'இறந்து போதல் என்றால் என்ன?
அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.
' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.
வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.
' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.
அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.
மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.
' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.
திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.
தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.
' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.
' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.
'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.
ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.
' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'
அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.
வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.
வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.
............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்
Monday, September 27, 2010
பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி
Posted by கிருஷ்ண துளசி at 9:36 PM 16 comments
Labels: ஆன்மீகம்
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.
உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.
அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.
வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.
அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.
காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.
குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.
தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.
இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.
Posted by கிருஷ்ண துளசி at 9:01 PM 0 comments
Labels: கட்டுரை
Thursday, September 23, 2010
பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்
அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.
இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.
எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.
அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.
பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.
முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.
அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.
எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.
பிறகு...?
மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.
அப்படியானால் சாரப்பள்ளம்.
சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?
பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).
எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.
கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.
உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரியகல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.
நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.
கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்த்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.
கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.
முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.
மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.
கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்ன வித கோவில்.
விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.
இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார். இது போதுமா கடவுளைச் சொல்ல,
ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.
விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.
Posted by கிருஷ்ண துளசி at 4:36 AM 24 comments
Labels: கட்டுரை
Tuesday, September 7, 2010
சூரியனோடு சில நாட்கள் -7
சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.
நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.
சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.
இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷ படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.
சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.
‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.
இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.
எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.
"உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.
மூன்றாவது மாணிக்பாட்ஷவிற்கு வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.
ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.
இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.
இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “என்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் , கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷ நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.
Posted by கிருஷ்ண துளசி at 7:12 PM 6 comments
Labels: கட்டுரை
சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்
கண்ணும் காதுமில்லாதது காதல் என்று ஒன்றுமில்லாத காதலுக்காக உயிரை விடுகிறார்களே?
நீங்கள் காதலித்ததில்லை. காதல் ஒன்றுமில்லாதது என்று எவரேனும் சொன்னால் அவரை விட முட்டாள் எவரும் இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம். தன்னை மட்டும் யோசித்துக் கொண்டிருந்த மனிதரை ஒருமுகப்படுத்தி, தன்னைப் போல் இன்னொருவரையும் யோசிக்க வைக்கின்ற ஒரு முயற்சி தான் காதல். இதற்கு காரணங்கள் பல்வேறாக இருந்தாலும், இந்த முயற்சியில் பல பேர் கனிந்து விடுகிறார்கள். நல்ல மலர்ச்சியை அடைந்து விடுகிறார்கள். காதல் உண்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் தந்திரமாக இருப்பது போல காதலில் தந்திரமாக இருப்பவன் தான் உயிரை விடுகிறான். ஏனெனில் ஏமாற்ற ஆசைப்படுகிறவன் தான் ஏமாறுகிறான்.
ஐயா, உங்களுடைய பலம் என்று எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்.
அவமானத்திற்கு அஞ்சாதது. எதையும் பரீட்சித்து பார்ப்பது. வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலையில்லை. எல்லாமுமே ஒரு அனுபவம் என்று முழு மனதாக இறங்கி விடுவது. வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல அனுபவங்களும், மிக மோசமான அனுபவங்களும் தான் என்னை நன்றாக பக்குவப்படுத்தியிருக்கின்றன. இல்லையெனில் தொட்டாச்சிணுங்கியாக இருந்திருப்பேன். என்னுடைய கதைகள் பலதும் உண்மைச்செறிவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என் அனுபவங்கள். நான் வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கயிறு திரிப்பவன் அல்ல.
இவ்வளவு ஆன்மீகம் எழுதுகிறீர்களே, நீங்கள் துறவியாகி விடுவீர்களா?
அது நேருமாயின் நேரட்டும். துறவியாக வேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. ஆகக்கூடாது என்கிற பிடிவாதமும் இல்லை. என் அபிப்ராயத்தில் அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷம்.
ஒரு மூலையில் உட்கார்ந்து வெறுமே மந்திர ஜபம் செய்தால் சிறந்துவிட முடியுமா. இது மூடநம்பிக்கையாக உங்களுக்குப் படவில்லையா. இதை எப்படி ஆதரித்து கதை எழுதுகிறீர்கள்.
பறக்க முடியுமா என்று மனிதன் யோசித்து, யோசித்து இடையறாது பல நூற்றாண்டுகள் முயற்சி செய்து இப்பொழுது வானம் முழுவதும் அவன் ஆட்சி செய்கிறான். பூமிதாண்டியும் பல கிரகங்களில் போய் கால் வைக்கிறான். முடியுமா என்று கேட்கிறபோதே முடியும் என்கிற நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் அவசியம். மந்திரஜபம் என்ன செய்யும் என்று மந்திரஜபம் செய்துவிட்டு பேசவேண்டும். வெறுமே எல்லாம் தெரிந்தது போல அலட்டக் கூடாது.
காமத்தை ஜெயிப்பது எப்படி.
ஏன் ஜெயிக்க வேண்டும். தட்டிக் கொடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எங்கும் தவறாகப் போய்விடாதே என்று பிரியமாய் அதை உன்னித்து கவனித்தபடி இருக்க வேண்டும். காமத்தை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. உண்ணுதல்போலும், உறங்குதல்போலும் அது சாதாரணமானது.
Posted by கிருஷ்ண துளசி at 6:32 PM 4 comments
Labels: கேள்வி – பதில்
Tuesday, May 4, 2010
சூரியனோடு சில நாட்கள் - 6 - பாலகுமாரன் பேசுகிறார்
நல்லவர்கள் மூலம் நல்ல விஷயங்கள், நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் நிச்சயம் நடந்தே தீரும். பலபேர் சொல்லியும் நிறுத்த முடியாத என் புகை பிடிக்கும் பழக்கம் ரஜினிகாந்த் கவலைப்பட்ட மூன்று நாளில் நின்று போனதை நீங்கள் என்னவிதமாய் எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. ரஜினிகாந்தின் நல்ல மனம்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட பதினெட்டு வருடப் பழக்கம் அவரோடு எனக்கு உண்டு. எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் அவர் சிகரெட் நீட்ட, வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாய் என் சிகரெட்டுக்குத் தாவுவது உடனே அங்கு நடக்கும். அப்படி சந்தித்தபோது கூட ஒருமுறைகூட ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி கேட்டதேயில்லை. எனக்குத் தெரிந்த சில திரையுலகப் பிரமுகர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தால் சீக்கிரத்தில் ஓயமாட்டார்கள். பிறர் அந்தரங்கம் அறிவதில் ஆவல் உள்ளவர்களாய், அவர்கள் வாயைக் கிண்டி வம்புக்கு இழுத்து, அவர் பலவீனங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர் பலவீனங்களை நீக்குவது எப்படி என்று அவருக்கே அறிவுரை சொல்வார்கள்.
“குடிங்க, வேணாம்னு சொல்லலை, ஆனா ஜாக்கிரதை” என்று மிகக் கபடமாய் பேசுவார்கள். அதே சமயம் வெளியே போய் “அந்தாளா, பெரிய குடிகாரன்”. என்று வதந்தி பரப்புவார்கள். என்னிடமிருந்து ஓரே கெட்ட பழக்கமான சிகரெட் பற்றி சில பிரமுகர்கள் அதிகம் பேசி கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிகரெட்டை விட கொடுமையான பழக்கங்கள் அவர்களுக்கு இருப்பதை நான் அறிவேன். நான் அறிய ரஜினிகாந்த் அறிவுரை சொல்வதேயில்லை. அதே சமயம் பிறருக்கு நல்ல வாழ்க்கை அமைவதிலும் அக்கறை இருக்கிறது.
டைரக்டர் ஷங்கருக்கு திருமணம் என்று நான் சொன்னதும் அப்படியா என்று மிகவும் சந்தோஷப்பட்டார். “யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். சினிமாவிலிருக்கும் பெண்ணா”. “இல்லை மணமகள் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்’.
“நல்லது.”-சட்டென்று கைகூப்பினார்.
“ஏன், சினிமாவிலிருக்கும் பெண்களைத் திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு வேறேதும் அபிப்பிராயம் இருக்கிறதா”.
“தவறாக எந்த அபிப்பிராயமும் இல்லை. புருஷன் மனைவிக்கு நடுவே மூன்றாவது ஆள் நுழையக்கூடாது. சினிமாவில் நடிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் மூன்றாவது மனிதர் நுழைய வாய்ப்பிருக்கிறது. அவரைப் பற்றி பொய் சொல்லவோ, புறங்கூறவோ சில சமயம் ஆட்கள் முன் வரலாம். சினிமாவுக்கு அப்பால் உள்ள பெண்கள் எனில் இவை இருக்காது. வாய்ப்பு மிக மிக அரிது. வாழ்க்கையில் துவக்கம் பிரச்சனையே இல்லாது இருக்க வேண்டும் என்ற கவலையில் சொன்னேன்”.
இதுதான் ரஜினிகாந்த்.
கனிந்த அக்கறை. கண்ணியமான விசாரணை. எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக் கனிவான அக்கறை எப்போது ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சனையை அணுகவும் தெரிந்து விடுகிறது.
‘பாட்ஷா’ படப்பிடிப்பு முடியும் தருவாயில், ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு படக்கம்பெனி காசு தரவில்லை என்று தெரிந்தது. அன்று மாலைக்குள் தருவதாகப் பேச்சு. என்ன காரணமோ வரவில்லை. ஏன் பணம் வரவில்லை என்றதற்கு, தயாரிப்பு நிர்வாகிகளும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த நடிகை மேக்கப் ரூமிலமர்ந்து கொண்டு செட்டுக்கு வர மறுத்துவிட்டார். செட்டில் முழு உடைகளுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட நடனப் பெண்களுடன் புகைக்கும், வெப்பத்துக்கும் நடுவே ரஜினிகாந்த் நடன அசைவுகளைப் பழகிக் கொண்டிருந்தார். நடிகை தளத்திற்கு வரமறுக்கும் செய்தி சொல்லப்பட்டது.
இனி நடிகை வந்தால்தான் அசைவுகள் பழக முடியும் என்கிற நிலை. கிட்டதட்ட ஒரு மணிநேரம் ரஜினிகாந்த் பொறுமையாக இருந்தார். தயாரிப்பு நிர்வாகிகள் தாமதத்துக்கான காரணங்கள் கூறி, படப்பிடிப்பு முடிவதற்குள் அன்று இரவுக்குள் பணம் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடிகை நம்பவில்லை. நம்ப முடியாதபடி பயம். வேறு எவரோ செய்த சில்மிஷம். வேறு எந்த நடிகராக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று கிளம்பிப் போய் விடுவார்கள். எக்கேடாவது கெட்டுப் போங்கள் என்று நகர்ந்து விடுவார்கள் அல்லது விஷயத்தைப் பெரிதாக்குவார்கள்.
ரஜினிகாந்த் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவோடு பேசினார். அன்றைய ஷுட்டிங் தடைபடுவதால் உண்டான நஷ்டத்தையும், படம் வெளிவருவது தாமதமாவதால் உண்டாகும் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டார். டைரக்டரை அழைத்துக் கொண்டு போய் அந்த நடிகையிடம் நேரே பேசினார். பத்தாவது நிமிடத்தில் நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட, மிக வேகமாக படப்பிடிப்பு வேலை நடந்தது. வந்து ஆடத்துவங்கியதும் அரை மணி நேரத்தில் நடிகை கேட்ட காசும் வந்து விட்டது.
‘வேலை நேரத்தில் காசைக் கொடுத்து கவனத்தைக் கலைப்பானேன். வேலை முடிந்து போகும்போது தரலாம் என்றிருந்தோம். அதற்குள், நடிகை அவசரப்பட்டுவிட்டார்’ என்று தயாரிப்பு தரப்பில் வருத்தப்பட்டார்கள். இந்த சமாதனங்களை ரஜினிகாந்த் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ‘வேலை நிற்கவில்லை. நடக்கிறது. அதுதான் முக்கியம்’ என்று பரபரப்பாக இயங்கினார்.
ஷூட்டிங் முடிந்து டப்பிங் ஆரம்பமாயிற்று, ரஜினிகாந்த் டப்பிங் பேசும்போது தியேட்டருக்கு போயிருந்தேன். நான் சிகரெட் விட்டு கிட்டதட்ட பத்து நாளாகியிருந்தது. என்னைப் பார்த்து திரும்பியவர் வழக்கம் போல சிகரெட் பெட்டி திறந்து சிகரெட் நீட்டினார்.
“இல்லை வேண்டாம்”.
“ஏன் பிராண்ட் மாத்தினா இருமல் வருதா”.
“அதில்லை காரணம். நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்”.
“என்ன..”
“பத்து நாளாயிற்று”.
“நிஜமாகவா”.
“ஒரு சிகரெட் கூடப் பிடிக்கவேயில்லை”.
“பதட்டமாக இல்லையா’.
“முதல் நாள் இருந்தது , இரண்டாம் நாள் இருந்தது, மூன்றாம் நாள் இருந்தது. இப்போது சிகரெட் பிடிக்கும் எண்ணமே இல்லை”.
“பொறாமையா இருக்கு பாலா சார். என்னால் இதை விட முடியலை ஏதாவது பிரச்சனை வந்து சிகரெட்டைத் தூக்கிப் போடுவாங்க. ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி சிகரெட் நிறுத்த முடிஞ்சது”.
“ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்கன்னு நீங்க கேட்டீங்க இல்லையா..ஷுட்டீங் நடக்கறப்ப அது ரொம்ப வருத்தமா இருந்தது எனக்கு, நீங்க இவ்விதமெல்லாம் கேட்கக்கூடியவர் இல்லை. நீங்களே பொறுக்க முடியாது கேட்கும் அளவுக்கு நான் சிகரெட் பிடித்திருக்கிறேன்.”
“அன்னைக்கு கொஞ்சம் டென்ஷனான சீன். நானும் டைரக்டரும் மாத்தி மாத்தி உங்களை தொந்தரவு பண்ணிட்டிருந்தோம். அதனால உங்களுக்கு சிகரெட் ஜாஸ்தியாயிடுச்சு .நிகோடின் ஃபில்டர் இல்லாம இவ்வளவு சிகரெட் பீடிக்கறீங்களே.. இருமல் வந்துரப் போவுதேன்னு பயந்து போய் கேட்டேன். நான் கேட்டேன், நீங்க வுட்டுடீங்க. நீங்க ஏதாவது செய்து நான் சிகரெட் நிறுத்த முயற்சி பண்ணுங்களேன்”.
நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், எங்கள் தோழர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளும், நிரந்தரமான உடல் வலிவும், நிம்மதியான எண்ண ஓட்டங்களும், நிறைவான புகழும் கொண்டு வாழ்வதற்காக அவரிடம் உள்ள சிகரெட் பழக்கத்தை அவர் விட்டு விடுவதற்காக என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.
நல்லவர்கள் நிறைவோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வது நல்லது.
Posted by கிருஷ்ண துளசி at 5:22 PM 9 comments
Labels: அனுபவம்
Saturday, May 1, 2010
குருவின் தனிச்சிறப்பு
இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. இந்துமத தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை. பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல. ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது. ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.
அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே. சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும். குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.
குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.
“கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு. நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு. குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும். அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.
அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும். எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும். இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.
எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம். அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்.
குரு எப்படி பேசுவார்.
“அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே”
“அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.
“இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.
எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள். நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது. நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”
ஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.
தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை. நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல்.
“உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.
குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.
- திரு பாலகுமாரன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளி வந்த 'குரு' என்ற புத்தகத்திலிருந்து....
Posted by கிருஷ்ண துளசி at 4:03 AM 9 comments
Labels: ஆன்மீகம்
Friday, April 30, 2010
வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.
‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.
இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.
தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.
முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும் மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை. மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பது பற்றிய அறிவு பரவலாக இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள் சீமான்கள் என்று இருபது வருடம் முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில் இருந்தது.
இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய் உடுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிகிறது.மிக வேகமாய் வணக்கத்துடன் முகமன் சொல்ல பலபேர் கற்றிருக்கிறார்கள்.
என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.
ஆனால்,காலம் நகர நகர...வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். ஒன்றும் அறியாத பெண்களை, உளறலான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.
எனவே,அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழிலலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.
‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில் சொல்ல முடியும்.
எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல்.
‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில் அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப் பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
“இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம் பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக் கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான். முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான்.
சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘ இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே விவரித்து கேவலப்படுத்தும்.
இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.
“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.
“இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.
“எப்படி தெரிந்தது,உனக்கு”
“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”
அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். ‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகிவிடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.
மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம் பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும், மகளும் மாறி மாறி சொல்ல... வியந்து பார்ப்பாள்.
இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.
ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டிதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.
“இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.
“உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”
“இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.
“விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான்.நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம்.அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”
இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும்.
“முன்னமே சொல்லி இருக்கலாமே”
“விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுப்பிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல... அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.
விவசாயியாக இருந்தால், விவசாயம் பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. வேறு எதுபற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதா? பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகியவற்றை விவசாயி செய்தால் கேலிக்குரிய விஷயமா.
சில பெண்களை தினமும் நாலு கிலோமீட்டர் நடக்கச்சொன்னால், ‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே பத்து கிலோமீட்டர் நடக்கிறோம்’ என்று சிரிப்போடு சொல்வார்கள்.
அது உதவாதப் பேச்சு, வியர்க்க விறுவிறுக்க இரண்டு கிலோமீட்டர் போய், இரண்டு கிலோமீட்டர் திரும்பி வருவது உடம்புக்கு மிகப்பெரிய ஆரோக்கியம். என்னதான் மாடு கட்டி இழுத்தாலும், உட்கார்ந்து கையால் இட்லிக்கு மாவரைத்தாலும், உடலின் எல்லா பகுதிகளும் சமமாய் வேலை கொடுக்கும் யோகாசனம் மிக அவசியம்.
மூச்சுப் பயிற்சி மூளையை குளுமையாக்கும், கண்களைக் கூர்மையாக்கும். உடம்பில் படப்படப்பை குறைத்து, நிதானத்தைக் கொண்டு வரும். தியானமும், யோகாசனமும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உரிதானவை என்று நினைப்பது பேதமை. எல்லா கிராமத்து பெண்களும் யோகாசனம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.
வெட்கத்தின் காரணமாகவும், நமக்குத் தேவையில்லை என்கிற அறியாமை காரணமாகவும் நல்லதொரு விஷயத்தை கிராமத்து பெண்கள் புறக்கணிக்கிறார்கள். உடல் என்பதில் கூர்மை உள்ளவர்கள், முனைப்பு உள்ளவர்கள் வெகுநிச்சயம் யோகாசனம் கற்றுக்கொள்வார்.
செய்திப் பத்திரிகைப் படிப்பது என்பது ஒரு நல்ல வேலை. தொலைக்காட்சிப் பெட்டியைவிட, தினசரிகளிலேயே செய்திகள் தெளிவாக வருகின்றன. தலையங்கங்கள் சார்பாக இருந்தாலும், நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றன, அதையும் தாண்டி பொதுநலக் கட்டுரைகள் வருகின்றன, படிப்பது என்ற பழக்கம், விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள உதவும்.
மாணவர்கள் செய்திப் பத்திரிகைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாத்திகத்தின் ஆதரவாகவும்,ஆத்திகத்தின் ஆதரவாகவும் இரண்டு வகையான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தந்தை பெரியார் எப்படி மதவாதத்தை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் என்பதையே எதிர்க்கிறாரா. அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறாரா.
கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறாரா. அல்லது கடவுள் நம்பிக்கையால் ஏற்படுகின்ற ஆசார அனுஷ்டானங்களை எதிர்க்கிறாரா. எதனால் அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது. அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆத்திகனாவதற்கோ, நாத்திகனாவதற்கோ இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும்.
பொது அறிவு அல்லது கேள்வி அறிவு உலகம் பற்றிய ஞானம் இல்லாதபோது, வெகுநிச்சயம் அம்மாதிரியான ஆட்களை வன்முறைப் பக்கம் திருப்பிவிட முடியும்.அப்படி சில தேசங்களில் மதரீதியாகவும், கொள்கைரீதியாகவும் இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் தழுவிய வன்முறையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன், பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.
“பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்துக் கொண்டது.
அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான்.
“எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளெ எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான்.
“ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றி சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள்.தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.
கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான். ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.
“வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார்.
வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்... மனைவிக்கும் விவரித்து சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.
“வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனம்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்-வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.
“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
ஏழு வயதில் மனப்பாடம் செய்த வரிகள்.இன்று அறுபத்தியொரு வயதில் அதன் பொருள் விளங்க, அந்த வாக்கியத்தின் பிரம்மாண்டம் புரிய-நான் திகைத்துப்போய் நிற்கிறேன்.
ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன். எந்த அறிதலும் வீண்போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு.
வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.
Posted by கிருஷ்ண துளசி at 7:32 PM 3 comments
Labels: கட்டுரை
Thursday, April 29, 2010
பாலகுமாரன் பேசுகிறார் - சில கேள்விகள் - சில பதில்கள்
ஐயா, வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையை கேட்க வில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன் எனக்கு விளக்குவீர்களா.
பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன், சிறிய ஆனால் கூரிய கண்கள், தொலைதூரம் பார்க்கும் திறன், மிகப் பெரிய தலை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன். அதுமட்டுமில்லாது வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்த தும்பிக்கை. நீண்ட மூச்சை உள்ளிழுத்து மிக நீளமாக வெளியே விடுவது என்கிற விஷயம் யானைக்கு மட்டுமே உண்டு. சிறிய அளவில் மூச்சுகள் இழுத்து வெளியிடுவதில் ஆயுசு குறைவும், நோயும் ஏற்படும். ஆனால் துதிக்கை நீளம் மூச்சை இழுத்து நுரையீரலுக்குப் போக வேண்டியிருப்பதால், யானை இயல்பாகவே நீளமாக மூச்சை இழுத்தும், நிதானமாக மூச்சை விடுவதும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே மற்ற மிருகங்களை விட இது அதிக காலம் நோயின்றியும் வாழ்கிறது.
மறுபடியும் சொல்கிறேன், நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம், அதனால் ஏற்படும் கூர்மையான புத்தி, தொலை தூரப்பார்வை, அந்த அமைதியால் விளையும் கேட்கும் திறன். இவையே கணபதி. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரங்கள். இந்தத் தூண்கள் மீதே கெளரவம், புகழ், பணம் போன்றவை விதானங்களாக கட்டப் பெறுகின்றன என்பதை உணர்த்தவே வினாயகர் உருவம். உங்களுக்கு இப்பொழுது வினாயகரைப் புரிகிறதா.
இந்து மதத்தில் ஒரு முக்கியமான விஷயம், உங்களை கட்டளையிட்டு விஷயம் செய்யச் சொல்வார்கள். வினாயகரை வணங்கு. யானைத் தலையுடைய பொம்மையை வணங்கு என்று சொல்வார்கள். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏன் யானைத்தலை என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏன் உருவ வழிபாடு என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடவுளை அடைய மிகச் சிறந்த வழி எது என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தலைப்படவேண்டும். உங்களுக்குள் நீங்களாகவே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையை வளர்ப்பதே இந்து மதம்.
ஐயா, உருவவழிபாடு தவறு என்று அடித்துச் சொல்கிறார்களே? இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
உங்களை நீங்கள் உருவமாக கொண்டுள்ள வரையில் உருவமற்றதை உங்களால் வழிபட முடியாது. உங்களை நீங்கள் உருவமாக கொள்ளாதிருப்பது என்பது எளிதில் நடக்கும் விஷயமல்ல, நீங்கள் உங்களை உருவமாக கொண்டால், உங்களுக்கு வணங்கவும் ஒரு உருவம் வேண்டும். அது கை,கால் உள்ளதாக இருக்கும் அல்லது வேறு விதமாகவும் இருக்கும். அடையாளமின்றி வழிபாடு சிறக்காது.
தன்னை உணர்ந்தவரே , தன்னை மறந்தவரே, கடவுள் என்கிற உருவத்தையும், வழிபாட்டையும் மறந்து விட முடியும்.
ஐயா, நாத்திகவாதம் பேசுபவர்களை உங்களுக்கு அறவே பிடிக்காதா?
அடடே.. யார் சொன்னது. நாத்திகம் பேசுகிற உத்தமர்களெல்லாம் இருக்கிறார்களய்யா. கடவுள் என்பது எனக்கு சரியாக நிரூபிக்கப்படவில்லை, வெறுமே வெற்று நம்பிக்கையை வைத்துக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்ளுதல் என்பது என்னால் இயலாது. எனினும் இப்பூமியில் வாழ கடவுளின் அவசியம் எனக்குத் தேவையில்லை. அதுவொரு சுகமான கற்பனையாக இருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று மிக அமைதியாக கடவுளை மறுத்துவிட்டு தன்னுடைய தினசரி காரியங்களில் முழு கவனம் செலுத்துகிற நல்லவர்களை நான் அறிவேன்.
நாத்திகர்களை விட கடவுளை தெரியும் என்று அலட்டுகிற ஆத்திகர்கள் தான் அபாயமானவர்கள். கேவலமானவர்கள். எதுவும் தெரியாமலேயே எந்த பயிற்சியும் இல்லாமலேயே உள்ளுக்குள் ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் வெறுமே தன்னை துளசிமாலைகளாலும், ருத்ராட்சங்களாலும் அலங்கரித்துக் கொண்டு தனக்கு எல்லாமும் தெரிந்துவிட்டதாய் சிலரை ஏமாற்றி, பலரை ஏமாற்ற, பல இளைஞர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சத்தியத்தை அறிய மிக மிக சத்தியமாக இருக்க வேண்டும். தனக்குத்தானே உண்மையாக இருப்பது என்பது ஒரு பெரிய தபஸ். அது எளிதல்ல.
பல ஆத்திகவாதிகள் இங்கு பொய்யர்கள், திருடர்கள். உண்மையை தேடிக் கொண்டிருப்பவன், சத்தியத்தோடு வாழ்பவன், தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பான். யாரிடமும் போய் என்னைப் புரிகிறதா என்றோ அல்லது என்னைப் புரிந்துகொள் என்றோ கேட்கமாட்டான். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டான். அருகே வா, உன்னை குணப்படுத்துகிறேன். என்னிடம் வா. உன் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் என்று கடவுளை அறிந்தவன் சொல்வதில்லை. சம்பந்தப்பட்டவரின் பிரச்சனைகளை கேட்ட மாத்திரத்தில் பரிதவித்து எழுந்து, அவருக்காக உருகி நிற்க, சம்பந்தப்பட்டவரின் பிரச்சனை தானாக காணாமல் போகும். என்னால் காணாமல் போயிற்று என்று சொல்லவும் அந்த சத்தியசந்தனுக்கு மனம் வராது. மறுபடியும் வியப்பு தான் ஏற்படும். என்ன உன் கருணை என்று கடவுள் மீது மிகப்பெரிய கனிவும் ஈடுபாடும் அதிகரிக்கும்.
ஆத்திகம் என்பது அன்பே வடிவாய் இருப்பது.
ஐயா, பல பத்திரிகைகளில் வட மொழியில் பிரார்த்தனைகள் எழுதி இதைச் சொன்னால் சகல துன்பங்களும் விலகிப் போகும்,என்று சொல்கிறார்கள், அல்லது இந்த மாதம், இந்த மந்திரம் சொல்லுங்கள் என்று எழுதுகிறார்கள். வடமொழி எனக்கு அறவே தெரியாது. அதை மனனம் செய்து சொல்வதும் கூட நான்குவரியாக இருந்தாலும் சிரமமாக இருக்கிறது.வடமொழிக்கு இணையாக தமிழில் பாடல்கள் இல்லையா?
ஏன் இல்லை. நிறைய இருக்கின்றன. அபிராமி அந்தாதியும், வேயுறு தோளிபங்கண் என்று துவங்குகின்ற பாடலும், திருஞான சம்பந்தருடைய சில பதிகங்களும், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உருக்கமாய் எழுதப்பட்ட வேண்டுதல்களும் சொல்ல சொல்ல, உங்கள் மனகனத்தை குறைத்து தெளிவை அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கவல்லன. திருஞான சம்பந்தர் தேவாரமும் சொல்வதற்கு கடினமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் வெறுமே கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பது போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.
சில சமயம் தமிழ் பதிகங்களும் சொல்வதற்கு கடினமாக இருப்பதுண்டு. படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் வந்து விட்டால் எதுவும் எளிதாக இருக்கும். மேம்போக்காக இருப்பின் இறைவன் நாமத்தைச் சொல்வதுகூட கடினமாகத் தோன்றிவிடலாம்.
ஐயா, விதி என்று ஒன்று முன்பே எழுதப்பட்டு விட்டதாகக் கொண்டால் எதற்கு இறைவழிபாடு என்ற ஏமாற்று வேலை?
இதற்கு உண்டான பதிலை நிதானமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு தெளிந்தவர்களுக்குத் தேவையே இல்லை. அது நொய்மையான மனங்களின் செயல். சற்றுப் பேராசையுள்ளவர்களின் சிந்தனை. ஆனால் தெளிந்தவர்கள் கூட அன்பு மிகுதியினால், நொய்மையான மனங்களைத் தேற்றும் பொருட்டு பிரார்த்தனை செய் என்றும், இந்தவிதமான வேண்டுதல் நடத்து என்றும், அதற்குண்டான பாடல்களை இயற்றியும் வழிநடத்தியிருக்கிறார்கள். இறைவழிபாடு அவசியமே இல்லை என்பதுதான் இந்திய சித்தர்களின் கருத்து.
விதி என்ன எழுதியிருக்கிறது என்று கவலைப்படாமல் இப்படி உதவி செய், இன்ன வரம் கொடு என்கிற ஆசைப்படல்தான் பிரார்த்தனை. ஆசைப்படாதிருக்க, அதாவது பிரார்த்தனை செய்யாதிருக்க மிகுந்த தெளிவும், திடமும் வேண்டும்.
எனக்கு அத்தனை திடமில்லை. தன் திடம், தெளிவு பற்றி ஒவ்வொருவரும் தானே தன்னைப் பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும்.
Posted by கிருஷ்ண துளசி at 7:14 AM 5 comments
Labels: கேள்வி-பதில்
Saturday, April 24, 2010
சூரியனோடு சில நாட்கள் - 5-- பாலகுமாரன் பேசுகிறார்
“ நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும், பிறகு மாடுகள் மேய்ச்சு, சுத்தம் பண்ணி, பால் திறந்து அப்படி வேலை செய்யணும்.
அந்தப் பண்ணைக்கு நடுவுல, இரண்டு ரூம், மூணு ரூம் இருக்கற வீடு கட்டிக்கிட்டு, நாம நடிச்ச படத்தை நாம போட்டு பார்த்துகிட்டு, அப்ப காமிரா பின்னால யார் இருந்தாங்க, என்ன நடந்தது, எப்படி அந்த படத்து கதை உருவாச்சுன்னு ரீ-கலெக்ட் பண்ணி உட்கார்ந்திருக்கணும். இப்படி ஒரு ஆசை என் மனசுல உண்டு.
இந்த வேலைகளுக்கு நடுவே தினமும் நேரம் கிடைக்கறப்ப ‘ஓம்’ங்கற சப்தத்துல மனசு லயிக்க வைக்கணும். எங்க வீட்ல பார்த்திருப்பீங்க,
எப்பவும் ஓம்னு ஒரு ஓலி வர்ற மாதிரி கேஸட் ஏற்பாடு பண்ணி, டேப் ரிக்கார்டர்ல போட்டு கேட்டுக்கிட்டு இருப்பேன். தியானம் பண்ற நேரத்தை அதிகமாக்கி, அந்த ஓம்கார ஒலியிலே மனச நிக்க வைக்கணும். விழிச்சு கண்ணு திறந்த உடனே மறுபடி மாடு, குரங்குன்னு வேல செய்ய வேடிக்கை பார்க்கப் போயிடணும்.
“மாடு-பால் பண்ணை புரியுது. எதுக்கு குரங்குகளுக்குன்னு தோப்பு வளர்த்து வேடிக்கை பார்க்கற விஷயம்”.
“ரொம்ப வேகமா சலனமாகிற மனசு குரங்கு. அதிகம் சலனமில்லாத,அதே சமயம் அப்படியே கல்லா நிக்கற மனசு பசு. இது இரண்டும் எனக்குள்ள இருக்கு. குரங்கை வேடிக்கை பார்க்கணும். பசுவோட பழகணும். குரங்கை வேடிக்கை பார்க்க வேடிக்கை பார்க்க, என் மனசு அதைவிட எவ்வளவோ மோசமா- தேவையில்லாது ஆடுதுன்னு புரியுது. குரங்கு குதி போடறதை, ஆடறதை சேஷ்டைன்னு சொல்றோம். அப்போ அதை விட அதிகமா ஆடற என் மனசை என்னான்னு சொல்றது.
ரோட்ல ஒரு ஆள் குடிச்சுட்டு விழுந்து கிடக்கான்னு வெச்சுக்குங்க, அதைப் பார்க்கறப்போ, இந்த முட்டாள்தனம் செய்யவே கூடாதுன்னு தோணுதில்ல. அதே மாதிரி குரங்கு ஒரு இடத்துல உட்கார்ந்து அலைஞ்சுக்கிட்டே இருக்கறத பார்க்கற போது, அலையற மனசை கண்ட்ரோல் பண்ற எண்ணம் வரும். அதாவது குரங்கை உத்துக் கவனிக்கற மாதிரி அலையற மனசை, குதி போடற மனசை, உத்துக் கவனிக்க ஆரம்பிச்சுருவோம்.
நம்ம மனசை நாமே உத்துப் பார்க்கறப்போ அது கொஞ்சம் கொஞ்சமா ஒரு நிதானத்துக்கு வந்துரும். இதுதான் என் எதிர்காலத் திட்டம். இது யோக சாதனையா, இல்லே, வெறும் விஷயமா, தெரியாது.
ஆனா இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு மனசுல ஒரு திட்டம், ஆசை இருக்கு. இந்த மாதிரி விஷயங்களுக்கு வாத்தியாரா ஒருத்தர்கிட்ட போகாது யாரையும் போய் இது என்ன, இது எப்படின்னு விசாரிக்காது, மனசுல பட்டதை மனசுல பட்ட விதமே நடத்திவிட்டுப் போறாது நல்லதுன்னு தோணுது. பாடம்னு கேட்கப்போனா பத்துவிதமான ஆட்கள் பத்து விதமான அபிப்பிராயத்தோட வராங்க.
இவரு தப்பு, அது சரி, இப்படி தப்பு, அப்படி சரிங்கறாங்க. மனசுக்குத் தெரியும், கவனமா உத்து கேட்டா சரியான வழி மனசு காட்டும். மனசுதான் சரியான குரு.
மனசு குருன்னு ஏத்துக்கிட்ட பிறகு அடடா அவரு அப்படி செய்யறாரே.. இது நல்ல மெத்தேடா தெரியுதேன்னு ஜகா வாங்கக் கூடாது. சரியோ, தவறோ; நல்லதோ, கெட்டதோ மனசு சொல்ற வழில போகணும்.
இந்த மனசு குருன்னு வெச்சுக்கறபோது ரொம்ப பிடிவாதமும் தேவையில்லை. கடவுளைப்பார்த்துட்டு தான் மறுவேலைன்னு ராப்பகலா வெறி புடிச்சா மாதிரி மாறிடக்கூடாது.
கடவுளை பார்க்க முடிஞ்சபோது பார்க்கலாம்ன்னு நிதானமா இருக்கணும். அதே சமயம் நிதானம் சோம்பலாயிடக்கூடாது. ஒரு மென்டல் பேலன்ஸ் வேணும். இதை ரஜனீஷ் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப புனால இருக்கற ஆஸ்ரமம் போவேன். நல்ல சிநேகிதர்கள் அங்கே இருக்காங்க. அங்க போய், ஆறு நாள், ஏழு நாள் எல்லாம் மறந்துட்டு இருப்பேன். ஒரு புது உணர்வோடு நிறைவோட திரும்பி வருவேன்.
பகவான் ரஜனீஷ் ஒரு முழுமையான குரு. திறந்த மனசோட அவரைப் படிச்சா பல விஷயங்களை சரியான கோணத்துல புரிஞ்சுக்க முடியும். ரஜனீஷ் புரிஞ்சுக்கறதுக்கு முன்னே நமக்கு தெரிஞ்ச விஷயங்களிலேர்ந்து விடுபடணும். நாம நினைச்சுட்டு இருக்கற கடவுள், மதம், பூசாரி, ஆச்சாரம், பூஜை இதுலேர்ந்து விடுபடணும். இப்படி விடுபடறது எல்லாருக்கும் கஷ்டம். அதனால்தான் ரஜனீஷ் பத்தி நான் அதிகம் யார்கிட்டயும் பேசறதில்லை.
எங்க குருன்னு அவரை யார் கிட்டயும் அறிமுகப்படுத்தறதில்லை.
ஆமா..நான் ஒண்ணு கேட்கறேன், தப்பா நினைக்காதீங்க, தியானம், ஹடயோகம் இப்படி ஏதேதோ பேசறீங்க. ஆனா இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்களே.. பாலகுமாரன், இது சரியா, சுத்திப் பாருங்க. ஒண்ணு ரெண்டு, மூணு ,நாலு பத்து பன்னிரெண்டு. அடேங்கப்பா... ஒன்னவர்ல பன்னிரெண்டு கிங்சைஸ் சிகரெட்டா. ஜாஸ்தி இல்லே. அதே சமயம் இருமறதில்லையே நீங்க, அது எப்படி.”
ரஜினியின் நீண்ட விளக்கத்தின் கடைசியாய் என் முதுகில் ஒரு கேள்விக் குத்து விழுந்தது. நான் சட்டென்று இருண்டேன். என் சிகரெட் பழக்கம் பலர் சுட்டிக் காட்டி இடித்துரைத்த விஷயம்தான். ஆனால் ஒன்று, பதிலுக்கு பதில் என்பது போல் தியானம் பற்றி பேசுகிற நீ என்ன யோக்கியதையில் சிகரெட் பழக்கம் தொடருகிறாய்.ஏன் மனக் கட்டுப்பாடு இல்லை. இது தீயது என்று தெரிந்தும் ஏன் விட முடியவில்லை என்று சொல்லாது சொல்லப்பட்டது.
முதன் முறையாய் என்னைச் சுற்றி நான் போட்ட சிகரெட் துண்டுகள் அசிங்கமாகத் தெரிந்து எனக்கு.ரஜினிகாந்த் என் சிகரெட் பழக்கம் கேட்டு விட்டு, சாதாரணமாய் படப்பிடிப்புக்கு எழுந்து போய் விட்டார். நான் தொடர்ந்து புகைப்பிடித்தபடி யோசித்தேன்.
இதைவிட முடியாதா, இந்த கொடிய பழக்கத்திலிருந்து என்னால் நகர முடியாதா. என் மனம் இதற்குப் பக்குவப்படவில்லையா. ஆமெனில் என் தியானத்திற்கு-அது தொடர்பான பேச்சுக்கு என்ன மதிப்பு. அன்று இரவும் சிகரெட் பிடித்தேன். யோசித்தேன். என் மனம் ஒரு அளவுக்கு பக்குவப்பட காரணமாய் இருந்த என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் நோக்கி மனசுள் பேசினேன்.
‘சிகரெட் பழக்கம் விட விரும்புகின்றேன். உதவி செய்ய வேண்டும். தயவு செய்து இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தும் வலிவு தர வேண்டும்.’ கெஞ்சினேன். ‘ஆமா நீங்க ஏன் இவ்ளோ சிகரெட் பிடிக்கறீங்க.’ ரஜினியின் கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
மனசு சிகரெட் எடுக்கும் போதெல்லாம் பிரார்த்தனையை குரு நோக்கி செய்தது. நவம்பர் மாதம் முப்பதாம் தேதி இரவு ஒரு பாக்கெட் சிகரெட்டோடு உட்கார்ந்து, தொடர்ந்து ஒன்பது சிகரெட்டுகள் பிடித்துவிட்டு, பாக்கெட்டை கசக்கிப் போட்டேன்.
இன்று வரை ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை. எரிச்சல் இல்லாது, பல்கடித்து வேதனைப்படுத்தும் கொடூரம் இல்லாது, சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு அகன்று விட்டது.
இனி எந்தக் காரணம் கொண்டும் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்பது எனக்குள் உறுதியாகி விட்டது.
Posted by கிருஷ்ண துளசி at 9:03 PM 3 comments
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - நல்ல உணவுப் பழக்கம்
எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு குழந்தைகளும் எகிறி குதித்து பல ஹோட்டல்கள் பெயரைச் சொன்னார்கள். பல சிற்றுண்டிகள் பெயரைச் சொன்னார்கள். எங்கே சீக்கிரம் உணவு தயாராகுமோ அங்கே போகலாம் என்று ஒரு விரைவு உணவுக் கடைக்குப் போனோம். குழந்தைகள் கொடுத்த உணவுப்பட்டியல் கைக்கு வர தாமதாமாயிற்று.
ரசித்து சாப்பிட்டவரை சந்தோஷம் என்று காசு கொடுத்து விட்டு வந்தோம். சாப்பிட்ட அரை மணியில் சிறிது சிறிதாய் ஏப்பம் வந்தது. அடுத்த ஒரு மணியில் இரைப்பையிலிருந்து நீர் கிளம்பி நெஞ்சைத் தாக்கியது. இரண்டு மணி நேரம் பொறுத்து வயிற்றில் இடைவிடாது சங்கடம், வீட்டுக்கு வந்ததும் வயிற்றைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் கூட ஒரு வேதனையான அனுபவம்.
அன்று இரவு படிக்கக் கூட முடியாமல் ஒரு ஆயாசமும், மந்தமும் பற்றிக் கொண்டது, எனக்கு மட்டும் தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா? வீட்டில் உள்ளவர்களை விசாரித்தேன். யாரெல்லாம் உணவுக் கடையில் விதம் விதமாய் தின்றோமோ அவர் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். “நம்ம வீட்ல யாருக்குமே வயிறுபலம் கிடையாது”. என் அம்மா அடிக்கடி சொல்வாள். கொஞ்சம் பழக்கம் பிசகினாலும் பிய்த்துக் கொள்ளும் என்று அலுத்துக் கொள்வார்.
‘செரிமானம் பரம்பரை சமாச்சாரமா? இதற்கும் மரபு அணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா? அந்த விரைவு உணவுவிடுதியில் வேறு சில நண்பர்களை பார்த்தோமே? பெரிய பட்டளமாய் உயர டேபிளைச் சுற்றி நின்றபடி ஏகப்பட்ட விஷயங்களை ஆர்டர் செய்தார்கள், அங்கும் வயிற்றுப் பொருமல் உண்டா, யாரைச் சந்திக்தோம்..யோசித்து டெலிபோனில் எண்கள் சுழற்றினேன்.
“மத்தியானம் போனான், வரவேயில்லையே” நான் தேடியவனின் தாயார் கவலையோடு பேசினார்கள். மறுநாள் காலை வயிறு ஊதித் திணறிக் கொண்டிருந்தது. மகள், மகன் இருவருமே என்னை விடவும் மோசமான நிலையில் இருந்தார்கள். சுருண்டு படுத்தார்கள், உற்சாகமின்றி நடந்தார்கள். அன்று வழக்கத்தை விட அதிக தூரம் வேண்டுமென்றே வேகமாக நடந்தேன், எப்படியாவது வயிற்றிலுள்ள விஷயத்தை வெளியேற்றி விடவேண்டும் என்று விரும்பினேன். உண்ட இருபத்திநாலு மணி நேரம் கழித்து உள்ளே கண்ட இடங்களை ரணப்படுத்தி விட்டு அந்த உணவு வெளியேறியது.
படிக்கவோ, எழுதவோ முடியவில்லை என்பது மட்டுமில்லை. சுமுகமாகப் பேசவும் முடியவில்லை. வயதாகிவிட்டதால் ஜீரண சக்தி குறைந்து விட்டது என்று நான் நினைக்க, என் மகளும், மகனும் பட்ட அவஸ்தை ஞாபகம் வந்தது. நான் போனில் தேடிய நண்பரிடமிருந்து இரண்டு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. “வயிற்றுப் போக்கு புரட்டி எடுத்து விட்டது. அது தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன விஷயம்”, என்று கேட்க, அதே விஷயத்தை அவரிடம் சொன்னேன்.
சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை. மற்றவரோடு பேசிக் கொண்டிருக்கிறது.
உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு, இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.
உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.
இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.
அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.
ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. “ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. “எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.
நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். “பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.
அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.
எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது.
உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம். உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.
நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. “மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”
வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.
Posted by கிருஷ்ண துளசி at 8:45 PM 7 comments
Friday, February 12, 2010
சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -4
“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் ரஜினிகாந்த் கேட்டார்.
நான் சொன்னேன்.........
என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று யாரேனும் கேட்டால் அதற்குப் பதில் சொல்வது சரியா..தவறா.
தயங்காமல் பதில் சொல்வதுதான் சரி என்பது என் வாதம். மற்றவரைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு அவருக்கு விளக்கிச் சொல்லும்படியான அறிவு ஒருவருக்கு உண்டா.
இருக்கலாம்; இல்லாது போகலாம். ஆனால் கேட்டவுடன் பதில் சொல்லிவிடுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.
நமக்குப் பதில் சொல்லத் தகுதியிருக்கிறதா என்று யோசிப்பதை விட, தவறாக அவரைப் பற்றி அபிப்பிராயம் சொல்லி விடப் போகிறோமே என்று கவலைப்பட்டு அடக்கிக் கொள்வதை விட, கேட்டவுடன், ‘நீ இப்படி, இவ்விதம்’. என்று பதில் சொல்வது உத்தமம் என்பது என் எண்ணம். காரணம் ஒருநாளும் மற்றவரைத் துல்லியமாக எடை போட்டுக்காட்ட இன்னொருவரால் முடியாது. அதே சமயம் நம்மை அபிப்பிராயம் கேட்பதற்கு கர்வப்பட்டு விடவும் கூடாது. அந்த நேரம் அந்த மனிதர் பற்றி மனதில் என்னவித எண்ண அலைகள் ஓடுகிறது என்று உற்றுக் கவனிக்க, இதுவரை அவர் பழகி வந்ததால் உள்ளே ஏற்பட்டிருக்கும் ஒரு அபிப்பிராயக் கட்டுமானம் இயல்பாய் வெளியே வந்து விடும்.
அப்படி அதை வெளியே கொண்டு வந்து வார்த்தையாக்கிப் போடுவதுதான் மிகப் பெரிய தர்மகாரியம் என்பது என் கருத்து. எதிரே கேள்வி கேட்டவருக்கு என்ன பிடிக்குமோ அந்த விதமாய் பேசும் தந்திரசாலிகள் பலர் உண்டு, அவரால் அபிப்பிராயம் கேட்டவர்களுக்கு தீங்கு நேரலாம். மிகக் கூடுதலான புகழ்ச்சி வார்த்தைகளைக் கவனமாய் சேர்த்து வீசி அபிப்பிராயம் கேட்டவரை திக்குமுக்காட வைக்கலாம். வார்த்தைகளில் தேன் தடவி திகட்டத் திகட்ட உண்னக் கொடுக்கலாம். உண்மை ருசியற்றது. அதில் கசப்போ,இனிப்போ இல்லை.
என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்ட நேரத்தில் உள்ளே தோன்றும் உணர்வலைகளைக் கவனித்து இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதே கேட்டவர்க்கு உதவி. நட்புக்கு தரும் மரியாதை.
ரஜினிகாந்த் கேட்டதும் நான் ஒரு நிமிட நேரம் மெளனமாய் இருந்தேன். பதினேழு பதினெட்டு வருட தொடர்பை, உள்ளே உள்ள கம்ப்யூட்டர் வெகுவேகமாய் திரட்டி ஒரு தகவல், ஒரு அபிப்பிராயம் தந்தது. அந்த அபிப்பிராயம் ஒரு உணர்வாக இருந்தது. இனி வார்த்தைகள் ஆக்க வேண்டும்.
நான் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.
“அருள் மிகுந்த வாழ்க்கை உங்களுடையது என்பதாய் தோன்றுகிறது. உற்று உற்று பல நேரம் உங்கள் முகத்தை-கை-கால் அமைப்பை-அவைகள் நகரும் விதங்களை, நீங்கள் நடப்பதை, நிற்பதை, அமர்வதை, சட்டென்று மற்றவர் வருகைக்கு, சிரிப்புக்கு எதிரொலிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அருள் நிறைந்த அமைப்பு நீங்கள். முகத்தில் அழகு தாண்டி ஒரு சுகம் இருக்கிறது. அதாவது உங்கள் முகத்தைப் பார்க்கும்போது ஒரு சுகம் ஏற்படுகிறது. நீங்கள் ரொம்ப திடசாலியான- ஆஜானுபாகுவான மனிதர் இல்லை. உங்கள் தசை அமைப்பு, கட்டுமஸ்தான விஷயம் இல்லை. ஆனாலும் உங்கள் அசைவு முழுவதிலும் ஒரு துடிப்பு தெரிகிறது. அந்தத் துடிப்பில் ஒரு ஒயில் இருக்கிறாது. அந்த ஒயிலான துடிப்பு தான் எல்லோரையும் கவர்கிறது.
“பாலா சார்.. நான் என்ன கேட்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க”.
“மனசுல பட்டதைச் சொல்றேன். நீங்க கேட்டதால சொல்றேன்”.
“சரி.. நீங்க பேசுங்க” ரஜினி என்னை விஷயத்துக்கு நகர்த்தினார்.
“உங்கள் செயல்கள், உங்கள் தீர்மானங்கள் இதனால் கிடைக்கும் வெற்றிகள் உங்களால், உங்கள் முயற்சியால் கிடைப்பதை விட, வேறு ஏதோ ஒரு சக்தியால் கிடைக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் மிகக் கவனமாய், அற்புதமாய் ஆட்டி வைக்கப்படுகிறீர்கள். பிராபல்யம் நோக்கி படிப்படியாய் நகர்த்தப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு உள்மனதில் தெரிந்தும் இருக்கிறது.
எனவேதான் உங்களிடம் ஆட்டமும் இல்லை.உங்கள் பிராபல்யம் குறித்து உங்களிடம் பெரிய அலட்டலும் இல்லை. ரஜினிகாந்த் இப்படி எல்லாரிடமும் இனிமையாய் இருக்கிறாரே; சகஜமாய் பழகுகிறாரே; பந்தா இல்லையே.. இந்தப் பணிவு பொய்யா, நடிப்பா, நான் உற்று கவனித்திருக்கிறேன். மிக மிக இயல்பான பணியில் இருக்கிறீர்கள். ‘கொஞ்ச நேரம் தொடர்ந்து கம்பீரமான பந்தா அலட்டல் பண்ணுங்க’ என்றால் உங்களால் முடியாது. அல்லது தப்புத் தப்பாய் பந்தா பண்ணுவீர்கள், பிடிக்காது செய்யும் செயலைப் போல அது இருக்கும்.
இந்தப் பணிவும் இறையருள்.
என் வெற்றி என்னைத் தாக்கி தாழ்வு செய்யாதிருக்கட்டும் என்று எவரிடமோ கைகூப்பி வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள். வெற்றி என்பது ஆலகால விஷம். அதை விழுங்கிய எவரையும் அது ஆட வைக்கும். அதிகம் அதிர வைக்கும். அதை விழுங்கித்தான் ஆகவேண்டும். அதே சமயம் அது குடலுக்கும் போய்விடக்கூடாது. அது விழுங்கப்பட்டு தொண்டையிலேயே நிறுத்தப்படுவது தான் சிறப்பு, நிறுத்தப்பட்டு விட்டது உங்களுக்கு.
அதனால்தான் யூனிட்டில் வருகிற சாப்பாடே போதும் என்று சொல்ல முடிகிறது; அதை ரசித்துச் சாப்பிட முடிகிறது. சாதாரண அம்பாஸிடர் காரில் போக மனம் ஒப்புக் கொள்கிறது. நேற்று ஜெயித்தவர்கள் எல்லாம் காண்டசாவில் ஊரைக் கலக்கிக் கொண்டிருக்க, தன் செல்வத்தைப் பறையறிவிக்கிற எண்ணமே இல்லாது நகர முடிகிறது. இறையருளால் வெற்றியும், அந்த வெற்றியினோடு பணிவும் இருப்பதால்தான் இன்றைய வேலைகளில் தெளிவு இருக்கிறது.
உங்கள் சினிமாவுக்கு என்ன வேண்டும். ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு எது எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.அப்படி தீர்மானிக்க எல்லோரையும் அணுகி அபிப்பிராயம் கேட்க முடிகிறது. நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அபிப்பிராயம் சொன்னாலும் அதை அமைதியாய் செவிமடுக்க உங்களால் இயலுகிறது.
இதோ இப்போது என்னைக் கேட்கிறீர்களே, என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று ,இது பெரிய விஷயம். நீங்கள் கேட்காமலேயே உங்களைப் புகழ்ச்சியில் குளிப்பாட்ட ஆட்கள் இருக்கிறார்கள், குளிப்பாட்டுகிறார்கள். எனக்கு கொஞ்சம் புகழ்ச்சி தேவைப்படுகிறது. கொடு என்றா இப்போது கேட்டீர்கள், இல்லையே, உண்மை பேசு என்றீர்கள். இவ்வளவு அருளும், அருளால் பணிவும் பெற்ற ரஜினிகாந்த் நடிகர்தானா. நடிகர் மட்டும்தானா.
தன்னைச் சார்ந்த உலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தது போதுமோ.. தலைவனாய் ஏற்று இருக்கிறார்கள். நீங்கள் வழிகாட்டியிருக்கிறீர்களா. இறைவன் கொடுத்த வரத்தை நீங்கள் முழுமையாய் பயன்படுத்தினீர்களா. இல்லை என்பது என் அபிப்பிராயம்.
Posted by கிருஷ்ண துளசி at 7:01 PM 8 comments
Labels: அனுபவம்
Thursday, February 4, 2010
உடையார் - சில எதிரொலிகள்
உடையாரைப் படைப்பதற்கு தாங்கள் புரியும் களவேள்வி, கல்வெட்டுப் படிப்பு, தேடும் ஆதாரங்கள், உண்மை காண முயலும் தவிப்பு ஆகியவற்றை நன்கறிந்தவன் என்ற முறையில் எழுதுகிறேன். தங்களின் இப்புதினம் அஸ்வமேத வெற்றி. வரலாற்றில் ஒரு சில மாறுதல்களுக்காகச் சிலர் முணு முணுக்கலாம். ஆனால், அப்படியே வரலாறு எழுதுவது புதினமாகாது. ஆங்காங்கே கற்பனை எனும் தேனருவி பாய வேண்டும். அந்த அருவியின் குளிர்ச்சியை, மூலிகைக் கலப்பின் சுகத்தை என்னால் முழுதும் நுகர முடிந்தது. வரலாற்றுப் புதினம் எழுதுவது என்பது பின்னோக்கிப் பயணிக்கும் ஜால வித்தை. அப்பயணத்தில் எத்தனையோ மேடு பள்ளங்கள், வழுக்குப் பாறைகள், அத்தனையும் கடந்து வாசகர்களுக்கோர் சுகமான தடத்தைக் காட்டி, அதில் உடையாரைப் பயணிக்கச் செய்திருக்கிறீர்கள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இராஜராஜேச்சரமுடைய பரமசாமி என்றும் துணை நிற்பார்.
குடவாயில் முனைவர்
பாலசுப்ரமணியன்,
தஞ்சாவூர்.
Posted by கிருஷ்ண துளசி at 7:27 PM 2 comments
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள்
சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம்.
வாதம் சரிதான்.
ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரையும் தூங்கலாம் என்பது அவன் கணக்கு. அரக்கப் பரக்க பல் தேய்த்து, குளித்து, புறப்பட்டு ஸ்கூட்டரில் போய் கல்லூரி வாசலில் இறங்கி, கட்டி வந்த இட்லியை வகுப்பாசிரியர் வரும் முன்பு குத்தி அடைத்து சாப்பிடுவது பழக்கம்.
உண்டவுடன் மறுபடியும் தூக்கம் வரும். ஆனால், கண் விழித்தபடியே தூங்குவதற்கு சங்கர் கற்றுக் கொண்டு விட்டான். ஒரு ஆசிரியர் போய் அடுத்த ஆசிரியர் வருவதற்குள் மேஜையில் சாய்ந்து தூங்கி விடுவான். கேண்டீனில் நல்ல சாப்பாடு. பிறகு புல்வெளித் தூக்கம். அப்புறம், மறுபடியும் வகுப்பறை. சோம்பலான பொழுதுகள். மாலை ஐந்து மணிக்கு மேல் சங்கர் உடம்பில் அந்த சுறுசுறுப்பு குடியேறும். பன்னிரண்டு மணி வரை ஆட்டம் போட முடியும்... பார்த்த சினிமாவையே அலுக்காமல் பார்க்க முடியும்.
பள்ளியும், கல்லூரியும் சங்கரை புரிந்து கொண்டன. கடைசி நிமிடம் படித்து தேர்வாகி விடுகிற மாணவன் என்று அறிந்து கொண்டது. ஆனால், வேலை செய்த கம்பெனி-சங்கரின் சோம்பலை ஏற்கவில்லை. தாமதமாக வருவதை விரும்பவில்லை. ‘கம்ப்யூட்டர்’ எதிரே உட்கார்ந்து கொண்டே தூங்குவதை அனுமதிக்கவில்லை. வேலை சம்பந்தப்பட்ட புத்தகத்தை விரித்து வைத்தபடியே தூங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையாய் எச்சரிக்கைத் தரப்பட்டது. மறுபடியும் இது தொடர-வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.
வீட்டில் உண்மையைச் சொல்லாமல், ‘கம்பெனி ஊத்தி மூடிக்கிச்சு’ என்றான். வேறிடத்தில் வேலை தேடப் போகிறேன் என்று வீட்டில் காசு வாங்கினான். வேலை தேடாது சென்னையில் எந்த இடங்களெல்லாம் தூங்கலாம் என்று தேடினான்.
தூக்கத்திற்குப் பிறகு உணவில் ஈடுபாடு. உண்ட பிறகு தூக்கம் தான் முக்கியம். கூடப் படித்தவர்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று சம்பளம் வாங்க தினமும் கை செலவிற்கு வீட்டில் நூறு ரூபாய் வாங்குவதே இவனது லட்சியமாக இருந்தது. எதனாலோ சங்கருக்கு முன்னேற வேண்டுமென்ற ஆசை அறவே இல்லை. சோம்பலை உதற மனம் வரவேயில்லை.
சோம்பல் ஒரு பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும்.
சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோல்வி பழக்கமானால், சோம்பல் பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வுமுறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.
‘எனக்கு விருப்பம் படிப்பு இல்ல’ என்று சொல்பவர்கள், வேறு ஏதாவது விஷயத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும். அங்கேயும் அவர்கள் ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பார்கள்.
‘எல்லாரும் முதலாவதா வந்துட்டா எப்படி? முப்பதாவதா வருவதற்கு ஆள் வேணுமில்லை’என்று ஏகடியம் பேசுவார்கள். எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுபவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுப்படுவது ஒரு கலை. மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையோ, வெள்ளை அடிக்கிற தொழிலோ-அது உள்ளே புகுந்துவிட்டால் அற்புதம் என்று பலரை சொல்ல வைக்க வேண்டும். அவனை நம்பலாம் என்ற பாராட்டைப் பெற வேண்டும். விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி.
கல்யாண சமையல் கண்டிராக்டர் ஒருவர் சென்னையில் இருக்கிறார். சில கோடிகளுக்கு அவர் இப்போது அதிபதி. சமையல் எனக்கு பரம்பரைத் தொழில் அல்ல. அடுத்த போர்ஷனில் உள்ள ஒருவர் மைசூர்பாகு கிளறி விற்றுக்கொண்டிருந்தார். காலையில் தின்பண்டம் செய்து முடித்துவிட்டு, மாலையில் பெரிய கடாயைத் தேய்ப்பார். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த நான், அவர் பெரிய கடாயைத் தேய்ப்பதைப் பார்த்து நானும் சுத்தம் செய்ய ஆசைப்பட்டேன். கடாயின் உட்பகுதி வெள்ளை வெளேர் என்று மாறும் வரை செங்கற்பொடியால் தேய்த்துக் கொடுத்தேன். அந்த மனிதர் எனக்கு மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாக அதைச் செய்வேன்.
விதிவசத்தால் என் உறவுகள் என்னை வீட்டை விட்டு துரத்தியபோது, பட்சணக் கரண்டி தான் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. வியர்வை பொங்க அடுப்புக்கெதிரே உட்கார்ந்து நூறு பேருக்கு சமைப்பது ஒரு சுகம். வாலிப வயதில் சம்பளம் தந்தாலும், தராது போனாலும் சமையல் காண்டிராக்டர்களோடு சமைக்கப் போய் விடுவேன். விருந்து சமைக்காத நாள் வெறும் நாள்.
கல்யாண ‘டென்ஷன்கள்’ இல்லாத நாள் கொஞ்சம் கஷ்டமான நாள். ‘டென்ஷன்’ தான் சுகம். பரபரப்பு தான் சந்தோஷம். பிரச்சனைகள் தான் பலம். பிறர் பாராட்டே ஆசிர்வாதம், தங்கப்பதக்கம்.
இடித்துரைத்தால் துடித்துப் போய்விடுவேன். இது இயல்பாகி விட்டது. வேலை சுத்தம் தான் வெள்ளை உடுப்பு போன்ற கவுரவம்.
‘யாருய்யா சமையல்... நல்லா இருந்துதே? என்று பேசியபடியே கை கழுவ போவார்கள். காதும்,நெஞ்சும் குளிரும். அறிமுகப்படுத்திக் கொள்ளத் தோன்றாது. ஒரு இடத்தில் கொடி பறந்தால், பத்து இடத்திலிருந்து அழைப்பு வருவது நிச்சயம்.
இந்தியாவில் காசு சம்பாதிப்பது எளிது, நல்ல உழைப்பிற்கு மரியாதை அதிகம். ஒரு இடத்திலும் அலட்சியமில்லாமல் இருக்கின்ற புத்தி, இறைவன் கொடுக்கின்ற வரம். இது பிறவியிலேயே வரவேண்டும். இதைப் பெரிதாய் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழையவிட்டால், சோம்பலும் வரும். அடுத்த வேலை தான் ஓய்வு. இன்னொரு சவால் தான் இன்னொரு தினம்.
எனக்கு நான்கு மணி நேரத்தூக்கம் போதும். புத்தி சுறுசுறுப்பாகி விடும். சோம்பலற்று இருக்க பிரச்சனைகள் சந்திப்பது நல்லது. ஒரே நாளில் மூன்று கல்யாணங்கள் ஒத்துக் கொள்வதும் .நாலைந்து விருந்துகள் ஏற்பாடு செய்வதும் எனக்கு குதூகலமான விஷயம் என்பார்.
இம்மாதிரி வேலை பளு நினைவாற்றலை உசுப்பி விடும். நல்ல நினைவாற்றல் உங்களைத் தூங்கவிடாது. அலாரமில்லாமல் எழுந்திருக்க வைத்து விடும். அலாரம் அடித்த பிறகும் தூங்குவது என்பது நோயுற்றவர்களுக்கே ஏற்படும். சோம்பல் ஒரு நோய்.
அவருடைய சமையல் சுவை, பந்தி விசாரணை, கட்டுசாதக்கூடை, பருப்புத் தேங்காய் உட்பட பட்சணப்பை, தாம்பூலப் பரிசு சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
அடுத்த வீட்டுக்காரருக்கு உதவியாக பட்சணக்கடாய் தேய்த்துக் கழுவிய அவர், இன்று சுபமாக இருப்பதற்கு சோம்பல் என்ற சொல்லே அவரது அகராதியில் இல்லாததே காரணம். வாழ்க்கையில் வசதிகள் வந்த பிறகும்.ஓய்வு நாடாத உழைப்பு தான் காரணம்.
சோம்பலை எதிர்க்க என்ன வழி?
குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல், எழுந்தும் செய்யவேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டு தூங்குவது நல்லது.
தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து, ‘கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன்’ என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து உறக்கம் கலைந்த மறுநிமிடம், எழுந்துவிட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.
அடுத்த வேலையான முகம் கழுவுவதும். தேநீர் அருந்துதலும், செய்திதாள் வாசித்தலும் கூடுதலான கவனத்தோடு செய்யப்பட வேண்டும். எழுந்ததும் முதல் அரை மணியை சோம்பலோடு கழித்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகம் குறைந்தபடிதான் காணப்படும்.
நுரையீரல் முழுவதும் காற்றை உள்ளிழுத்து செய்கின்ற யோகாசன உடற்பயிற்சிகள் சோம்பலை விரட்ட உதவும். புத்திக்குள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். குறைவாக உண்ணுதல் போல் குறைவாக பேசுதலும் அயர்ச்சிக்கு எதிரானது. உரக்கக் கத்தி ஆரவாரிக்கிற போது, சக்தி சிதறல் அதிகரிக்கிறது. இதனால் உடம்பு துவண்டுபோகிறது.
ஆனால் மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல்-கனவாக உங்களை அலைக்கழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சு குறைத்தால்,நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம், நாலு மணி நேரம் போதும்.
‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிருஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்’. என்று பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று உண்டு . இது அர்த்தம் பொதிந்தது.
அநியாயமாய் ஏகத்துக்கும் தூங்குபவரை கேலி செய்வது.
தூக்கம் ஒரு மருந்து, அது,அளவு தாண்டக்கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும்,எப்போதும் பாட்டு கேட்பதும் தூக்கம் கவிழ்க்கும்.பொழுதுபோக்கு என்பது பிழைப்புக்கான வேலையாக இருந்தால், அதாவது வேலையே பொழுதுபோக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.
பொழுதுபோக்கிற்கான சினிமா நாடக,இசை,இலக்கியம் போன்றவற்றின் மேன்மக்கள் அந்த பொழுதுபோக்கிற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஊன் உறக்கமின்றி அலைகிறார்கள். உழைப்புதான் பிரபலமாவதற்கு ஓரே வழி. அதிருஷ்டத்தில் உயர்ந்தாலும், உழைப்பே நிலையான மரியாதையைத் தரும்.
Posted by கிருஷ்ண துளசி at 7:03 AM 5 comments
Labels: கட்டுரை