Monday, March 17, 2008

பாலகுமாரன் – சில கேள்விகள்-சில பதில்கள்

ஐயா, செல்போன் வைத்திருப்பது வரமா, சாபமா?

எல்லா வரமும் சாபம்தான். உபயோகப்படுத்துவதில் ஒழுக்கமில்லாதவரை.

ஐயா,சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?

நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும்.
மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும். நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர். வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது. சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும். தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.


ஐயா, பெரும்பாலும் துறவிகளும், மகான்களும் தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கிறார்களே காரணம் என்ன?

தலைப்பாகை என்பது இந்தியாவின் வெயிலிலிருந்து தலையை பாதுகாக்கும் முயற்சி. முன்பெல்லாம் இல்லறத்தார்களும் கண்டிப்பாக தலைப்பாகை அணிந்து கொண்டுதான் வெளியே போவார்கள். ஆனால் மூளையின் செயல்பாடு கடுமையாக இருக்கும்போது தலையை இறுக்கி கொள்ளும் வண்ணம் ஒரு உணர்வு தோன்றும். தலைக்கு மேலே ஒரு தலை இருப்பின், தலையை சுற்றி ஒரு அழுத்தம் இருப்பின் சுகமாக இருக்கும் என்ற காரணமாக இருக்கலாம்.

ஐயா, எழுத்தாளர் அமரர் சுஜாதா பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை உண்மையாக இருந்தது. அற்புதமாக இருந்தது. வேறேதுனும் சொல்ல செய்தி இருக்கிறதா?

சுஜாதாவினுடைய அந்திம சடங்கிற்கு, எரியூட்டலுக்கு நான் என் மனைவியோடு போயிருந்தேன். வாய்க்கரிசி நாங்கள் இருவரும் போட்டு வலம் வந்து நமஸ்கரித்தோம். நெஞ்சில் வறட்டி வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி படுத்திருந்த அவரை கொதிக்கின்ற எரி அடுப்புக்குள்ளே தள்ளுகிற வரை, கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று கை கூப்பி அவரை வழி அனுப்பும்வரை, நானும் என் துணைவி சாந்தாவும் இருந்தோம். இது ஒரு ஆச்சார்ய மரியாதை. அன்று எனக்கு அவர் அன்போடு கதை எழுதுவதை பற்றி விவரிக்கவில்லை என்றால் நான் வேறேதுனுமாய் திரும்புவதற்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. அன்று அவர் கை கொடுத்து கரையேற்றிய என் பயணம் மிக நன்றாக அமைந்துள்ளது. நானே முயற்சி செய்து பணம் சம்பாதித்து இருப்பேன், ஆனால் இன்று எனக்குள்ளே என் இலக்கியம் ஒரு தெளிவு கொடுத்திருக்கிறது, அமைதி கொடுத்திருக்கிறது. அதற்கு காரணமானவரை நன்றியோடு நினைக்கும் வண்ணம் நானும் என் மனைவியும் அவரை வழி அனுப்பிவிட்டு வந்தோம். நான் சொல்வது புரிகிறதா?


ஐயா, அழகு சாதனங்கள் அதிகரித்து வருகின்றனவே?

தோற்றப்பொலிவுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். ஏன் தோற்றப்பொலிவுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? மனிதர்கள் தொடர்பு கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு வீட்டின் பின்கட்டில் எவரையும் சந்திக்காது கதவு இடைவெளி மூலம் மனிதர்களைப் பார்த்து கதவின் பின் பக்கம் இருந்து மனிதர்களிடம் பேசிய பெண்கள், கதவின் இடுக்கு வழியே அ டுத்தவரை பார்க்காது, கதவின் பின் இருந்து மற்றவருக்கு குரல் கொடுக்காது நேரடியாய் வெளியே வந்து நலமா என்று விசாரித்து, விசாரித்தவர் நலம் என்று சொல்லி தொடர்ந்து பேச பெண்களுக்கு உரிமை அதிகரித்து விட்டது. பெண்கள் வீட்டின் பின் கட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்படி போய்கொண்டிருக்கிற பெண் தன் மீது மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டுமென்பதற்காக தன் தோற்ற பொலிவைக் கூடுதலாக்கி கொள்ள விரும்புகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக வருவது அதிகரித்தால் அழகு சாதனங்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இதில் என்ன ஆச்சரியம் என்றால் பெண்களை பார்த்து ஆண்களும் அழகு சாதனங்கள் உபயோகப்படுத்துகிறார்கள். அழகு சாதனங்கள் என்பது இப்பொழுது ஆண் பெண் பேதமில்லாமல் பொதுவுடமை ஆகி விட்டது. அழகு சாதனங்கள் இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் எடுத்தவுடனேயே தோற்ற பொலிவின் மூலமாக ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பது இங்கு முதன்மையாய் நிற்கிறது.


ஐயா,கங்கையில் குளித்திருக்கிறீர்களா? கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று சொல்கிறார்களே? உண்மையா?

கங்கை நதியின் தீரத்தில் பல கோவில் தலங்களில் ஆனந்தமாகக் குளித்திருக்கிறேன். கங்கையில் குளித்தால் பாவம் போகுமா என்பது ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட அபிப்ராயம். ஆனால் பாவம் போக வழி இருக்கிறது. கங்கையினுடைய பிரம்மாண்டம், வேகம் பார்க்கிற போது இடையறாது, இடையறாது வெகு காலத்திற்கு முன்னமிருந்தே ஓடிக் கொண்டிருக்கிற நதியை கவனிக்கின்ற போது, மனித வாழ்வைப் பற்றிய சிந்தனையும், காலம் பற்றி விரிவும் உண்டாகின்றன. இவ்வளவு பெரிய நதிக்கு முன்னால் தான் தூசு. பெரிய பெரிய மகான்கள் குளித்து, அவதாரங்கள் குளித்து கரையேறிய இந்த நதியின் தொன்மைக்கு முன்னால் தான் ஒன்றுமே இல்லை. தன் வயதில் ஒரு அர்த்தமே இல்லை என்று தெரிய வர தன் நிலையாமை புரியும். தன் நிலையாமை புரிய, தன்னுடைய இருப்பு மிக சாதாரண விஷயம் என்று தெரிய, கர்வம் கரைந்து போகும். கர்வம் கரைய, தான் என்ற அகங்காரம் கரைய உள்ளுக்குள் இருந்தே தான் யார் என்ற கேள்வியும், அதற்குண்டான சத்தியமான பதிலும் பிடிபடும். இதுவே பாவம் கரைதல். ஒரு பிரம்மாண்டத்தின் முன் நிற்கும் போது ஏற்படுகின்ற உணர்வு உண்மையை உங்களுக்கு அருகே கொண்டு வந்து கொடுக்கும்.

இதுதான் கைலாசம் போவதற்கும், கோவில்கள் போவதற்கும், தகதகத்து எரிகின்ற அக்னி முன்பு அமர்வதற்கும் காரணம். கடலின் பிரம்மாண்டம் கூட இதை கொடுத்துவிடும். தான் ஒன்றுமே இல்லை என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொள்ள முன்னோர்கள் தனிமையில் பயணம் செய்தார்கள். பயணங்கள் உங்களை உங்களுக்கு காட்டும். தன்னை அறிவதே பாவம் போக்கும் வழி. ஆனால் கங்கையில் குளிப்பதற்கும் கும்பலாக போய், கூச்சலாக இறங்கி, குழப்பமாக குளித்து சிறு சிறு சண்டைகளோடும், மனஸ்தாபங்களோடும் வெளியே வர காரியம் கெட்டுப் போகிறது. சில சமயம் பாவமும் சேர்ந்து விடுகிறது.குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது என்பது இது தான்.


ஐயா, குழந்தைகள் உலகம் பற்றி ஒன்றுமே சொன்னதில்லையே?

தேனைப் பற்றி என்ன சொல்ல முடியும். பாலைப் பற்றி எப்படி விவரிக்க முடியும். திகழொளியைப் பற்றி என்ன விதமாய் பகிர்ந்து கொள்ள முடியும். குழந்தைகள் உலகம் உட்கார்ந்து அனுபவிக்கதக்கது. நம்மை மறந்து, நம் வஞ்சனை மறந்து மெல்ல மெல்ல மேலே படிந்த அகம்பாவம் மறந்து அவர்களை கவனிக்கத் துவங்கும் போது ஆனந்தம் ஏற்படுகிறது. இதை விளக்கவோ, விவரிக்கவோ முடியவில்லை. வெறும் குழந்தைகள் என்பது சந்தோஷம் எனினும், உங்களுடைய குழந்தைகள், உங்கள் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகள் என்று வம்சாவளியின் நெருக்கத்தில் பார்க்கின்ற போது இன்னும் அபரிதமான ஒரு நெகிழ்வும், சந்தோஷமும் ஏற்படுகின்றது. என் முகத்தை என் பேரனிடம் நான் கவனிக்கிறேன். அவன் அசைவுகளில் என் அசைவை காண்கிறேன். அவன் கெட்டிக்காரத்தனம் என்னுடைய கெட்டிகாரத்தனத்தை விட அதிகமாக இருப்பது கண்டு பூரித்துப் போகிறேன். குழந்தைகள் உலகம் அனுபவிக்கதக்கது. பேச முற்பட்டால் வெறும் சப்தமாகத்தான் இருக்கும். மிகச் சிறந்த ஒரு உணர்வை பல சமயம் சொல்ல முடிவதே இல்லை.

7 comments:

said...

பிரமாதம் துளசி சார்,
மிக நிறைவாக தெளிவு அளிப்பதாக இருக்கு.
அவர் சொல்வதுபோல முழு நன்றி உணர்வை சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.
மிகுந்த நன்றி.
வணக்கம்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.

Anonymous said...

natpuden sakithukolvathu patri iyyavin vilakkam arumaiyaka ullathu.
gankaeil kulipathy patri iyya kudutha Explanations very superveb

selvi vinod

said...

"இரசனை ஒண்ணா இருந்தா அடுத்த நிமிஷம் காதலா ஏன் நல்ல நட்பா இருக்க முடியாது" அன்று சியாமளி மெர்க்குரிபூக்களில் கேட்ட கேள்வி இன்றளவும் எனக்கு ஒரு மிக உண்மையான் நட்பு வட்டத்தை அமைத்துக்கொள்ள உதவியாய் இருக்கிறது. இன்று "கங்கையில் குளித்தல்" பற்றிய பதில் வாழ்வின் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க வைக்கிறது. இரண்டு கனமான கேள்விகளுக்கு இடையில் சில யதார்த்தமான கேள்விகளை தொடுத்திருக்கும் இந்த இடுகையின் பாங்கு ஆழ்ந்து அனுபவிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

said...

Ayya,

I have one doubt.why should we do poojas?anyhave we are always do chanting then why pooja and other things are required?

said...

Kelvi padhil pakudhi mikavum arumai.

Chandru....

said...

சந்தியா - தங்கள் கேள்வியை விக்ரகம் சார்ந்த பூஜை என்று அர்த்தம் கொண்டு ஐயாவிடம் கேள்வியை சமர்பித்துள்ளோம் விரைவில் அதற்கான பதிலை ஐயாவிடம் இருந்து பெற்று வெளியிட முயல்கிறோம். நன்றி.

said...

Sir
Naanum muppadhu varushatthukka melaaga, Guruvin naavalgalai padiththu varugiren..menmai, inimai ivai irundum elimai kaaranamaa nanna vaurm enbadhai sookshamama ella naavalgalilum solli varum avar en Dhronar..Ennarra ekalavankalil naanum oruvan. Please pass on my Birth day wishes to him. Pl let me know whether I can write a letter to him to his direct personal Email id..Enrenurum Anbudan
V.Subramanian
vsmanian6@gmail.com