Wednesday, November 7, 2012

இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன ?

                  சமீபத்தில் மிகக் கோரமான பட்டாசு வெடி விபத்துகளின் படங்களை பெரிதாகப் போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த வெடி விபத்துக்குக் காரணம் பட்டாசு வெடிக்கிறவர்கள் தான் என்பது போல சொல்லியிருக்கிறார்கள். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. பட்டாசு வெடிப்பதும், தயாரிப்பதும் கொஞ்சம் ஆபத்தான வழிதான்.  வருடா வருடம் பட்டாசு வெடி விபத்து நடந்து கொண்டுதான்  இருக்கிறது.  பட்டாசு தயாரிப்பில் அதிகம் ஆபத்து என்றால் கூட தீக்குச்சி தயாரிப்பிலும் வெடி விபத்து நிகழ்கிறது. தீக்குச்சி அவசியமா என்று கேட்பதில்லை.

                      பட்டாசு அவசியமில்லை என்று இளைஞர்களோ, சிறுவர்களோ சொல்லமாட்டார்கள்.  பட்டாசு ஆர்வம் குறைந்தவர்கள் தான் சொல்வார்கள்.
 பட்டாசை குறைந்த வயதினர் தான் சந்தோஷமாகக் கொளுத்தி அதன் சத்தத்தை, வர்ணத்தை , சீறலை ஒரு பயம் கலந்த தவிப்போடு அனுபவிக்கிறார்கள்.  ஒருவித வன்முறை இந்த பட்டாசு வெடிப்பதில் இருக்கிறது.  சீறலும், வெடிசத்தமும் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன.
நடுங்க  வைக்கின்றன.  அந்த த்ரில் தேவையாக இருக்கிறது.  ஒரு ரசனையாக இருக்கிறது. பட்டாசு காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதற்கிடையே
புகுந்து புறப்படுகிறவர்கள் இளைஞர்களோ அல்லது இள வயது மனம் கொண்ட மனிதர்களோ தான்.

                      இந்த குறுகுறுப்பான பயம் கலந்த குதூகலிப்பு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த குறுகுறுப்பு கலந்த திகிலை நாம் அனுபவிக்கலாம்.  இது அடிப்படையாக மனிதர்கள் விரும்பி அனுபவிக்கிற ஒரு சுவை. அதனால் தான் பட்டாசு மிக முக்கியமானதாக, சந்தோஷமூட்டுவதாக இருக்கிறது.

                         விபத்து நிகழ்கிறதே. நீங்கள் வாங்குவதால் தானே இத்தனை உயிர்கள் சாகின்றன என்றெல்லாம் கேட்கலாம்.  விமான விபத்துகள் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கருகி அடையாளம் தெரியாமல் மரணமடைந்திருக்கிறார்கள். விமானம் வேண்டுமா என்று யாருமே கேட்பதில்லை. நீண்ட நெடிய கப்பல் பயணங்களில் லட்சகணக்கான பேர் இருக்கிறார்களா , தப்பித்தார்களா என்று அடையாளம் காண முடியாதபடி இறந்து போயிருக்கிறார்கள். கப்பல் பயணங்கள் எதுவும் நின்றுவிடவில்லை.

                       நாம் அடிக்கடி பயணப்படுகின்ற ரயிலில் இதுவரையில் நிறைய பேர்  இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் கூட ரயில் ஓட்டம் நின்று விடவில்லை.

                   இவை அத்தியாவசியமானவை. பட்டாசு அனாவசியமானது என்று வாதிடலாம்.  வாணவேடிக்கை என்பது தீபாவளிப் பண்டிகையோடு
மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் வெடிப்பதைக் காட்டிலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, தலைவர் பிறந்த நாள் விழா, நினைவு
நாள் , ஒலிம்பிக், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் , கால்பந்து என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மிக வேகமாக, மிக உற்சாகமாக பலநூறு மடங்கு
பலம் கொண்ட விதவிதமான வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு பண்டிகையோடு அந்த சந்தோஷம் நின்று
விடாமல் அந்த பண்டிகையின் சந்தோஷத்தை பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் எடுத்து வருகிறார்கள். வெடிச்சத்தம் இல்லாமல் போகும் பிணம்
தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

                  திருவிழாக்களில் முத்தாய்ப்பாக, தேர்தல் வெற்றியில் முத்தாய்ப்பாக இரவு பதினொறு மணிக்கு மேல் வாணவேடிக்கை என்று போஸ்டர் அடித்து பட்டாசு வெடிக்கிறார்கள்.

                     இப்படி எல்லா விஷயத்திலும் நீக்கமற பட்டாசு சத்தம் நிறைந்திருக்கையில் தீபாவளிப் பண்டிகையை மட்டும் குறை சொல்வது என்பது  தவறான மனப்பான்மை. இந்த விபத்துகளுக்கு பட்டாசு தயாரிப்பவர்களும், பட்டாசு தயாரிக்கும் போது கவனக்குறைவான தொழிலாளர்களும் தான் காரணம். சில நட்சத்திர ஓட்டல்களில் அறையில் லேசான புகை ஏற்பட்டாலும் அலார சத்தத்தோடு நீர் பீய்ச்சி அடிக்கின்ற கருவிகள் எல்லா அறைகளிலும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் பத்து பேர் ஒன்று கூடி சிகரெட் பிடிக்க திடீரென்று மேலே இருந்து தண்ணீர் பீய்ச்சப்பட்டது. புகையின் அடர்த்தி அதிகமானதால் அந்த அபாய எச்சரிக்கை ஒலிக்கத் துவங்கிவிட்டது. அப்படி ஏதேனும் ஒரு வசதி பட்டாசு தயாரிப்பு இடத்தில் இருக்க வேண்டுமென்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா?  இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? ஏற்பட்டால், அதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

                          இந்துமதப் பண்டிகையோடு சம்பந்தப்பட்டது என்பதாலேயே பட்டாசால் விபத்து ஏற்படுகிறது . அதை வெடிக்க வேண்டாம் என்று சொல்வது அத்தனை குணமுள்ள விஷயமாக எனக்குத் தெரியவில்லை.  யாருடைய சந்தோஷத்தை பறித்துப் போகிறோம் என்பதை யோசிக்கவில்லை. இந்தத் தயாரிப்பில் விபத்து ஏற்படுகிறது என்பதை மட்டும் பார்த்தால் , தீக்குச்சி கூட தயாரிக்கக்கூடாது; தடை செய்யப்பட வேண்டும். 

                         ஆனால், மறுபடியும் இந்த உயிரிழப்பைப் பற்றி கவலைப்படாமல் பட்டாசு தயாரிக்கின்ற நகரங்கள், கிராமங்கள் முழு மூச்சோடு செயல்படுகின்றனவே, என்ன காரணம் ? இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா ? மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் ? விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் ? இது ஆராய வேண்டிய விஷயம்.

                          இதையெல்லாம் யோசிக்காது, ஒரு இந்துமதப் பண்டிகையின் சந்தோஷத்தில் கை வைப்பது அத்தனை குணமுடைய விஷயமல்ல. மத்தாப்பு வெளிச்சத்தில் இளைஞனைப் பார்க்கின்ற யுவதியும், யுவதியைப் பார்க்கின்ற இளைஞனும், குழந்தைகளும், பெரியவர்களும் வெடிச்சத்தத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்ற மனிதர்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.


                         சில மத போதகர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்துமதத்தை குறை சொல்ல வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி
பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. என்ன விலை கூடினாலும் அற்புதமான வியாபாரமாகத் தான் பட்டாசு இருந்திருக்கிறது. ஊர் மைதானத்தில் இடம்  போட்டுத் தருகிறேன் .இங்கு தனியாக வியாபாரம் செய் என்ற உத்தரவையும் வியாபாரிகள் புலம்பலாக மறுத்திருக்கிறார்கள்.

                            'அய்யோ வியாபாரம் போச்சே' என்று தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வர்ண விளக்குகளின் ஒளியில் அலங்காரமாக அடுக்கப்பட்ட பட்டாசு வகைகள் தடுக்கப்பட முடியவில்லை.  அந்த பட்டாசின் மீது ஜனங்களுக்கு உள்ள ஆர்வத்தை
எதனாலும் குறைக்க முடியவில்லை. 

                            ஜனங்கள் பட்டாசு வெடிப்பதை குறை சொல்வதை விட, அவை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்தும் அதற்கு சீரான ஒரு தீர்வு காணாமல், தீபாவளிக்குப் பட்டாசு அவசியமா என்பது வெறும் அலட்டல் தான்.

                             இது என் அபிப்ராயம்.

Thursday, November 1, 2012


என்னைக் கலக்கிய மகாபாரதம்

    ஒரு எழுத்தாளன் தனக்குப் பிடித்த கதை என்று எழுத வேண்டுமானால், ஒன்று தன் கதையைச் சொல்வான். அல்லது தன் நெருங்கிய நண்பன் எழுதிய கதையைச் சொல்வான் என்கிற வழக்கு இங்கு உண்டு. நான் பேப்பர் கதையை விட்டுவிட்டு ஒரு செலூலாய்ட் கதையைச் சொல்ல விரும்புகிறேன். இன்னும் தியேட்டருக்கு வராத ஒரு திரைப்படத்தின் கதையை எனக்குப் பிடித்த கதையென்று சொல்கிறேன்.
 
     படத்தின் பெயர் ‘பகவத் கீதை’ கதை எழுதியவர் கிருஷ்ண பரமாத்மா. திரைக்கதை,வசனம் அமைத்தவர் ஜி.வி.ஐயர். தயாரிப்பாளர் ஆந்திரத்து வள்ளல் சுப்பிராமிரெட்டி. பத்திரிகையில் இதுபற்றி செய்தி பார்த்ததுமே, இது மத்திய அரசிடம் ‘தங்கத் தாமரை’ விருது பெற்றது என்று கேள்விப்பட்டதுமே கொஞ்சம் திகைத்துப் போனேன்.
 
     பகவத் கீதையை எப்படி படம் எடுக்க முடியும். ஒரு தத்துவப் புத்தகத்தை எப்படி ஒரு திரைப்படமாக்க முடியும் என்று யோசனை செய்தேன். ஆனால் கரூரில் பிறந்து பெங்களூரில் வாழும் ஜி.வி.ஐயர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவருடைய முந்தைய படங்களான ஹம்சகீதையும், பரமஹம்சரும் அவரைப் பற்றிய மதிப்பை எனக்கு பெரிதும் உயர்த்தியிருந்தன.
 
     பகவத் கீதை படம் பார்க்க உட்கார்ந்தபோது நெஞ்சின் உள்ளே கேள்விகளெல்லாம் அழிந்து படத்தோடு ஆழமாய் ஒன்றிப் போக முடிந்தது. பகவத் கீதை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் புரிந்தது. பகவத் கீதை என்பது மகாபாரதம் என்ற கதையில் வந்த இடைச்செருகல். அல்ல, தத்துவக் குவியல் அல்ல. பகவான் கிருஷ்ணன் சொன்ன தத்துவத்தின் விளக்கம் மகாபாரதம். ஒரு தத்துவத்தை ராஜா, ராணி கதையாய் விளக்க முற்பட்ட விஷயம் தான் மகாபாரத காவியம். கதையை விட தத்துவமே முக்கியம்.
 
     ஐ.வி.ஐயர், “குருஷேத்திரம் என்பது ஒரு ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே இருக்கிறது” என்றார். காமம், குரோதம், லோபம், மூர்க்கம், மதம், மாச்சரியம் என்று ஆறு குணங்களால் மனிதன் அவதிப்படுவதைச் சொல்கிறார். காமம் என்பது துரியோதனன், திரெளபதியை விரும்பியவன். குரோதம் என்பது கர்ணன், தெய்வத் தன்மை நிரம்பினாலும் பாண்டவர்கள் மீதுள்ள பொறாமையால் நாசமானவன். லோபம் சகுனி. மதம் துச்சாதனன் என்று அடுக்கிக் கொண்டு போகிறார்.
 
     அதுமட்டுமல்ல, கெளரவர்கள் பக்கமிருந்த பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா இவர்களையெல்லாம் ருசி, ரச வாசனை என்று பிரிக்கிறார். ‘புலன்களைத் தூண்டும் நல்லவைகள் போலத் தோன்றும் இவையும் கெட்டவைகள்’ என்கிறார்.
 
     ஐம்புலன்களைப் பஞ்சபாண்டவர்களாகவும் மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தியை திரெளபதியாகவும் வர்ணிக்கிறார். அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. பஞ்ச பூதங்களால் உணரப்படும் நல்லவை போல் தோன்றும் விஷயங்களை ஓதுக்கு, தீயதான காமக் குரோதங்களை ஓடுக்கி, உயிர்ச்சக்தியை ஒருவன் வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை என்கிறார். இதைச் செய்ய, மரணத்திற்குப் பின்னாலும் ஆத்மாவின் பயணம் நல்லபடி தொடரும்’என்கிறார்.
 
     இது ஐ.வி.ஐயரின் கோணம்.
 
     படம் போரிலிருந்து துவங்குகிறது. போர் நடக்கும் முன்பே போரின் கொடுமையை அர்ச்சுனன் நினைத்துப் பார்க்கிறான். கிருஷ்ணன் அர்ச்சுனன் கலக்கத்தை நீக்குவதற்காக இப்புவியில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார். “அர்ச்சுனா, நீ புல்லாய், புழுவாய், மீனாய், பறவையாய்ப் பிறந்து மனிதனானாய்” என்கிறார்.
 
     “உன் பயணம் மிகப் பெரியது. நீ அர்ச்சுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி, இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும், நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக் குரோதம் நீக்கி மூலாதாரச் சக்தியைத் தூண்டி விட்டு, அனாதஹம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, ரச,வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அச்சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம்” என்கிறார். இதுவே ஆத்ம பயணத்தின் வழி என்கிறார்.
 
     துரியோதனன, கர்ணனாக காமக் குரோதங்கள் சண்டையிடுவதும், பீஷ்மர், துரியோதனனாக இந்திரியங்கள் பின் தொடர்வதும், அர்ச்சுனன் சாதாரண மனிதனாகவும், இயற்கை அழகு என்பது மாயை என்கிற பெண்ணாகவும், ஆத்மாவின் பயணம் வெள்ளைவெளேரென்கிற பனிபடர்ந்த மலையாகவும் மிக நேர்த்தியாய் காட்டப்பட்டிருக்கிறது. பரவசமாகிப் போனேன்.
 
     திரெளபதி ப்ருத்வீ. அதாவது பூமியும், பூமியைச் சுற்றியுள்ள இடமும், துச்சாதனன் என்பவன் மனிதனின் மதம். அதாவது தான் என்னும் கர்வம். தன்னால் முடியும் என்கிற திமிர். துச்சாதனன் சபை நடுவே திரெளபதியைத் துகில் உரிக்கிறான். அதாவது விஞ்ஞானி என்கிற மனிதன் இந்த ப்ருத்வீயை ஆராய முற்படுகிறான். பிருத்வீயின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முற்படுகிறான். ஆனால் ப்ருத்வீயோ படல்படலாய் பல ஆடைகள் பூண்டவள். மனிதன் காலகாலமாய் துகில் உரியச் செய்தாலும் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது. களைத்து விழுவதைத் தவிர வேறு வழியும் இல்லை.
 
     திரெளபதி அதாவது புருத்வீ இன்னமும் ரகசியமானவள் என்கிற நாடகமும் இந்தத் திரைப்படத்தில் வருகிறது. நான் திகைத்துப் போனேன். தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் படம் தமிழிலும் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் மிக நேர்த்தியான இசை, மது அம்பாட்டின் கவிதையான கேமரா, மணிமணியாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் கூட்டம் படத்தில் நம்மை இழைய வைக்கின்றன. கடினமான தத்துவம் எளிதாகப் புரிகிறது. மரணத்திற்குப் பிறகும் விஷய வாசனைகள் தொடரும் என்பது பயமுறுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்வதின் அர்த்தம் புரிகிறது.
 
     ஜி.வி.ஐயருக்கு இந்திய திரைப்பட உலகம் கடன்பட்டிருக்கிறது. சினிமா பொழுதுபோக்கல்ல. அது தத்துவ வகுப்பு என்பதை ஜி.வி.ஐயர் நிருபித்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு வாழ்க்கையில் இடமே இல்லை. ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார். ஜி.வி.ஐயர் இன்றைய திரைப்பட இயக்குனர்களில் பிரம்மரிஷி வசிஷ்டமுனி. அவரின் ஞானத்திற்கு எழுத்தாளனாகிய நான், கை கூப்பி வணங்குகிறேன்.


Tuesday, October 30, 2012


துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடுகிறார்கள் ?

     துளசி வெறும் தாவரமல்ல. அது மிகச் சிறந்த மூலிகை. மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய கபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. அறவே நீக்கவல்லது. கபம் மனிதருக்கு மிக மோசமான பிரச்சனை.வெகு சீக்கிரம் அது மரணம் வரை கொண்டு போய் விட்டுவிடும். முன்பெல்லாம் குழந்தைகள் தும்மினால் தீர்க்காயுசு என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு முறை தும்மினாலே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது என்று தான் அர்த்தம்.
     நுரையீரலில் நீர் சேர்ந்துவிட்டது என்பதற்கு அறிகுறி. நுரையீரலில் நீர் சேர்ந்தால் அது கபமாக மாறும்.நுரையீரல் பைகளை கபம் அடைத்துக் கொண்டால் மூச்சு விடுவது பிரச்சனை ஆகும். மூச்சு இழுத்து விடுவதில் பிரச்சனை என்றால் இதயத்தின் செயல்பாடுகள் வேகமாக குறையும். இதயத்தின் செயல்பாடு குறைந்தால் கிட்னியில் தாக்கம் ஏற்படும். கிட்னியில் தாக்கம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் மோசமாகும். பிறகு உடம்பு முழுக்க வலி மிகுந்து பிறகு ஜீரம் வரும்.
     கபம் என்பது ஓரிரு நாளில் உச்சக் கட்டத்தை எட்டும். சட்டென்று மூச்சுத் திணறி மரணம் ஏற்படும். போன வாரம் ஆடிக் கொண்டிருந்த பையன் இந்த வாரம் இறந்து போனான் என்பது கபத்தால் ஏற்படக்கூடும்.
     எனவே கபம் சேராமல் இருக்க, சேர்ந்த கபம் செயலிழக்க அவர்கள் துளசியை மிக முக்கியமான ஒரு மருந்தாக கருதி வந்தார்கள். எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு வீடு துளசியை வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள். தினமும் உண்ணுதல் நலம் என்றார்கள்.
     நீங்கள் நினைப்பது போல வெறும் தாவரம் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது. அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்வதற்காக அதற்குப் பின்னே கதைகள் ஏற்படுத்தினார்கள் . துளசியை பெண்ணாக உருவகித்தார்கள். அது கடவுளுக்கு உகந்தது என்று காரணம் சொன்னார்கள். அந்தக் கதைகளெல்லாம் துளசியை வீட்டுக்கு வீடு வளர்ப்பதற்காக . துளசியினுடைய வளர்ச்சி கபத்தை நீக்குகின்ற கைமருந்து என்பதற்காக. இது போல் பல்வேறு தாவரங்கள் இருக்கின்றன..
     வேப்பங்கொழுந்து ஒரு அற்புதமான  விஷயம். ஆனால் எல்லாவற்றையும் விட துளசியே முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.