Sunday, June 28, 2009

உடையார் - ஒரு முன்னுரை - பாகம் இரண்டு

உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் எப்படியிருப்பார் கருப்பா, சிகப்பா, குட்டையா, நெட்டையா, ஒல்லியா என்று யாருக்கும் தெரியாது. சில சித்திரங்களும், சில சிலைகளும் அவர் இவ்விதமாக இருப்பார் என்று காட்டிகின்றன.அந்தச் சிலைகளிலிருந்து அவர் நிறமும், நடையும், உடையும், பாவனையும் வெளி வந்துவிடாது. படம் வெறும் அடையாளமாகத்தான் இருக்கும். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அதை என்னுள் தேக்கி அவர் இப்படி இருந்திருக்கக் கூடும் என்று நான் எழுதியிருக்கிறேன். அவருடைய மனைவிகள் இத்தனை பேர் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அதில் இவள் முக்கியமானவளாக இருந்திருப்பாள் என்று பல்வேறு காரணங்களை வைத்து ஒரு யூகம் செய்திருக்கிறேன்.

பட்டமகிஷிக்கோ, ராஜேந்திர சோழனை பெற்ற தாயார் வானதிக்கோ பள்ளிப்படை கோயில் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவி என்கிற பெண்மணிக்கு பள்ளிப்படைக் கோயில் இருந்திருக்கிறது. அதுவும் இராஜராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. தந்தையினுடைய அனுக்கிக்கு கோவில் எழுப்புகிற அரசனின் செயலை உற்றுப்பார்க்கிறபோது அவள் அற்புதமான பெண்மணியாய் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பட்டமகிஷிக்கு, வானவன் மாதேவிக்கு பள்ளிப்படை இருந்திருக்கலாம். சிதிலமாயிருக்கலாம். பஞ்சவன் மாதேவி கோவிலும் கண்ணெதிரே இடிபட இருந்தது. யார் செய்த புண்ணியமோ, அதை இந்து அறநிலையத்துறை மறுபடியும் தூக்கிக் கட்டியிருக்கிறது.

மாதேவடிகள் என்று இராஜராஜசோழனின் மகள் ஒருத்தி கட்டியகோயில் சிதிலமான நிலையில் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அது தரையோடு தரையாக மாறும். அதைத் காப்பாற்ற இன்னும் வேளை வரவில்லை. இந்தத் தமிழ்தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம்பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது, போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது பெருங்குறை. மக்கள் எவ்வழி அவ்விதம் அரசு.

கவிதை என்றால் சினிமாப்பாட்டு. ஓவியம் என்றால் வாரப்பத்திரிக்கை. இலக்கியம் என்றால் வேண்டாத விஷயம். தியாகிகள் என்றால் கட்சித்தலைவர்கள் என்று மிகவும் சுருங்கிப்போன இந்த மக்களிடையே தமிழர்களின் பழம்பெருமையை கொஞ்சம் உரத்துக் கூறித்தான் ஞாபகப்படுத்த வேண்டும். கொஞ்சம் அலங்காரமாகப் பேசித்தான் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். ஹிந்தியை அழிப்பதால் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழை போற்றுவதால்தான் தமிழ் வாழும் என்பதை அவர்களுக்கு லேசாய் இடித்துரைக்க வேண்டும்.

ஆங்கிலப்படிப்பு மட்டுமே மேன்மையன்று. அதில் பேசுவதால் மட்டுமே ஞானம் வந்து விடாது. நம்முடைய தாய்மொழியான தமிழில் நுணுக்கங்கள் நிறைந்த பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மனித உணர்வுகளை மிகத் துல்லியமாகத் காட்டுகின்ற அற்புதமான கவிதைகள் இருக்கின்றன. இப்படியும் யோசிக்க முடியுமா மனிதர்களால் என்று இன்றைக்கும் வியக்க வைக்கின்ற காவியங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப சொல்லப்பட்டதால் திருக்குறளுக்கு தமிழ் மக்களிடையே ஒரு மேன்மை வந்திருக்கிறது. ஆனால், ஸ்நேகம் வந்திருக்கிறதா. எனக்குச் சந்தேகமே. திருக்குறள் முக்கியமானதென்று என்று தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள். நெஞ்சுக்குள் இறக்கிக் கொள்கிறார்களா. கேள்விக்குறியே.

எனவே, தமிழ் மொழியின் தொன்மை மக்களுக்குத் தெரியாமல் போனது போல இந்தத் தமிழ் நாகரிகத்தினுடைய தொன்மை, பரப்பளவு, கனம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இவளை உணர்ச்சிப் பூர்வமாக நான் அணுகி இந்தச் சோழதேசத்து வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன்.

காதுகள் உள்ளோர் கேட்கக்கடவர். இதற்கொரு காது வேண்டியிருக்கிறது. இதற்கொரு விதமான சிந்தனை வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு விதமான தாகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு தவிப்பு வேண்டியிருக்கிறது. இது எல்லோருக்கும் இருக்குமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இருக்கின்ற சிலபேருக்கு எளிதாக்கி அரைத்துக் குடிப்பதற்கு கொடுக்க வேண்டுமல்லவா, அந்தச் செயலை நான் செய்திருக்கிறேன்.
தமிழ் நாகரிகத்தின் மேன்மையை ஒரு ஐரோப்பியர் பாழடைந்த கோயில்களுக்குள் ஏறி, உதவியாளர்களோடு கற்களின் மீது சுண்ணாம்புத் தடவி படித்து, படித்ததை எழுதி, மிகப் பெரிய குறிப்புகளாகச் செய்து வைத்திருக்கிறார் . திரு.ஹுல்ஷ் என்ற அந்த பிரிட்டானியப் பெருமகனுக்குத் தமிழ்தேசம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு திரு.நீலகண்ட சாஸ்திரியிலிருந்து இன்று மிகச்சிறப்பாக தனிமனிதனாக சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் டாக்டர் கலைகோவன் வரை, திரு. சதாசிவப் பண்டாரத்தாரிலிருந்து, அரசாங்க உத்தியோகஸ்தராக இருப்பினும் அதைத்தாண்டி சோழ தேசத்தின் மீது மாறாக காதல் கொண்ட டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் வரை பல்வேறு நண்பர்களுடைய கடும் உழைப்பை நான் உள்வாங்கி கொண்டு உங்களுக்கு புரியும் வண்ணம் தேன் குழைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திரும்ப திரும்ப படித்த போது தேன் சுவை போதையில் நான் பல வருடங்கள் திளைத்திருந்தேன்.

கட்டிரைகள் கொடுத்த போதையோடு நான் நேரே சென்று இந்த பெரிய கோயில் என்கிற கவினுரு பொக்கிஷத்தைப் பார்க்கும் போது இன்னும் வசமிழந்தேன்.

ஒருமுறையா, இருமுறையா முப்பது வருடங்களுக்கு மேல் எத்தனையோ முறை இந்தக் கோயிலை விதம் விதமாக சுற்றிப்பார்த்திருக்கிறேன். கல்வெட்டுக்களைத் தடவித் தேம்பியிருக்கிறேன். உற்சாகத்தில் குதித்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களை அழைத்து வந்து பார், இதைப்பார், அதைப்பார், அங்கே பார், இங்கே பார் என்று கூவலாய் பேசியிருக்கிறேன். கையிலே ஒரு தடியை வைத்துக் கொண்டு அந்த கோபுர வாசலில் நின்றபடி

“திருமகள்போல பெருநிலச் செல்வியும்
தமக்கே உரிமை பூண்டு மெனக்கொள
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி...

என்று கட்டியம்காரனாகக் கூவ ஆசைப்பட்டிருக்கிறேன்.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவிலுக்குப்போய் இருண்டு பாழடைந்து கிடந்த இடத்தை நீரும், துடைப்பமும் கேட்டு வாங்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றி, அவர் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து, அபிஷேகப்பொடி தூவி, கழுவி, பால் ஊற்றி சமனம் செய்து, விபூதி கொட்டி மணக்க வைத்து, நெய் விளக்குகள் ஏற்றி வைத்து, ஒரு வெண்கல விளக்கு ஒரு கண்ணாடி விளக்கு, பொருத்தி வைத்து ஐநூறு ரூபாய்ப் புடவை சார்த்தி, பூபோட்டு, தேவாரப்பதிகம், பாடியிருக்கிறேன்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே...

என்று கண்ணில் நீர் கசிய, இந்த இடம் நல்லபடி மிளிர வேண்டுமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.

கட்டிடக்கலைஞர் நண்பர் திரு. சுந்தர் பரத்வாஜரும், ஜோதிடர் K.P. வித்யாதரனோடும் ராஜராஜன் கால்பட்ட இடங்களெல்லாம் எவை என்று பல்வேறு முறைகள் பயணம் செய்திருக்கிறேன்.

உடையார்குடி என்ற காட்டுமன்னார் கோயிலிலும், குடந்தைக்கு அருகே இருக்கின்ற பழையாறை உடையாளூரிலும், சோழன்மேடு, சோழன் மாளிகை போன்ற இடங்களிலும் பகலும், இரவும் படுத்துக் கிடந்திருக்கிறேன். “பூச்சிப்புட்டு இருக்கும். இங்க என்னத்துக்கு கிடக்கறீங்க” என்று கிராம மக்கள் விரட்டினாலும், உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஸ்பூரிக்க வேண்டுமென்று கிடந்திருக்கிறேன்.

பெருவுடையார் கோயில் உள்ளுக்குள் இருக்கின்ற ஓவியங்களையும், சிற்பங்களையும், நாற்பது ஐம்பது முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

காரில் பயணப்பட்டால் தூரம் தெரியவில்லை என்று ஸ்கூட்டர் கடன் வாங்கி குதிரையில் பயணப்படுவது போல் தஞ்சையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். குடந்தை, தஞ்சை பெருஞ்சாலையை பல இடங்களில் நடந்தே கடந்திருக்கிறேன்.

மிக உக்கிரமான நிசும்பசூதனி சிலையையும், சில காளி கோவில் சிலைகளையும் அருகே நின்று தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். அந்நேரங்களில் அந்தக் கோவில் சம்பந்தப்பட்டவர்களே கருவறைக்குள் அழைத்து நெருக்கமாய் நின்று தரிசனம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

பதினாறு வயதில் பெருவுடையார் கோவில் பார்க்கும் போது ‘இது ஏதோ அற்புதம்’ என்ற எண்ணம் மனதில் பதிந்தது. திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரும்பத் திரும்பப் பார்த்தது கோயிலைப் பற்றிய விவரங்களை தெரிய வைத்தது. அப்படிப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகு உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் மீது ஈடுபாடு வந்தது. சோழ நாகரிகம் மொத்தமும் எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தனி மனிதனும், அவரைச் சுற்றியுள்ள நாகரிகமும், இந்தப் பெருவுடையார் கோவிலும் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாகி இதை எழுத வேண்டுமென்ற எண்ணம் முப்பத்திரண்டு வயதில் ஏற்பட்டது. முப்பத்தெட்டு வயதில் இதற்கான முயற்சிகளை நான் வேகமாகத் துவங்கினேன். இந்த அறுபது வயதில் எழுதி முடித்து விட்டேன்.

வாசகர்களுக்கு இவர்கள் உண்மையா, இது கற்பனையா என்று ஒரு புதினத்துக்குப் பிறகு கேள்விகள் வருவது இயற்கை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது விழுக்காடு இதிலுள்ள பெயர்கள் உண்மையானவை. பல சம்பவங்கள் உண்மையானவைகள். கல்வெட்டு ஆதாரமுள்ள சம்பவங்கள். என்னுடைய கற்பனையும் இதில் கலந்திருக்கிறது.

பஞ்சவன் மாதேவி எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இறந்த விதம் என் கற்பனை. ஆனால் அவருக்காக பள்ளிப்படைக் கோயில் இராஜேந்திர சோழன் எழுப்பியது என்பது சரித்திரம்.

இராஜராஜ பாண்டிய ஆபத்துதவிகளான சேரதேசத்து நம்பூதிரிகள் தேடிக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது என் கற்பனை. ஆனால் மாதேவடிகள் ஸ்ரீ இராஜராஜ சோழர், மகள் என்பதும் அவர் நடுவிற் பெண்பிள்ளை என்பதும், அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கக்கூடும் என்பதும் சரித்திரம்.

பாறைகள் வெட்டப்பட்ட இடம், கொண்டுவரப்பட்ட விதம் யூகம்தான். வேறு எப்படியும் இது இருந்திருக்காது என்பதுதான் அந்த யூகத்தின் அடிப்படை. சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி இத்தனை உயரம் கல் சுற்றியிருக்கிறார்கள் என்பது சிறிதளவுகூட நம்ப முடியாத ஒரு செய்தி. தஞ்சையில் வாழும் திரு. இராஜேந்திரர் என்ற பொறியல் வல்லுனரின் கூற்றுப்படி இது ஸ்பைரல் சாரமாக, வளைந்து வளைந்து போகும் பாதையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பது ஒரு யூகம். அந்த மண் கொண்டுபோய் கொட்டப்பட்ட இடமும், ஒரு சிறு குன்றென அது நிற்கும் விதமும் இன்னமும் இருக்கின்றன.

அருண்மொழிபட்டனும், சீருடையாளும், சாவூர் பரஞ்சோதியும், வீணை ஆதிச்சனும், கோவிந்தனும் நிஜம். சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் பார்க்க விற்போர் நடந்தது நிஜம். கண்டன்காரியும், காரிக்குளிப்பாகையும் நிஜம். நித்த வினோதப் பெருந்தச்சன், குணவன் நிஜம். குஞ்சரமல்ல பெருஞ்தச்சர் நிஜம். ஆனால் உள் சாந்தாரத்திலுள்ள பரத நாட்டியச் சிற்பங்களுக்கு பஞ்சவன்மாதேவி தான் ஆதாரமாக இருந்தார் என்பது என் கற்பனை. நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட சுவை.

திருவாதிரை களியோடு தந்த கூட்டுக்கறியில் அவரை எத்தனை துவரை எத்தனை என்று எண்ணாது நன்கு ருசித்து உண்ணுங்கள். சோழதேசத்து மேன்மையும், தமிழர் நாகரிகமும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் உங்களுக்கு ஒரு கோடி காட்டுவதுதான் இந்தப் புதினத்தின் நோக்கம்.

இருநூற்று முப்பத்தேழு நாவல்கள் நான் எழுதியனுடைய அடிப்படைக் காரணமே இதை எழுதத்தான். மற்ற நாவல்கள் அத்தனையும் உடையார் எழுதுவதற்குண்டான பயிற்சி தான். ஏதேதோ செய்து, எங்கெங்கோ அலைந்து எதை எதையோ முக்கியம் என்று கருதி, சிதறி, சின்னாபின்னப்பட்டு பிறகு மறுபடியும் ஒன்று கூடி இப்படி ஆறு பாகத்திற்கு ஒரு புதினம் எழுத முடிந்திருக்கிறதென்றால் அது குருவருளன்றி வேறு என்ன.

என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் என்னை நேசித்தார். யூ ஆர் மை பென் என்று சொன்னார். மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்தப் பிச்சைக்காரன் (யோகி ராம்சுரத்குமார்) பாலகுமாரனோடு இருக்க விரும்புகின்றான் என்று சொன்னார். அவர் மகாஞானி. எல்லாம் கடந்தவர். அவருக்குப் பிறவி உண்டா. என்னுள் இருக்கிறார். என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த இயக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த உடையார். இந்த ஆறுபாகப் புதினம்.

சோழசாம்ராஜ்ஜியத்தின் மீது தன் ‘பொன்னியின் செல்வன்’ மூலம் என்னைக் காதல் கொள்ள வைத்த பேராசிரியர் கல்கி அவர்களுக்கு என் வணக்கத்தையும், நன்றியையும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நாவல் எழுத உதவி செய்த என்னுடைய இலக்கிய தொல்பொருள் ஆராய்ச்சி நண்பர்களுக்கும், சோழ தேசத்துக் காதலர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியம் படிக்க என்னை இடையறாது ஊக்கப்படுத்தி ‘பாலகுமாரன் நல்லவன். அவனால் பலருக்கு நல்லது நடக்கும்’ என்று வெகுநாட்களுக்கு முன்னே உறுதியளித்த, எனக்குத் தெம்பு கொடுத்த என் தாயார், தமிழ்ப் பண்டிதை தெய்வத் திரு. ப.சு.சுலோச்சனா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் தமிழ் அவர் போட்ட பிச்சை.

உடையார் எழுதி முடித்ததும் பொங்கிப் பொங்கி வந்த கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும், நேரே பார்க்கும் போது கட்டிக் கொண்டவர்களும் ‘எப்படித் இந்த மாதிரி ஒரு நாவல் எழுதினேள்’ என்று கண்கலங்கியவர்களும், ‘இந்த தடவை ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போப்போறதில்லை. இந்த சம்மர்ல தஞ்சாவூர் முழுக்க இராஜராஜனை தேடிண்டு போகப் போறோம். போகும்படியா பண்ணிட்டீங்க’ என்று சொன்னவர்களும், இம்மாதிரி பாண்டியர்கள் பத்தி எழுதமுடியாதா என்று ஆதங்கப்பட்டவர்களுக்கும், சோழர்கள் காலத்துல தமிழ் எப்படியிருந்தது என்று கேள்வி கேட்டவர்களுக்கும், ஒரு பக்கம் லெட்டர் எழுதறதுக்கு முடியலை என்னால. இத்தனை பக்கம் எழுதியிருக்கீங்கன்னா நீங்க மனுஷனா, இல்ல வேற ஏதாவதா எனக்குத் தெரியலை என்று வியந்தவர்களுக்கும், என் படைப்புக்கு மறைமுகமாகத் துணைபுரிந்த என் துணைவியர் கமலா, சாந்தா இருவருக்கும், ‘சூப்பர் நாவல்பா’ என்று சொன்ன மகள் ஸ்ரீகெளரிக்கும், அப்பா ஒருநாள் உட்கார்ந்து முழுக்க படிக்கணும், படிப்பேன் என்று வாக்குறுதி அளித்த மகன் சூர்யா என்கிற வேங்கடரமணனுக்கும், ‘நாவல்ல இந்த இடம் தப்பு வந்துடுச்சு. மாத்தணும்’ என்று சுட்டிக்காட்டி மாற்றுவதற்கு வழியைச் சொல்லி உதவி செய்த சம்பத்லஷ்மிக்கும், ஒலி நாடாவில் கதை சொல்வதை அங்கிருந்து ஆர்வமாகக் கேட்டு உற்சாகப்படுத்திய பாக்யலஷ்மி சேகருக்கும், இந்திரா பாஸ்கருக்கும், தஞ்சாவூருக்குத் தானே போறீங்க. நாங்களும் வரோம் என்று உடன் வந்து என் பித்து பிடித்த நிலையை பார்த்து ரசித்த அந்தத் தோழிகளுக்கும், சென்னையிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும், சேவர்களுக்கும், என் நண்பர் திரு. ராஜவேலுவுக்கும், அவர் அதிகாரி திரு.சத்யமூர்த்திக்கும், பல நேரங்களில் இந்த ஆறு பாகத்திலும் எனக்குப் பிழைதிருத்தம் செய்தும், தேவையான குறிப்புகளை எடுத்து வைத்தும், என்னோடு விவாதித்தும் என்னைச் சரியான கோணங்களில் பார்க்க வைத்ததுமான என் உடன்பிறந்த சகோதரி, சரித்திர ஆசிரியை சிந்தா ரவி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுகிறது.

ஆறு பாக நாவல் கண்டு அசராது, ‘சீக்கிரம் எழுதுங்கைய்யா’ என்று ஊக்கப்படுத்திய விசா பப்ளிகேஷன் ஸ்ரீ திருப்பதி அவர்களுக்கும், இந்த நாவல் தொடர்ந்து வெளிவர தன் பல்சுவை நாவல் மாதபத்திரிகையின் இடம் கொடுத்து பெருமிதப்பட்ட திரு. பொன்சந்திரசேகர் அவர்கட்கும், ‘இந்த நாவல் நிற்கக்கூடாது, முடிக்கப்பட வேண்டும் என்ன உதவி தேவையெனினும் நான் செய்கிறேன்’ என்று உற்சாகம் தந்த என் அருமை நண்பர் ஸ்ரீ எம்.ரவிச்சந்திரன், கோவை அவர்கட்கும், சிறப்பாக அட்டைப்பட வரைந்த ஓவியர் ஷ்யாம் அவர்கட்கும், என் கண்பார்வையில் ஒரு கோளாறு ஏற்பட, இனி எப்படிப்படிப்பேன், எவ்விதம் எழுதுவேன் என்று பயந்தபோது அக்குறையை நீக்கி அருளிய எங்கள் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக் கண்ணி பெருமாட்டிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

என் எழுத்து வேகத்திற்கு ஈடுகொடுத்து கேட்ட போதெல்லாம், சரித்திர[ புத்தகங்களை என் முன் பரப்பி இந்நாவலை ஒலி நாடாவிலிருந்து காகிதத்திற்கு மாற்றிய என் உதவியாளர் திரு. கிருஷ்ணமூர்த்திக்கு என் ஆசிகள்.

எந்த வியக்தியும் தனி மனிதனால் நடந்து விடுவதில்லை. ஒரு புல்கூட கூட்டு முயற்சியால் தான் முளைக்கிறது, மலர்கிறது. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக்கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.

வாழ்க இராஜராஜத்தேவர்
வளர்க தமிழ் மொழி
சோழம் சோழம் சோழம்

என்றென்றும் அன்புடன்
பாலகுமாரன்

8 comments:

said...

60 வருடங்களுக்கு பிறகு தமிழில் சோழதேசத்தை பற்றிய மிகப் பெரிய புதினம் உடையார். கொண்டாடபட வேண்டும். கொண்டாடப்படுகிறதா?

சுப்பிரமணியன்
மேற்கு மாம்பலம்

said...

சிறுவயதில் இருந்து தஞ்சை கோவிலை பார்க்கும் போது சற்று மலைப்பாக இருந்தது. எப்படி கட்டியிருப்பார்கள் என்ற மலைப்பு. உடையர் படித்த பின்னர் இது வெறுமே மலைத்து நிற்கும் விஷயம் அல்ல. இதற்காக அங்கு வாழ்ந்து கோவில் பணியாற்றிய அத்தனை பேரையும் ஒவ்வொரு நாளும் நினைத்து போற்றதக்க விஷயம். இனி இது போல் பெரிய கோவிலும், அதன் விஷயத்தை முழுவதுமாக வழங்கிய உடையார் நாவலும் இனி சாத்தியமா.

நடராஜன்
வளசரவாக்கம்

said...

BALAKUMARAN IS NOT JUST A WRITER. HE IS MUCH MORE THAN THAT. HE IS A GURU A ACHARYA FOR ALL YOUNGSTERS AND EVEN FOR OLD PERSONS. BALA SIR TEACHES LIFE FOR US. HIS LOVE FOR CHOLA KINGS AND PARTICULARLY THE GREAT RAJARAJA CHOLAN SIMPLY AMAZES ME.PONNIYAN SELVAN BY KALKI WAS MORE STORY ORIENTED. BUT UDAYAR IS MORE OF RAJA RAJA CHOLAN'S TRAITS, THE STRUGGLE HE UNDERWENT TO BUILD THE GREAT PERIYA KOVIL, AND PANCHAVAN MADEVI'S LOVE FOR RAJA RAJA CHOLAN AND ALSO BALA AYYA DESCRIBES A GREAT DEAL ABOUT HOW THE TEMPLE WAS BUILT. HE DESCRIBES IN DETAIL THE ARCHEOLOGICAL ASPECTS THE SCRIPTURES EVERYTHING. THIS IS MASTER PIECE FROM BALA SIR.BEFORE UDAYAR I WAS MESMERISED BY BALA AYYA'S WRITINGS IN MERCURI POOKAL, IRUMBU KUDIRAIGAL, APPAM VADAI THAYIR SADAM,THULASI, THALAIYANAI POOKAL. KADOLARA KURUVUGAL, APPA, THALAIYANAI MANDIRAM, PAYANIGAL GAVANIKKAVUM AND SO MANY WORKS. BUT UDAIYAR TOPS ALL THESE.HATS OFF BALA SIR.PLEASE CONTINUE WRITING.WE ARE EXPECTING ANOTHER MASTERPIECE THE NOVEL ABOUT RAJENDRA CHOLAN.

Anonymous said...

Udaiyar is one of the greatest novel by iyya,whenever i read udaiyar,our mind and soul goes to that period of lifestyle..
I really want to thank you for who all supported to iyya for giving us s great novel.The effort which iyya took for this novel is so great no words to say..my hearty namaskaram to iyya...

Manjula,
Tokyo,Japan.

said...

வணக்கம்

உடையார் என்ற பொக்கிஷத்தை பற்றி நீங்கள் அளிக்கும் முன்னுரை மிகவும் அருமையான விஷயம், இது பல பேருக்கு உதவியாகவும் மற்றும் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
படிக்க படிக்க நிறைய விஷயங்களை உணரமுடிகிறது.நன்றி
கலைவினோத்

said...

இந்த ப்ளாக்கில் உடையாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் படிக்க போகிறவர்கள், மிகவும் கொடுத்து வைத்தவர்கள். திரு சுப்பிரமணியனுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், உடையார் கொண்டாடப்படும்

ராஜேஷ்
கோடம்பாக்கம்

said...

அன்புள்ள கிருஷ்ண துளசி
வணக்கம்.
வணங்கி மகிழ்கிறேன்.
கடந்த இரு மாதங்களாக மீண்டும் உடையாரை ஆழ்ந்து வாசித்து வருகிறேன்.
உடயாரிலே உள்ள பல விஷயாதிகளை குறிப்பெடுத்து,
சம்பவங்களுக்கு தலைப்பு எழுதி,
முழுசையும் வகைப்படுத்தி,
மகாவாக்கியங்களின் தொகுப்பை தனியே எழுதி,
மகான்களின் உபதேச சாரங்களை
பிரித்து எடுத்து எழுதி வைத்துக்கொள்ள மிகவும் ஆசை.
அவசர கதியிலே ஓடும் அன்றாட வாழ்க்கையிலே
அந்த ஆர்வம் சாத்யப்படவில்லை.
அந்த ஆர்வம் அப்படியே ஊறிக்கொண்டு இருக்கிறது.
அனால் மானசீகமாக
ஐயா அவர்களை வணங்கி மகிழ்கி்றேன், ஒவ்வொரு முறை புத்தகப் பக்கத்திலேருந்து தலை திருப்பி குளமான கண்களுடன் வெளியே
வெட்டவெளியை உற்று நோக்குங்கால். !
என் நன்றியையும் நான் அடையும் பரவசத்தையும் வெளிப்படுத்தும்
வழியோ, திறமோ, யோக்யதயோ இல்லையாதலால்
நன்றியை, நன்றியோடு இருப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம்
என்று சும்மா இருக்கிறேன்.

இன்று ஓடும் ரயிலிலே மீண்டும் வாசித்து
அசைபோட்ட இந்த பகுதி மிகவும் ஆழமானதும் ரத்னமயமனாதுமாகும்.

" எனக்கு இன்னும் முழுமை வரவில்லை. திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஒவ்வொரு பதில் கிடைக்கிறது. அந்த பதில்கள் அனைத்தையும் திரட்டி இதுதான் காரணமென்று நான் சொல்வதற்கு ஆசைப்படுகிறேன். ஒரேஒரு காரணத்தால் மட்டும் எந்தக்காரியமும் நடைபெறுவதில்லை. ஒரு காரியத்தைச் சுற்றி பல கரணங்கள் இருக்கின்றன என்பதுதான் வாழ்வின் அடிப்படை விதி. அந்தச் செடி ஏன் தலைஅசைக்கிறது ? காற்று வீசுவதால் என்று மட்டுமே பதில் சொல்லிவிட முடியாது. வேர் பூமியில் ஊன்றியிருப்பதால் என்றும் சொல்லலாம். இல்லையெனில் வீசும் காற்றுக்கு அது வேறெங்கோ குப்பயகப் போய்விடுமல்லவா ? !
அது தலையசைக்க வேர் காரணம்.
அந்த வளைந்த தண்டு கரணம் என்றும் சொல்லலாம்.
அந்தத் தண்டு முழுவதும் நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
அந்தத் தண்டில் பச்சையம் நன்றாகப் பதிந்திருக்கிறது என்று சொல்லலாம்.
மண் கொடுத்த பச்சையம்.
உறிஞ்சப்பட்ட நீர்.
கொழுத்து வளர்ந்த இல்லை.
இப்படி பல்வேறு விஷயங்கள் அந்தச் செடி ஆடக்காரணம்.
அனால், ஏன் செடி ஆடுகிறது என்று கேட்டால் காற்றினால் என்று எல்லோரும் பதில் சொல்வார்கள்.
உண்மை பல்வேறு திக்கிலும் பரவியிருக்கிறது என்பதை உற்றுப் பார்த்தால்தான் தெரியும். "
------
" சிவேனே விரும்பி இப்படி தனக்கொரு ஆலயம் எழுப்பிக்கொண்டான் என்றுதான் இங்குள்ள அனைவருக்கும் தோன்ற வேண்டும் ! " என்ற ஒரு வாசகம் உடையர் ஸ்ரீ ராஜா ராஜத்தேவர் கருதுவதாக வரும். அந்த சிவேனே விரும்பி இப்படி தனக்கொரு ஆலயம் எழுப்பிக்கொண்டதை, இப்படி உடையர் நாவல் மூலம் வெளிப்படுதிதிக்கொண்டான் என்று சத்தியமாக நான் நம்பி வணங்கித் தொழுகிறேன்.

இதை உங்களுக்கு எழுதியேயாகவேண்டும் என்று உதிக்கும் எண்ணத்துக்கு தலை வணங்கியே இப்போ எழுதுகிறேன்.

எங்களது அன்பையும் நமஸ்காரங்களையும் ஐயாவுக்கு தெரியப்படுத்தவும். அவரது சுகத்துக்கும் ஆரோகியத்துக்கும் ப்ரார்த்திக்கிறோம். ஸ்ரீ ராஜேந்திர சோழரைப்பற்றி அவரின் கை வண்ணத்திலே படித்து மகிழ்ந்து போற்றி பாதுகாக்க ஆசையாயிருக்கிறது.

எங்களுக்கும் எங்களது குழைந்தைகளுக்கும் அவரின் ஆசிர்வாதங்களை வேண்டி, உங்களை வணங்கி மகிழ்கிறேன்.
மிகுந்து அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

said...

ஐயா
சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது உங்கள் வாயால் "உடையார்" பற்றி முதன் முறையாக கேள்விபட்டேன்.

பள்ளி வயதில் தமிழ்வாணன், பாக்கியம் ராமசாமி என அலைந்து திரிந்து தமிழ் புத்தககங்கள் படிப்பேன். கல்லூரி சென்றதும் படிப்பும் ,ஆங்கில புத்தங்களும் என்னை கவர தமிழ் புத்தகம் படிப்பது நின்று போனது. ஆதலால் உங்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன், அனால் படித்து இல்லை.

உடையார்-ஐ பற்றி நீங்கள் சொன்ன வார்த்தை என்னை திரும்பி பார்க்க வைத்தன. சோழன் மேல் எனக்கு மிகவும் பிரியம். சிறு வயதிலே என்னை என தந்தையார் பெரிய கோவில் அழைத்து சென்றுள்ளார். அதனை கண்டு வியப்புற்று, சோழனை பற்றிய சிறிய புத்தகங்கள் வாங்கி வந்து படித்தேன். பின் நாளில், பண்டை தமிழர் வாழ்வு முறை பற்றி அறிய ஆவல் கொண்டேன். ஆனால் அதற்கான வழி கண்டதில்லை. சில வருடங்கள் கழித்து அகநானூறு பாடல் உரை நூல் வாங்கி, இரண்டு பக்கம் படித்து , மூடி வைத்ததுதான் நடந்தது.

கடந்த திங்கள் அன்று (28 dec 09) இரண்டு பாகங்கள் வாங்கி , இதோ முதல் பாகம் முடித்தேன்.

முதல் பாகத்திலே , மனம் நிகழ்ந்து, நீண்ட நாள் தாகம் சற்றே தணிந்து , இதை எழுதுகிறேன்.

பண்டை தமிழர் வாழ்வு முறை, நாகரீகம், மன நிலை, சமுக நிலை என அனைத்தையும் பிம்பமாய் கண் முன்னே ஓடியது. ( செம்பியன் மாதேவி கீரை கூட்டு உண்டது முதல் ). ஒரு நாவல் படித்த முழு உணர்வு இருக்கிறது. அனால் இது நாவல் அல்ல எனபது எனக்கு தெளிவாக தெரிகிறது. virtual realitiyil சோழன் காலத்தில் வாழ்ந்து வெளி வந்த உணர்வு பெற்றேன். ராஜராஜரின் நோக்கு, செம்பியன் மாதேவியின் நோக்கு, சாம்பனின் நோக்கு என பல் நோக்கு கொண்ட போக்கு சிந்தனயை தூண்டுவதாக உள்ளது. (அந்த வாத , பிரதிவாதங்கள் ). கண்கள் பனித்த இடங்கள் சில.

பல்கலை கழக ஆராய்ச்சியும் , அரசு இயந்திரமும் நமது பெருமையை ஏட்டில் ஏற்றி வைத்தல் நானும் தெரிந்து கொண்டு, என மகனும் தெரிந்து கொள்வனே என்று ஏக்கத்தில் இருந்தவன் நான். இந்த களஞ்சியம் நிச்சயம் என மகனைபொய் சேரும்.

Dan Brown, JK Rowling படித்து அந்த திறமைகளை வாய் பிளந்து பார்த்து இருந்த நான், என வீட்டு தோட்டத்தில் இதை எல்லாம் கடந்து ஒன்று உள்ளது இன்றே உரைத்தது ஐயா.

ஏன் வட சொற்கள் கொஞ்சம் மிகையகவே உள்ளது? அவர்கள் அப்படித்தானே பேசினார்களா ? இல்லை பிரம்மராயர் வடமண்ணை சார்ந்தவர் என்பதாலா?

நீங்கள் குறிப்பிட்ட சூட்சும நிகழ்வுகள், வரலாற்று குறிப்பில் உள்ளனவா? இதை முதலில் நம்பி, பின்னர் புறந்தள்ளி இருந் எனக்கு மீண்டும் ஒரு சிந்தனை கேள்வி ?

இது நாவல் இல்லை. பண்டை தமிழர் சீர் உரைக்கும் நூலை , சிரமம் இன்றி படிக்க வாய்த்த ஐயாவுக்கு என் இரு கரம் கூப்பி நன்றிகளை சமர்பிக்கிறேன்.

சிவபாலன்