ஐயா, குழந்தையை நரபலி கொடுத்து கடவுளை திருப்தி செய்யும் கதை ஒன்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதையில் இருக்கிறது. இது நியாயம்தானா. எந்தக் கடவுள் நரபலி கேட்டார். அதுவும் பெற்ற குழந்தையையே வெட்டிக்கொடு என்று சொல்வார். நான் இந்து மதத்தைச் சார்ந்தவனாயினும் இந்தக்கதை என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. அதனால் கேட்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.
உங்கள் அறியாமையில் விளைந்த கேள்வி அது. எந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசிக்காமல் மேலோட்டமாக உங்கள் அபிப்ராயம் வைத்தே உலகத்தை எடைபோடுகின்ற சிறுமையில் விளைந்த விளைவு அது. மிகத் தெளிவான கருத்துகளை வாழ்வியலைப் பற்றிக் கொண்ட இந்து மதம் தன்னை வெளிப்படுத்தச் சொல்லும் கதைகளை மிகக் கவனமாக நெய்திருக்கிறது. வெகு குறிப்பாக அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதைகளும் மிகப்பெரிய வாழ்வியல் விளக்கம் நமக்கு அளிப்பவை. யோசிக்க யோசிக்க தெளிவாக்குபவை.
வெற்றி என்றும், தன் தேசத்து எதிரியை வீழ்த்துவது என்பதும், அடுத்தவரை வெட்டிக் கொன்றால்தான் சுகமாக இருக்க முடியும் என்றும், தான் சுகமாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே அந்தக் கொலைகள் நியாயப்படுத்தப்பட்டன என்றும், தர்மத்தின் பாற்பட்டது என்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம். எனவே, உலகத்தின் நாகரீகமாக, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இதுவே தர்மமாக இருக்கிறது. நாடு பிடிக்கக் கொலை செய்யலாம். அடுத்தவர் செல்வத்தை சூரையாட வெட்டிக் கொல்லலாம். குழு மனப்பான்மையோடு பரஸ்பரம் வெட்டி சிதைத்து இடையறாது கொலைகளை இந்தப்பூமி செய்து வந்திருக்கிறாது.
பரஞ்சோதி என்கிற அந்த தளபதி, மன்னனுக்காக பல போர்கள் செய்து, பல பேரைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடி,இனி போதும் என்று கடவுள் பணிக்குத் திரும்புகிறார். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் கடவுள் பணிக்குத் திரும்பியதாலேயே, ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டதாலேயே இதுவரை அவர் செய்துவந்தவை நியாயமாகி விடுமா? ஏகப்பட்ட அக்கிரமங்களைச் செய்துவிட்டு, உழவாரப்பணி என்று ஆரம்பித்து விட்டால் உத்தமராகி விடமுடியுமா?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
அந்தத் தளபதி மிகச் சிறந்த தளபதியாக இருப்பினும்,அவர் செய்த கொலைகள்,அவர் வாழ்க்கையில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். எத்தனை பேரை வெட்டி வீழ்த்தியிருக்கிறார். அதற்காக, உன் தர்மத்திற்காக, உன் கொள்கைகளுக்காக, எத்தனை பேரை குத்திக் கொன்றிருக்கிறாய். ஏனெனில் அவர்களெல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்கள். அப்பொழுது வேண்டியவர்கள் யார். வேண்டியவர்களில் சிறந்தவர் யார், தாயா, தகப்பனா, மனைவியா அல்லது நீ பெற்ற குழந்தையா என்று ஒரு மனிதனைக் கேட்டால், தாய் தந்தையரையும் விட, மனைவியையும் விட, அவன் தன் குழந்தையைத் தான் தனக்கு மிகவும் நேசிப்புக்கு உகந்தவனாகக் கருதுகிறான்.
அப்படி நீ வெட்டிக் கொன்றவர்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் குழந்தைகள்தானே. அடித்துக் கொன்றவர்களெல்லாம் பல குழந்தைகளுக்கு தந்தையாய் இருந்தவர்கள் தானே. உறவாக வளர்ந்தவர்கள்தானே. அவர்களை எதிரியாக நினைத்துவிட்டு, உன் குழந்தையை உயிர் என்று கொஞ்சுகிறாயே. உன் குழந்தையை உன்னால் கொல்ல முடியுமா, வெட்டி எறிய முடியுமா, ஆயிரம் ஆயிரமாய் கொலைகள் செய்திருக்கிறாயே. உன் குழந்தையை நறுக்கி கறி செய்ய முடியுமா, உன்னுடைய புகழை, உன்னுடைய வீரத்தை தன்னுடையது என்று பங்கு போட்டுக் கொண்டாளே உன் மனைவி இதில் பங்கு போட்டுக் கொள்வாளா. முதலமைச்சரின் மனைவி என்று நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாளே. இப்போதும் செய்வாளா என்று கணவனுக்கும், மனைவிக்கும் இறைவன் சோதனை வைக்க, அந்தப் போர் வீரர் தன் மனைவியோடு தன்னைப் பற்றி முழுவதுமாக விசாரத்தில் ஈடுபட்டதால் தான் எதுவும் செய்யவில்லை. தான் வெறும் கருவி. செய்தது நான் இல்லை. நான் தளபதியும் அல்ல. சகலமும் இறைவனின் திருவுளத்தின்படி நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டதால், ஒரு இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்ததால் அதை எந்தவித மனவேதனையுமின்றி செய்ய முடிந்தது.
அவர் மனைவியால் சமைக்க முடிந்தது. முந்திய வினைக்குக் கிடைத்த தண்டனை என்பதாய் அந்தத் தம்பதிகள் புரிந்து கொண்டார்கள்.
குழந்தையை வெட்டிக் கொல்வது துன்பம் என்று நீங்கள் கருதினீர்கள் என்றால் அந்தத் துன்பத்திற்கு முன்வினை ஒன்று இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை ஒன்று ஏற்பட்டது என்றால், அந்தச் சோதனைக்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணத்தையும், காரியத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு அவன் கட்டளைப்படி செய்யுங்கள் என்பது கருத்து. உண்மையான சிவத்தொண்டர்களும் சிவரூபமே என்பதும் இந்தக் கதையின் கருத்து.
6 comments:
//சகலமும் இறைவனின் திருவுளத்தின்படி நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டதால், ஒரு இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்ததால் அதை எந்தவித மனவேதனையுமின்றி செய்ய முடிந்தது.
அவர் மனைவியால் சமைக்க முடிந்தது. முந்திய வினைக்குக் கிடைத்த தண்டனை என்பதாய் அந்தத் தம்பதிகள் புரிந்து கொண்டார்கள்.//
பாலகுமாரனின் ஆன்மீக எழுத்துக்கள்
எல்லோரையும் சென்று சேர தங்களின் முயற்சியை வாழ்த்துகிறேன்
Good question & very detailed answer. when ever iam in trouble i will ask, God why all this problem to me, the answer given by Bala sir says that, what ever i did with my conscience or with out conscience is coming back to me. I should very careful in all my karma’s. thanks Bala sir.
வணக்கம்,
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரன சிருத்தொண்டர் பற்றி ஐயா மிக எளிமையான அதே நேரத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக தெளிவாக கூறியுள்ளார்.
வாழ்க்கையில் மிகப் பெரிய துன்பம் ஏற்ப்பட்டால், அது எந்த காரணமும், காரியமும் இல்லாமல் நடைப்பெறுவதில்லை. எல்லாம் அவன் செயலே, எல்லாவற்றையும் இறைவனிடம் கொடுத்துவிட்டு, அவன் கட்டளைப்படி நடப்பது என்ற விஷயம் நன்றாக புரிந்து கொண்டோம் இந்த நாயன்மார் கதை மூலம்.
நன்றி
கலை வினோத்
Dear Sir,
This really wonderful collection please update daily am visiting your site almost daily please continue the same
kanthan
"காரணத்தையும், காரியத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு அவன் கட்டளைப்படி செய்யுங்கள் என்பது கருத்து"
சில நேரங்களில் சில வார்த்தைகள் தெய்வம் தரும் கட்டளையாகவே தோன்றுவதுண்டு அது போன்றதொரு வார்க்கு இது.
To get this book online:
http://www.nammabooks.com/Balakumaran/Udayar-All-parts-1to6
World wide shipping
Post a Comment