Wednesday, February 20, 2008

குரு – ஒரு நேரடியான லீலா விநோதம் – எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பேசுகிறார்……..

கடவுள் வழிபாடு என்பது ஒரு சுகம். மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற விஷயம்। அடுத்த நாள்,அடுத்த கணம் பற்றி தெரியாத போது இந்த நம்பிக்கை தான் ஆதாரமாக வாழ்க்கையை நகர்த்திப் போகிறது. அடுத்த நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டால் கடந்த காலத்தின் வேதனைகள் காணாமல் போகின்றன. நிகழ்காலம் மகிழ்ச்சியாய் முன்னே இருக்கிறது. நிகழ்காலத்திலேயே வாழ எதிர்கால நம்பிக்கையும், கடந்த கால வேதனைகள் பற்றிய மறதியும் மிக அவசியம்.



வழிபாடு என்பது நிகழ்காலத்தில் இருக்க வைப்பது.நிகழ்காலத்தில் இருக்கத் தெரியுமானால் உள்ளுக்குள்ளே எண்ணங்கள் தோன்றும் போதே பார்த்துத் தெளிந்து விடலாம். உள்ளே எண்ணங்கள் தோன்றும் போதே பார்க்கத் தெரிந்து விட்டால், நல்லது கெட்டது என்பதைத் தாண்டி அந்த விஷயத்தினுடைய தன்மையை அறிந்து விடலாம். விஷயத்தின் தன்மையை எதிரே இருப்போரின் குண விசேஷத்தை எந்த கலப்பும் இல்லாமல் சரியாகப் பார்க்கத் துவங்கினால் அதுவே பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான ஆரம்பம்।


வாழ்க்கை என்பது தொடர்பு கொள்ளல்.
தொடர்பு கொள்ள தெளிவோடு இருத்தல் மிகவும் உதவும். தெளிவோடு இருக்க பணிவு அவசியம். பணிவு இருப்பின் குருவின் அண்மை கிடைக்கும். குருவின் அண்மை கோடான கோடி நன்மையை கொண்டு வந்து தரும். சொல்லி மாளாது.
எத்தனை கோயில்கள், எத்தனை தெய்வங்கள் இருப்பினும் குருவின் சந்நதிக்கு முன்பு ஈடாகுமா. கோபுரமும், கல்லும் அடையாளமாக இருந்த பல தெய்வச் சின்னங்களை பரவசத்தோடு பார்த்து விட்டு குருவின் சந்நதிக்கு வரும் போது கொஞ்சம் பயம் ஏற்படுகிறது.


குருவின் கூர்மையான பார்வையும், சிரிப்பும், பேச்சும் மிக அண்மையில் உணரும் போது இது வேறு என்று புரிகிறது. நடமாடும் தெய்வத்தை எல்லோராலும் ஏற்பதற்கு இயலாது. பணிவை இயல்பாய் கொண்டவருக்கு குரு வழிபாடு மிக மிக எளிது.


எதற்குப் பணிய வேண்டும் என்று கேட்பவருக்கு கல் தெய்வங்களே உத்தமம்.அந்த தெய்வங்கள் நேரடியாகப் பேசாது। மறைமுகமாகப் பேசும்। மறைமுகமாகப் பேசியது தெய்வமா இல்லையா என்றும் தெரியாது। எனவே பேசாதிருக்கும் தெய்வமே பெரிதும் புகழப்படும்.

.

குரு அவ்விதமல்ல.அது நேரடியான லீலா விநோதம்
















(பாலகுமாரன் - சில கோயில்கள் சில அனுபவங்கள் – குமுதம் பக்தி பிப்ரவரி 16-29 ,2008 )

http://www.kumudam.com/magazine/Bakthi/2008-02-16/pg10.php

http://www.angelfire.com/realm/bodhisattva/ramsuratkumar.html

2 comments:

said...

its helpful,informative,clear and thought-provoking

said...

//மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற விஷயம்। அடுத்த நாள்,அடுத்த கணம் பற்றி தெரியாத போது இந்த நம்பிக்கை தான் ஆதாரமாக வாழ்க்கையை நகர்த்திப் போகிறது. அடுத்த நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டால் கடந்த காலத்தின் வேதனைகள் காணாமல் போகின்றன. நிகழ்காலம் மகிழ்ச்சியாய் முன்னே இருக்கிறது. நிகழ்காலத்திலேயே வாழ எதிர்கால நம்பிக்கையும், கடந்த கால வேதனைகள் பற்றிய மறதியும் மிக அவசியம்.//
கண்ணதாசனுடைய எழுத்துகளின் மீது எனக்கு தீராத மோகம் உண்டு. அவருடைய எழுத்துக்களை படிக்கும் போது ஏதோ இன்னொரு மனதோடு உரையாடுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும். உங்களுடைய இந்த வாக்கியத்தை படித்த பொது நான் அவ்வாறே உணர்ந்தேன்.