Friday, April 30, 2010

வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.

இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.

தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.

முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும் மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை. மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பது பற்றிய அறிவு பரவலாக இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள் சீமான்கள் என்று இருபது வருடம் முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில் இருந்தது.

இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய் உடுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிகிறது.மிக வேகமாய் வணக்கத்துடன் முகமன் சொல்ல பலபேர் கற்றிருக்கிறார்கள்.

என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.

ஆனால்,காலம் நகர நகர...வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். ஒன்றும் அறியாத பெண்களை, உளறலான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.

எனவே,அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழிலலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.

‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில் சொல்ல முடியும்.

எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல்.

‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில் அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப் பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம் பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக் கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான். முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான்.

சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘ இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே விவரித்து கேவலப்படுத்தும்.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.

“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.

“இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.

“எப்படி தெரிந்தது,உனக்கு”

“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”

அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். ‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகிவிடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.

மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம் பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும், மகளும் மாறி மாறி சொல்ல... வியந்து பார்ப்பாள்.

இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.

ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டிதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

“இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”

“இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.

“விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான்.நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம்.அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”

இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும்.

“முன்னமே சொல்லி இருக்கலாமே”

“விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுப்பிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல... அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.

விவசாயியாக இருந்தால், விவசாயம் பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. வேறு எதுபற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதா? பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகியவற்றை விவசாயி செய்தால் கேலிக்குரிய விஷயமா.

சில பெண்களை தினமும் நாலு கிலோமீட்டர் நடக்கச்சொன்னால், ‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே பத்து கிலோமீட்டர் நடக்கிறோம்’ என்று சிரிப்போடு சொல்வார்கள்.

அது உதவாதப் பேச்சு, வியர்க்க விறுவிறுக்க இரண்டு கிலோமீட்டர் போய், இரண்டு கிலோமீட்டர் திரும்பி வருவது உடம்புக்கு மிகப்பெரிய ஆரோக்கியம். என்னதான் மாடு கட்டி இழுத்தாலும், உட்கார்ந்து கையால் இட்லிக்கு மாவரைத்தாலும், உடலின் எல்லா பகுதிகளும் சமமாய் வேலை கொடுக்கும் யோகாசனம் மிக அவசியம்.

மூச்சுப் பயிற்சி மூளையை குளுமையாக்கும், கண்களைக் கூர்மையாக்கும். உடம்பில் படப்படப்பை குறைத்து, நிதானத்தைக் கொண்டு வரும். தியானமும், யோகாசனமும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உரிதானவை என்று நினைப்பது பேதமை. எல்லா கிராமத்து பெண்களும் யோகாசனம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

வெட்கத்தின் காரணமாகவும், நமக்குத் தேவையில்லை என்கிற அறியாமை காரணமாகவும் நல்லதொரு விஷயத்தை கிராமத்து பெண்கள் புறக்கணிக்கிறார்கள். உடல் என்பதில் கூர்மை உள்ளவர்கள், முனைப்பு உள்ளவர்கள் வெகுநிச்சயம் யோகாசனம் கற்றுக்கொள்வார்.

செய்திப் பத்திரிகைப் படிப்பது என்பது ஒரு நல்ல வேலை. தொலைக்காட்சிப் பெட்டியைவிட, தினசரிகளிலேயே செய்திகள் தெளிவாக வருகின்றன. தலையங்கங்கள் சார்பாக இருந்தாலும், நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றன, அதையும் தாண்டி பொதுநலக் கட்டுரைகள் வருகின்றன, படிப்பது என்ற பழக்கம், விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள உதவும்.

மாணவர்கள் செய்திப் பத்திரிகைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாத்திகத்தின் ஆதரவாகவும்,ஆத்திகத்தின் ஆதரவாகவும் இரண்டு வகையான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தந்தை பெரியார் எப்படி மதவாதத்தை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் என்பதையே எதிர்க்கிறாரா. அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறாரா.

கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறாரா. அல்லது கடவுள் நம்பிக்கையால் ஏற்படுகின்ற ஆசார அனுஷ்டானங்களை எதிர்க்கிறாரா. எதனால் அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது. அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆத்திகனாவதற்கோ, நாத்திகனாவதற்கோ இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும்.

பொது அறிவு அல்லது கேள்வி அறிவு உலகம் பற்றிய ஞானம் இல்லாதபோது, வெகுநிச்சயம் அம்மாதிரியான ஆட்களை வன்முறைப் பக்கம் திருப்பிவிட முடியும்.அப்படி சில தேசங்களில் மதரீதியாகவும், கொள்கைரீதியாகவும் இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் தழுவிய வன்முறையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன், பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.

“பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்துக் கொண்டது.

அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான்.

“எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளெ எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான்.

“ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றி சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள்.தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.

கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான். ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.

“வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார்.

வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்... மனைவிக்கும் விவரித்து சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.




“வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனம்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்-வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.

“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”


ஏழு வயதில் மனப்பாடம் செய்த வரிகள்.இன்று அறுபத்தியொரு வயதில் அதன் பொருள் விளங்க, அந்த வாக்கியத்தின் பிரம்மாண்டம் புரிய-நான் திகைத்துப்போய் நிற்கிறேன்.

ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன். எந்த அறிதலும் வீண்போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு.

வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

Thursday, April 29, 2010

பாலகுமாரன் பேசுகிறார் - சில கேள்விகள் - சில பதில்கள்

ஐயா, வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையை கேட்க வில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன் எனக்கு விளக்குவீர்களா.




பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன், சிறிய ஆனால் கூரிய கண்கள், தொலைதூரம் பார்க்கும் திறன், மிகப் பெரிய தலை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன். அதுமட்டுமில்லாது வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்த தும்பிக்கை. நீண்ட மூச்சை உள்ளிழுத்து மிக நீளமாக வெளியே விடுவது என்கிற விஷயம் யானைக்கு மட்டுமே உண்டு. சிறிய அளவில் மூச்சுகள் இழுத்து வெளியிடுவதில் ஆயுசு குறைவும், நோயும் ஏற்படும். ஆனால் துதிக்கை நீளம் மூச்சை இழுத்து நுரையீரலுக்குப் போக வேண்டியிருப்பதால், யானை இயல்பாகவே நீளமாக மூச்சை இழுத்தும், நிதானமாக மூச்சை விடுவதும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே மற்ற மிருகங்களை விட இது அதிக காலம் நோயின்றியும் வாழ்கிறது.

மறுபடியும் சொல்கிறேன், நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம், அதனால் ஏற்படும் கூர்மையான புத்தி, தொலை தூரப்பார்வை, அந்த அமைதியால் விளையும் கேட்கும் திறன். இவையே கணபதி. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரங்கள். இந்தத் தூண்கள் மீதே கெளரவம், புகழ், பணம் போன்றவை விதானங்களாக கட்டப் பெறுகின்றன என்பதை உணர்த்தவே வினாயகர் உருவம். உங்களுக்கு இப்பொழுது வினாயகரைப் புரிகிறதா.

இந்து மதத்தில் ஒரு முக்கியமான விஷயம், உங்களை கட்டளையிட்டு விஷயம் செய்யச் சொல்வார்கள். வினாயகரை வணங்கு. யானைத் தலையுடைய பொம்மையை வணங்கு என்று சொல்வார்கள். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏன் யானைத்தலை என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏன் உருவ வழிபாடு என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடவுளை அடைய மிகச் சிறந்த வழி எது என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தலைப்படவேண்டும். உங்களுக்குள் நீங்களாகவே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையை வளர்ப்பதே இந்து மதம்.



ஐயா, உருவவழிபாடு தவறு என்று அடித்துச் சொல்கிறார்களே? இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?




உங்களை நீங்கள் உருவமாக கொண்டுள்ள வரையில் உருவமற்றதை உங்களால் வழிபட முடியாது. உங்களை நீங்கள் உருவமாக கொள்ளாதிருப்பது என்பது எளிதில் நடக்கும் விஷயமல்ல, நீங்கள் உங்களை உருவமாக கொண்டால், உங்களுக்கு வணங்கவும் ஒரு உருவம் வேண்டும். அது கை,கால் உள்ளதாக இருக்கும் அல்லது வேறு விதமாகவும் இருக்கும். அடையாளமின்றி வழிபாடு சிறக்காது.

தன்னை உணர்ந்தவரே , தன்னை மறந்தவரே, கடவுள் என்கிற உருவத்தையும், வழிபாட்டையும் மறந்து விட முடியும்.


ஐயா, நாத்திகவாதம் பேசுபவர்களை உங்களுக்கு அறவே பிடிக்காதா?


அடடே.. யார் சொன்னது. நாத்திகம் பேசுகிற உத்தமர்களெல்லாம் இருக்கிறார்களய்யா. கடவுள் என்பது எனக்கு சரியாக நிரூபிக்கப்படவில்லை, வெறுமே வெற்று நம்பிக்கையை வைத்துக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்ளுதல் என்பது என்னால் இயலாது. எனினும் இப்பூமியில் வாழ கடவுளின் அவசியம் எனக்குத் தேவையில்லை. அதுவொரு சுகமான கற்பனையாக இருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று மிக அமைதியாக கடவுளை மறுத்துவிட்டு தன்னுடைய தினசரி காரியங்களில் முழு கவனம் செலுத்துகிற நல்லவர்களை நான் அறிவேன்.

நாத்திகர்களை விட கடவுளை தெரியும் என்று அலட்டுகிற ஆத்திகர்கள் தான் அபாயமானவர்கள். கேவலமானவர்கள். எதுவும் தெரியாமலேயே எந்த பயிற்சியும் இல்லாமலேயே உள்ளுக்குள் ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் வெறுமே தன்னை துளசிமாலைகளாலும், ருத்ராட்சங்களாலும் அலங்கரித்துக் கொண்டு தனக்கு எல்லாமும் தெரிந்துவிட்டதாய் சிலரை ஏமாற்றி, பலரை ஏமாற்ற, பல இளைஞர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தை அறிய மிக மிக சத்தியமாக இருக்க வேண்டும். தனக்குத்தானே உண்மையாக இருப்பது என்பது ஒரு பெரிய தபஸ். அது எளிதல்ல.

பல ஆத்திகவாதிகள் இங்கு பொய்யர்கள், திருடர்கள். உண்மையை தேடிக் கொண்டிருப்பவன், சத்தியத்தோடு வாழ்பவன், தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பான். யாரிடமும் போய் என்னைப் புரிகிறதா என்றோ அல்லது என்னைப் புரிந்துகொள் என்றோ கேட்கமாட்டான். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டான். அருகே வா, உன்னை குணப்படுத்துகிறேன். என்னிடம் வா. உன் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் என்று கடவுளை அறிந்தவன் சொல்வதில்லை. சம்பந்தப்பட்டவரின் பிரச்சனைகளை கேட்ட மாத்திரத்தில் பரிதவித்து எழுந்து, அவருக்காக உருகி நிற்க, சம்பந்தப்பட்டவரின் பிரச்சனை தானாக காணாமல் போகும். என்னால் காணாமல் போயிற்று என்று சொல்லவும் அந்த சத்தியசந்தனுக்கு மனம் வராது. மறுபடியும் வியப்பு தான் ஏற்படும். என்ன உன் கருணை என்று கடவுள் மீது மிகப்பெரிய கனிவும் ஈடுபாடும் அதிகரிக்கும்.

ஆத்திகம் என்பது அன்பே வடிவாய் இருப்பது.


ஐயா, பல பத்திரிகைகளில் வட மொழியில் பிரார்த்தனைகள் எழுதி இதைச் சொன்னால் சகல துன்பங்களும் விலகிப் போகும்,என்று சொல்கிறார்கள், அல்லது இந்த மாதம், இந்த மந்திரம் சொல்லுங்கள் என்று எழுதுகிறார்கள். வடமொழி எனக்கு அறவே தெரியாது. அதை மனனம் செய்து சொல்வதும் கூட நான்குவரியாக இருந்தாலும் சிரமமாக இருக்கிறது.வடமொழிக்கு இணையாக தமிழில் பாடல்கள் இல்லையா?


ஏன் இல்லை. நிறைய இருக்கின்றன. அபிராமி அந்தாதியும், வேயுறு தோளிபங்கண் என்று துவங்குகின்ற பாடலும், திருஞான சம்பந்தருடைய சில பதிகங்களும், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உருக்கமாய் எழுதப்பட்ட வேண்டுதல்களும் சொல்ல சொல்ல, உங்கள் மனகனத்தை குறைத்து தெளிவை அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கவல்லன. திருஞான சம்பந்தர் தேவாரமும் சொல்வதற்கு கடினமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் வெறுமே கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பது போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சில சமயம் தமிழ் பதிகங்களும் சொல்வதற்கு கடினமாக இருப்பதுண்டு. படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் வந்து விட்டால் எதுவும் எளிதாக இருக்கும். மேம்போக்காக இருப்பின் இறைவன் நாமத்தைச் சொல்வதுகூட கடினமாகத் தோன்றிவிடலாம்.



ஐயா, விதி என்று ஒன்று முன்பே எழுதப்பட்டு விட்டதாகக் கொண்டால் எதற்கு இறைவழிபாடு என்ற ஏமாற்று வேலை?


இதற்கு உண்டான பதிலை நிதானமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு தெளிந்தவர்களுக்குத் தேவையே இல்லை. அது நொய்மையான மனங்களின் செயல். சற்றுப் பேராசையுள்ளவர்களின் சிந்தனை. ஆனால் தெளிந்தவர்கள் கூட அன்பு மிகுதியினால், நொய்மையான மனங்களைத் தேற்றும் பொருட்டு பிரார்த்தனை செய் என்றும், இந்தவிதமான வேண்டுதல் நடத்து என்றும், அதற்குண்டான பாடல்களை இயற்றியும் வழிநடத்தியிருக்கிறார்கள். இறைவழிபாடு அவசியமே இல்லை என்பதுதான் இந்திய சித்தர்களின் கருத்து.

விதி என்ன எழுதியிருக்கிறது என்று கவலைப்படாமல் இப்படி உதவி செய், இன்ன வரம் கொடு என்கிற ஆசைப்படல்தான் பிரார்த்தனை. ஆசைப்படாதிருக்க, அதாவது பிரார்த்தனை செய்யாதிருக்க மிகுந்த தெளிவும், திடமும் வேண்டும்.

எனக்கு அத்தனை திடமில்லை. தன் திடம், தெளிவு பற்றி ஒவ்வொருவரும் தானே தன்னைப் பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும்.

Saturday, April 24, 2010

சூரியனோடு சில நாட்கள் - 5-- பாலகுமாரன் பேசுகிறார்

“ நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும், பிறகு மாடுகள் மேய்ச்சு, சுத்தம் பண்ணி, பால் திறந்து அப்படி வேலை செய்யணும்.

அந்தப் பண்ணைக்கு நடுவுல, இரண்டு ரூம், மூணு ரூம் இருக்கற வீடு கட்டிக்கிட்டு, நாம நடிச்ச படத்தை நாம போட்டு பார்த்துகிட்டு, அப்ப காமிரா பின்னால யார் இருந்தாங்க, என்ன நடந்தது, எப்படி அந்த படத்து கதை உருவாச்சுன்னு ரீ-கலெக்ட் பண்ணி உட்கார்ந்திருக்கணும். இப்படி ஒரு ஆசை என் மனசுல உண்டு.

இந்த வேலைகளுக்கு நடுவே தினமும் நேரம் கிடைக்கறப்ப ‘ஓம்’ங்கற சப்தத்துல மனசு லயிக்க வைக்கணும். எங்க வீட்ல பார்த்திருப்பீங்க,

எப்பவும் ஓம்னு ஒரு ஓலி வர்ற மாதிரி கேஸட் ஏற்பாடு பண்ணி, டேப் ரிக்கார்டர்ல போட்டு கேட்டுக்கிட்டு இருப்பேன். தியானம் பண்ற நேரத்தை அதிகமாக்கி, அந்த ஓம்கார ஒலியிலே மனச நிக்க வைக்கணும். விழிச்சு கண்ணு திறந்த உடனே மறுபடி மாடு, குரங்குன்னு வேல செய்ய வேடிக்கை பார்க்கப் போயிடணும்.

“மாடு-பால் பண்ணை புரியுது. எதுக்கு குரங்குகளுக்குன்னு தோப்பு வளர்த்து வேடிக்கை பார்க்கற விஷயம்”.

“ரொம்ப வேகமா சலனமாகிற மனசு குரங்கு. அதிகம் சலனமில்லாத,அதே சமயம் அப்படியே கல்லா நிக்கற மனசு பசு. இது இரண்டும் எனக்குள்ள இருக்கு. குரங்கை வேடிக்கை பார்க்கணும். பசுவோட பழகணும். குரங்கை வேடிக்கை பார்க்க வேடிக்கை பார்க்க, என் மனசு அதைவிட எவ்வளவோ மோசமா- தேவையில்லாது ஆடுதுன்னு புரியுது. குரங்கு குதி போடறதை, ஆடறதை சேஷ்டைன்னு சொல்றோம். அப்போ அதை விட அதிகமா ஆடற என் மனசை என்னான்னு சொல்றது.

ரோட்ல ஒரு ஆள் குடிச்சுட்டு விழுந்து கிடக்கான்னு வெச்சுக்குங்க, அதைப் பார்க்கறப்போ, இந்த முட்டாள்தனம் செய்யவே கூடாதுன்னு தோணுதில்ல. அதே மாதிரி குரங்கு ஒரு இடத்துல உட்கார்ந்து அலைஞ்சுக்கிட்டே இருக்கறத பார்க்கற போது, அலையற மனசை கண்ட்ரோல் பண்ற எண்ணம் வரும். அதாவது குரங்கை உத்துக் கவனிக்கற மாதிரி அலையற மனசை, குதி போடற மனசை, உத்துக் கவனிக்க ஆரம்பிச்சுருவோம்.

நம்ம மனசை நாமே உத்துப் பார்க்கறப்போ அது கொஞ்சம் கொஞ்சமா ஒரு நிதானத்துக்கு வந்துரும். இதுதான் என் எதிர்காலத் திட்டம். இது யோக சாதனையா, இல்லே, வெறும் விஷயமா, தெரியாது.

ஆனா இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு மனசுல ஒரு திட்டம், ஆசை இருக்கு. இந்த மாதிரி விஷயங்களுக்கு வாத்தியாரா ஒருத்தர்கிட்ட போகாது யாரையும் போய் இது என்ன, இது எப்படின்னு விசாரிக்காது, மனசுல பட்டதை மனசுல பட்ட விதமே நடத்திவிட்டுப் போறாது நல்லதுன்னு தோணுது. பாடம்னு கேட்கப்போனா பத்துவிதமான ஆட்கள் பத்து விதமான அபிப்பிராயத்தோட வராங்க.

இவரு தப்பு, அது சரி, இப்படி தப்பு, அப்படி சரிங்கறாங்க. மனசுக்குத் தெரியும், கவனமா உத்து கேட்டா சரியான வழி மனசு காட்டும். மனசுதான் சரியான குரு.

மனசு குருன்னு ஏத்துக்கிட்ட பிறகு அடடா அவரு அப்படி செய்யறாரே.. இது நல்ல மெத்தேடா தெரியுதேன்னு ஜகா வாங்கக் கூடாது. சரியோ, தவறோ; நல்லதோ, கெட்டதோ மனசு சொல்ற வழில போகணும்.
இந்த மனசு குருன்னு வெச்சுக்கறபோது ரொம்ப பிடிவாதமும் தேவையில்லை. கடவுளைப்பார்த்துட்டு தான் மறுவேலைன்னு ராப்பகலா வெறி புடிச்சா மாதிரி மாறிடக்கூடாது.

கடவுளை பார்க்க முடிஞ்சபோது பார்க்கலாம்ன்னு நிதானமா இருக்கணும். அதே சமயம் நிதானம் சோம்பலாயிடக்கூடாது. ஒரு மென்டல் பேலன்ஸ் வேணும். இதை ரஜனீஷ் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப புனால இருக்கற ஆஸ்ரமம் போவேன். நல்ல சிநேகிதர்கள் அங்கே இருக்காங்க. அங்க போய், ஆறு நாள், ஏழு நாள் எல்லாம் மறந்துட்டு இருப்பேன். ஒரு புது உணர்வோடு நிறைவோட திரும்பி வருவேன்.

பகவான் ரஜனீஷ் ஒரு முழுமையான குரு. திறந்த மனசோட அவரைப் படிச்சா பல விஷயங்களை சரியான கோணத்துல புரிஞ்சுக்க முடியும். ரஜனீஷ் புரிஞ்சுக்கறதுக்கு முன்னே நமக்கு தெரிஞ்ச விஷயங்களிலேர்ந்து விடுபடணும். நாம நினைச்சுட்டு இருக்கற கடவுள், மதம், பூசாரி, ஆச்சாரம், பூஜை இதுலேர்ந்து விடுபடணும். இப்படி விடுபடறது எல்லாருக்கும் கஷ்டம். அதனால்தான் ரஜனீஷ் பத்தி நான் அதிகம் யார்கிட்டயும் பேசறதில்லை.

எங்க குருன்னு அவரை யார் கிட்டயும் அறிமுகப்படுத்தறதில்லை.

ஆமா..நான் ஒண்ணு கேட்கறேன், தப்பா நினைக்காதீங்க, தியானம், ஹடயோகம் இப்படி ஏதேதோ பேசறீங்க. ஆனா இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்களே.. பாலகுமாரன், இது சரியா, சுத்திப் பாருங்க. ஒண்ணு ரெண்டு, மூணு ,நாலு பத்து பன்னிரெண்டு. அடேங்கப்பா... ஒன்னவர்ல பன்னிரெண்டு கிங்சைஸ் சிகரெட்டா. ஜாஸ்தி இல்லே. அதே சமயம் இருமறதில்லையே நீங்க, அது எப்படி.”

ரஜினியின் நீண்ட விளக்கத்தின் கடைசியாய் என் முதுகில் ஒரு கேள்விக் குத்து விழுந்தது. நான் சட்டென்று இருண்டேன். என் சிகரெட் பழக்கம் பலர் சுட்டிக் காட்டி இடித்துரைத்த விஷயம்தான். ஆனால் ஒன்று, பதிலுக்கு பதில் என்பது போல் தியானம் பற்றி பேசுகிற நீ என்ன யோக்கியதையில் சிகரெட் பழக்கம் தொடருகிறாய்.ஏன் மனக் கட்டுப்பாடு இல்லை. இது தீயது என்று தெரிந்தும் ஏன் விட முடியவில்லை என்று சொல்லாது சொல்லப்பட்டது.

முதன் முறையாய் என்னைச் சுற்றி நான் போட்ட சிகரெட் துண்டுகள் அசிங்கமாகத் தெரிந்து எனக்கு.ரஜினிகாந்த் என் சிகரெட் பழக்கம் கேட்டு விட்டு, சாதாரணமாய் படப்பிடிப்புக்கு எழுந்து போய் விட்டார். நான் தொடர்ந்து புகைப்பிடித்தபடி யோசித்தேன்.

இதைவிட முடியாதா, இந்த கொடிய பழக்கத்திலிருந்து என்னால் நகர முடியாதா. என் மனம் இதற்குப் பக்குவப்படவில்லையா. ஆமெனில் என் தியானத்திற்கு-அது தொடர்பான பேச்சுக்கு என்ன மதிப்பு. அன்று இரவும் சிகரெட் பிடித்தேன். யோசித்தேன். என் மனம் ஒரு அளவுக்கு பக்குவப்பட காரணமாய் இருந்த என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் நோக்கி மனசுள் பேசினேன்.

‘சிகரெட் பழக்கம் விட விரும்புகின்றேன். உதவி செய்ய வேண்டும். தயவு செய்து இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தும் வலிவு தர வேண்டும்.’ கெஞ்சினேன். ‘ஆமா நீங்க ஏன் இவ்ளோ சிகரெட் பிடிக்கறீங்க.’ ரஜினியின் கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

மனசு சிகரெட் எடுக்கும் போதெல்லாம் பிரார்த்தனையை குரு நோக்கி செய்தது. நவம்பர் மாதம் முப்பதாம் தேதி இரவு ஒரு பாக்கெட் சிகரெட்டோடு உட்கார்ந்து, தொடர்ந்து ஒன்பது சிகரெட்டுகள் பிடித்துவிட்டு, பாக்கெட்டை கசக்கிப் போட்டேன்.

இன்று வரை ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை. எரிச்சல் இல்லாது, பல்கடித்து வேதனைப்படுத்தும் கொடூரம் இல்லாது, சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு அகன்று விட்டது.

இனி எந்தக் காரணம் கொண்டும் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்பது எனக்குள் உறுதியாகி விட்டது.

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - நல்ல உணவுப் பழக்கம்

எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு குழந்தைகளும் எகிறி குதித்து பல ஹோட்டல்கள் பெயரைச் சொன்னார்கள். பல சிற்றுண்டிகள் பெயரைச் சொன்னார்கள். எங்கே சீக்கிரம் உணவு தயாராகுமோ அங்கே போகலாம் என்று ஒரு விரைவு உணவுக் கடைக்குப் போனோம். குழந்தைகள் கொடுத்த உணவுப்பட்டியல் கைக்கு வர தாமதாமாயிற்று.

ரசித்து சாப்பிட்டவரை சந்தோஷம் என்று காசு கொடுத்து விட்டு வந்தோம். சாப்பிட்ட அரை மணியில் சிறிது சிறிதாய் ஏப்பம் வந்தது. அடுத்த ஒரு மணியில் இரைப்பையிலிருந்து நீர் கிளம்பி நெஞ்சைத் தாக்கியது. இரண்டு மணி நேரம் பொறுத்து வயிற்றில் இடைவிடாது சங்கடம், வீட்டுக்கு வந்ததும் வயிற்றைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் கூட ஒரு வேதனையான அனுபவம்.

அன்று இரவு படிக்கக் கூட முடியாமல் ஒரு ஆயாசமும், மந்தமும் பற்றிக் கொண்டது, எனக்கு மட்டும் தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா? வீட்டில் உள்ளவர்களை விசாரித்தேன். யாரெல்லாம் உணவுக் கடையில் விதம் விதமாய் தின்றோமோ அவர் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். “நம்ம வீட்ல யாருக்குமே வயிறுபலம் கிடையாது”. என் அம்மா அடிக்கடி சொல்வாள். கொஞ்சம் பழக்கம் பிசகினாலும் பிய்த்துக் கொள்ளும் என்று அலுத்துக் கொள்வார்.

‘செரிமானம் பரம்பரை சமாச்சாரமா? இதற்கும் மரபு அணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா? அந்த விரைவு உணவுவிடுதியில் வேறு சில நண்பர்களை பார்த்தோமே? பெரிய பட்டளமாய் உயர டேபிளைச் சுற்றி நின்றபடி ஏகப்பட்ட விஷயங்களை ஆர்டர் செய்தார்கள், அங்கும் வயிற்றுப் பொருமல் உண்டா, யாரைச் சந்திக்தோம்..யோசித்து டெலிபோனில் எண்கள் சுழற்றினேன்.

“மத்தியானம் போனான், வரவேயில்லையே” நான் தேடியவனின் தாயார் கவலையோடு பேசினார்கள். மறுநாள் காலை வயிறு ஊதித் திணறிக் கொண்டிருந்தது. மகள், மகன் இருவருமே என்னை விடவும் மோசமான நிலையில் இருந்தார்கள். சுருண்டு படுத்தார்கள், உற்சாகமின்றி நடந்தார்கள். அன்று வழக்கத்தை விட அதிக தூரம் வேண்டுமென்றே வேகமாக நடந்தேன், எப்படியாவது வயிற்றிலுள்ள விஷயத்தை வெளியேற்றி விடவேண்டும் என்று விரும்பினேன். உண்ட இருபத்திநாலு மணி நேரம் கழித்து உள்ளே கண்ட இடங்களை ரணப்படுத்தி விட்டு அந்த உணவு வெளியேறியது.

படிக்கவோ, எழுதவோ முடியவில்லை என்பது மட்டுமில்லை. சுமுகமாகப் பேசவும் முடியவில்லை. வயதாகிவிட்டதால் ஜீரண சக்தி குறைந்து விட்டது என்று நான் நினைக்க, என் மகளும், மகனும் பட்ட அவஸ்தை ஞாபகம் வந்தது. நான் போனில் தேடிய நண்பரிடமிருந்து இரண்டு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. “வயிற்றுப் போக்கு புரட்டி எடுத்து விட்டது. அது தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன விஷயம்”, என்று கேட்க, அதே விஷயத்தை அவரிடம் சொன்னேன்.

சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை. மற்றவரோடு பேசிக் கொண்டிருக்கிறது.

உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு, இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.

உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.

இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.

அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.

ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. “ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. “எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.

நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். “பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.

அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது.

உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம். உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.

நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. “மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”


வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.