குருவிடம் உலக விஷயங்களை பேசலாமா அல்லது வெறும் தத்துவம் மட்டும் தான் பேச வேண்டுமா?
உலக விஷயங்களை குருவிடம் பேசிப் பாருங்களேன். உலக விஷயங்களை பேசும் போது குருவினால் அதில் ரகசியமாய் தத்துவத்தை வைத்துவிட முடியும். நல்ல குரு உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை விதம் விதமாக உணர்த்திக் கொண்டு தான் இருப்பார். உங்களுக்கு என்னுடைய அனுபவம் ஒன்றை இங்கே சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.
திருவண்ணாமலைக்கு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். யோகி ராம்சுரத்குமார் அவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். பேருந்தின் ஒலி நாடாவில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன. “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்கிற பாடல் மட்டும் மனசில் தங்கி உள்ளுக்குள்ளே ஆழமாக பதிந்து போயிற்று. திருவண்ணாமலைக்கு வந்து யோகி ராம்சுரத்குமார் அவர்களை பார்த்து நமஸ்கரித்து அவருக்கு அருகே உட்கார்ந்து உலக விஷயங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்த போது, அவர் சட்டென்று திரும்பி ‘என்ன பாடிக் கொண்டிருக்கிறாய்’ என்று என்னைப் பார்த்து கேட்டார். நான் எதையும் பாடவில்லையே என்று சொன்னேன். இல்லை. மனதிற்குள் ஏதோ பாடிக் கொண்டிருக்கிறாய் என்று மறுபடியும் சொன்னார். நான் மெல்லத் தயங்கினேன். என்ன பாட்டு அது என்று கேட்டார். சினிமா பாட்டு என்று சொன்னேன். எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு சிறிய சபை வாய் விட்டு சிரித்தது. என்ன சினிமா பாட்டு, பாடு என்று கட்டளையிட்டார். நான் தயங்கினேன். மீண்டும் வற்புறுத்தினார்.
மெல்லிய குரலில் “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா, செல்லாத இடம் நோக்கி செல்லலாமா, சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடினேன். இரண்டு திருமணங்கள் முடித்து திரும்பவும் இந்த பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாயே என்று சொல்ல, சபை வாய் விட்டுச் சிரித்தது. நான் வெட்கப்பட்டேன். மறுபடியும் பாடச் சொல்லி என்னை வற்புறுத்தினார். மீண்டும் பாடினேன். “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்கிற போது என்னை நெருங்கி அணைத்துக் கொண்டார். “கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” என்கிற போது என் கையைக் கோர்த்துக் கொண்டார். “செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” என்கிற போது நான் காணாமல் போனேன். “சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்கிற போது எனக்குள் மிக கனமாக ஏதோ ஒரு விஷயம் கிளர்ந்து எழுந்தது. என் ஆத்ம சக்தியை என்னால் தரிசிக்க முடிந்தது. நான் பரவசமானேன். அது சாதாரணமான காதலன்-காதலி பாடும் சினிமா பாடல்தான். ஆனால் அந்த பாடல் எனக்கு கடவுளைக் காட்டியது.
ஒரு நல்ல குரு எந்த விஷயம் பேசினாலும் அதற்குள் இறைத் தன்மையை ஒளித்து வைத்து உள்ளுக்குள் இறக்கி விடுவார். உலக விஷயங்களை குருவோடு பேசிப் பாருங்களேன்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி குருவை மூன்றாம் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே. குரு முக்கியமில்லையா?
நீங்கள் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பாலூட்ட தாய் தேவைப்படுகிறாள். சுத்தம் செய்து, சுமந்து, வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் காப்பாற்றி உங்களை ஆசுவாசப்படுத்த தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. உங்களை ஆசுவாசப்படுத்தி, நல்ல உணவு கொடுத்து, நன்கு வளர்ப்பதற்காக அந்த தாயின் பக்கபலமாக, பின்பலமாக தந்தை தேவைப்படுகிறார். உங்களுடைய நான்காவது, ஐந்தாவது வயதில் நீங்கள் போடுகின்ற ஆட்டமும், பேச்சும், சிரிப்பும், உங்களை மேலும் பலப்படுத்த தந்தை உதவியாய் இருக்கிறார்.
ஆனால் பதினாறு வயதில் உலகம் பற்றிய ஞானத்தை தேடுகின்றவனாய், வாழ்வு குறித்த கேள்விகள் உள்ளவனாய் நீங்கள் வாலிபனாய் நிற்கிறபோது உங்களுக்கு குரு என்பவரே மாதா. குரு என்பவரே பிதாவாக இருந்து தெய்வத்திடம் அழைத்துப் போகக் கூடியவராக இருக்கிறார். தாயும் தந்தையுமாகி நிற்கின்ற குரு நீங்கள் வளர்ந்த பிறகு உதவி செய்பவர். உங்கள் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்துகிறவர். உங்களை வழி நடத்துகிறவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறும் வரை குரு என்பவர் உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் வாலிபமான பிறகு குரு என்பவர் இல்லாது வாழ்க்கை இல்லை. குரு என்பவருக்குள் மாதா, பிதாவும் ஏன் கடவுளும் அடக்கம்.