Friday, February 15, 2008

சினிமா ஒரு காட்டாறு. கரையிலிருந்தபடி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பேசுகிறார்……….


ஐயா, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எல்லா விஷயங்களையும் இந்த வலைதளத்தின் மூலம் பரிமாறிக் கொள்வது தான் எங்களின் நோக்கம். உங்களின் சினிமா அனுபவம் பற்றியும் சொல்லுங்களேன்.

சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக்கிறேன்.

குறிப்பாக நண்பர், நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் கம்பீரத்தை பல்வேறு சமயங்களில் நான் கவனித்து அதிசயப்பட்டிருக்கிறேன். பாட்ஷா படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. திரு. ரஜினிகாந்த் அவர்களின் அலுவலக மாடியில் ஒரு பெரிய ஹாலில் அமர்ந்திருந்தோம். அந்த ஹாலில் இரண்டு ஒற்றை சோபாக்களும், மூன்று பேர் அமரக் கூடிய ஒரு நீண்ட சோபாவும் இருந்தன..

ஒற்றை சோபாக்களில் இயக்குனர் திரு.சுரேஷ் கிருஷ்ணாவும் , திரு. ரஜினிகாந்த் அவர்களும் அமர்ந்திருக்க, மூன்று பேர் அமரக் கூடிய சோபாவின் நுனியில் நான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். அந்த மூன்றாவது சோபாவில் வேறு யாரேனும் வருவார்கள் , உட்காருவார்கள், நகர்ந்து போவார்கள்। மூன்று பேருமே விவாதத்தில் ஈடுபட்டிருந்தால் இது தான் உட்காரும் விதமாக இருந்தது।

விவாதத்தினுடைய சூடு ஏற ஏற, நான் உட்கார்ந்து பேச முடியாமல் என் வழக்கப்படி எழுந்து நின்று வேட்டியை மடித்து கட்டி, கைகளை ஆட்டியபடி அந்த காட்சியை விவரித்து வசனத்தோடு என்னுடைய வெளிப்பாடை சொல்லிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் அவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் நடப்பது பார்த்து எழுந்து நின்று தள்ளிப் போய் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவின் பின் பக்கம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பேச்சு சுவாரசியத்தில் மெய்மறந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்து அவரிடம் பேசும் போது, மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவில் அவர் அமர்ந்து கொண்டார்.

என்னிடத்தில் சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்ல முற்படுவது தெரிந்த போது குறுக்கிட வேண்டாம் என்று கையமர்த்தி விட்டு தொடர்ந்து நான் வேகமாக அந்த காட்சியை திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திரு.சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் எழுந்து அருகே வந்து காதோரம் “அவருடைய நாற்காலியில் அமர்ந்து பேசுகிறீர்கள்.தயவு செய்து எழுந்திருங்கள்” என்று மெல்ல சொன்னார்.

நான் திடுக்கிட்டு என் தவறை உணர்ந்தேன். நான் எழுந்திருக்க முற்படும் போது, சுரேஷ் கிருஷ்ணா பேசியதையும் நான் எதிரொலிப்பதையும் அறிந்து திரு. ரஜினிகாந்த் அவர்கள் என் தோளை அழுந்தப் பற்றி உட்கார வைத்து “உட்காருங்கள்.இது ஒன்றும் சிம்மாசனம் அல்ல.வெறும் சோபா. ஆசனம். யார் வேண்டுமானாலும் உட்காரலாம்” என்று உரத்த குரலில் சொல்லி தொடர்ந்து என்னை பேசுமாறு கட்டளையிட்டார்। ஆனால் நான் உட்கார்ந்திருப்பது அவருடைய நாற்காலி என்று தெரிந்த பிறகு தொடர்ந்து என்னால் பேச முடியவில்லை।நான் எழுந்து நின்று என்னுடைய இடத்திற்கு வந்து விட்டேன்। அன்றைய விவாதம் முடியும் வரையில் திரு.ரஜினிகாந்த் அந்த ஒற்றை சோபாவில் உட்காரவில்லை.

வீடு திரும்பும் போது திரு. ரஜினிகாந்த் அவர்கள் அது ஒன்றும் சிம்மாசனம் அல்ல என்று சொன்னதும், தோளை அழுத்தி அமர்த்தியதும், தொடர்ந்து பேச கட்டளையிட்ட கம்பீரமும், பண்பும்,எளிமையும், பெருந்தன்மையும் ஞாபகத்திற்கு வந்தன. நாற்காலி என்பது ஒரு கெளரவமான விஷயம் தான். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது நாற்காலி தான் என்று சாதாரணமாக சொன்ன அந்த மனிதரை இன்றளவும் என் மனம் நேசிக்கிறது.

கமலஹாசன் ஒரு அற்புதமான கலைஞர். யார் பத்து நிமிடம் அருகே நின்று பார்த்தாலும் நிச்சயம் வியந்து தான் போவார்கள். குணா படத்தின் விவாதம். முதல் நாள் ஒரு மாதிரி படத்தின் முதல் பகுதி தயாராகி விட்டது. முதல் சீன்,இரண்டாவது சீன்,மூன்றாவது சீன் என்று மடமடவென்று கதை ஒரு ஓட்டம் ஓடி விட்டது. கதை அடுத்தபடி எப்படி திரும்பும் என்ற யோசிப்பிலிருந்தபடி
அவருக்காக காத்துக் கொண்டிருந்த போது கார் விட்டு இறங்கி, கதவு திறந்து, மண் தரையில் கால் பதித்து நடந்து வந்து போர்டிகோவில் நுழைந்து பிறகு சிமெண்ட் தரையில் நுழைவதற்கு முன்பு “நேத்திக்கு பேசினோமே. அந்த சீன் பத்தி என்ன நினைக்கிறீங்க” என்று ஆரம்பித்தார்.
“நல்லாருக்கு சார்”
“அதுக்கு அடுத்த சீன்”
“நல்லாருக்கு சார்” என்று சொல்ல,
“இல்ல. அந்த சீன் தப்பு” என்று என்னை இடைமறித்து,
“அந்த சீனுக்கு பதிலா எப்படி இருக்கணும் தெரியுங்களா” என்று தொடர்ந்து கட்டிடத்திற்குள் நுழைவதற்குள் அந்த கதை விவாதத்தை ஆரம்பித்து விடுவார். அந்த கதை விவாதம் முந்தைய இரவு அவர் வீட்டிற்கு போனதோடு முடிந்து விடவில்லை. விடிந்த பிறகும் ஆரம்பிக்கவில்லை.

அந்த விவாதம் அவர் மனதில் தொடர்ந்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்திருக்கிறது. தூக்கத்தில் கூட இந்த கதையை யோசித்திருப்பாரோ என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு அவர் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே விவாதத்தை ஆரம்பித்து விடுவார்.

வாசலில் டி।என்।எஸ்ஸும், அவர் மகன் சக்தியும் பல்வேறு பிரச்சனைகளோடு காத்திருப்பார்கள்। ஆனால் போர்டிகோ தாண்டி, வராண்டா தாண்டி,ஹால் தாண்டி, மாடிப்படி ஏறி உள்ளுக்குள் ஹாலுக்குள் போகும் வரை விவாதம் வேகமாக நடந்து ஒரு உச்ச கட்டத்தை அடையும் போது ஒரு மணி நேரம் ஆகி விடும். உள்ளே நுழையும் போதே விவாதம் என்பது கமலஹாசனிடம் மிகச் சாதாரணமாக தினம் தினம் அவரோடு சுற்றியிருக்கின்ற படைப்பாளிகள் காணும் விஷயம்।


எந்த நேரமும் படைப்புத் தான். எந்த நேரமும் சினிமா தான் என்று சிந்திக்கின்ற கலைஞன் திரு.கமலஹாசன்। அவரிடம் வேலை செய்வது சந்தோஷமான விஷயம். அடுத்த முறை அவர் உள்ளே நுழையும் போது இந்த சீன் எப்படியிருக்கு என்று கேட்டார். நீங்க ஓ.கே என்று சொன்னால் இந்த சீனை இப்படி இம்ப்ரூவ் பண்ணலாம். வேண்டாம்னு சொன்னால் இதுக்கு ஒரு மாற்று சீன் வச்சிருக்கேன் என்று ஆரம்பிக்க, அவர் வாய் விட்டு சிரித்தார்.


இது தான்। இது தான் நான் எதிர்பார்க்கிறேன்.இதை எதிர்பார்த்து எனக்கு கிடைக்கா விட்டால் கொஞ்சம் கோபமடைகிறேன்। நேற்றைய விவாதத்தின் எதிர்பக்கமும் , ஆதரவான பக்கமும் நாம் இருக்க வேண்டும்।உள்ளே நுழைந்ததும் ஆரம்பித்து விட வேண்டும்.இந்த பலமுள்ளவர்கள் தான் எனக்கு இணையாக வர முடியும். இல்லாது போனால் கொஞ்சம் கோபம் வருகிறது.கோபக்காரர் என்றோ, சண்டைக்காரர் என்றோ சொல்கிறார்கள்.நான் கோபமானவன் அல்ல. கொஞ்சம் வேகமானவன் என்றார். எனக்கு அவர் வேகம் எப்போதும் பிடிக்கும்.


உல்லாசம்,முகவரி,சிட்டிசன் என்ற படங்களில் அஜித் என்கிற அற்புதமான மனிதரோடு பழக நேர்ந்தது. பேரழகர். ஆனால் அதைப் பற்றிய சிறிய கர்வம் கூட இல்லாத அமைதியான மனிதர். ஒரு கைதி கூண்டில் ஏறி தன்னுடைய நிலைமையை சொல்ல வேண்டிய ஒரு காட்சி சிட்டிசனில் இருந்தது.ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்து அதற்குண்டான வசனத்தை எழுதி, இயக்குனரிடம் ஒப்புதல் வாங்கி அதைப் பற்றி நடிகரிடம் பேசும் போது , “எப்படி அந்த காட்சி இருக்கிறது. எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்” என்று சொல்ல, நான் அந்த கைதி கூண்டில் ஏறி கையை வைத்துக் கொண்டு எப்படி பேச வேண்டும் என்பதை உரத்த குரலில் சொன்னேன்.

உற்று நான் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். நான் கீழிறங்கினேன். நான் பேசி முடித்ததும் சுற்றி உள்ளவர்கள் மிகுந்த பரவசத்தோடு அற்புதம் என்பதாகப் பார்த்தார்கள். ஆனால் அஜித் அவர்கள் மெல்ல என் தோளில் கை வைத்து அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வராண்டாவிற்கு அழைத்துப் போனார்.

பாராட்டப் போகின்றார் என்ற எண்ணம் எனக்கும், இயக்குனருக்கும் இருந்தது. இயக்குனர் சரவண சுப்பையா ஆவல் மேற்பட்டு எப்படி இருக்கிறது,எப்படி இருக்கிறது என்று கேட்க, திரு.அஜித் அவர்கள் உடனே பதில் சொல்லவில்லை. மெல்ல என்னை ஏறிட்டு, “ஏன் கமலஹாசன் போல பேசுகிறீர்கள்” என்று கேட்டார்.

“இல்லையே. நான் கமலஹாசன் போல பேசவில்லை. நான் என்னை மனதில் நினைத்துக் கொண்டு தான் அதை எழுதினேன். நானாகத் தான் நினைத்துக் கொண்டு அதைப் பேசினேன்” என்று சொன்னேன்.

“ இல்லை. உங்களிடம் கமலஹாசனின் சாயல் பலமாக இருக்கிறது. கமலஹாசனின் முகபாவங்கள் உங்களுக்குள் ஆழ பதிந்து விட்டன.கமலஹாசனின் குரல் , அவர் சொல்கிற விதம் இவைகளையே நீங்கள் திரும்பச் செய்கிறீர்கள். நீங்கள் செய்யலாம். பலர் பாராட்டலாம். ஆனால் கமலஹாசன் போல நான் நடித்தால் நன்றாக இருக்காது. எனக்கென்று ஒரு இடத்தை நான் பிடித்து வைத்திருக்கிறேன். அது போலத் தான் நான் பேச வேண்டும். நீங்கள் பேசுவது போல பேச மாட்டேன்” என்று சொன்னார்.

நான் மெளனமாக இருந்தேன். சரவண சுப்பையா அப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்த, அவர் தீர்மானமாக மறுத்து, “உங்களை குறை சொல்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு என் பாதை முக்கியம். நீங்கள் செய்ததற்கு நேர் எதிர்பதமாகத் தான் என் பேச்சு இருக்கும்” என்று சொன்னார்.அது சிறப்பாக இருந்தது என்பதை பின்னால் படம் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன்.

எதனாலும் கவரப்படாத ஒரு தெளிவான மனிதரோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அன்று பேசிய விதம் உணர்த்தியது. தன் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை விடாது வைத்திருக்கின்ற ஆற்றல் புரிந்தது. திரு. அஜித் அவர்கள் சிறப்பதற்கு இந்த குணங்கள் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அமைதியான தனுஷ், கொஞ்சம் ஆரவாரமான அதே நேரம் அன்பான சிம்பு, குணவானான விக்ரம், கம்பீரமான ரகுவரன், பிரியமான பிரபுதேவா, ஆற்றல் மிகுந்த அர்ஜுன் என்று பல நடிகர்களோடு பல நல்ல அனுபவங்கள் உண்டு। நான் இது வரை பேசிப் பழகாத நடிகர் திரு. விஜய் மட்டும் தான்.

இப்போது சினிமா எதுவும் நான் ஏற்றுக் கொள்வதில்லை। சினிமாவில் உழைக்கின்ற அளவிற்கு உடல்வலுவு எனக்குப் போதவில்லை. அது தவிர நான் எழுத வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கும்படியால் சினிமாவில் இருந்து சற்று விலகி எழுத்துப் பணியில் அதிகம் ஈடு
படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சினிமா ஒரு காட்டாறு. அது கம்பீரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கரையிலிருந்தபடி…………….

5 comments:

said...

arumaiyana muyarchi,vazhkail thedal ullavargaluku migavum payanulla valaithalam.ayyavin bathilgal arumai.thelivakugirathu.photos r very,very beautifull.thank you very much.vazhga ungal pani,valarga ungal thondu.
-bagya.

said...

நன்றி பாக்யா. உங்களைப் போன்ற வாசகர்களுக்காகவே இந்த வலைத்தளம் ஆரம்பித்துள்ளோம். தொடர்ந்து நல்லவை செய்ய இறையருள் துணை நிற்க.

said...

என் ஆன்மீகத் தேடலுக்கு,
குருவருளும்,
இறையருளும்...
துணை செய்யத் துவங்கியுள்ளன.

எழுத்துச் சித்தரின்
பல நாவல்கள்
என் ஆன்மீகத்தை வளர்த்து,
பசியை மேலும் தூண்டியுள்ளன.

இதுவரை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற அனைத்து ஞானிகள், சித்தர்கள்...
என் குரு அழகி திரு. விஷி அனைவரும் ஒருவரே என அறிகிறேன்.

எனக்குக் கிடைத்த நல்லவைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

விரைவில் அனைத்தும் நிகழ்தல் வேண்டுகிறேன்.

எழுத்துச் சித்தரின் பாதங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

அன்புடன்
அந்தோணி முத்து

said...

KAVITHAI MIGHAVUM ARUMAI.

CHANDRU...

said...

இன்று தான் தங்களை சூரிய வணக்கத்தில் கண்டேன் அப்படியே தங்களை பற்றியும் அறிந்துகொண்டேன் தங்கள் எழுத்தாற்றல் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது ஐயா நானும் முயற்சிக்கிறேன் நன்றிகள் பல

என் வலைத்தளம் :hishalee.blogspot.in