Wednesday, January 16, 2008

பாலகுமாரன் ஏன் ஆன்மீகவாதியானார்


எங்கள் குருநாதர் எழுத்துசித்தரிடம் நாங்களும் எங்களைப்போன்ற பலரும் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்


1.அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்?

அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை ஒத்துதான் இருக்கிறது। காமம் என்பதை தவறு என்று ஒருபோதும் இந்துமதம் என்கிற சனாதன தர்மம் சொன்னதேயில்லை.

காதலின் வெளிப்பாடு காமம். அது நெறிமுறைப்பட்டதாக இருப்பின், மிகச்சிறந்த அனுபவமாக, நிம்மதி தரும் விஷயமாக உடம்பையும், மனதையும் குளிர வைக்கின்ற ஒரு தந்திரமாக செயல்படுகிறது.

தந்திரா என்று வழங்கப்படும் சனாதன தர்மத்தின் ஒரு கொள்கை காமத்தை காதலோடு ஈடுபடசெய்கிறது. அடுத்த உயிரின் மீது, மனிதர் மீது கருணையும்,மதிப்பும் கொண்டிருந்தால் தான் அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருக்கும். அவரிடம் இருந்து நல்ல எதிரொலிப்பு இருந்தால் தான், இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் எந்த விஷயமும் சிறப்பாக அமையும்.

காதல் இத்தகையது. நேசிப்பது என்பது உண்மையாக இருந்துவிட்டால் அதே விதமான அன்பு வெகு வேகமாக திரும்ப கிடைக்கும். திக்குமுக்காட வைக்கின்ற அந்த அன்பை அனுபவிப்பதுதான் ஆன்மீகம்.

காமம் என்ற வார்த்தைக்கு ஆசை என்று பொருள், எந்த ஆசையையும் சுயநலத்தோடு நிறைவேற்றிக்கொள்ள விரும்பும்போது, அடுத்தவர் என்ன அவஸ்தைப்பட்டாலும் சரி. எனக்கு வேண்டியதை நான் எடுத்துக்கொள்வேன் என்று ஆத்திரத்தோடு அணுகும் போது அந்த அனுபவம் கசப்பானதாக மாறிவிடுகிறது. காமம் அதாவது ஆசை தவறென்று பிதற்ற வேண்டியிருக்கிறது.

உனக்கு இன்று என்னாயிற்று, தலைவலியா, மூச்சுத்திணறலா, தூங்கு என்று மனைவியை தூங்க வைத்து தலைக்கு தைலம் தடவி, காது வரை கம்பளி போர்த்தி கருணையோடு நடத்தினால், உடல்நலம் தேறிய போது மனைவிக்கு உவகை பொங்கும். பதிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். நிச்சயம் செய்வாள்.

அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது, எ ங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கும்.

நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன்। அவ்வளவே .அங்கு அன்பு தானாக இருக்கும். அன்புதான் ஆன்மீகம்.



2. உங்களின் இந்த ஆன்மீக வளர்ச்சிக்கு காரணம் யார்? உங்கள் குருவா?

இல்லை.
ஆரம்பத்தில் என் தாயார் இந்து சமயத்தில் அதிகம் நாட்டம் வர காரணமாய் இருந்தார். என் தாயார் ஒரு தமிழ் பண்டிதை . 36 வருடம் தமிழ் பண்டிதையாக பணிபுரிந்தவர். எங்கள் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக புத்தகங்கள் இருக்கும். தேவார திருவாசகங்களை 10 வயதிற்குள் அதிகம் மனப்பாடம் செய்தேன். தினமும் மாலையில் வட்டமாக அமர்ந்து பக்திப்பாடல்கள் பாடுவது வழக்கம், அப்போது புரியாமல் மனனம் செய்த பாடல்கள், இப்போது புரிந்து பெரிய உவகையை கொடுக்கின்றன.

வாழ்வின் பிற்பகுதியில், திருவண்ணாமலை மகான் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அன்பால் பல ஆன்மீக அனுபவங்களும், தெளிவும், திடமும் ஏற்பட்டன, எல்லாவற்றிற்கும் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு.

உண்மையான தேடல் உள்ளே இருக்க வேண்டும். என்ன இந்த வாழ்க்கை? ஏன் இந்த பிறப்பு என்ற கேள்வி எழ வேண்டும். சுக சவுகரியங்களில் திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறபோது, மிகப்பெரிய கேள்வி எழும்போது அந்த விடை தேடலில் சிலருக்கு சில சமயம் வெற்றி கிடைத்து விடுகிறது.

3 comments:

said...

சார்
நமஸ்காரம்.
மிக அருமையாக இருக்கு சார்.
பாலகுமாரன் ஐயா அவர்களின் புகைப்படங்கள் மிக ஆழமாக வசீகரமாக தெய்வீகமாக இருக்கு சார்.
கவனமாய் நீங்கள் வலையேற்றும் பதிவுகள் மிக பயனுள்ளதாய் இருக்கு சார்.
மிக அதிகமாய் எதிர்பார்க்கிறேன் சார் இந்த பதிவுகளில்.
அதுலே என் சுயநலம் மீறி பலரும் பார்க்க படிக்க பழுதற வளர்ந்து செழிக்க வாய்ப்பு இருப்பதாலே இந்த பதிவின் உசத்தி கருதி பிரார்த்திக்கிறேன் sir.
உடையர் குறித்து பாலகுமாரன் சார் எழுதின முன்னுறைகளையும் அந்த அபூர்வ பட்டு சேலையை அவர் முப்பது வருஷமாய் நெய்த தவத்தை குர்ரித்து அங்கங்கே எழுதின தகவல்களை ஒருமுகமை கோர்த்து தொகுத்து படித்து ரசிக்க மனசு ஏங்குகிறது. நீங்கள் அனுமதித்தால், உடையர் நாவல்களிலே முன்னுரையாக பாலகுமாரன் சார் எழுதினதை டைப் செய்து உங்களுக்கு அனுப்ப ஆர்வமாக இருக்கிறது. அவர் அனுமதித்தால், நீங்கள் அதை இந்த வலைப்பூவிலே ஏற்றலாம்.
மிகுந்த நன்றி சார்.
அனேக நமஸ்காரம்.
அபிவாதையே ....... ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாச சர்மா நாமா அஹாம் அச்மிபோகோ.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.

said...

நன்றி ஸ்ரீனிவாசன். தங்களின் பாராட்டுக்கள் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் பல பயனுள்ள பகுதிகளை பதிவேற்றும் உத்வேகத்தை தருகிறது. உடையார் குறித்து எங்களுக்கும் அது போன்ற எண்ணமிருக்கிறது. தங்களின் நமஸ்காரங்களை ஐயாவிடம் தெரியப்படுத்தினோம். ஐயா அவரின் மேலான ஆசிகளையும், உங்கள் நல்வாழ்விற்கான அவரின் பிரார்த்தனைகளையும் தெரியப்படுத்துமாறு கூறினார்கள்.

said...

Nice, Indha blogla vara photos ellam romba nalla irukku.

- Chandru..