Friday, January 7, 2011

“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”

குரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா? செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா? குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா? குருவினுடைய தரிசனம் அப்படிப்பட்டது.
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட ஆனந்தத்தை, பணிவை உள்ளிருந்து பொங்கும் வணக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். எந்த முயற்சியுமில்லாமல், எந்த எண்ணமுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கரம் கூப்பி வணங்கியிருக்கிறேன். வெறுமே தொலைவிலிருந்து வணங்காமல் அவருடைய மேன்மையை அண்மையில் இருந்து பல்வேறு நாட்களில், பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நல்ல குரு மிகவும் சூட்சுமமானவர். அவரைப் புரிந்து கொள்வது கடினம். அவரை சாதாரணமாக எடை போட்டு, அவரிடமிருந்து விஷயங்களை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், அது மிகவும் முட்டாள்தனம். யோகி ராம்சுரத்குமார் சூட்சுமத்திலும் சூட்சுமமானவர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
அவரை தரிசிக்க வேண்டுமென்று அடிக்கடி திருவண்ணாமலை போகின்ற விருப்பம் எனக்கு உண்டு. அப்படி செய்வது என் வழக்கம். ஒரு முறை திருவண்ணாமலைக்கு நேரடியாகப் போகும் பேருந்தில் ஏறி செளகரியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணப்பட்ட போது அந்த விரைவுப் பேருந்தில் ஜனங்களைக் குளிர்விப்பதற்காக ஒலிநாடா வைத்துப் பாட்டு போட்டார்கள்.

‘அடடா, இது சிந்தனை ஓட்டத்தை அறுக்குமே, வேறு பேருந்தில் ஏறிவிடலாமா’ என்று நினைத்த போது, போட்ட பாடல்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களாக இருந்தன. என்னுடைய இளம் வயதில் நான் ரசித்த பாடல்களை மறுபடியும் கேட்கும் போது மனம் சந்தோஷத்தில் குதித்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நான் பாடல்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். உள்ளுக்குள் என் குருவின் நாமமும், அவரைப் பற்றிய சிந்தனையும் தனியாக ஓடிக் கொண்டிருந்ததன. மிக விரைவாக திருவண்ணாமலையை பேருந்து அடைய, இறங்கி அவர் வீடு நோக்கி நடக்கும் போதும் உள்ளுக்குள் பேருந்தில் கேட்ட எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. குறிப்பாய் ஒரு பாடல் அதிகமாக ஓடியது. ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு நான் அவர் வீட்டு வாசலுக்குப் போனேன்.

எப்போது போனாலும் வாசற்கதவை உடனே திறந்து என்னை உள்ளே வரவழைப்பதும், தனக்கு அருகேயுள்ள பாயை விரித்து, அதில் உட்காரச் சொல்வதும் அவருடைய வழக்கம். அன்றும் அதே விதமான வரவேற்பு கிடைத்தது. எதிரே சில பெண்மணிகளும் எனக்கு வலது பக்கம் சில ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். எதிரே இருந்தவர்கள் குருவின் நாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டிருக்க, என் தோளில் கையை வைத்தபடி என்னையே என் குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு “என்ன பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.

“நான் மெளனமாகவல்லவா இருக்கிறேன், ஒன்றும் பாடவில்லை பகவான்” என்று சொன்னேன். “இல்லை. உள்ளே ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாய், என்ன பாட்டு அது”. நான் அப்போது தான் என்னை உள்ளே கவனித்தேன்,
உள்ளே
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா”
என்கிற எம்.ஜி.ஆர். படத்தின் காதற்பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பேருந்தில் போட்ட பாட்டு இன்னும் தொடர்ச்சியாக உள்ளே எந்தவித அர்த்தமுமின்றி, எந்தவித முயற்சியுமின்றி, எந்தவித திட்டமிடலுமின்றி, தானாக, சரியாக மூடப்படாத குழாயிலிருந்து நீர் வடிவதை போல ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன பாட்டு” .
நான் தயக்கத்தோடு “பேருந்தில் வரும் போது சினிமா பாடல்கள் போட்டார்கள். அதில் ஒரு பாட்டு உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது” என்றேன். “என்ன பாட்டு அது” என்றார்.
நான் சொல்வதற்கு தயங்கினேன். ஒரு மகத்தான குருவிடம் ஒரு சாதாரண சினிமா பாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உண்டா என்ற எண்ணம் ஏற்பட்டது.
“என்ன பாட்டு” மறுபடியும் கேட்டார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்று சற்று உரத்த குரலில் சொன்னேன்.

எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணிகள், வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ஆண்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். என் குருநாதர் சிரிக்கவில்லை. மிகக் கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
எதிரே இருந்த அம்மையார் ஒருவர் மெல்லிய குரலில் என்னை நோக்கி பேசினார், “பாலகுமாரன் இது அநியாயமாபடலே” என்று கேட்டார். மற்றவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.
“இரண்டு கல்யாணம் பண்ணிண்டு திருப்பியும் ‘கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா’ என்று சொல்றேளே, நன்னாயிருக்கா” என்று கேட்க, மறுபடியும் கூட்டம் குபீரென்று சிரித்தது. ஆனால், குருநாதர் சிரிக்கவில்லை. ஒரு கேலிக்கான பொருளாய் அங்கு இருப்பதைப் பார்த்து முகம் வெளிறி சிரித்தேன்.
“பேருந்தில் திரும்ப திரும்ப இந்தப் பாட்டை போட்டுக் கொண்டிருந்ததால், உள்ளுக்குள்ளே தங்கி விட்டது. என்னையும் அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்றபடி இந்தப் பாட்டினுடைய அர்த்தம் பற்றி எனக்கு கவலையில்லை” என்று அவரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவேயில்லை. காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர் என் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.
“தயவு செய்து அந்தப் பாட்டைப் பாடு” என்றார். இந்த முறை கூட்டத்தினர் ஆரவாரித்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஏதோ மிகப் பெரிய விளையாட்டு ஒன்று விளையாட, என்னை வைத்துக் கொண்டு நாடகம் போட தீர்மானித்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. நான் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன்.
அவர் தோள் உலுக்கி “பரவாயில்லை. பாடு” என்றார். “அது சினிமா பாட்டு” என்றேன்.
“அதனாலென்ன, நல்ல பாட்டு தானே, பாடு” என்றார். நான் தொண்டையை செருமிக் கொண்டேன். எதிரே உள்ள எல்லா முகங்களிலும் கேலி, கிண்டல் ததும்பியிருந்தது.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
நான் பாடினேன். மறுபடியும் யாரோ ஏதோ சொல்ல, அவர்கள் கைக் கொட்டி சிரித்தார்கள்.
‘என்ன’ என்பது போல் யோகி ராம்சுரத்குமார் சொன்னவரை உற்றுப் பார்க்க, “பாலகுமரான் ஏதோ திட்டமிட்டு தான் இங்க வந்திருக்காரு” என்று அவர் மறுபடியும் தன் கருத்தை சொன்னார். மீண்டும் கூட்டம் சிரித்தது. பரிதாபமாக குருவைப் பார்த்தேன்.
“பரவாயில்லை பாலகுமாரன், பாடு” என்று சொன்னார்.


ஒரு அளவுக்கு மேல் போய்விட்டது. இனி என்ன வந்தாலென்ன. சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினால் என்ன என்று நான் தொண்டையை செருமிக் கொண்டு இனிமையான குரலில், பாட்டு எந்த பாவத்தோடு இருக்க வேண்டுமோ, அந்த பாவத்தோடு பாட்டு பாடினேன்.
மூன்றாம் முறையும் “பாடு” என்று யோகி ராம்சுரத்குமார் கட்டளையிட்டார்.
அப்போது சாண், முழம் எல்லாம் தாண்டி தலைக்கு மேலே வெளிவர முடியாத உயரத்தில் வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இனி என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமென்று இந்த முறையும் மிக அழகான குரலில் பாடினேன்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” அவர் நெருங்கி என்னை அணைத்துக் கொண்டார்.
“கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” தோளை விடுவித்து, தன் கையை என் கையோடு பற்றிக் கொண்டார்.
“செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” தன் உடம்பு முழுவதையும் என் மீது சாய்த்தார்.
“சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடியவுடன், உடனே திடீரென்று இடுப்புக்குக் கீழே ஏதோ வெடித்துக் சிதறியது. சரக்கென்று மேலே ஏறியது. இடுப்பைத் தாக்கியது. நடுமுதுகைக் குத்தியது. மேலெழும்பி நெஞ்சைக் குறிபார்த்து எகிறி சிதறடித்தது. தொண்டைக்கு வந்து, நெற்றிக்குப் போயிற்று, உச்சியில் வந்து படீரென்று எரிமலையாய் வெடித்தது.
என்னால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்லை. என் உடம்பு பரிதவித்தது. நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வாய் விட்டு கதறினேன். யாரோ நெஞ்சில் ஈட்டியால் சொருகியதைப் போல கத்தினேன்.

என் உலகம் மாறிப் போயிற்று. அது ஜடப்பொருளாலான உலகமல்ல. மண், மரம், இரும்பு, தாமிரம், வெள்ளி, மனித உடல்கள் என்று பருப்பொருளாலான உலகமல்ல. அது வெளிச்சமான உலகம். முற்றிலும் வெளியான உலகம். எந்தத் தடையுமில்லாத உலகம். எந்த இலக்குமில்லாத உலகம். எந்தப் புள்ளியுமில்லாத உலகம். எல்லா இடமும் வெளிச்சம், நானும் வெளிச்சம். வெளிச்சம் வெளிச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இலக்கின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளியை கடந்தால் தானே வேகம் தெரியும். கடப்பதற்கு எந்த புள்ளியுமில்லை. தொடுவதற்கு எந்த எலையுமில்லை. அதனால் வேகம் மிகப் பெரிய வேகமாக இருந்தது. அந்த வேகம் என்னால் உணரப்படாமலிருந்தது.

வேகம் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகம் என்று தெரியவில்லை. நான் இருக்கிறேன். ஆனால் எதனுள் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நானும் வெளியும் வெவ்வேறல்ல. வெளி தான் நான். நான் தான் வெளி. எனவே நான், நீ என்ற பேதமில்லை. எல்லோரும் நான் தான். எல்லாமும் நீ தான். இரண்டு பேர் இல்லை. இரட்டைகள் இல்லை. அதனால் துவந்தமுமில்லை. போட்டியோ, பொறாமையோ, விருப்போ, வெறுப்போ எதுவுமில்லை. இது பேரமைதி. முடிவில்லாத சந்தோஷம் நெல்முனையளவும் குதியல் இல்லாத அமைதி.
இது தான் நான், இங்கிருந்து தான் நான். இதுவே என் இயல்பு. உடலற்று உணர்வாகத் திகழ்கிற போது இப்படித்தான் இருக்கிறேன்.

மெல்ல அந்த வெளிச்சம் வெளிறியது. உடம்பின் ஞாபகம் வந்தது. மனம் தானாக விழித்தது. நகர்ந்து போய் உடம்பிலிருந்து விழித்தது. உடம்பின் வழியாக உலகத்தைப் பார்த்தது.
இப்போது உலகம் துவந்தமயமானது. நான், நீ என்ற பேதமுடையதானது.

உணர்வான நானுக்கும், உடம்புள்ள நானுக்கும் உள்ள வித்தியாசத்தை சொடுக்கு நேரத்தில் என் குருநாதர் எனக்குக் காண்பித்தார். மிக சுகமான இடத்தில் என்னை உட்கார வைத்தார். வெளிச்சத்தை என்னுள் இறக்கி அந்த வெளிச்சத்தால் அபிஷேகம் செய்வித்தார். இது கல்யாணம். என் குருநாதரோடு எனக்குக் கல்யாணம். ஒரு குருவுக்கும், சீடனுக்கும் ஏற்பட்ட வாழ்வு பந்தம். பிரிக்க முடியாத உறவு. மறக்க முடியாத உறவு, பின்னிப் பிணைந்து தொடரும் உறவு.

எல்லோரும் போக முடியாத இடத்திற்கு எளிதில் அணுக முடியாத இடத்திற்கு குருநாதர் எந்தத் தவமுமில்லாத என்னைத் தூக்கிக் கொண்டு போய் இறக்கினார். அருளை அள்ளி எனக்குள் திணித்தார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்க்க சொல்லலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
இப்போது சாதாரண சினிமா பாட்டு வேறு அர்த்தம் கொண்டது. ஒரு சீடனுக்கு பட்டாபிஷேகத்தை இந்தப் பாட்டின் மூலம் என் குருநாதர் நடத்தினார்.
அதுவரை எதிரே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமாய், திகைப்பாய் முகம் இறுகிக் கிடந்தார்கள். அப்போது என்னுள் ஏற்பட்ட ஆனந்தத்தை நிறுத்தி நான் சிரிக்கத் துவங்கினேன். எனக்கு எவரோடும் சண்டையில்லை. எந்தப் பிணக்குமில்லை. நான், நீ எல்லாம் ஒன்று. நீயே நான், நானே நீ என்று சிரிக்கத் துவங்கினேன். உயர்ந்த யோகியும் ஞானவானுமான ஒரு குருநாதர் மிகச் சாதாரணமான ஒரு சீடனை உன்னத நிலைக்குக் கொண்டு வந்ததற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

குருவிடம் பணிவோடு இருந்தால் போதும், வெட்கமின்றி இருந்தால் போதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருந்தால் போதும். எனக்குள் எந்தப் பாட்டுமில்லையே என்று நான் பொய் பேசவில்லை. உள்ளே என்ன இருந்ததோ, அதை கொட்டினேன். அந்த உண்மைக்குப் பணிவு முக்கியம். குருநாதர் மீது நம்பிக்கை முக்கியம். தெளிவில்லாத போது வார்த்தைகள் தடிமனாக வரும். அலட்டலாக வரும். அது எந்த உறவையும் பங்கப்படுத்தும்.

ஒரு குருநாதரை பணிவற்ற எவரும் அணுகவே முடியாது. அப்படியும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ஒரு மத்திம வயது பெண்மணி குருநாதர் தாடியை நீவிவிட்டு கொள்வதைப் பார்த்து “வெள்ளை வெளேரென்றிருக்கின்ற தாடி” என்று சொல்ல, குருநாதர், “ஆம்” என்று தலையாட்டினார். “நீங்க டை அடிச்சுக்குங்க பகவான், கருப்பு டை, தலைக்கு, தாடிக்கெல்லாம் அடிச்சுக்குங்க” என்று சொல்ல, சட்டென்று குருநாதர் அந்தப் பெண்மணியையே உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்மணிக்குத் தான் சொன்ன விஷயத்தின் அபத்தம் தெரியவில்லை. இளித்துக் கொண்டிருந்தார்.

“அம்மா எழுந்திரு, இந்தா என்னுடைய பிரசாதம்” என்று சில பழங்களைக் கொடுத்தார்.
“இந்தப் பிச்சைக்காரன் உன்னை வழியனுப்பிகிறேன், போய் வா” என்று சொன்னார். ‘என்ன’ என்று அந்த அம்மாள் வியப்போடு பார்த்தாள். “போய் வா” என்று மறுபடியும் சொல்ல, அந்த அம்மாள் மெல்ல நகர்ந்தார். திரும்பி வாசற்படியிலிருந்து குருநாதரைப் பார்த்தார்.
“இனிமேல் இங்கு வரவேண்டாம். இந்தப் பிச்சைக்காரனோடு உனக்கு எந்த தொடர்புமில்லை. ஏனெனில் நீ சொல்லும்படி என்னுடைய தலைமுடிக்கு சாயம் ஏற்றிக் கொள்ளப் போவதில்லை, அது அப்படித் தான் இருக்கும். எனவே நீ வரவேண்டிய அவசியமில்லை” என்று அவளைப் புறக்கணித்தார்.
ஒரு வாக்கியம் தப்பாகப் போனது. அந்த அம்மாவின் வாழ்க்கைத் திசை மாறிப் போனது. மகத்தான குருவின் நட்பை தேவையற்ற வாக்கியத்தின் மூலம் அந்த அம்மாள் இழந்தார். கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி சிதறியது போல ஒரு நல்ல நட்பு சிதறிப் போனது. குருவிடம் பொய் சொல்ல முடியாது. பணிவு உள்ளது போல் நடிக்க முடியாது. உள்ளுக்குள்ளே இருப்பதை நோண்டி வெளியே வீசியெறிய குருவிற்குத் தெரியும். அகந்தைக் கிழங்கை கிண்டி தூக்கி வெளியே “இது நான் நீ” என்று அவரால் காண்பிக்க முடியும்.


என் மகள் ஸ்ரீகெளரி நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பிளஸ் டூ தேறினார். அவருக்கு டாக்டர் சீட் கேட்டு சில முக்கியஸ்தரிடம் சொல்லி வைத்திருந்தேன், தமிழ்நாட்டில் உயர்பதவியிலிருப்பவர்கள், “உங்கள் மகளுக்கில்லாததா, நிச்சயம் தருகிறேன்” என்று சொன்னார். மதிப்பெண்களைக் காண்பித்து இந்த விஷயத்தை குருநாதரிடம் தெரிவித்தேன். குருநாதர் மதிப்பெண்களைப் பலமுறை தடவிக் கொடுத்தார். என் மகளிடம் திருப்பிக் கொடுத்தார்.
“ஸ்ரீகெளரி நீ டாக்டராக விரும்புகிறாயா” என்று கேட்டார்.
உடனே என் மகள் “உங்கள் விருப்பம் அதுவானால் என் விருப்பமும் அதுவே” என்று சொன்னாள்.
“உன்னுடைய விருப்பமென்ன கெளரி” என்று கேட்டார்.
“உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் பகவான்.”
“இல்லை, உன் விருப்பத்தைச் சொல்” என்று பகவான் மறுபடியும் வற்புறுத்தினார்.
“எனக்கென்று விருப்பம் ஏதுமில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை” என்று தீர்மானமாக சொன்னார். அருகிலுள்ளவர்கள், “அப்படி கேட்காதே, டாக்டராக வேண்டுமென்று அவரை கேள், நிச்சயம் ஆகிவிடுவாய்” என்று தூண்டிவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகெளரி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, நீங்கள் எனக்கு என்ன தருகிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை. உங்கள் சொல் மீறி, உங்கள் விருப்பம் மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் முற்றிலும் என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்” என்று சொல்ல, குருநாதர் கண்களில் கனிவு தோன்ற என் குழந்தையைப் பார்த்தார். கை வீசி ஆசிர்வதித்தார்.

“கெளரி டாக்டராவதென்றால் மிகக் கடினம். வாழ்க்கையை ரசிக்க முடியாது. பாட்டுப் பாட முடியாது, வேளைக்கு சாப்பிட முடியாது, ஓய்வாக இருக்க முடியாது. இவைகளில்லாது போனால் கெளரி உன்னால் தாங்க முடியாது. எனவே நீ வேறு ஏதேனும் படி” என்று திசை திருப்பி விட்டார்.

என் மகள் எம்.எஸ்ஸி பயோகெமிஸ்டரி முடித்து, முடித்த கல்லூரியிலேயே தலைமைப் பேராசிரியராகத் திகழ்ந்து, இப்போது திருமணமாகி ஷர்ஜாவில் தன் மகனோடும், கணவரோடும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வேளைக்கு சாப்பிடுவதும், கணவனுக்கும், குழந்தைக்கும் உதவியாக இருப்பதும், சந்தோஷமாக நடைபெறுகின்றன. தெளிந்த நீரோட்டம் போல அவள் வாழ்க்கை இருக்கிறது. ஒரு டாக்டருக்குண்டான பரபரப்பு அவளிடமில்லை. அது பெரிய நிம்மதி என்பதை இப்போது என் மகள் உணருகிறாள். பணிவு என் குழந்தையிடம் இயல்பாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷமடைந்தேன்.

நல்ல குரு ஒரு சந்தோஷம்; ஒரு வழிகாட்டி; ஒரு பாதுகாவலர்; நல்ல குரு கடவுளிடம் நம்மை கொண்டு போய் அலுங்காமல் சேர்ப்பவர்.

ஒரு குருவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியம் தான் வேண்டும்.

4 comments:

  1. குருவிடம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன குருவுக்கு நன்றி..!!

    ReplyDelete
  2. தேடல் உள்ளவர்களுக்கு விடை கிடைக்கும் என்பது தானே விதி ...


    நன்றி தேவா

    ReplyDelete
  3. ஒரு சினிமா பாட்டின் மூலம், குரு தன் சீடனுக்கு கடவுளைக் காட்டியிருக்கிறர், பேரானந்தத்தில் ஆழ்தியிருக்கிறார் என்று படிக்கும்போது,குரு இப்படித்தான் தன் சீடனுக்கு சொல்லித்தருவார் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது, ஆனால் அவர் உணர்த்த விரும்பியதை எப்படியும் சொல்லித்தருவார் என்பது புரிகிறது.அப்படிப்பட்ட குருவிற்க்கு நமஸ்கரிக்க தோன்றுகிறது, எங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை விதவிதமாக சொல்லித்தரும் எங்கள் குருவிற்ககு நன்றி.

    ReplyDelete
  4. " தேடல் உள்ளவர்களுக்கு விடை கிடைக்கும் "
    Thank you Thulasi.
    Namaskarams.
    Anbudan,
    Seenuvaasan. V.

    ReplyDelete