மயிலை முண்டகக்கண்ணி அம்மன் சந்நிதியில் “உடையார்” மூன்றாம் பாகம் புத்தகத்தை ஆசி பெற வைத்த போது, ‘இவ்வளவு பெரிய புத்தகத்தை நானா எழுதினேன்’ என்று கர்வப்பட வேண்டிய வேளையில் குழந்தையின் குதூகலத்தோடு வியந்தது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.
சிறு வயதில் சரித்திரம் இராஜராஜனை ‘ஒரு மாமன்னன்’ என்று சொல்லிக் கொடுத்தது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ பல படிகள் உயர்ந்து சென்று, இராஜராஜனோடு நாமும் வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று ஒரு ‘Dream Boy’ ஆக கற்பனை செய்து கிறங்கிப் போகும் கிக் கொடுத்தது.
ஆனால், உங்கள் உடையார் நெருக்கமாகத் தொடுத்த பூமாலையைப் போல சம்பவங்களையும், சரித்திரத்தையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து ஸ்ரீ இராஜராஜத் தேவரின் வாழ்க்கை பற்றி அவருடனேயே வாழ்ந்து அனைத்தையும் பார்த்து பதிவு செய்தது போல் கதை சொல்லி இருக்கும் சாமர்த்தியம் அப்பப்பா. ‘எப்படி பலப்பல விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கோர்வையாக உங்களால் எழுத முடிந்தது’ என்று வியக்க வேண்டியவர்கள் நாங்கள்தான். நீங்கள் இல்லை.
சேர தேச காந்தளூர்ச்சாலை கடிகைப் போரில் அந்தணர்களைக் கொன்ற பாபம் நீங்க, குருநாதர் கருவூர் தேவர் சொற்படி இராஜராஜன் வேண்டிக்கொள்ள, தஞ்சை பெரிய கோயிலுக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது.
‘ இறை மிகப் பெரியது. அதற்கு முன்பு நாம் தூசு என்று சரணடைதல் வர, அமைதி வரும். சக உயிரின் துடிப்பும், துயரமும் புரியும். புரிதல் அதிகரிக்க தோழமை கெட்டிப்படும். பகை அழியும். அன்பு மலரும்’.
இந்த உண்மையை மிகப் பெரிய கோயிலாகக் கட்டி மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பாரத தேசத்தின் வட பகுதியிலுள்ளவர்கள் கயிலாயத்தை எளிதாக தரிசனம் செய்யலாம். ஆனால் தெற்கே உள்ளவர்களுக்காக மேரு மலையையொத்த கோபுரம். விமானம். உள்ளே மிகப்பெரிய லிங்கம், கயிலாயத்தில் இருக்கும் மானசரோவரைப் போலவே கோபுரத்திலிருந்து விழும் நீரும், அபிஷேக நீரும் வாய்க்கால்கள் வழியாகக் சென்றடையும் குளங்கள் என தஞ்சை பெரிய கோயிலை தக்ஷிண கயிலாயமாக கட்டுவதற்காகவே போர். போரில் கிடைத்த செல்வங்கள். அடிமைகள். அந்த பல்லாயிரக்கணக்கான அடிமைகளை அன்பால் ஆளுமை செய்து நேர்த்தியுடன் வாழ்ந்து, தன் சந்ததி மட்டுமல்லாது சோழ தேசத்தின் நாகரிகமான சைவமும், தமிழும் பல்லாண்டு வாழ வைத்த உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவரை நீங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ஒரு உயர்ந்த செயல் ஒருவரால் மட்டும் முடிவதில்லை. கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு பல பேருடைய ஒருங்கிணைந்த செயல்களால் முடிகிறது என்பதைத் தந்தையின் கனவைப் புரிந்து கொண்டு சோழ தேசத்தைப் புலி போல் காத்த இராஜேந்திரன், சக்கரவர்த்தியின் நிழல் போல் தோள் கொடுத்து அவர் காரியம் எல்லாவற்றிலும் கைகொடுத்த பஞ்சவன் மாதேவி, மிகக் கூர்த்த அறிவுடைய சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர், சோழ மண்ணின் மீது காதலோடு இருக்கும் அருண்மொழி, இறையுணர்வோடு மனிதத்தை வளர்க்கும் கருவூர்தேவர், நல்வழி காட்டும் குலகுரு ஈசான சிவ பண்டிதர், குஞ்சரமல்லர், நித்தவினோதப் பெருந்தச்சர், ஓவியன் சீராளன், ஒற்றன் வைஷ்ணவதாசன் மூலமாக அற்புதமாக உணர்த்தி இருக்கிறீர்கள்.
ஒரு சக்கரவர்த்தி நேரடியாக கோயில் கட்டும் வேலையில் ஈடுபடும்போது, ஏற்படும் சமூக மாற்றங்கள், பல்வேறு சமூகத்தினரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களால் ஏற்படும் குழப்பங்கள். அதை இராஜராஜன் எதிர்கொள்ளும் விதம், எடுக்கும் முடிவுகளோடு கதை சொல்லி இராஜராஜனை, ஒரு மாமன்னனை, அவருடைய குணாதிசயங்களோடு முழுமையாகப் புரிந்துக் கொண்டு பாரட்ட வழிவகுத்துள்ளீர்கள்.
இவ்வளவு விஷயங்களையும் மனதில் தேக்கிக் கொண்டு, பலப்பல தகவல்களை மறக்காமல், பைபாஸ் சர்ஜரி, கண்புரை நோயிற்கான அறுவை சிகிச்சை போன்ற பலவிதமான இடர்பாடுகளுக்கு நடுவே, ‘இராஜராஜனுடைய சரித்திரத்தை நிச்சயம் எழுதி முடிக்க முடியாது’ என்ற சூளுரைகளுக்கிடையே, உங்களால் ஆறு பாகத்தில் உடையாரை எப்படி எழுத முடிந்தது என்ற என் கேள்விக்கும் ஒருநாள் விடை கிடைத்தது.
உங்களுக்கு Cataract Operation செய்வதற்கு முன்பு கண்கள் சரியாகத் தெரியாத நிலையில், படிக்க இயலாமல், உடையார் நான்காம் பாகத்தில் பஞ்சவன் மாதேவி ஈசான சிவபண்டிதரோடு பேசும் இடம் என்னைப் படித்துச் சொல்ல சொன்னீர்கள். நான் ஒரே ஒரு முறை படித்த அந்த விஷயங்களை கிரகித்துக் கொண்டு, அதில் வரும் தேவாரப் பாடல் சரியாக பொருந்தவில்லை என்று ஐந்து பக்கங்களுக்கான விஷயத்தை ஒரு விநாடி கூடத் தயங்காமல், யோசிக்காமல் உடனடியாக மாற்றி அருவியாக டேப் ரெக்கார்டரில் நீங்கள் தெளிவாக பதிவு செய்த நிகழ்ச்சி “இது முப்பது வருடத் தேடல். சோழ தேசத்தின் மீது உங்களுக்கு இருக்கும் மாறாத காதல்” என்பதை புரிய வைத்தது. வாழ்க உங்கள் காதல்.
தஞ்சை பெரிய கோயிலின் ஒவ்வொரு கல்லையும் காண்பித்து, இதை நார்த்தாமலையில் இருந்து இப்படித்தான் கொண்டு வந்திருப்பார்கள் என்று படம் போட்டு விளக்கி, கற்களை ஒன்றோடொன்று பொருத்தி கட்டிய விதத்தை விளக்கி , விமானத்தில் ஏற்றாத மூளியான நந்தியைக் கொண்டு விமானத்தின் எடையை, பரிமாணத்தைச் சொல்லி, விமானத்தின் உட்புறம் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், நாட்டிய முத்திரைகளோடு இருக்கும் புடைப்புச் சிற்பங்கள், விமானத்தின் உட்புறத்தில் காணப்படும் பிந்து போன்ற அமைப்பைக் காண்பித்து, கோவிலை சுற்றி இருக்கும் கல்வெட்டுகளைப் படித்துக் காண்பித்து, சுற்றுசுவர்களில் இருக்கும் புடைப்பு சிற்பங்களை ஏன் அங்கு அமைத்திருக்கக்கூடும் என்று விளக்கி, நுழைவாயில் கோபுரங்களின் மீதிருக்கும் ஒவ்வொரு சுதை சிற்பத்தையும் பற்றி சொல்லி என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.
சாரம் கட்டாமல் மண் மூடி ஏற்றிய விதத்தை விளக்கி, கட்டி முடித்த பின் கொட்டப்பட்ட மண்மேடாக இன்றும் காட்சியளிக்கும் இடத்தைக் காண்பித்த போது திகைப்பாக இருந்தது. உடையாருக்காக நீங்கள் சேகரித்த விவரங்களில் நாற்பது பங்கு தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மீதி அறுபது சதவிகிதம் எழுதப்படாமல் இருக்கிறது என்பது புரிந்தது. ஏனோதானோ என்று வேலை செய்யாமல், அந்த வேலைக்குத் தேவையான முழு முயற்சியும் சிறிதும் அயற்சியில்லாமல் எடுக்கும் உங்கள் நேர்மையை என்னவென்று சொல்ல.......
இராஜராஜன் மூன்று தேவியரோடு தில்லை நடராஜரை தரிசிக்கும் ஓவியக் காட்சி காணக்கிடைக்காத ஒன்று. ‘என் ஐயன், நம் அரசன் இராஜராஜ சோழன் இப்படித்தான் இருந்திருக்கிறார்’ என்று அந்த ஓவியத்தின் கால் தொட்டு நீங்கள் நெகிழ்ந்த போது, அதுவும் ஒரு காணக்கிடைக்காத காட்சி என்று மனம் நெகிழ்ந்தது.
‘தஞ்சைப் பெருவழி என்பது இதுதான்; குடந்தையிலிருந்து இப்படித்தான் இராஜராஜன் வந்திருப்பார்; இங்குதான் தஞ்சை அரண்மனை இருந்திருக்கும்; இது மறவர்களின் படை வீடு; இது அந்தணர்களின் அக்ரஹாரம். இது குதிரை கட்டும் இடம்; இங்கு யானைகள் சோதனை செய்யப்பட்டு இப்படித்தான் சென்றிருக்கும். வீரர்கள் சோதனை செய்து இப்படித்தான் அனுப்பியிருப்பார்கள்; கருமார்கள் வேலை செய்த இடம் இதுதான். பார் இந்த மண்ணின் கருமை நிறத்தை’ என்று தஞ்சையில் ஒரு நாகரிகம் இருந்த தடங்களை ஆயிரம் வருடங்களுக்கப்பால் ஒவ்வொரு இடத்தையும் நீங்கள் விளக்கி, பரவசப்பட்டு, ‘அப்படி நீங்கள் பரவசப்படுவது முதன் முறையல்ல; அந்த இடங்களை முப்பது வருடங்களில் கையில் காசு கிடைத்த போதெல்லாம் அந்த இடங்களை சுற்றிப் பரவசப்பட்டிருக்கிறீர்கள்’ என்று சொன்ன போது, தமிழர் நாகரிகம் மீது குறையாத உங்களின் ஆர்வம் ஆச்சரியத்தைத் தந்தது.
பழையாறை தாண்டி உடையாளூர் சிவன் கோவிலில் சோழப் பரம்பரையினர் இங்கு தான் நின்றிருப்பர் என்று விலகி நின்று வணங்கிய பாங்கும், பால் குளத்து அம்மன் கோலிலிலிருந்த உருளைத் தூணில் பொறிக்கப்பட்டிருந்த இராஜராஜனின் மறைவு செய்தியைத் தடவித் தடவி மன்னனின் மறைவு சிறிது நாட்களுக்கு முன்பு தான் நிகழ்ந்தது போல் கண் கலங்கிய காட்சியும் இன்னும் கண் முன்பே நிற்கிறது.
பஞ்சவன் மாதேவிக்கு பட்டீஸ்வரத்திற்கருகே ஒரு பள்ளிப்படை வீடு உள்ளது; அந்திசாயும் வேளையில் தான் அவள் தரிசிக்க விடுவாள் என்று பரிதவிப்போடு சென்று சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்த பள்ளிப்படை கோவிலை சுத்தம் செய்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வளையல், மஞ்சள் குங்குமம் சார்த்தி ‘அம்மா, உடையாரை நல்லபடியாக முடித்துக் கொடும்மா’ என்று வேண்டி நின்றபோது, சோழ தேசத்தின் மீதுள்ள உங்கள் பக்தி புரிந்தது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் கட்டிய அமண்குடி கோவிலில் நடந்த நிகழ்ச்சி இன்னும் புதிராகவே உள்ளது.
துர்க்கை அம்மனை வழிபட்டு கோவிலைச் சுற்றி வந்த சமயம் கோவிலின் ஒரு மூலையில், இருளில், கிட்டதட்ட தொண்ணூறு வயதுடைய அந்தணர் ஒருவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இருளில் அந்த இடத்தில் அவர் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ள டார்ச் லைட் வீசி பார்த்த போது, அவர் அதை விரும்பாமல் கோயிலின் சுவர் நோக்கி சென்று மறைந்தார். மறுபடியும் பார்க்கும் போது அங்கு வெறும் லிங்கம் மட்டுமே இருந்தது. வெடவெடவென்று பயந்து நடுங்கிக் கொண்டு உங்களைப் பார்த்த போது உங்கள் முகமும் தீர்க்கமாக இருந்தது. ‘இங்கு இப்படித்தான்’ என்று எந்த பதட்டமும் இல்லாமல் நீங்கள் கூறிவிட்டு சென்று விட்டீர்கள்.
‘இது சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் மிகக் காதலாகக் கட்டிய துர்க்கை அம்மன் கோவில். பிரம்மராயர் ஒரு அந்தணர். இந்த கோவிலை விட்டு அவர் வேறு எங்கும் போக மாட்டார்’ என்று எப்போதோ நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது.
சோழர்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், இடங்கள், கல்வெட்டுகள், சோழ சரித்திரம் மீது மிகப் பெரிய காதல் கொண்ட நண்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற பல உதவிகளோடு, சோழ தேசத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து வேறு ரூபத்தில் இருக்கும் சக்திகளும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கின்றன என்பது புரிய, உடையார் வெறும் நாவலல்ல என்பது விளங்கியது.
உங்கள் படைப்புகளில் மகுடமாகத் திகழும் உடையாரை நீங்கள் எழுதவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, நீங்களும் சோழர்களோடு வாழ்ந்திருக்கிறீர்கள்; அவர்களோடு இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்ந்ததை, பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை.
இந்த விளம்பர யுகத்தில், இந்த பிரம்மாண்டமான வேலையை செய்துவிட்டு ‘நானா இதைச் செய்தேன்’ என்று குழந்தையைப் போன்று வியந்த எளிமை உங்களுக்கு உங்கள் குரு யோகி ராம்சுரத்குமார் தந்த வரம்.
உயிரோடு கலந்திருக்கும் உடையார் வேலைக்கு நடுவில் நீங்கள் மேற்கொண்ட சினிமா பணிகளையோ, “வாழையடி வாழை” போன்ற சமூக நாவல்களையோ செய்தபோது, உடையாரைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டு, செய்யும் வேலையிலேயே முழுமையாக எந்த சிதறலுமின்றி ஈடுபடும் உங்கள் சிரத்தை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
ஒரு உன்னத கலைஞனின் உயர்ந்த படைப்பை, படைக்கும் விதத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்