Tuesday, May 4, 2010

சூரியனோடு சில நாட்கள் - 6 - பாலகுமாரன் பேசுகிறார்


நல்லவர்கள் மூலம் நல்ல விஷயங்கள், நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் நிச்சயம் நடந்தே தீரும். பலபேர் சொல்லியும் நிறுத்த முடியாத என் புகை பிடிக்கும் பழக்கம் ரஜினிகாந்த் கவலைப்பட்ட மூன்று நாளில் நின்று போனதை நீங்கள் என்னவிதமாய் எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. ரஜினிகாந்தின் நல்ல மனம்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடப் பழக்கம் அவரோடு எனக்கு உண்டு. எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் அவர் சிகரெட் நீட்ட, வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாய் என் சிகரெட்டுக்குத் தாவுவது உடனே அங்கு நடக்கும். அப்படி சந்தித்தபோது கூட ஒருமுறைகூட ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி கேட்டதேயில்லை. எனக்குத் தெரிந்த சில திரையுலகப் பிரமுகர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தால் சீக்கிரத்தில் ஓயமாட்டார்கள். பிறர் அந்தரங்கம் அறிவதில் ஆவல் உள்ளவர்களாய், அவர்கள் வாயைக் கிண்டி வம்புக்கு இழுத்து, அவர் பலவீனங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர் பலவீனங்களை நீக்குவது எப்படி என்று அவருக்கே அறிவுரை சொல்வார்கள்.

“குடிங்க, வேணாம்னு சொல்லலை, ஆனா ஜாக்கிரதை” என்று மிகக் கபடமாய் பேசுவார்கள். அதே சமயம் வெளியே போய் “அந்தாளா, பெரிய குடிகாரன்”. என்று வதந்தி பரப்புவார்கள். என்னிடமிருந்து ஓரே கெட்ட பழக்கமான சிகரெட் பற்றி சில பிரமுகர்கள் அதிகம் பேசி கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிகரெட்டை விட கொடுமையான பழக்கங்கள் அவர்களுக்கு இருப்பதை நான் அறிவேன். நான் அறிய ரஜினிகாந்த் அறிவுரை சொல்வதேயில்லை. அதே சமயம் பிறருக்கு நல்ல வாழ்க்கை அமைவதிலும் அக்கறை இருக்கிறது.

டைரக்டர் ஷங்கருக்கு திருமணம் என்று நான் சொன்னதும் அப்படியா என்று மிகவும் சந்தோஷப்பட்டார். “யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். சினிமாவிலிருக்கும் பெண்ணா”. “இல்லை மணமகள் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்’.

“நல்லது.”-சட்டென்று கைகூப்பினார்.

“ஏன், சினிமாவிலிருக்கும் பெண்களைத் திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு வேறேதும் அபிப்பிராயம் இருக்கிறதா”.

“தவறாக எந்த அபிப்பிராயமும் இல்லை. புருஷன் மனைவிக்கு நடுவே மூன்றாவது ஆள் நுழையக்கூடாது. சினிமாவில் நடிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் மூன்றாவது மனிதர் நுழைய வாய்ப்பிருக்கிறது. அவரைப் பற்றி பொய் சொல்லவோ, புறங்கூறவோ சில சமயம் ஆட்கள் முன் வரலாம். சினிமாவுக்கு அப்பால் உள்ள பெண்கள் எனில் இவை இருக்காது. வாய்ப்பு மிக மிக அரிது. வாழ்க்கையில் துவக்கம் பிரச்சனையே இல்லாது இருக்க வேண்டும் என்ற கவலையில் சொன்னேன்”.

இதுதான் ரஜினிகாந்த்.

கனிந்த அக்கறை. கண்ணியமான விசாரணை. எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக் கனிவான அக்கறை எப்போது ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சனையை அணுகவும் தெரிந்து விடுகிறது.

‘பாட்ஷா’ படப்பிடிப்பு முடியும் தருவாயில், ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு படக்கம்பெனி காசு தரவில்லை என்று தெரிந்தது. அன்று மாலைக்குள் தருவதாகப் பேச்சு. என்ன காரணமோ வரவில்லை. ஏன் பணம் வரவில்லை என்றதற்கு, தயாரிப்பு நிர்வாகிகளும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த நடிகை மேக்கப் ரூமிலமர்ந்து கொண்டு செட்டுக்கு வர மறுத்துவிட்டார். செட்டில் முழு உடைகளுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட நடனப் பெண்களுடன் புகைக்கும், வெப்பத்துக்கும் நடுவே ரஜினிகாந்த் நடன அசைவுகளைப் பழகிக் கொண்டிருந்தார். நடிகை தளத்திற்கு வரமறுக்கும் செய்தி சொல்லப்பட்டது.

இனி நடிகை வந்தால்தான் அசைவுகள் பழக முடியும் என்கிற நிலை. கிட்டதட்ட ஒரு மணிநேரம் ரஜினிகாந்த் பொறுமையாக இருந்தார். தயாரிப்பு நிர்வாகிகள் தாமதத்துக்கான காரணங்கள் கூறி, படப்பிடிப்பு முடிவதற்குள் அன்று இரவுக்குள் பணம் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடிகை நம்பவில்லை. நம்ப முடியாதபடி பயம். வேறு எவரோ செய்த சில்மிஷம். வேறு எந்த நடிகராக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று கிளம்பிப் போய் விடுவார்கள். எக்கேடாவது கெட்டுப் போங்கள் என்று நகர்ந்து விடுவார்கள் அல்லது விஷயத்தைப் பெரிதாக்குவார்கள்.

ரஜினிகாந்த் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவோடு பேசினார். அன்றைய ஷுட்டிங் தடைபடுவதால் உண்டான நஷ்டத்தையும், படம் வெளிவருவது தாமதமாவதால் உண்டாகும் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டார். டைரக்டரை அழைத்துக் கொண்டு போய் அந்த நடிகையிடம் நேரே பேசினார். பத்தாவது நிமிடத்தில் நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட, மிக வேகமாக படப்பிடிப்பு வேலை நடந்தது. வந்து ஆடத்துவங்கியதும் அரை மணி நேரத்தில் நடிகை கேட்ட காசும் வந்து விட்டது.

‘வேலை நேரத்தில் காசைக் கொடுத்து கவனத்தைக் கலைப்பானேன். வேலை முடிந்து போகும்போது தரலாம் என்றிருந்தோம். அதற்குள், நடிகை அவசரப்பட்டுவிட்டார்’ என்று தயாரிப்பு தரப்பில் வருத்தப்பட்டார்கள். இந்த சமாதனங்களை ரஜினிகாந்த் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ‘வேலை நிற்கவில்லை. நடக்கிறது. அதுதான் முக்கியம்’ என்று பரபரப்பாக இயங்கினார்.

ஷூட்டிங் முடிந்து டப்பிங் ஆரம்பமாயிற்று, ரஜினிகாந்த் டப்பிங் பேசும்போது தியேட்டருக்கு போயிருந்தேன். நான் சிகரெட் விட்டு கிட்டதட்ட பத்து நாளாகியிருந்தது. என்னைப் பார்த்து திரும்பியவர் வழக்கம் போல சிகரெட் பெட்டி திறந்து சிகரெட் நீட்டினார்.

“இல்லை வேண்டாம்”.

“ஏன் பிராண்ட் மாத்தினா இருமல் வருதா”.

“அதில்லை காரணம். நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்”.

“என்ன..”

“பத்து நாளாயிற்று”.

“நிஜமாகவா”.

“ஒரு சிகரெட் கூடப் பிடிக்கவேயில்லை”.

“பதட்டமாக இல்லையா’.

“முதல் நாள் இருந்தது , இரண்டாம் நாள் இருந்தது, மூன்றாம் நாள் இருந்தது. இப்போது சிகரெட் பிடிக்கும் எண்ணமே இல்லை”.

“பொறாமையா இருக்கு பாலா சார். என்னால் இதை விட முடியலை ஏதாவது பிரச்சனை வந்து சிகரெட்டைத் தூக்கிப் போடுவாங்க. ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி சிகரெட் நிறுத்த முடிஞ்சது”.

“ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்கன்னு நீங்க கேட்டீங்க இல்லையா..ஷுட்டீங் நடக்கறப்ப அது ரொம்ப வருத்தமா இருந்தது எனக்கு, நீங்க இவ்விதமெல்லாம் கேட்கக்கூடியவர் இல்லை. நீங்களே பொறுக்க முடியாது கேட்கும் அளவுக்கு நான் சிகரெட் பிடித்திருக்கிறேன்.”

“அன்னைக்கு கொஞ்சம் டென்ஷனான சீன். நானும் டைரக்டரும் மாத்தி மாத்தி உங்களை தொந்தரவு பண்ணிட்டிருந்தோம். அதனால உங்களுக்கு சிகரெட் ஜாஸ்தியாயிடுச்சு .நிகோடின் ஃபில்டர் இல்லாம இவ்வளவு சிகரெட் பீடிக்கறீங்களே.. இருமல் வந்துரப் போவுதேன்னு பயந்து போய் கேட்டேன். நான் கேட்டேன், நீங்க வுட்டுடீங்க. நீங்க ஏதாவது செய்து நான் சிகரெட் நிறுத்த முயற்சி பண்ணுங்களேன்”.

நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், எங்கள் தோழர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளும், நிரந்தரமான உடல் வலிவும், நிம்மதியான எண்ண ஓட்டங்களும், நிறைவான புகழும் கொண்டு வாழ்வதற்காக அவரிடம் உள்ள சிகரெட் பழக்கத்தை அவர் விட்டு விடுவதற்காக என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

நல்லவர்கள் நிறைவோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வது நல்லது.

9 comments:

  1. என்ன கனிவான அக்கறை, கண்ணியமான விசாரணை, திரையுலகத்தில் இப்படி ஒர் மனிதரை பார்ப்பது என்பது மிகவும் கடினமானது.

    கலைவினோத்

    ReplyDelete
  2. அன்புள்ள கிருஷ்ண துளசிக்கு,
    வணக்கம்.உங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.எழுத்து சித்தர் அவர்களின் வாசகர்களை அவர்களுக்கு பிடித்த தொடர்களை பதிவேற்ற சொன்னால் அது இன்னும் எளிமையாக இருக்குமே,ஒரு மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் என்றில்லாமல் நிறைய பதிவுகள் வருமே..
    நன்றி,
    என்றென்றும் அன்புடன்,
    ஸ்ரீநிவாஸ்

    ReplyDelete
  3. Vanakkam Thulasi.
    God Bless.
    What are the topics, Shri. Balakumaran is writing now. What are the titles.?
    We are eager to know.
    Advise, IF possible.
    Our Namaskarams.
    Anbudan,
    Srinivasan. V.

    ReplyDelete
  4. July 5,
    Happy birthday bala sir.நம் எழுத்துசித்தர் பல்லாண்டு வாழ்ந்து பலர் வாழ்வில் வழிகாட்ட வாழ்த்துக்கள்.இன்னும் பல நூல்கள் இயற்றி தமிழ் சேவை செய்ய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி,
    ஸ்ரீநிவாஸ்.

    ReplyDelete
  5. bala sir I drew u.
    http://www.orkut.co.in/Main#AlbumZoom?gwt=1&uid=1181574408262671864&aid=1275101897&pid=1278069996710

    please see

    ReplyDelete
  6. எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் பரிவு, கனிவு, அன்பு காட்டுதல், எழுத்தின் மூலம் நல்வழிப்படுத்துதல் போன்ற பல விஷயங்களை செவ்வனே செய்து வருகிறார்...

    அவர் வாழிய பல்லாண்டு...

    நல்லோர் ஒருவர் நம் உடன் இருந்தால், நம் எல்லோருக்கும் கிடைக்கும் இயற்கை அளிக்கும் அந்த கொடையாம், மழை..

    ReplyDelete
  7. ஜெய் மா
    வணக்கம்.
    அன்பு மிகு திரு.பாலகுமாரன் அவர்களை
    அவருடைய புத்தகங்கள் மூலமாக படித்து ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கின்றேன்.காதலாகி கனிந்து கொண்டிருக்கின்றேன்.அவர் நீடுழி ஆரோக்கியமுடன் வாழ அப்பன் விஸ்வனாதனை பிரார்திக்கின்றேன்.அவரது படைப்புக்கள் ஒரு பண்பட்ட சமுதாயத்தை படைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
    ஜெய் மா கங்கா

    ஸ்ரீ கோமதி தாஸ்
    காசி.

    ReplyDelete