Saturday, April 12, 2008

சினிமாவில் எழுத்துச்சித்தர் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைபட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப்பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை.

சினிமா எனக்கு வேறு ஒரு உலகை, வேறுவிதமான மனிதர்களை, நல்ல அனுபவங்களை, அந்த அனுபவத்தால் புத்தி தெளிவை, நிதானத்தை கொடுத்திருக்கிறது. வாழ்க தமிழ் சினிமா. ஒரே ஒரு சம்பவத்தை இங்கு சொல்லி சினிமா எப்படி உதவி செய்தது என்பதை உங்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அந்த உதவி இயக்குனர் வேலையில் ஒன்று கன்டின்யுடி. அதாவது ஒரே ஒரு சீனை முதல் நாள் எடுத்து, பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்து, பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் தொடர்வார்கள். அதாவது தோட்டத்தில் ஆடி பாடிய பெண் அதே உடைகளோடு தானே வீட்டிற்குள் நுழைவாள். தோட்டத்தில் ஆடி பாடியது ஜனவரி 1-ம் தேதி என்றால், வீட்டிற்குள் நுழைவது பிப்ரவரி 3-ம் தேதியாக இருக்கும். அப்படித்தான் ஷுட்டிங் நடக்கும்.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழையும் போது தோட்டத்தில் ஆடிய போது என்ன நகைகள் அணிந்திருந்தாளோ அதோடு இருப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதற்குத்தான் கன்டின்யுடி என்று பெயர். காதில் தோடு, கை வளையல்கள், கழுத்து நகைகள், மூக்குத்தி, கால் மெட்டி, புடவை, ரவிக்கை, தலை வாரலுடைய அமைப்பு இவையெல்லாம் ஒரு உதவி இயக்குனர் குறித்துக் கொள்ள வேண்டும்.

அவர் மிகப் பெரிய நடிகை. நன்கு நடிக்க கூடியவர். அவர் படப்பிடிப்பில், நான் அவருடைய நகைகளை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு அவரிடம் இருந்தது. படப்பிடிப்புமுடிந்த போது தயவு செய்து அந்த நகைகளை கழட்டி கொடுத்து விடுங்கள் அது மறுபடியும் கன்டின்யுடிக்கு தேவைப்படுகிறது என்று சொன்னேன். அவர் இப்பொழுது வேண்டாம் களைப்பாக இருக்கிறது. நாளைக்கு காலையில் வந்து தருகிறேன் என்று சொன்னார். அவர் கிளம்பிபோனதும் நாளைக்கும் இதே இடத்தில் இதே சீனை எடுக்கப்போகிறேன் என்று டைரக்டர் சொன்னார்.

சரி .காலையில்தான் நடிகை நகைகளை கொண்டுவந்து விடுவாரே என்று நான் சந்தோஷமானேன். மறுநாள் காலை நடிகை வந்து இறங்கியதும் ஓடிப்போய் நகைகளைக் கேட்டேன். கழுத்துச்செயின், மூக்குத்தி , கைவிரல் மோதிரங்கள், உடுப்பு, ரவிக்கை, தலைவாரல் எல்லாம் அப்படியே இருந்தது. காதில் வேறு தோடு போட்டிருந்தார். அந்த தோடு இல்லையே என்று கேட்டதற்கு அது காணவில்லை. எங்கேயோ தொலைந்து விட்டது என்று சாதாரணமாக சொன்னார்.

தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .அந்த தோடு வேண்டும் என்று கூறினேன். என்னிடம் இல்லை . நேற்றே வாங்கி வைக்க வேண்டியதுதானே. ஏன் இப்போது வந்து உயிரை வாங்குகிறீர்கள் என்று சள்ளென்று என் மீது எரிந்து விழுந்தார். காலங்காலையில் உரக்க ஒரு நடிகை என்னைப் பார்த்து கோபமுறுவதை யூனிட்டில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது.

நான் என்ன செய்வது என்று காஸ்ட்யூமரோடு போய் ஒட்டிக் கொள்ள,அந்தக் காஸ்ட்யூமர் மிகவும் பிரயத்தனப்பட்டு கிட்டத்தட்ட அதே போல ஒரு நகையை தேர்ந்தெடுத்து அவரை அணிய சொன்னார். அவரும் ஆஹா கிட்டத்தட்ட அதே நகையை கொண்டுவந்து விட்டீர்களே பாராட்டுக்கள் என்று கூறி அணிந்து கொண்டார். நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

ஆனால் அந்த காஸ்ட்யூமர் அப்படி மகிழவில்லை. கோபமாக அந்த நடிகையை திட்டிக்கொண்டே நகர்ந்து போனார். அவர் திட்டியது என் காதில் மட்டும்தான் விழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்தது. இரண்டு டேக்குகள் முடிந்தன. மூன்றாவது டேக்கு ஆரம்பிக்கிறபோது ஒரு க்ளோசப் ஷாட் வைத்திருந்தது.

நடிகை டைரக்டரை கூப்பிட்டார். இந்த தோடு நேற்று போட்டதல்ல, வேறு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார். டைரக்டருக்கு கடுங்கோபம். என்னைக் கூப்பிட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். காஸ்ட்யூமரை அழைத்தார். என்ன இது என்று கேட்டார். நாங்கள் விவரிக்க முயல்வதற்குள் நடிகை மேலும் தூண்டிவிட, கோபத்தின் உச்சிக்குப் போனார். நான் புதியவன் என்பதால் என்னை அதிகம் திட்டவில்லை. காஸ்ட்யூமருக்கு பலமாக இரண்டு அடி விழுந்தது.

காஸ்ட்யூமர் தலைக்குனிந்து பல பேர் முன்னால் அவமானத்தோடு மெளனமாக நின்றார். ஒன்றும் பெரிதாக தெரியாது என்று மற்றவர்கள் சொல்ல, காமிராமேன் வாக்குறுதி கொடுக்க, காது அருகில் தெரியாதபடி க்ளோசப் ஸாட் மாற்றி வைக்கப்பட்டு அந்த சீன் எடுக்கப்பட்டது. அந்த நடிகை அன்று மாலை படப்பிடிப்பு விட்டு போகும்போது நான் நகைகளை கொடுத்தே ஆ க வேண்டும் என்று நிற்க, அவர் மிகவும் ஒழுங்கு பிள்ளையாய் நகைகளை கழட்டிக் கொடுத்தார். பெட்டியிலிருந்த முந்தைய நாள் நகையையும் எடுத்துக் கொடுத்தார். நான் திகைத்துப்போனேன்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று கெஞ்சலாக கேட்டேன். வாழ்க்கை போரடிக்கிறது என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார். எனக்குத் திகைப்பாய் இருந்தது.

காஸ்ட்யூமரிடம் இதைப் போய் சொன்னேன். அவர் பலப் படங்களுக்கு பணியாற்றியவர் . மறுபடியும் கோபமாக திட்டினார். நான் திகைத்துப் போனேன்.

அந்த நடிகை அதற்குப் பின்னால் ஒரு உச்சிக்குப் போய் மெல்ல சரிந்து, கல்யாணம் என்று ஆரம்பித்து, விவாகரத்து என்று மாறி, குழந்தை வேண்டும் என்று சொல்லி, குழந்தை வேண்டாம் என்று தள்ளி, சொத்துபற்றி வழக்குப் போட்டு, சொத்து சேர்ப்பதற்காக பொய் சொன்னார் என்று வழக்குப் போட்டு விதவிதமான சிக்கல்களில் சிக்கிக் கொண்டார். அவமானப்பட்டார்.

நான் யோசித்துப் பார்த்தேன்.

வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக இவைகள் எல்லாம் செய்கிறாரோ என்று யோசனை செய்தேன். மனிதர்கள் எது வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்று எனக்கு அப்போது புரிந்தது. எல்லோர் மீதும் எப்போதும் சந்தேகத்தோடு இருப்பதே சரி என்பதும் எனக்கு உறுதி ஆயிற்று.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் .சில சமயம் மனிதர்களுக்கு கிறுக்குப் பிடிக்கும். பொறுத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவேண்டும். இது சினிமா எனக்குக் கற்றுத் தந்த முதல் பாடம்.

8 comments:

  1. சரியான அனுபவாக இருக்கு.
    :-)

    ReplyDelete
  2. Vanakkam Thulasi,
    NANDRI.
    Really an interesting and INSIGHTFUL point of view, to practise for Life Ahead.
    Convey our NAMASKARAMS and Good wishes and Greetings to Aiya.
    " How to Thank Him ? " has been the thought all along in my mind for the last 12 years. Without doing a thing, without moving a penny, this NUGGET of extraordinary import, has landed in my lap through your blog post. We are eternally indebted to you and Aiya for all your Efforts.
    Good wishes for pleasent times ahead,
    God Bless and affectionately,
    srinivasan. V.

    ReplyDelete
  3. கடந்து வந்த பாதையை விருப்பு வெறுப்பற்று திரும்பி பார்த்து வாழ்வை கற்றுக்கொள்ளும் வித்தையை இந்த பதிவில் கற்றுத்தருகிறார் எழுத்துச்சித்தர். நன்றி.

    ReplyDelete
  4. //இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைபட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப்பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை.//

    ஐயா அவர்களின் இத்தகைய அனுபவங்கள் தான் "கனவுக் குடித்தனம்" நாவலில் வரும் "பிரேமா" என்னும் நடிகை கதாபாத்திரத்தின் மூலமாக வெளிப்பட்டதோ? அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.. நுணுக்கமான பல விஷயங்களை விவரித்திருப்பார்.. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப்பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை என்று ஐயா அவர்கள் தாழ்மையாக சொல்லியிருந்தாலும்... தன் எழுத்துக்களால் வாசகர் உள்ளத்தை கிழித்து அவர்களை அவர்களுக்கே அடையாளங்காட்டும் அருந்தொண்டுக்கு என்ன கைமாறு செய்ய..?

    ReplyDelete
  5. வாங்க குமார்.

    ஐயாவின் இந்த அனுபவம் மிகவும் கவர்ந்து விட்டதோ.

    அனுபவத்தை சரியாக டைப் செய்வதற்குள் பின்னூட்டம் போட்டு விட்டீர்களே...

    ReplyDelete
  6. Hello srinivasan

    Iyya's guru, Bhagavan Yogiramsuratkumar asks all those who thank him to thank his father, the Almighty.

    இது அவனருளாலே அவன் தாள் வணங்கி....

    there is nothing to claim......

    ReplyDelete
  7. அருமை சிங்கையன் !

    உங்களின் வார்த்தைகள் ஐயாவின் எழுத்துக்களை ஆழ்ந்து படிக்கும் வாசகனின் வார்த்தைகளாக உள்ளது.

    அவருடைய எழுத்துக்களைப் பற்றி எந்த பொய்கலப்புமில்லாமல் நெகிழ்ச்சியாக பேசும் வாசகனை விட
    ஒரு கலைஞனுக்கு பெரிய பரிசு வேறு என்னவாக இருக்க முடியும்....

    நன்றி சிங்கையன்...

    ReplyDelete
  8. உண்மை கிருத்திகா....

    பழைய பக்கங்களை மீண்டும் புரட்டும் போது தான் நாம் பார்க்காத விஷயங்கள் நம் கண்ணில் தென்படும். பல சமயங்களில் நம் இன்றைய பிரச்சனைகளின் தீர்வும் கிடைக்கும்.

    அப்படித் தானே..

    ReplyDelete