ஐயா, துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார் ? துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா ?
ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது.
குரு என்பவர் யார் தன்னை நமஸ்கரிக்கிறாரோ அவருக்கு மட்டுமே அருள்புரிபவர் அல்ல. தன்னை நமஸ்கரிக்கிறவர்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்குமே அவர் ஆசிர்வாதம் செய்யக் கூடியவர். தன்னுடைய சீடர்களின் குடும்பத்தினர் ஒன்றாக இருந்தால் தான் சீடன் முழுமையாக இருப்பான், ம லர்ச்சியாக இருப்பான் என்பது ஒரு குருவுக்கு நன்கு தெரியும். எனவே, ஒரு குடும்பம் முழுவதையும் உள்ளுக்குள் வாங்கி அந்த குடும்பத்தை போற்றி பாதுகாத்து வ ரவேண்டியது ஒரு குருவினுடைய இயல்பாகிறது.
ஸ்ரீராமானுஜருடைய ஆச்சாரியர் பெரியநம்பி. பெரியநம்பிக்கு அத்துழாய் என்று ஒரு மகள் இருந்தாள். அத்துழாய்க்கு விமரிசையாக திருமணம் நடந்தது. அவளுக்கு பெரியநம்பி புத்திமதிகள் சொல்லி புக்ககம் அனுப்பி வைத்தார். இனி மாமனாரையும், மாமியாரையும் தான் தாய் தந்தையாக நினைக்க வேண்டும் என்று அவளுக்கு எடுத்து சொல்லி, அங்கே நன்கு பழகி சகல ரையும் கவரும் வண்ணம் பேசி,சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
அத்துழாய் கெட்டிக்கார பெண். புக்ககத்தில் எல்லோரோடும் பரிவோடும், பிரியத்தோடும் நடந்து கொண்டாள். ஆனால், அத்துழாய் மாமியாருக்கு அவளின் மீது அதிக பிடிப்பில்லை. பெரியநம்பி ஸ்ரீரங்கத்தில் ஒரு மதிப்பான ஆள் என்பதால் எல்லோரும் திருமணத்திற்கு தலையாட்டி விட்டார்களே தவிர, பெரியநம்பி செய்த சீரை விட அதிகம் சீர் செய்து, இன்னும் அழகியான பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்திருக்கலாம் என்ற குறை அவளுக்கு இருந்தது. சீர் போதவில்லை என்று சொல்வதற்கும் பயமாக இருந்தது. எனவே, நேரிடையாக சொல்லாமல் அத்துழாய் மீது சிடுசிடுப்பாக இருந்தாள்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் தான் மாமியாருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது போலும். எனவே, அ வ ளை காவேரிக் கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு அவளுக்கு குளிர குளிர சொம்பில் நீர் ஊற்றி, முதுகு தேய்த்துவிட்டு, வேண்டுமென்ற பணிவிடைகள் செய்து இடையிடையே தன் மனதையும் வெளிப்படுத்தி தன்னை மகள் போல நடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்து வரலாம் என்ற எண்ணம் கொண்டு அத்துழாய் மாமியாரை காவிரிக்கு நீராட வருமாறு அழைத்தாள்.
மாமியாருக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
"நீ அதிகாலையில் குளிப்பதற்காக காவிரிக்குப் போக என்னை ஏன் துணைக்கு கூப்பிடுகிறாய். வேண்டுமென்றால் ஒரு சீதன வெள்ளாட்டியை கூட்டிக்கொண்டு போக வேண்டியது தானே" என்று இடித்துரைத்தாள்.
அதென்ன சீதன வெள்ளாட்டி?
முன்பெல்லாம் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவளோடு அவளுக்கு வேலை செய்வதற்கென்று ஒரு வேலைக்காரியையும் அனுப்புவது வழக்கம். அந்த வேலைக்காரிக்கு சீதன வெள்ளாட்டி என்று பெயர்.
எந்த சீதனமும் சரியாகச் செய்யாமல் இருந்த பெரியநம்பியை கேலி செய்யும் வண்ணம், அவர் கையாலாகாத்தனத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம் 'வேண்டுமென்றால் ஒரு சீதன வெள்ளாட்டியை அழைத்துக் கொண்டு போயேன்' என்று மாமியார் சொன்னது அத்துழாய்க்கு சுருக்கென்று வலித்தது. தந்தையினுடைய இயலாமையை எவ்வளவு மோசமாக சுட்டிக் காட்டுகிறாள் என்று வருத்தப்பட்டாள்.
"இன்னும் சீர் வேண்டும் போலிருக்கிறது அப்பா. என் மாமியாருக்கு நீங்கள் செய்த சீர் போதவில்லை. எப்போதும் சிடுசிடுவென்று இருக்கிறாள். காவிரிக்கரைக்கு காலார போய்வரலாம் என்று பிரியமாக கூப்பிட்டாலும் 'நான் என்ன சீதன வெள்ளாட்டியா' என்று கோபித்துக் கொள்கிறாள்" என்று அத்துழாய் விசும்பலோடு சொல்ல, பெரியநம்பி, "இதை நீ என்னிடம் சொல்வானேன். இப்போது நமக்கு இருக்கிற ஜீயரான ஸ்ரீராமானுஜரிடம் போய்ச் சொல், நம் குடும்பத்துக் குறைகளை அவர்தான் தீர்ப்பார்' என்று சொன்னார்.
அத்துழாய்க்கு ஸ்ரீராமானுஜர் மீது மிகுந்த பக்தி. சிறுவயதிலிருந்தே அவரை நமஸ்கரித்து குருவாய் உள்ளுக்குள் ஏற்றுக் கொண்டு, சகல நேரமும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருந்த அத்துழாய் ஸ்ரீராமானுஜரிடம் ஓடினாள். தாள் பணிந்து நடந்த விஷயத்தைச் சொன்னாள்.
"அவ்வளவுதானே. உங்கள் மாமியார் கேட்பது நியாயம் தான். உன் தகப்பனால், சீதன வெள்ளாட்டியை அ னுப்ப முடியாவிட்டால் என்ன. இதோ நான் அனுப்புகிறேன். முதலியாண்டானை கூட்டிக்கொண்டு போ. அவன் உனக்கு சீதன வெள்ளாட்டியாக இருப்பான். வேலைக்காரிக்கு பதில் வேலைக்காரனை அனுப்புகிறேன். அவனை ஏவி என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்,'' என்று தன்னுடைய சீடர்களில் முதல்வரான முதலியாண்டானை அனுப்பினார்.
முதலியாண்டான் அத்துழாயோடு அவள் வீட்டிற்குப் போனார். அங்கே மாமியார் இல்லை. வீடு முழுவதும் பெருக்கினார். ஒட்டடை அடித்தார். முற்றத்தை சுத்தம் செய்தார். அங்குள்ள பாத்திரங்களைக் கழுவினார். துணிமணிகளை மடித்து வைத்தார். கொல்லைப்புறம் இருக்கிற புற்களைச் செதுக்கினார். வாசலில் நீர் தெளித்தார். திண்ணையை சாணமிட்டு பெருக்கினார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினார். சமையலுக்கு விறகு பிளந்து வைத்தார். தானியங்களை சுத்தப்படுத்தினார்.
மாமியார் எங்கோ ஊர் முழுவதும் சுற்றிவிட்டு மாலை வந்தபோது வீடு பளிச்சென்று இருப்பதைப் பார்த்து வியந்தாள்.
'யார் இத்தனை வேலை செய்தது" அத்துழாயிடம் கேட்டாள்.
"எனக்காக அப்பா அனுப்பித்த வேலையாள் செய்தார்" அத்துழாய் சொன்னாள்.
"யார் அந்த வேலையாள்" மாமியார் விசாரிக்க, முதலியாண்டான் அவள் முன் கைகட்டி நின்றார்.
"இன்னும் ஏதேனும் வேலை இருந்தால், சொல்லுங்கள் அம்மணி. என்னை இங்கு சீதன வெள்ளாட்டியாக இருக்க, என்னுடைய குரு பணித்திருக்கிறார். மேலும், ஏதும் வேலைகள் இருந்தால் சொல்லுங்கள். வெகு நிச்சயமாய் இந்த வீட்டிற்காக செய்கிறேன்" என்று முதலியாண்டான் சொல்ல, மாமியார் பதறினாள்.
'ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடர். வேதமறிந்தவர். ஞானவித்து. தமிழிலும், சம ஸ்கிருத்திலும் புலமை மிக்கவர். வைணவ சம்பிரதாயங்களில் ஊறித் தேர்ந்தவர். பரம பாகவதர். அந்த முதலியாண்டானை வீட்டு வேலையாளாக எப்படி வைத்து கொள்வது. எவ்வளவு பெரிய அபச்சாரம் இது'
அவள் பயந்தாள். அத்துழாயிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். ஒடிப்போய் ஸ்ரீராமானுஜர் காலில் விழுந்து, "நான் ஏதோ ஒரு ஆத்திரத்தில் பேசிவிட்டேன். அதற்காக உங்கள் சீடரை எனக்கு சீதன வெள்ளாட்டியாக அனுப்பலாமா. தயவு செய்து அவரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். என்னுடைய மருமகளுக்கு நான் இனிமேல் நான் சீதன வெள்ளாட்டியாக இருக்கிறேன். அவளுக்குண்டான வேலைகளை நான் செய்கிறேன். என்னுடைய கர்வத்தை நீங்கள் அழித்து விட்டீர்கள். இனி ஒருபொழுதும் அத்துழாயை நான் கடுமையாகப் பேசமாட்டேன். அவளை என் மகளாக நினைப்பேன்" என்று வாக்குறுதி கொடுத்தாள்.
முதலியாண்டானை ஸ்ரீராமானுஜர் திரும்பப் பெற்றுக் கொண்டார். அத்துழாயின் மாமியாருக்கும், அன்பையும், பண்பையும், நாராயண மந்திரத்தையும் உபதேசித்தார்.
ஒரு குடும்பத்திலிருந்து குருவிடம் ஒருவர் வந்தால் போதும். அந்த ஒருவரைப் பின்பற்றி அந்த குடும்பம் முழுவதுமே குருவிடம் சரணடைய விரைந்தோடி வரும். இன்று இல்லையெனினும் ஒரு நாள் நிச்சயம் வரும்.
ஏனெனில்,குருவின் எல்லையில்லாத கருணை எந்த பிரதிபலனையும் எதிர்பாராதது. குருவின் அரவணைப்பு ஒரு சுகம். ஒரு நிம்மதி.
Monday, March 31, 2008
குரு வழிபாடும் - இல்லறமும் – எழுத்துச் சித்தர் பதிலளிக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
The Article is very good. From this we are able to understand Guru krupai will sort out any type of problem and Mudhaliyandan guru bhakthi.
அன்புள்ள கிருஷ்ணா துளசி.
வணக்கம்.
இந்த பதிவுக்காக தனியே நன்றி தெரிவித்து எமது நமஸ்கரங்களை ஐயாவுக்கு உங்கள் மூலம் தெரிவிக்கிறோம். இத்தகைய அருமையான விஷயங்களை அகழ்ந்தெடுத்து அவர் சொல்லி தெரிந்துகொள்வதிலே மிகவும் தெளிவு ஊட்டுவதாக இருக்கிறது. குரு என்று புதுசாய் ஒரு தொகுப்பு ஐயா சமீபத்திலே வெளியிட்டிருப்பதை படித்து சிலாகித்து என் அம்மா சொன்னார்கள் இரு வாரம் முன். அது இன்னமும் என்வசம் வரவில்லை. மிக ஆவலாக இருக்கிறேன் மேலும் அறிந்துகொள்ள. உங்கள் கருணையான முயற்சியின் விளைவான இப்பதிவுகளுக்காக என் நன்றி கலந்த வணக்கங்கள்.
வணக்கம்.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
தங்கள் வரவிற்கும் தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. குரு புத்தகம் ஒவ்வொருவரும் முழுவதும் படித்து அனுபவித்து உள்வாங்க வேண்டிய மிக முக்கியமான படைப்புக்களில் ஒன்று.
in which magazines balakumaran sir writing now? why not writing in palsuvai naaval now a days...
welcome vaali
iyya is sincerely working on two novels ; one about rajendra chola and the other about life after death .
hope he will meet you all thru palsuvai naaval soon....
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
அதற்கான வழிமுறைகளையும் குருவே அறிவார் ! நல்ல படிப்பினை. நன்றி
உங்கள் வரவு நல்வரவாகுக கபீரன்பன்.
" கருணை என்றால் ஒரு வரம்பு தான் இல்லையோ
குருவின் அருளுக்கு உவமை தான் சொல்லவோ " என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ......
அதனால் தானோ என்னவோ குருவை தாயிற்கும் தந்தைக்கும் மேலான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள்...
This article is very nice
Om sri yogiramsurathkumar
Yezhuthu chitharidam nangalum kelvigal ketkalama?
மிக அருமையான பதிப்பு!
உங்கள் பதிப்பை எங்கள் வலைபூக்கள் தளத்தில் பதிவு செய்துள்ளோம். மேலும் ஆன்மீக கருத்துக்களை எங்கள் www.valaipookkal.com தளத்தின் ஆன்மீக பகுதியில் பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
நன்றி
வலைபூக்கள் தளம்
பதிவு
Post a Comment