Friday, October 23, 2009

சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்


காசு சம்பாதிப்பது கடினமாக இருக்கிறதே.....

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது. அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை.

வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும். எது முக்கியம், ஓய்வா, உழைப்பா. எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரம் போல பல பேர் பயன்படுத்துகிறார்கள். “வாழையடி வாழை” என்ற நாவல் முடித்த மறுநாள் நான் அடுத்த நாவல் ஆரம்பித்து விட்டேன். அடுத்த நாவல் முடித்த பிறகு சினிமா விவாதங்களில் கலந்து கொண்டேன். சினிமா விவாதங்கள் முடித்த பிறகு இன்னொரு கம்பெனிக்கு பயணப்பட்டு விட்டேன். பயணத்தின் போது அடுத்த நாவல் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். ஆனால் எவ்வளவு காசு வேண்டும் என்பது முக்கியமான விஷயம். அளவில்லாத காசுக்கு ஆசைப்பட்டோம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. போதும் என்று ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். கோடு இல்லாத போது எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்வின் எல்லா சந்தோஷங்களும் குறைவானதாகவே தோன்றும்.


“ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று சொல்லுகிறார்களே.. அப்போது குரு மீது கூட பற்று வைக்கக் கூடாதா?

கூடாது.

குருவிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நன்கறிந்தவர்கள், தவத்தில் முதிர்ந்தவர்கள் குருவிடமிருந்து விலகி விடுவார்கள். என்னுடைய குருநாதர் யோகி ராம்சுரத்குமார் கஞ்சன்காடு என்ற இடத்தில் உள்ள ஆனந்தாசிரமம் என்ற ஆசிரமத்தின் தலைவரான பப்பா ராமதாஸ் என்பவரை குருவாகக் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் பப்பா ராமதாஸ், யோகிராம்சுரத்குமார் அவர்களை தன் ஆசிரமத்திலிருந் நகர்த்தி வைத்து விட்டார். அப்படி நகர்த்தி வைத்தததே யோகிராம்சுரத்குமாரின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

வன்முறையை அதிகமாகக் தூண்டுபவர்கள் யார்? அரசியல்வாதிகளா? மதவாதிகளா?

இரண்டு பேர்களும்தான்.

யாருக்கு ஜெயிக்க வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறதோ, யாரிடம் நான்தான் மிக முக்கியமான நபர் என்கிற அலட்டல் அதிகமாக இருக்கிறதோ, யாருக்கு தனக்கு அதிகம் தெரியும் என்கிற கர்வம் இருக்கிறதோ அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சந்தேகம் உள்ளவர்களுக்கு வன்முறை வராது. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்விக்கு வன்முறை மிகப்பெரிய ஆயுதம். ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்று இங்கே எவருமில்லை.

புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வர சிறந்த வழி எது?

உங்களை சுற்றியுள்ள உலகத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், ஒவ்வொரு பிரச்சனகளைச் சந்திக்கின்ற போதும் உங்கள் மனது என்னவெல்லாம் கூச்சல் போடுகிறது, எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தால், உங்களையும் பிறரையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாலே புரிதல் ஏற்பட்டு விடும். உங்கள் மனதை எப்போது கவனிக்க முடியும் தெரியுமா... நட்போ, உறவுகளோ இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது தனியாக இருங்கள். போகப் போக உங்களைக் கவனிக்க முடியும்.


ஒழுக்கம் குறித்து அதிகம் பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சந்தேகப்படுவேன். எதை ஒழுக்கம் என்று சொல்கிறார் என்று அவரை ஆராய முயல்வேன்.

ஆண், பெண் உறவு மட்டுமே ஒழுக்கம் என்று பேசுகின்ற கசடர்கள் பல்வேறு நிலைகளில் ஒழுக்கக்கேடர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சமூகத்தில் பெரிய மனிதர்களாக, பெரிய பட்டாளத்தை தன்னோடு வைத்திருப்பவர்களிடம் இந்த நம்பிக்கை துரோக ஒழுக்கக்கேட்டைப் பார்க்கிறேன். பொய்யான பிரியமும், போலியான பேச்சும், ஆள் பார்த்து முகமன் சொல்வதும், காசுக்காக கள்ளனை தர்மதாதா என்று சொல்வதும் மிக பெரிய ஒழுக்கக் கேடுகள். ஞானமற்றவரின் செய்கைகள். இவர்கள்தான் புலனடக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். அவர்கள் சமூகத்தின் சாபங்கள். அவர்களிடமிருந்து நான் அதிகம் விலகியிருக்கவே விரும்புகின்றேன்.

4 comments:

arulkanthan said...

Dear Sir,

Excellent question and excellent answer...

thank you very much

with regards
arul kandan S

குப்பன்.யாஹூ said...

காசுக்காக தான் உழைக்கனும்னு வரும் பொது அந்த உழைப்பு மீது ஆர்வம், ஆசை வருவதில்லை பால சார், அது எதனால்.

உதாரணம்; என் வேலை இப்போது நிதி, கணக்கு சம்பந்த பட்டது. ஆனால் என் மனதிற்கு கல்வி, சேவை போன்றவற்றில் ஆர்வம் உள்ளது, பணத்திற்காக நான் நிதி சம்பந்த பட்டு உழைக்க வேண்டி உள்ளது. எனவே இடைவிடாது உழைக்க ஆர்வம் வருவது இல்லை.

என்ன தீர்வு சொல்லுங்கள்

R.Gopi said...

பாலாவின் கேள்வி/ப‌தில் எப்போதும் ந‌ன்றாக‌ இருக்கும்....

நான் அவ‌ரின் நாவ‌ல் வாங்கிய‌வுட‌ன் முத‌லில் தேடி ப‌டிப்ப‌து கேள்வி ப‌தில் தான்...

மிக‌ மிக‌ தெளிவாக‌வும், விரிவாக‌வும் ப‌தில் சொல்வ‌தில் பாலா அவ‌ர்க‌ளுக்கு நிறை வேறு யாருமில்லை....

Unknown said...

மிக நேர்த்தியான கேள்வி, அதற்கு ஐயாவின் பதில் அருமை. ஐயாவின் உழைப்பை பார்க்கும் பொழுது, எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது, அதே நேரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
கலைவினோத்.