Tuesday, October 27, 2009

வெற்றி வேண்டுமேனில் - காதல் செய்வீர் உலகத்தீரே

யாரையாவது காதலித்தே ஆகவேண்டும் என்கிற பேராவல் சுமதிக்குள் கிளர்ந்தது. இதற்கு காரணம் ஒரு நடிகர். அவரின் உயரம், அகலம், கள்ளச் சிரிப்பு, கனமான நடை, சரளமான ஆங்கிலம், அவ்வப்போது தலைகாட்டும் கொச்சையான இந்தி, கொச்சையான கொஞ்சும் தமிழ். ‘ஐய்யோ...ஹி ஈஸ் சிம்பிளி கிரேட் யா’ என்று எல்லோர் போலவும் கூவினாள்.

சுமதிக்கு வயது இருபத்தியொன்று. நல்ல உயரம், வளைவான உதடுகள். எடுப்பான அங்கங்கள், ஸ்டைலான மேனி, துருதுரு கண்கள். கொஞ்சம் செம்பட்டையான நீளமுடி. ஆனால் உடலோ கருப்பு, மாநிறத்திலும் சற்று மங்கல். “நீ மட்டும் சிவப்பா பொறாந்திருந்தேன்னா என்னைய மாதிரியே உனக்கு பதினாறு, பதினேழு வயசுலயே கல்யாணம் ஆயிட்டிருக்கும். கொஞ்சம் நிறம் மட்டமா பொறந்துட்டதால, காலேஜ் படிக்கிறே...” அம்மா மெல்லிய பொறாமையோடு பேசுவாள்.

ஜீன்சும், முக்கால் ‘டி-ஷர்ட்டும்’ போட, அவளை வீடு அனுமதித்ததில்லை. கல்லூரியிலும் அவ்வித உடைக்கு கடும் தடை இருந்தது. ஆனாலும் அந்த மாதிரி உடைகள் அவளிடம் இரண்டு இருந்தன. புது நடிகர் ஒருவர் கல்லூரிக்கு வருகிறார் என்றும், மாணவிகள் புதுமையாக ஆடை உடுத்தி வருவது பற்றிதான் பேசினார்கள். என்ன உடையில் வரப்போகிறேன்? என்ன ஸ்டைல்? என்ன நிறம்? என்ன விதம்? என்று உரக்க கூவலாய் விவரித்தார்கள்.

இதை அம்மாவிடம் அன்று மாலை கிட்டதட்ட அதே கூச்சலுடன் சுமதி விவரித்ததும், அம்மா திகைத்தாள். “என்னடி அசிங்கம், இது? நடிகர் வர்றாருன்னு ஒரு டிரஸ்சா? என்ன அர்த்தம். நடிகர் மயங்கிடுவாரா? ‘இவ வேணும்’னு கைகாட்டி உன்னை கூட்டிக்கிட்டு போயிடுவாரா? முட்டா பொண்ணுங்களா. அந்த நடிகருக்கு கல்யாணம் ஆகி, குழந்தை இருக்கு தெரியுமில்லா...”

“ஆக நடிகருக்கு கல்யாணம் ஆனது எங்களுக்கு மறந்துடுச்சு. எங்களைப் பார்த்ததும் அவருக்கு, தன் கல்யாணம் மறக்கணும். அடடா... தப்பு பண்ணிட்டோமே... லட்டு லட்டா பொண்ணுங்க இருக்கே, எதைப் ‘பிக்கப்’ பண்ணுறதுன்னே தெரியலையேன்னு உள்ளே தவிக்கணும்”

“அடி செருப்பால...நினைப்பு பொழப்ப கெடுக்குதுடி”
அம்மா கத்தினாள்
“எங்க பொழப்பே அதாம்மா.”
“எது?”
“ஜாலியா கத்தறது, பாடுறது, ஊர் சுத்தறது. எல்லாரையும் பார்க்க வைக்கறது, பசங்க என்னமா ஜொள்ளு விடுறாங்க தெரியுமா? சாவறானுங்க. காலேஜ், பஸ் ஸ்டாண்ட் முழுக்க பையனுங்கதான். எந்த பஸ் வந்தாலும் ஏறமாட்டான், எங்களையே பார்த்துகிட்டிருப்பானுங்க.
“போதும்டி... கேவலமா இருக்கு.”
“என்ன கேவலம்? உன்னை மாதிரி பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி, ரெண்டு பெத்தபிறகு எவன் திரும்பி பார்ப்பான்?”
“எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வைக்க முடியுமோ அத்தனை பேரை திரும்பிப் பார்க்க வச்சுட்டு, எவனையாவது கல்யாணம் பண்ணிக்கணும்.”

இது பெரிய குற்றமில்லை... வக்கிரமான எண்ணமில்லை. ஆண்களால் பார்க்கப்படவே கூடாது என்கிற தீர்மானங்கள் ஏதுமில்லை. சுமதி அடிக்கடி சொல்வதுபோல், ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ என சிறிது நாள் ஆட்டம். ஆனால், வாழ்க்கை - கண்ணாடிப் பாத்திரம். எவர் லேசாய் இடித்தாலும் நொறுங்கிப் போகும். இதைச் சொன்னால் அந்த வயதுப் பெண்ணுக்குக் காதில் ஏறாது.

ஏனெனில், சுமதி போன்ற பெண்களுக்குக் காதல் என்பது கவர்ச்சியால் ஏற்பட்ட உருவகம். ஆனால், கவர்ச்சி என்பது மனம் செய்யும் கனவு. அழகு என்பது மெல்லிய தோலால் செய்யப்பட்டது. தோலுக்கு அடியில் சதை, ரத்தம், நரம்பு, எலும்பு என்று பலதும் நிரந்தரமாய் குடி இருக்கின்றன. திமிறிய உடம்பும், சிரிப்பும், துள்ளலும் முதலில் காட்சியாகின்றன. வியக்க வைக்கின்றன. பிறகு, பேச்சு கவர்கிறது. அதன்பின் நடவடிக்கைகள் காதலுக்கு வலுவேற்றுகின்றன. காதல் என்பது தன்னைத்தானே கொண்டாடிக் கொள்வது. தான் காதலிக்கப்பட தகுதியானவன் என்கிற நினைப்புதான் இன்னும் தேட வைக்கிறது.


‘ஐய்யோ, செம ஜொள்ளுவுடுது’ என்றோ, ‘பாப்பா வழியுது கண்ணா’ என்றோ பெருமிதம் கொள்வது, ‘தான்’ என்ற அகம்பாவத்தின் இன்னொரு விளைவு-காதல். தன் திறமைபற்றி, அழகுபற்றி, உயரம்-அகலம் பற்றி, வலுவு பற்றி சந்தேகம் உள்ளவர்கள் காதலில் ஈடுபடுவதில்லை.


தரையில் அமர்வதைவிட, குதிரையில் ஏறி அமர்வது ஒரு தனி கம்பீரம், சுகம். ஆனால் குதிரையேற்றம் கற்றுக்கொண்டு குதிரையேறுவது நல்லதல்லவா? இல்லையெனில், எங்கேனும் விழுந்து வாரி வேதனைப்பட வேண்டுமல்லவா?



காதல் என்பது என்ன என்று புரிந்து கொள்ளாது போவதாலேயே காதல் தோல்விகள் ஏற்படுகின்றன. காதல் என்பது மதித்தல். அடுத்தவரின் மன உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை, திறமைகளைப் புரிந்து மதித்தல், பாராட்டுதல், பாராட்டப் பெறுதல். உற்சாகமடைதல், உற்சாகப்படுத்துதல். வேறுவிதமாய் சொல்வதென்றால், காதல் என்பது அடுத்தவரைக் கவனமாய் பார்த்தல். பரிசீலித்தல்.

ஆனால், சுமதி போன்ற பெண்கள் தங்கள் மேனியெழிலில் மற்றவர் மயங்குதலே காதல் என்று மயங்குகிறார்கள். யார் அதிகம் புகழுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, அவர்களை அறியாமல் ஏற்படுகிறது. அதிகம் புகழுகிறவர்கள் நல்லவர்களா என்கிற கேள்வி வருவதே இல்லை.

ஒரு கல்லூரியில் பேராசிரியர் என்கிற பச்சைப்பொய்யோடு ஒரு முன் வழுக்கைத் திருடன் அறிமுகமாகிப், சுமதியை வானளாவப் புகழ்ந்து, மோட்டர் சைக்கிளில் ‘மாயாஜால்’ அழைத்துப் போய்-கண்ணாடிப் பானையில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவ்வப்போது அசிங்கமாகப் பேசி, கொஞ்சம் தொட்டு, பிறகு நன்கு தொட்டு சூடேறவிட்டு, நாலு நாட்கள் ஏங்கவிட்டு, தேர்வு தாள் திருத்தத்துக்கு மதுரை போனதாய் சொல்ல-‘உங்க பேப்பர் எல்லாம் மதுரைக்குத்தான் வருது. எல்லோரையும் எனக்குத் தெரியும், பொருளாதாரத்துல நீ தங்கப்பதக்கம்’ என்று பேசி, பதிலுக்கு ‘நீ முத்தம் கொடு போதும்’ என்று வளைத்து ஒரே மாதத்தில் குறி வைத்து அவளை வீழ்த்தினான். அவள் அழுதாள்.

“என்ன ருசி... இந்த பத்தொன்பது வயதுக் குட்டி.” அவளைத் தொடர்ந்து உண்ணத் திட்டமிட்டான். ஒரு கிராமத்துக் கோயிலில் தாலி கட்டினான். சாமிக்கு சாராயம் வாங்க இருநூறு ரூபாய் கொடுத்தான். அவனும் குடித்து, அவளையும் குடிக்க வைத்தான். மூன்று நாட்கள் விதம் விதமாய் கிடந்தார்கள்.
வீடு அலறியது. தேடியது. நண்பிகளை விசாரித்தது. விவரம் தெரிந்து போலீசுக்குப் போனால், பத்திரிகைக்கு செய்தி போகும். பிறகு, வீட்டு மானம் போகும் என்று தாங்களே தேடினார்கள். அவள் வந்தவுடன் மூலைக்கு ஒருவராய் நின்று விளாசினார்கள். ஒரு அடி, தலையில்பட்டது. சுமதி மயக்கமானாள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அதற்குள், அவன் அவளைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை கல்லூரியிலும், வீட்டருகிலும் பரப்பினான். வீடு ஒளியிழந்தது.


ஆனால், கடவுள் மிகப்பெரியவர். இன்னொரு பெண்ணிடம் இவ்விதமே அவன் முயற்சிக்க, அவனுடைய பல்வேறு தகிடுதித்தங்கள் செய்தியாயின. சிறைக்குப் போனான். அவனுக்கே கால்ல, கையிலே விழுந்து கட்டிவச்சுடலாம் என்கிற நினைப்பை அறுத்துவிட்டு, சுமதிக்கு வேறு இடம் பார்த்தார்கள். புரிதல் உள்ள ஒருவன் புருஷன் ஆனான். அவள் வாழ்க்கை மறுபடியும் வண்ணத் தோட்டமாயிற்று.

காதல் என்பது மதித்தல், மதிப்பவரை ஏமாற்ற இயலுமா? ஏமாற்றினால் மதித்தல் என்பது உண்டா. மதித்தல் எப்படி ஏற்படும்? உன்னால், உன் உதவியால் நான் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட, மதித்தல் நிகழும். “நான் சுமாரா தான் சமைப்பேன். அதுவும் குழம்பு செய்ய வரவே வராது.” என மனைவி சொன்னால், கணவன் என்ன செய்ய வேண்டும்?

“அப்ப குழம்பே வேணாம்” எனக்கும் குழம்பு அவ்வளவா பிடிக்காது என்று பேசலாம். அல்லது, “குழம்பு செய்யறது பெரிய விஷயமா. சமையல் புத்தகத்தை எடு, துவரம்பருப்பு எங்கே” என கணவனும் களத்தில் இறங்கி, மனைவிக்கு உதவி செய்யலாம். குழம்பு தேனாய் இனிக்கும்.

காரக்குழம்பு, முருங்கைக்காய், மசாலா குழம்பு என்று பலவித பக்குவம், போட்டி போட்டு செய்யத் தோன்றும். எனக்குக் குழம்பு செய்யத் கற்றுக்கொடுத்தீங்க அல்லவா. உங்களுக்கு உடுத்த சொல்லித் தருகிறேன்.
மனைவி, கணவனுக்காகத் திட்டமிடலாம்.

அலுவலகத்துக்கு சீருடை, ‘அதனாலென்ன? அதையே ‘டிரிம்’மா போட்டுக்கலாம். வெளிர்நிற ‘டீசர்ட்’, ஜீன்ஸ், கல்யாண வீட்டுக்கு வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டை. பதக்கம் தர்றாங்களா? கோட் சூட்’ல போங்க. வீட்டுல லுங்கி வேணாம். தடுக்கும். அரைக்கால் சட்டை’என்று சொல்லலாம்.

மதித்தல்தான் அன்பு, அன்புதான் ஒருமுகப்பட்ட அக்கறை. மதித்தல், பொய் சொல்லாது. புறங்கூறாது. அது மிகுந்த சகிப்புத்தன்மை உடையது. கனிவுமிக்கது.

கணேஷ், அலுவலகத்தில் தன் உதவியாளராய் இருந்த விஜயலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க, அவள் திகைக்க, அப்புறம், ‘இத்தனை தெளிவாய் நீ வேலை செய்யுறே. அதான் பிடிச்சுப் போச்சு’ என்று கணேஷ் காரணம் காட்ட,
“நான் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க பி.ஏ.வாக நினைக்கிறீங்க” என்று விஜி மறுக்க, “பி.ஏ.தான் வீட்டுல” என்று அவன் விளக்க, பதினான்கு மாதங்கள் யோசித்து, காத்திருந்து, கல்யாணம் செய்துகொண்டார்கள்.

அந்த பதினான்கு மாதங்கள் பரஸ்பரம் புரிந்துகொண்டார்கள். தங்களைக் கணவன் மனைவியாய் தயார் செய்து கொண்டார்கள். காதல் என்பது திருமண ஒத்திகை. ஒத்திகையில் உண்மையாய் இருந்தால் தான் நீண்ட நெடிய திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொய் சொல்லி, ஏமாற்றிய ஒத்திகை, வாழ்க்கை நாடகத்தை கலைக்கும். பாதியில் நிறுத்தச் சொல்லும். பரிகசிப்பாய் போகும்.

பொய்யற்று இருப்பது ஒரு சுகம்.

வெற்றி வேண்டுமெனில், பொய்யற்ற காதலைப் பழகுங்கள். காதலால் வெற்றியும், வெற்றியால் காதல் பலப்படுத்தலும் எளிதாய் நிகழும்.

2 comments:

  1. வணக்கம்

    அஹா என்ன அற்புதமான விளக்கம் காதலைப்பற்றி, இத்தனை நாட்கள் காதல் என்பது அன்பு செலுத்துதல், கவனித்தல் என்று தான் நினைத்தோம், ஆனால் ஐயா சொன்னது போல் காதல் என்பது மதித்தல்,பொய் சொல்லதது,திறமைகளை பாராட்டுதல்,பொய்யற்று இருப்பது,உற்சாகப்படுத்தல் என்பது இப்பொழுது நன்றாக உணரமுடிகிறது. எங்களுடைய வாழ்க்கையில் இதை கூர்ந்து கவனிக்கும் பொழுது நாங்கள் எங்குஎங்கு எப்படி நடந்து இருக்கிறோம் என்பதும், இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் நன்றாக உணர முடிகிறது.. இது ஒவ்வொருவரும் கூர்ந்து கவனித்து, உணர வேண்டிய விஷயம். மிக்க நன்றி.
    கலைவினோத்.

    ReplyDelete
  2. ஒரு சமயம் புத்தக வடிவில் இக்கட்டுரையை படிக்க நேர்ந்தது. அப்போது "காதல் என்பது மதித்தல்" என்ற பாலகுமாரனின் பாடம் என்னுள் பதிந்து போனது.
    ஒவ்வொரு சமயம் 'இது காதலா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்ளும்போது ஐயாவின் இந்த வாக்கியம் தான் பதில் தரும்! நன்றி ஐயா! :)

    ReplyDelete