக் கட்டுமானம் இயல்பாய் வெளியே வந்து விடும்.

அப்படி அதை வெளியே கொண்டு வந்து வார்த்தையாக்கிப் போடுவதுதான் மிகப் பெரிய தர்மகாரியம் என்பது என் கருத்து. எதிரே கேள்வி கேட்டவருக்கு என்ன பிடிக்குமோ அந்த விதமாய் பேசும் தந்திரசாலிகள் பலர் உண்டு, அவரால் அபிப்பிராயம் கேட்டவர்களுக்கு தீங்கு நேரலாம். மிகக் கூடுதலான புகழ்ச்சி வார்த்தைகளைக் கவனமாய் சேர்த்து வீசி அபிப்பிராயம் கேட்டவரை திக்குமுக்காட வைக்கலாம். வார்த்தைகளில் தேன் தடவி திகட்டத் திகட்ட உண்னக் கொடுக்கலாம். உண்மை ருசியற்றது. அதில் கசப்போ,இனிப்போ இல்லை.

என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்ட நேரத்தில் உள்ளே தோன்றும் உணர்வலைகளைக் கவனித்து இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதே கேட்டவர்க்கு உதவி. நட்புக்கு தரும் மரியாதை.

ரஜினிகாந்த் கேட்டதும் நான் ஒரு நிமிட நேரம் மெளனமாய் இருந்தேன். பதினேழு பதினெட்டு வருட தொடர்பை, உள்ளே உள்ள கம்ப்யூட்டர் வெகுவேகமாய் திரட்டி ஒரு தகவல், ஒரு அபிப்பிராயம் தந்தது. அந்த அபிப்பிராயம் ஒரு உணர்வாக இருந்தது. இனி வார்த்தைகள் ஆக்க வேண்டும்.

நான் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.

“அருள் மிகுந்த வாழ்க்கை உங்களுடையது என்பதாய் தோன்றுகிறது. உற்று உற்று பல நேரம் உங்கள் முகத்தை-கை-கால் அமைப்பை-அவைகள் நகரும் விதங்களை, நீங்கள் நடப்பதை, நிற்பதை, அமர்வதை, சட்டென்று மற்றவர் வருகைக்கு, சிரிப்புக்கு எதிரொலிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அருள் நிறைந்த அமைப்பு நீங்கள். முகத்தில் அழகு தாண்டி ஒரு சுகம் இருக்கிறது. அதாவது உங்கள் முகத்தைப் பார்க்கும்போது ஒரு சுகம் ஏற்படுகிறது. நீங்கள் ரொம்ப திடசாலியான- ஆஜானுபாகுவான மனிதர் இல்லை. உங்கள் தசை அமைப்பு, கட்டுமஸ்தான விஷயம் இல்லை. ஆனாலும் உங்கள் அசைவு முழுவதிலும் ஒரு துடிப்பு தெரிகிறது. அந்தத் துடிப்பில் ஒரு ஒயில் இருக்கிறாது. அந்த ஒயிலான துடிப்பு தான் எல்லோரையும் கவர்கிறது.

“பாலா சார்.. நான் என்ன கேட்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க”.

“மனசுல பட்டதைச் சொல்றேன். நீங்க கேட்டதால சொல்றேன்”.

“சரி.. நீங்க பேசுங்க” ரஜினி என்னை விஷயத்துக்கு நகர்த்தினார்.

“உங்கள் செயல்கள், உங்கள் தீர்மானங்கள் இதனால் கிடைக்கும் வெற்றிகள் உங்களால், உங்கள் முயற்சியால் கிடைப்பதை விட, வேறு ஏதோ ஒரு சக்தியால் கிடைக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் மிகக் கவனமாய், அற்புதமாய் ஆட்டி வைக்கப்படுகிறீர்கள். பிராபல்யம் நோக்கி படிப்படியாய் நகர்த்தப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு உள்மனதில் தெரிந்தும் இருக்கிறது.

எனவேதான் உங்களிடம் ஆட்டமும் இல்லை.உங்கள் பிராபல்யம் குறித்து உங்களிடம் பெரிய அலட்டலும் இல்லை. ரஜினிகாந்த் இப்படி எல்லாரிடமும் இனிமையாய் இருக்கிறாரே; சகஜமாய் பழகுகிறாரே; பந்தா இல்லையே.. இந்தப் பணிவு பொய்யா, நடிப்பா, நான் உற்று கவனித்திருக்கிறேன். மிக மிக இயல்பான பணியில் இருக்கிறீர்கள். ‘கொஞ்ச நேரம் தொடர்ந்து கம்பீரமான பந்தா அலட்டல் பண்ணுங்க’ என்றால் உங்களால் முடியாது. அல்லது தப்புத் தப்பாய் பந்தா பண்ணுவீர்கள், பிடிக்காது செய்யும் செயலைப் போல அது இருக்கும்.

இந்தப் பணிவும் இறையருள்.

என் வெற்றி என்னைத் தாக்கி தாழ்வு செய்யாதிருக்கட்டும் என்று எவரிடமோ கைகூப்பி வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள். வெற்றி என்பது ஆலகால விஷம். அதை விழுங்கிய எவரையும் அது ஆட வைக்கும். அதிகம் அதிர வைக்கும். அதை விழுங்கித்தான் ஆகவேண்டும். அதே சமயம் அது குடலுக்கும் போய்விடக்கூடாது. அது விழுங்கப்பட்டு தொண்டையிலேயே நிறுத்தப்படுவது தான் சிறப்பு, நிறுத்தப்பட்டு விட்டது உங்களுக்கு.

அதனால்தான் யூனிட்டில் வருகிற சாப்பாடே போதும் என்று சொல்ல முடிகிறது; அதை ரசித்துச் சாப்பிட முடிகிறது. சாதாரண அம்பாஸிடர் காரில் போக மனம் ஒப்புக் கொள்கிறது. நேற்று ஜெயித்தவர்கள் எல்லாம் காண்டசாவில் ஊரைக் கலக்கிக் கொண்டிருக்க, தன் செல்வத்தைப் பறையறிவிக்கிற எண்ணமே இல்லாது நகர முடிகிறது. இறையருளால் வெற்றியும், அந்த வெற்றியினோடு பணிவும் இருப்பதால்தான் இன்றைய வேலைகளில் தெளிவு இருக்கிறது.

உங்கள் சினிமாவுக்கு என்ன வேண்டும். ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு எது எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.அப்படி தீர்மானிக்க எல்லோரையும் அணுகி அபிப்பிராயம் கேட்க முடிகிறது. நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அபிப்பிராயம் சொன்னாலும் அதை அமைதியாய் செவிமடுக்க உங்களால் இயலுகிறது.

இதோ இப்போது என்னைக் கேட்கிறீர்களே, என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று ,இது பெரிய விஷயம். நீங்கள் கேட்காமலேயே உங்களைப் புகழ்ச்சியில் குளிப்பாட்ட ஆட்கள் இருக்கிறார்கள், குளிப்பாட்டுகிறார்கள். எனக்கு கொஞ்சம் புகழ்ச்சி தேவைப்படுகிறது. கொடு என்றா இப்போது கேட்டீர்கள், இல்லையே, உண்மை பேசு என்றீர்கள். இவ்வளவு அருளும், அருளால் பணிவும் பெற்ற ரஜினிகாந்த் நடிகர்தானா. நடிகர் மட்டும்தானா.

தன்னைச் சார்ந்த உலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தது போதுமோ.. தலைவனாய் ஏற்று இருக்கிறார்கள். நீங்கள் வழிகாட்டியிருக்கிறீர்களா. இறைவன் கொடுத்த வரத்தை நீங்கள் முழுமையாய் பயன்படுத்தினீர்களா. இல்லை என்பது என் அபிப்பிராயம்.

8 comments:

  1. மிக்க நன்றி கிருஷ்ண துளசி...

    இந்த புத்தகத்தை நான் முழுமையாக பல தடவை வாசித்து இருந்தாலும், இப்போது மீண்டும் படிக்கும் போது, அதே உற்சாகம் மனதுள் தங்குகிறது.. மனம் ஆனந்தத்தில் பொங்குகிறது...

    பாலா போன்ற உண்மையான மனிதர்கள், சத்தியத்தை போற்றுபவர்கள் ரஜினி அவர்களை பற்றி சொல்லும்போது, அங்கு பொய்மையின்றி வார்த்தைகள் வந்து விழுந்ததை காண முடிகிறது...

    பாலா அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஐயா பாலகுமாரனின் எழுத்துக்கள் தமிழ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது, பிரமாண்டமானது.

    வெறும் இலக்கிய ரசனைக்காகவோ, பொழுது போக்குவதற்காகவோ எழுதப்பட்ட எண்ணங்கள் அல்ல. அல்லவே அல்ல.

    அதையும் தாண்டி ஒரு தலைமுறை தழைக்க அக்கறையும், அன்பும் மிகுந்து எழுதப்பட்ட எண்ணங்கள்.

    ஒரு சராசரி மனிதனை தட்டி எழுப்பி,தன்னையும் தன் அருகிலேயும் உற்றுப் பார்க்க தூண்டிவது முதல் இலக்கு.

    பார்த்து பின் கேள்வி எழுப்ப வைப்பது அடுத்தது.

    கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலும், எதிர் கேள்வியுமாய் ஒரு யாகம் நடத்தும் செயலுக்கு வித்திடுவது.

    தலை வணங்கி, அன்பின் மிகுதியால் அவர் கை பற்றி, பாதம் தொழுது நல்லா இருக்கேன் சார், நீங்களும் நல்லா இருங்க என சொல்லுகிறேன்.

    அவரது எழுத்துக்களை வெகு ஜன தளத்திற்கு இட்டுச் செல்ல, நண்பர் கிருஷ்ண துளசி எடுக்கும் முயற்சிகள் மிகவும் நல்லது. வாழ்த்துக்கள்.

    எனது ஆசை. தமிழ் தெரிந்த எல்லோரும் அவர் எழுத்து வாசிக்க வேண்டும். அதை யோசிக்க வேண்டும்

    இது நடந்தால் ஒரு மிகப் பெரிய சமுதாய புரட்சி நடக்கும்.

    தன்னையும் மேம்படுத்தி, சமூக அமைதி சமைத்து அறிவுபூர்வமாய் ஆக்கபூர்வமாய் ஒரு சமூகம் மலரும்.

    நடக்குமா....

    படுக்காளி

    என்னை எழுத தூண்டிய ஏகலைவன் பாலகுமாரனுக்கு சமர்ப்பணம்.

    http://padukali.blogspot.com/2008/11/blog-post.html

    ReplyDelete
  3. மிக மிக நன்றி கிருஷ்ண துளசி,
    அற்புதமாக இருந்தது.பிரமாதமாக எழுதியுள்ளார் நம் எழுத்துச்சித்தர்.இதை விட உண்மையாக யாராலும் எழுத முடியாது.

    ReplyDelete
  4. Dear All,

    Our sir latest story publishing on

    Sakthi Vikatan - Sri Ramana Maharishi, Kumduam Bakthi - Pakasalai, Suriya Kathir - Sorkam Naduvil

    Request you to read and get spiritual experience. It was amazing.

    Thanks

    arul kanthan

    ReplyDelete
  5. Dear Krishna Tulasi,

    Since one month I am reading Ayya's thoughts in this blog. I really feel happy to seen this blog. Definelty this blog is being very useful to expatriates who are not getting Ayya's books in abroad. I too pray GOD to reach this blog to all readers.

    I want to meet Ayya atleast once in my life time.

    Really you have done the great job.

    "YOGI RAM SURAT KUMAR"
    "YOGI RAM SURAT KUMAR"
    "YOGI RAM SURAT KUMAR"
    "JAYA GURU RAYA"


    Thanks / Regards,
    Saravanapriyan.C

    ReplyDelete
  6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  7. Dear Mr. Krisna Thulasi,

    Just a week before I saw this blog by accidentally, I don’t have the word to explain how much it is worth for me. What a great job you have done. You make me to breathe again.
    After ten years I got the chance to read my guru Bala sir writing.

    Thank you very much.
    Syed Amjed
    Dammam
    Kingdome of Saudi Arabia

    ReplyDelete
  8. வனக்கம்,

    எந்த ஒரு விஷயம் என்றாலும் குருவின் அனுக்கிரகத்தினாலும், வைராக்கியத்தினாலும் வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்தை மிக எளிமையாக ஐயா உணர்த்தியுள்ளார். இன்று பல தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைஞர்கள் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது.
    நன்றி.

    கலைவினோத்

    ReplyDelete