Tuesday, February 5, 2008

காலம் உணர்த்தும் கடமை– எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் பார்வையில்

ஐயா, இப்போது பலர் ஊர் ஊராக ப ல கோவில்கள் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.தல யாத்திரை மேற்கொள்ள சரியான காலம் எது ?

அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியெட்டு. ஒரு தனியார் கம்பெனியில் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் என்ற பகுதியில் மேனேஜர் உத்தியோகம். தொழில் ஆராய்ச்சியும் ,முன்னேற்றமும் என்பது குறித்து இடைவிடாத சோதனைகள் செய்து பார்க்கும் பகுதியில் உத்தியோகம்.

திருமணம் ஆகவில்லை. நல்ல குடும்பத்தில் பிறப்பு. தன் தங்கைக்கு திருமணமாகவில்லையென்ற கவலையோடு என்னிடம் வந்து பேச, மயிலாப்பூரில் இருக்கும் முண்டகக்கண்ணிக்குப் பிரார்த்தனை செய்து கொள்ளச் சொன்னேன். அந்தக் குடும்பம் பிரார்த்தனை செய்து கொண்டது. தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணாமாகியது. பல நாட்கள் பலவிதமாக தடைபட்ட தங்கையின் திருமணம் நன்றாக நிறைவேறியது என்பதால் ஏற்பட்ட கடவுள் பக்தியா அல்லது இயல்பான பக்தியா தெரியவில்லை. அந்த இ ளைஞன் மறுபடியும் ஒரு மாலைநேரம் வந்து நான் கைலாஷ் யாத்திரை போகட்டுமா என்று கேட்டான்.

பல்வேறு விதங்களில் கைலாஷ் யாத்திரைகள் எளிதாகிவிட, சம்பாதிக்கும் காசில் மெல்ல சேர்த்து வைத்து, கைலாஷ் யாத்திரை பற்றி நிறைய தெரிந்து கொண்டு சந்தோஷமாகக் கிளம்பி விட்டான்। தன் முதுகு சுமக்கும் அளவுக்கு மூட்டையோடும், மழைகோட்டோடும், கம்பளிக் குல்லாவோடும் விமானம் ஏறினான். அவனுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும், உறவினர்கள் பல பேருக்கும் இந்த விஷயம் ஆச்சரியமாகவும் ,அதிகப் பெருமை தருவதாகவும் இருந்தது.
மறுபடியும் சொல்கிறேன். அந்த இளைஞனுக்கு அப்போது வயது இருபத்தியெட்டு.

இதற்கு நேர் எதிராய் இன்னொரு விஷயம்.

அவர் எனது நண்பர். அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இன்னொரு முறை பதவி நீடிப்பு செய்ய இயலாது என்று சொல்லிக் கட்டாயமாக அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்ப, அவர்கள் கொடுத்த காசோடு வீட்டிற்கு வந்தவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

“என்ன ஸார். மகன்களும்,மகளும் நல்ல நிலையில் இருக்க இனிமேல் என்ன பிரச்சினை. நீங்க பாட்டுக்கு ஊர் ஊராகப் போய், கோவில் கோவிலா பார்த்துட்டு வாங்களேன்”. என்று அண்டை அயலார்கள் சொல்ல,மனைவியும் நச்சரிக்க, சரி என்று கிளம்பினார்.

அவர் தன் பெரும்பகுதியை வடக்கில் கழித்து விட்டதால், தென்னாடு சுற்றுவதற்கு ஆசைப்பட்டார், தமிழகக் கோயில்கள் அவருக்கு மிக முக்கியம் என்று சொல்லப்பட்டது.தன் மனைவியோடு பாட்டியாலாவிலிருந்து இரயில் மூலம் ஜூன் மாதம் தமிழகத்திற்கு வ ர , வெயில் இங்குப் புற்களை தீய்த்துக் கொண்டிருந்தது. போவோர், வருவோர் தலைமுடியைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

சஃபாரி உடை இனி உபயோகமில்லை. ஆனால், நன்றாக இருக்கிறதே. அ ணிந்து பழகிவிட்டதே என்று சஃபாரி சூட்டோடு சென்னை நகர் வலம் வந்தார். நாலு முழ வேட்டி, மேல் துண்டு போட்டாலே உடம்பு எரியும் சென்னையில் சஃபாரி சூட் புழுங்கி எடுத்தது. இடைவிடாத எரிச்சலைக் கொடுத்தது.பாட்டியாலாவில் வெயில் உண்டுதான், ஆனால் இப்படி வியர்த்து வழியாது என்று புலம்ப வைத்தது.

சென்னையிலிருந்து அவர் முதலில் கும்பகோணம் இறங்கினார். சஃபாரி சூட்டுக்கு மாற்று ஏற்பாடாக அவர் கட்டம் போட்ட லுங்கி தான் கொண்டு வந்திருந்தார்.ஏனெனில் அவருக்கு வேஷ்டி கட்டத் தெரியாது.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குக் கட்டம் போட்ட நீல லுங்கியோடு போனால் விடுவார்களா. நாலு முழம் வேஷ்டி வாங்கிவிடலாமா எனச் சிந்தித்தார்.

“சஃபாரி தான் அழகாக இருக்கிறது. சஃபாரியில் பார்த்துப் பார்த்து நீங்கள் வேஷ்டி கட்டிக்கொண்டால் சமையற்காரனைப் போன்று தோற்றமளிக்கிறீர்கள். எனவே கோயிலுக்குச் சஃபாரி உடையிலேயே வாருங்கள்” என்று அவர் மனைவி சொல்ல ,சஃபாரியில் கோவிலுக்குக் கிளம்பி விட்டார்.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அன்று பிரதோஷம். கூட்டமான கூட்டம். அங்கு கூடியிருந்த ஆயிரத்து நானூறு பேரில் இவர் மட்டுமே சஃபாரி உடை உடுத்தியிருந்தார். வெயில் பிளந்து கட்டியது. ஜனங்கள் முட்டி மோதிக் கொண்டு உள்ளே கருவறை நோக்கி நகர, ஜனங்களுக்கு அறிவே இல்லை என்று இவர் வாய் தப்பிச் சொல்லி விட, பக்கத்தில் இருந்த கிழவி பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.

“நீ எங்க வானத்திலேர்ந்து வர்ரியா . கோட்டும், சூட்டும் போட்டுக்கிட்டா ஐரோப்பாக்காரனா. இன்று எதுக்கு வரணும் இஞ்ச எதுக்கு சாமி தரிசனம்” என்று கும்பகோணம் பாஷையில் பிளந்து கட்டினாள்.கூட்டம் ஆமோதித்தது.

அவருக்கு கும்பேஸ்வரர் மீது கோபம் வந்தது. உன்னைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். கூட்டத்தோடு போவதை விட, கூட்டத்திலிருந்து வெளிவருவது மிகப்பெரிய வேதனையாய் இருந்தது. உடை கசங்கியது. சஃபாரி சூட்டின் பட்டன்கள் அறுந்தன . மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்தக் கோவிலில் மட்டுமல்லாது, பல கோவில்களில் அவருக்கு மோசமான அனுபவங்களே ஏற்பட்டன.

காரணம், அவருடைய உடல்நிலை தமிழகத்தின் வெயிலையும் , கூட்டத்தையும் பொறுத்துக் கொள்வதாக இல்லை. விசேஷ நாட்களில் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை. அறுபது வயதிற்குப் பிறகு ஒரு கும்பலில் புகுந்து புறப்படுவதற்கோ அல்லது பசியை பொறுத்துக்கொண்டு வரிசையில் முன்னேறுவதற்கோ, தண்ணீர் குடிக்காமல் பல மணிநேரம் தாக்குப் பிடிப்பதற்கோ முடியாது என்பது தெரியவில்லை.யாரோ சொன்னார்கள் என்று தலயாத்திரை புறப்பட்ட அவர் அதில் தனக்கு எந்தவித உற்சாகமும் ஏற்படவில்லை என்பதை பத்து நாட்களுக்குப் பிறகே புரிந்து கொண்டார்.

அந்த நண்பர், எதேச்சையாக என்னை சென்னை மயிலாப்பூர் கோவிலில் சந்தித்தபோது அவருடைய அனுபவங்களை சொல்ல, தலயாத்திரை போக வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுரை சொன்னேன். வீட்டோடு அமைதியாக உட்கார்ந்து பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ளச் சொன்னேன். கற்றுக் கொடுங்கள் என்று உடனே என் கையைப் பிடித்துக் கொண்டார். அவருக்கு வேறு ஒரு நபரை அடையாளம் காட்டினேன்.

சிறிய யோகாசனங்கள் செய்யவும், தினமும் பூஜை செய்யவும், மந்திரஜபங்கள் செய்யவும் அந்த நண்பரிடம் அவர் கற்றார். மனைவியும் ஆ சைப்பட

அவருக்கும் மந்திரஜபங்கள் சொல்லித் தரப்பட்டன. மனைவியும் யோகாசனம் செய்யத் துவங்கினார். இரண்டு பேரும் மாலை இருட்டிய பிறகு கடற்காற்று பூமியை நோக்கித் திரும்பிய பிறகு, கடற்கரைச் சாலையில் நடக்கப் பழகினார்கள்.

ஐந்து மணிக்கு எழுந்திருந்து குளித்துவிட்டு ஆறுமணிக்கு கபாலி கோவிலுக்கு சென்று நர்த்தன விநாயகர் அபிஷேகம் பார்த்து, கபாலிக்கும், கற்பகாம்பாளுக்கும் வணக்கம் சொல்லி, வலம் வந்து ஏழு மணிக்கு வீட்டில் அடங்கிக் கொண்டார்கள். பூஜை செய்தார்கள். அமைதியாய் மந்திரஜபம் செய்தார்கள்.

காலைச் சிற்றுண்டி முடித்துவிட்டு அயர்ந்து தூங்கினார்கள். பிறகு பேப்பர் படித்துவிட்டு மதிய உணவு முடித்து மறுபடியும் தூங்கினார்கள். மாலைநேரம் டி.வி. பார்த்துச் சந்தோஷப்பட்டார்கள், இரவு நேரம் நடைப்பயிற்சிக்கு சென்றார்கள். எப்போதாவது ஆன்மீகக் கூட்டங்களுக்கு போய் முன்வரிசையில் உட்கார்ந்து காதார இறைவன் புகழைக் கேட்டுக் கொண்டார்கள்.சென்னை நகரம் அவர்களுக்கு இப்போது சொர்க்கமாக மாறியது.பாட்டியாலாவில் இருந்தா இந்த மாதிரி எல்லாம் கேட்கமுடியுமா என்று சந்தோஷப்பட்டார்கள்.

எதற்கு இந்த இரண்டு வெவ்வேறு நபரைக் காட்டுகிறேன் என்பது புரிந்திருக்கும்.

தலயாத்திரை போவது வயதான பிறகு என்று ஒரு காலும் வைத்துக் கொள்ளக்கூடாது. தலயாத்திரை போவதற்கு வெகு நிச்சயமாய் நல்ல வயது மத்திம வயதே.

பதினெட்டு, இருபது வயதில் எதுவும் புரியாத வரையில் தலயாத்திரைகள் மேற்கொள்ளுவது வீண். ஆனால் உடம்பில் வலு சேர்ந்து, புத்தியில் தெளிவு உண்டாகும் நேரத்தில் கைலாஷ் யாத்திரை போன்ற கடினமான யாத்திரைகள் மேற்கொள்வது என்பது மிக உன்னதமான விஷயம்.

மற்ற தல யாத்திரைகள் திருமணமாவதற்கு முன்பு தனியே போகும் போது ஒரு வெறுமை ஏற்படுத்தும்। ஆனால் திருமணமான பிறகு, குழந்தைகள் பிறந்து, அவர்களுக்கு பத்து வயது ஆகும் போது வெகு நிச்சயமாய் உங்களுக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். மனைவிக்கு முப்பத்தைந்து வயது ஆகியிருக்கும்.


அந்த நேரத்தில் மற்ற தலயாத்திரைகள் மேற்கொள்ளும் போது குழந்தைகளுக்கு குதூகலம் கொடுக்கும். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் மிக நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தும். சந்தோஷம் தரும்.உங்களை அ மைதிப்படுத்தி, மெல்லப் பக்குவப்படுத்தும்.

நாற்பது வயதுதான் ஸார் உழைக்கிற நேரம். அந்த நேரத்துல கோயில் கோயிலா குடும்பத்தோடு அலைய முடியுமா என்று கேட்கிறீர்களா.

வருஷத்தின் எல்லா நாட்களும் அலையச் சொல்லவில்லை. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தல யாத்திரை போகலாம். சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் கோவில்களைப் பிரித்துக் கொள்ளலாம். பரத கண்டம் முழுவதும் சுற்றலாம். இளமையான வயதை விட மத்திம வயது இன்னும் சிறப்பான நேரம். வயதான பிறகு மெல்ல பயணம் செய்வதைத் தவிர்த்து மந்திர ஜபத்தில் ஈடுபட, மனதில் மிகப் பெரிய சந்துஷ்டியும், அமைதியும் விளங்கும். உ டம்பும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் சொந்த அபிப்ராயம்.

6 comments:

said...

செய்தியும் அதனோடு பின்னப்பட்ட கதைகளும் நன்று!

said...

ஸ்ரீ கிருஷ்ணா துளசி சார் ,
வணக்கம்,

நீங்கள் தேர்ந்தெடுத்து எழுதும் வெளியிடும் பதிவுகள் மிகவும் உன்னதமாக இருக்கிறது. கவனமாக வார்த்தைகளை வர்ணங்களால் மேருகேற்றுவதும், தகுந்த சிறந்த புகைப்படங்கள் உதவியுடன் ஐயா பாலகுமாரன் அவர்களின் சீரிய சிந்தனை கோர்வைகளை வடிக்கும் வகைக்கு மிகுந்த நன்றி. புகைப்படங்கள் மிகவும் அபாரம். உங்கள் பதிவுக்கு வராத பின்னூட்டங்களை குறித்து தயவுசெய்து கவலை கொள்ள வேண்டாம். நேகடிவாகவோ அலட்சியமாகவோ யாரேனும் ஏதேனும் எழுதினால் தயவுசெய்து பொருட்படுத்தாதீர்கள். ஐயாவின் வாசகர் வட்டத்தின் விட்டம் விசாலம் வீர்யம் மிகவும் பெரியது. " ஒரு வஸ்துவில் இருக்கிற சக்தி எதிராளியின் புத்தியை பார்ப்பதில்லை " என்ற கருத்து கொண்ட ஒரு வேதா வக்கியத்தினை முக்கூராரின் ஒரு உபன்யாசத்தில் படித்ததாக நினைவு. அஹ்தேபோல மிக உயர்ந்த நோக்குடன் நீங்கள் முயன்று வெளியிடும் ஐயாவின் அருளுரை அபிப்ராயங்களை பலாசுலைகளை ருசிக்கும் தேனீக்கள் போல பலரும் வருங்காலத்தில் மொய்க்கப்போவது நிட்சயம் . உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வளமைக்கும் செழுமைக்கும் இறையருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

எனது முந்தைய நன்றியை ஐயா பாலகுமாரன் அவர்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிகுந்த நன்றி. அவரது ஆசிர்வாதங்களுக்கு தலை வணங்குகிறேன். நமஸ்காரம்.

மூன்று அல்லது நான்கு வருஷங்களுக்கு முன் ஐஸ்வர்யா பதிப்பகத்தின் மூலம் பாலகுமாரன் அவர்களின் அனைத்து படைப்புகளையும் சென்னையில் வாங்கி பத்திரப்படுத்தி சீஷேல்லேஸ் தீவுக்கு கொண்டுபோய் அவற்றை ஆழ்ந்து கிரகிக்க முயன்று தொடர்ந்து இன்று இப்போது ஆஸ்த்ரேலியா வந்தபின்னும் நானும் என் மனைவி கலாவும் பொக்கிஷமாக பாதுகாத்து அவ்வப்போது அவரது சிந்தனைகளுடன் ஊன்றிப்போய் வாழ்ந்து வருகிறோம். இறையருள் காக்கிறது . அப்பம் வடை தயிர்சாதத்திலிருந்து மந்திர ஜெபத்தின் மகிமையை சாராக்கி எனக்கு போதித்தார் என் அப்பா. என் பெற்றோர்கள் சென்னையில் தொடர்ந்து ஐயாவின் படைப்புகளை கூர்ந்து படித்து வணங்கி வருகிறார்கள். கர்ணன் குறித்த அந்த நாவலை மிகவும் சிலாகித்து என் அம்மா மகிழ்ந்தார்கள். நான் இனிதான் படிக்க வேண்டும்.

முன்பின் அறியாத அறுபது வயசு பெரியவர் ஒருவர், ஐந்து வருஷம் முன் ஒரு கோவிலில், வாய்வார்த்தையாய் பேசியதற்காக மகிழ்ந்து, என் மனைவியையும் குழ்ந்தைகளையும் வாழ்த்தி ஆசிர்வதித்து, பிறகு ஆறு மாதங்கள் கழித்து மறக்காமல் சீர்காழியிலேருந்து எங்களுக்காக அபிராமியின் ஆசிகளை தோய்த்து என் கண்மனித் தாமரை பொக்கிஷத்தை ஏர்மைல் வழியாக அனுப்பினார். இதற்கு நான் எப்போ எப்பிடி நன்றி சொல்வது. ?

ஐயா பாலகுமாரன் அவர்களுக்கு எங்களது நமச்ச்கரங்களை சமர்ப்பிக்கிறேன்.

சில உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் உதவுவதில்லை.

மிகுந்த நன்றி.
வணக்கம்.
அன்புடன்.
ஸ்ரீனிவாசன்.

said...

My Heartful thanks to Krishna Tulasi for this great job. Reading Ayya's each word is like eating sweet. His sight from his photos goes into my heart and it does something. I pray Ayya and Bagavan to enlight the readers heart by his Satya words. My love to Ayya.

Sincerely
Jayapradha
Connecticut,USA

said...

Our heartful namaskaram to krishna thulasi. All the ariticles in this page are very intresting particulary Q&A is very good and article about prayer is mind blowing . Questions raised in this forum are really good.

Anbudan
Baskar,Divya,Sree Vaishnavi

said...

Awesome!i was waiting for a blog like this,This will be an usefull blog for ayya's fans,thanks for the Q&A part Ayya's answers motivates us to learn more & think more.

Thanks a lot to Krishna Thulasi.

said...

IT WAS A EXCELLENT JOB DONE BY KRISHNATHULASI. THE VIDEO ABOUT "GANGAI KONDA CHOZHESWARAM" IS AWSOME, IT WAS A WONDERFUL EXPERIENCE.

CHANDRU....