Saturday, June 28, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2

பாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.


கிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே? இதில் என்ன லாபம்?
பாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.

பெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.

மனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.


கிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன?


பாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.

இந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.

நடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்சியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.

கிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே। இது புது டிரண்டாக இருக்கிறதே। இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்

Thursday, June 5, 2008

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?




ஆமாம்।



ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும்। எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம்। கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும்। அந்தப் பெண் இரை என்று தோன்றும்। மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।


அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.



தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது। அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்। தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே। நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும்। கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்।

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள். அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மையான் ஐதீகம்.


வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?

சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.


காமத்தை அடக்குவது எப்படி?

காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எது அடக்கினாலும் அது மறுபடியும் சீறி எழும். காமத்தை அறிந்துக்கொள்வது தான் காமத்தை அடக்குகின்ற ஒரே வழி. காமத்தை அறிவது எப்படி? இதற்கு தனி கேள்வி கேளுங்கள். தனியாக பதில் தருகிறேன்.

Monday, June 2, 2008

புத்தக மதிப்புரை – “காதலாகிக் கனிந்து”



மே25, ஞாயிறு – 2008 தினமலர் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகி இருக்கும் எழுத்துச்சித்தரின் "காதலாகிக் கனிந்து" புத்தகம் பற்றிய பார்வை.............
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதலாகிக் கனிந்து… ஆசிரியர்: பாலகுமாரன், வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி।நகர். சென்னை-17 (பக்கம்:472, விலை ரூ.150)

திருவண்ணாமலையில் ஆன்மிக சான்றோர் பலர் அற்புதம் நிகழ்த்தியுள்ளனர்। சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி என வாழ்ந்த அந்த திருத்தலத்தில் யோகிராம் சுரத்குமார் அவர்களும் தங்கியிருந்து அன்பர்கள் பலருக்கு வழிகாட்டி அருள் பாலித்த அற்புதமான ஞான புருஷர்। அன்பர்கள் பலரால் விசிறி சாமியார் என நேசத்துடன் அழைக்கப்பட்ட மகானின் அன்புப் பார்வைக்கு ஆட்பட்ட பக்தர்கள் பலர், கற்றறிந்த மேதைகள், உயர் பதவியில் இருந்த நாணயமும், நேர்மையும் அணிகலனாகக் கொண்ட ஆன்றோர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதி அரசர்கள், பிரபல எழுத்தாளர்கள் என சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் அடக்கம்। படைப்பிலக்கிய வாதியாக தமிழ் கூறும் நல்லுலகில் அதிகம் அறியப்பட்டுள்ள பாலகுமாரன் அண்மைக்காலங்களில் ஆன்மிகச் சான்றோர்களின் வாழ்க்கை சரிதங்களை கதைபோல தனக்கே உரித்தான தமிழ் நடையில் எழுதி வருகிறார்। யோகிராம் சுரத்குமாரின் அன்புக்குரியவரான பாலகுமாரனின் பேனா ஒரு ஆன்மிக உரைநடை காப்பியத்தை தமிழுக்கு வழங்கியிருக்கிறது. பாலகுமாரனின் சொந்த வாழ்க்கைப்பயணம், அவர் அதில் எதிர் கொண்ட வித்தியாசமான அனுபவங்கள், அவருடைய வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவங்கள் என பக்கங்கள் வளர வளர யோகிராம் சுரத்குமாருடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு, யோகியை குருவாக ஏற்றுக்கொண்ட அவர் மனப்பக்குவம் என, பாலகுமாரனின் இதய நெகிழ்ச்சியுடன் கூடிய எழுத்துடன் நாம் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு விடுகிறோம். ஒரு குருவுடன் ஒரு சிஷ்யனுக்கு ஏற்படும் அருளாசி அனுபவம் இந்தப் புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்யப்படுள்ளது. பாலகுமாரனே குறிப்பிட்டுள்ளது போல, அவருள் புகுந்து யோகிராம் சுரத்குமார் எனும் சத்குருநாதன் தான் இந்தப் புத்தகத்தை எழுத அருள் புரிந்திருக்கிறார் என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது- - ஜனகன். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி தினமலர். மே 25 2008.



புத்தகத்தின் நேர்த்தியான நெசவில் மதிமயங்கி விட்டதாலோ என்னவோ “காதலாகிக் கனிந்து” என்ற பெயரை “காதலாகிக் கசிந்து” என்று மாற்றி பிரசுரித்துவிட்டிருக்கிறார்கள். பிழை பொறுப்போமாக ..