Thursday, September 23, 2010
பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்
அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.
இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.
எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.
அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.
பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.
முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.
அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.
எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.
பிறகு...?
மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.
அப்படியானால் சாரப்பள்ளம்.
சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?
பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).
எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.
கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.
உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரியகல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.
நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.
கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்த்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.
கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.
முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.
மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.
கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்ன வித கோவில்.
விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.
இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார். இது போதுமா கடவுளைச் சொல்ல,
ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.
விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.
Dear krishnatulasi,
ReplyDeleteExcellent post.No words to describe.Correct post at the correct time.Nobody can oppose that the function arranged and all the importance now given to tanjore is after udayar became famous.All credits go to bala sir.
No words...fantastic..feeling elated...
ReplyDeleteDear Mr.Krishna thulasi,
ReplyDeleteIyya small brief about Bragadiswar temple is wonderful. Even i born in thanjavur, I visited lot of times to the temple without knowing Rajarajacholan. But when I read Iyaa's Udaiyar book then only i knew about Rajarajacholan thoughts and his unbelievable achievement.
What a wonderful king we had
and
what a wonderful temple we have
and
what a wonderful guru we have......
This article is really useful, this particular time when 1000 years celebration going on the Thanjvur.
with love
arul kanthan
“உடையார்” புராணத்தில் ஒவ்வொரு வரியும் தஞ்சையை 1000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும், கோயில் கட்டும் போது எப்படி இருந்திருக்கும் என அப்படியே ஒரு கனா போல காணச்செய்தீர்.. ராஜராஜன் வாழ்ந்த புண்ணிய பூமியைச் சேர்ந்தவன் என சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்..
ReplyDeleteவிமானத்தையும் கலசத்தையும், உள்பிரகாரத்தில் இருக்கும் 108 நட சிற்பங்களையும் கோபுரத்தின் உள்புறமும் செதுக்கப்பட்டிருக்கும் சிலைகளையும் ஒரு முறை அருகில் தொட்டு தடவி தழுவி பார்க்கும்வாய்ப்பினை பெரு உடையார் வழங்கினார் என்பதில் அலாதி கர்வம் கொள்கிறேன்..
//விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.
ReplyDeleteஅதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.//
இந்த பதிவை வேறொரு தளத்தில் ஏற்கனவே படித்தேன். பாலகுமாரன் என்பது பத்தியின் கடைசியில் தான் போடப்பட்டு இருந்தது. ஆனால் வாசிக்கும் போது அதில் பாலகுமாரன் தெரிந்து விட்டார்.
அந்த கடைசி வரிகள் அருமை.
Arputham . Abharam , Udayar - in a Nut shell .Thanks for the Post
ReplyDeleteReally great to have this post, it givs a big wonder while reading this.. its unbelievable that king rajaraja had given all kinds of facilities to the people who worked in this temple, its awefull that he had a very planned culture 1000 years back itself.Its pride to all of us.Really Bragatheeswaram is a Vishwarupam only.Pranams to Ayya and thanks to Krishanatulasi
ReplyDeleteAn Excellent post.We can understand udayar book very well after studying this post.
ReplyDeleteVery nice post.The way he said how the workers worked very hard to create such a beautiful gopuram is excellent.How Raja raja played a vital role in building this architechtural wonder is shown very nicely with some pictures.
ReplyDeleteஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் கோவில் கட்ட எடுத்த முயற்சிகள் அனைத்தும் உடன் இருந்து பார்த்த பிரமிப்பை கண் முன்னே கொண்டு வந்த அய்யாவின் வரிகள் என்ன சொல்ல!
ReplyDeleteநன்றி
வணக்கம் கிருஷ்ணதுளசி அவர்களுக்கு,
ReplyDeleteமிக்க நன்றி இந்த பதிவுக்கு, என்ன விதமான கற்கள், என்ன விதமான கட்டுமான முறை, எத்தனை மக்களின் உழைப்பு என்று ஐயா அவர்கள் மிகவும் எளிதாக, அனைவருக்கும் புரியும் வைகையில் அருமையாக கூறியுள்ளார். இந்த பதிவை படிக்கும் போது, எவ்வளவு கடுமையான உழைப்பு இதில் உள்ளது என்று தெரிந்துகொள்ள முடிகிறது. ஐயா அவர்கள் மட்டுமே இந்த மாதிரியான தகவல்களை அனைவருக்கும் எடுத்து சொல்கிறார். மிக்க நன்றி, இன்னும் பல சரித்திர நாவல்கள் ஐயா எழுத வேண்டும் என்று நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
சிலைகள் பற்றிய, அஹா! என்ன விதமான விளக்கம். பிரமிக்க வைக்கிறது. படிக்குக்போதே ஒரு முறை தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் போய் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தூண்டுகிறது. photeகள் மிக அருமையாக உள்ளது, நல்ல தேர்வு, மிக்க நன்றி கிருஷ்ணதுளசி அவர்களுக்கு, பெரிய கோவிலின் விழா துவங்கும் சமயத்தில், எங்களுக்கு இந்த பதிவை தந்ததற்கு.
வாழ்க சோழம். வளர்க சோழம்.
கலைவினோத்.
'உடையார்'ஆறு பாகத்தில் சொல்லிய விஷயங்களின் சாரத்தை சற்றும் சுவை குன்றாது சிறிய கட்டுரையில் கூறியிருக்கும் பாங்கு 'எழுத்துச் சித்தர்' என்ற பட்டத்தை உறுதி செய்யும் விதமாய் அமைந்துள்ளது.
ReplyDeleteவறட்சியான சரித்திரப் பக்கங்களை 'உடையார்' உவப்பாக்கியது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதல்லவா..
இந்த சிறிய கட்டுரையும் ' இதன் தொடர்ச்சி எழுதுவாரா' என்ற ஆவலை பல தரப்பிலும் தூண்டியிருப்பதே உண்மை..
இராஜராஜனுக்கு அன்று கருவூர் தேவர்..
இன்று எழுத்துச் சித்தர்........
நன்றி சீனிவாசன்..
ReplyDeleteமுப்பது வருடங்களுக்கும் மேலாக பெரிய கோயிலை நெஞ்சில் சுமந்து எழுத்தில் வடித்த காவியம் 'உடையார்' .
அது இராஜராஜனின் மேல் எழுத்துச் சித்தருக்கு இருக்கும் காதலின் விஸ்வரூபம்.
இது அந்த மாசிலா காதலின் வாமனாவதாரம் போலும்...
ஒரு சிறந்த Ph.D paper..
அன்புள்ள ஸ்ரீ துளசி
ReplyDeleteவணங்கி மகிழ்கிறேன்.
நம் உடையாரின் சிறப்பை சுருக்கமாய் சீராய் வெளியிட்டதற்கு நன்றி.
படிக்க படிக்க பரமானந்தமாய் இருக்கிறது.
வணங்கி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களின் நமஸ்காரங்களை ஐயாவுக்கு தெரியப்படுத்தவும்.
மிகுந்த நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
The post is really good; it makes us think about the culture and tradition of our ancestors. Through this post i was able to imagine the statues in the temple, hats off to Iyya. It is unbelievable that temple has been constructed before 1000 years which still stands so strong.
ReplyDeletePost is excellent.....I have not been to this temple; it makes me to visit the temple. It makes me think to see the paintings and statues in any temple and understand our ancestor’s lifestyle.
ReplyDeleteArumaiyana pathivu.... Ananda Vimmal..... Balakumaran yenrale anantha vimmalkalukku kuraiyethu... Guru-vin Arokkiyathirukku Nenjarntha Prarthanaikal...
ReplyDeleteJegan
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியது நம் தஞ்சை பெரிய கோவில். நம் இந்தியா இப்பொழுதுதான் வளரும் நாடாக கருதப்படுகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிக நல்ல நாகரீகமும், கலாசாரமும் இருந்திருக்கிறது. தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் முன்னோடிகளாக இருந்தமைக்கு இதுவே நற்சான்று.
ReplyDeleteஇப்பதிவு படித்த பின் தஞ்சைக்கு செல்லும் அனைவருக்கும், அந்த ப்ரம்மாண்டமான கோபுரத்தை காணும் போது, அது உயர்ந்து இருப்பது போல் இராஜராஜரின் புகழும், ஐயாவின் நினைவும் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கும். இன்னும் பல அரிய விஷயங்களை ஐயா எழுத வேண்டும் என்றும், அவரின் ஆரோக்கியதிற்காகவும் ப்ராத்திக்கிறேன்.
மிக்க நன்றி
மகேஷ்.
I am Yogesh Krishna and my id is yogeraju@yahoo.com
ReplyDeleteDear sir
Today i came to know this following information .Is it correct?? If so why this is like so?we can do some thing for this position . It is hearting us all and this topic is hot in Face book
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!!!
and i given this link also:::Photos of அகரமுதலி
Thank You
Regards
Yogesh Krishna
9345578276
தென்னாடுடைய சிவனே போற்றி. We are very blessed to read this and blessed to have guru like yeluthu chithar..
ReplyDeleteதென்னாடுடைய சிவனே போற்றி...
ReplyDeleteஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
தென்னாடுடைய சிவனே போற்றி...
Deleteஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
Fantastic- As I was reading I knew it is Bala. Love to visit The temple.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteராஜா ராஜா சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டும்பொழுது தஞ்சாவூர்-ஐ சுற்றி ஆயிரத்தொரு சிவன் கோயில்கள் கட்டினார் என்றும், அதில் ஒன்று எங்கள் கிராமத்தில் (நீடாமங்கலம் - கோயில்வெண்ணி இடையில் உள்ள முன்னாவல்கோட்டை), உள்ள காலகச்தீஸ்வரர் திருக்கோயில் என்றும் ஊரார் கூற அறிய பெற்றேன்.
இதை பற்றி ஏதேனும் வரலாற்று செய்தி தங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.
நன்றி.