Thursday, February 7, 2008

குதிரைக் கவிதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

குதிரைகள் சொன்ன பாடங்களாக “இரும்பு குதிரைகள்” என்ற பரிசும், புகழும் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இரண்டாவது நாவலில் இடம் பெற்ற கவிதைகளின் சிறு தொகுப்பு.










குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.











குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.









குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர.
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று


இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்









நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
மற்றைய உயிர்கள் போல.

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் புரிந்து கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாபம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்
குதிரைகள் கண்கள் மூடி
குறி விறைத்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்ச கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்.








நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்.

வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி.

கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.


வல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன ?

வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை ; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர் ?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.



இதுவரை வெளிவராத கவிதை இது, இரும்பு குதிரை நாவலில் ஐந்தாம் பாடம் இல்லையே என்று கேட்டதற்கு எழுதிக் கொள்ளுங்கள் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் மூன்று நிமிடத்தில் சொன்ன கவிதை இது. இதை உங்களுக்கு கொடுப்பதில் இந்த வலைத்தளம் பெருமைப்படுகிறது.

னிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.
அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு

குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்

வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

9 comments:

said...

பிறந்ததினால் வாழ்வோம் என்ற வாழ்வியல் பார்வைகளை மாற்றி, என்னுள்ளே என் வாழ்க்கைக்கான பாதைகளை என் பதின்மங்களில் வகுத்தந்தது திரு.பாலகுமாரனின் எழுத்துக்கள் மட்டுமே அதிலும் முக்கியமாக இந்தக் குதிரைக் கவிதைகள்.
“….கண்மூடி வலியை வாங்கும்,
கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்கவேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்”
வாழ்க்கையையும், உலகத்தையும் எதிர்நோக்கும் பாடத்தை இதைவிட அழகாக யாரால் சொல்லியிருக்க முடியும்.

அன்று எனக்கான தனித்துவங்களை அடையாளம் காட்டி இன்று வரை வழிநடத்தும் ஐயா அவர்களின் எழுத்துக்களை இன்றைய இளயதலைமுறைகள் அறியும் வண்ணம் எடுத்துச்செல்வது மிகவும் இன்றியமையாது, இறைபணிக்கு ஒப்பானது.

மனதில் தொக்கி நின்ற அந்த ஐந்தாம் பாடம் பற்றிய கேள்வியை எழுப்பி எங்களுக்காய் பெற்றுத்தந்த தங்கள் பணிக்கு என் உளம் கனிந்த நன்றி..

said...

"வீடென்றால் எதைச் சொல்வீர்" என்ற கவிதையையும் ஒரு இடுகையில் இட்டால் வாசித்து மகிழ்வோம்.

said...

பால‌குமார‌னில் மூழ்கிக் கிட‌ந்த‌ போது ப‌டித்து ர‌சித்த‌ நாவ‌ல் ம‌ற்றும் அவ‌ர் க‌விதை.எனக்கு மிக‌வும் பிடித்த‌து அவ‌ருடைய‌ நாவ‌லில் வ‌ரும் ஒரு காத்திருப்புக் க‌விதை...

said...

மிகவும் நன்றி..

said...

ஐயனை உங்கள் வலைப்பூ கண்முன் நிறுத்துகிறது. சில செய்திகள் நெஞ்ஜை கணக்க வைத்து வயிறை குழைக்கின்றன. திரும்ப திரும்ப வலைப்பூவின் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கின்றேன். ஒரு மஹாஞானியின் அண்மை கிடைத்திருக்கிறது என்பதை உங்கள் வலைப்பூ உறுதிபடுத்துகிறது. நேரில் அமர்ந்து பேசுபவர், மேடையில் நின்று அற்புதமாய் பேசக் கேட்பது போன்றது இது. என்னைப்போல் எத்தனையோபேர் வியக்கப் போகிறார்கள் உறுதி. உங்கள் வலைத்தளம் ஐயனுக்கு பலம். எங்களுக்கு வரம். வாழ்க ஐயன். வாழ்க பகவான் யோகி ராம்சுரத்குமார். பொங்குக இறையருள் புவியெங்கும்.

said...

இந்த அளவுக்கு பாகு'ஐப் பற்றி உணர்ச்சி வசப்பட தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
பாகு'ன் எழுத்துக்கள் கரையில் வந்து காலை நனைக்கும் அலை வகையைச் சார்ந்ட்தவை மட்டுமே..
தமிழ்க்கடலின் ஆழச் சுரங்கங்கள் மெத்தவும் உண்டு.
இதையும் தாண்டிப் போவோம் என்பதுதான் நான் சொல்ல விழைவது.

said...

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

said...

Dear Sir,
I don't know to type in tamil. Today for along time I have serached the website of balakumarans in my busy office times, searched and searched for long time atlast I have got your blog.Yen jenmam sabalyamanathu. I want to join you all. Mr.Balakumaran is my lord, my guru.

Thankyou all of you for creating this blog.
Shanthi

said...

I have been waiting to read these kavidhaigal again. Thanks so much.