Sunday, June 21, 2009

உடையார் - ஒரு முன்னுரை



நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித் தருகிறேன்; அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுத முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்கள்.

பந்தல் எரிந்த கும்பாபிஷேகத்தையும்,பதவி பறிக்கப்பட்ட தலைவர்களையும், பாதிக்கப்பட்ட அமைச்சர்களையும், சுட்டிக்காட்டினார்களே. எனக்கும் அதுதான் கதி என்று சொன்னார்களே. அவர்கள் என்ன ஆனார்கள். இந்த நாவலை நான் எப்படி முடித்தேன் என்று யோசிப்பு வந்தபோது மிகத்தீவிரமாய் என் குருநாதரைப் பற்றிய நினைப்பு எனக்குள் பீறிட்டு எழுந்தது.

என் சத்குருநாதன் கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான், திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவரிகளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் இந்தப் புதினத்தை ஆறாவது பாகம் வரை எழுதி முடித்துவிட்டேன்.

இந்தப் பிரம்மாண்டமான சரித்திரத்தை என் புத்திக்கு எட்டியவரை உணர்ந்து அனுபவித்து உள்வாங்கி மிகுந்த கவனத்தோடு, இழை இழையாய் நெய்து, பூக்கள் நிறைந்த சால்வையாய் அவர் காலடியில் சமர்ப்பிதம் செய்து விட்டேன். தை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன்.

உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் என்கிற தனி மனிதர் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாது தன்னைச் சேர்ந்த அத்தனை மக்களைப் பற்றியும் அக்கறைப்பட்டு அவர்களையும் இந்த இறைப்பணியில் சேர்த்துக் கொண்டு ஒரு நாகரிகத்தை கல்வெட்டாக விட்டுச்சென்ற கனிவை எண்ணி, அதில் மனம் கரைந்து, அதில் வசப்பட்டு, கதைக்கு நடுவே அந்தக் கனிவை காட்டவும், நான் முயற்சித்திருக்கிறேன்.

சரித்திரக் கதையாக இருப்பினும் போர் பற்றிய விமர்சனமும், பெண்கள் பற்றிய பார்வையும் ஒரு பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளும், கடவுள் பற்றிய சிந்தனையும், அது குறித்த தத்துவமும் விவாதமும் என்றைக்கும் எப்போதும், எவரும் புரிந்து கொண்டு மேற்கொண்டு சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இதில் புகுத்தியிருக்கிறேன்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடைய அடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஓரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இந்த நாவலை சோழதேசம் நோக்கி பயணப்படுகையில் நான் முடிக்க நேர்ந்தது. ஒரு குவாலிஸ் வண்டியில் நண்பர்கள் அமர்ந்திருக்க தாம்பரத்தில் கதை துவங்கி இடையாறது இடையாறது ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்தேன். ஒரு கனத்த மழை போல தங்கு தடையின்றி இந்த நாவல் என்னிலிருந்து மிகச்சீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பயணப்பட்டுக்கொண்டே நாவல் சொல்வதால் அதன் அடர்த்தியும், வேகமும், தெளிவும், அழகும் குறையவே இல்லை. உடன் வந்த என் நண்பர்கள் வியந்துபோனார்கள். அங்கங்கே நான் உணர்ச்சிவசப்பட என் தலையைத் தடவி, பிடரியை வருடி, தோளைத்தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

சோழதேசத்தின் எல்லையைத் தொடும்போது உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லி முடித்துவிட்டு ஓலிநாடாவை பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே பார்த்து அழத்துவங்கினேன். இன்னும் என்னுள் அந்த நேரம் அந்த நினைப்பு பசுமையாக இருக்கிறது. அருகே ஒருவர் இறந்துவிட்டதுபோல, அவர் இறந்த செய்தி ஐந்து நிமிடத்திற்க்கு முன்புதான் எனக்கு தெரிவிக்கப்பட்டதுபோல, துக்கத்தோடு நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த மன்னனுக்காக கிட்டதட்ட கதறலாக அழுதேன். அப்பொழுது அப்படி உணர்ச்சி வசப்பட்டது நியாயமாகத்தான்படுகிறது. அந்த அழுகை சரி என்றுதான் தோன்றுகிறது.

வெறும் புத்தியால் மட்டும் ஒரு புதினத்தை எழுதிவிட முடியாது. ஒரு கல்வெட்டைப் பார்த்து விட்டு அதுபற்றிய தகவல் சொல்வது போல் ஒரு கட்டுரையாய் ஒரு புதினம் எழுதப்படக்கூடாது. விமானம் இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை வருடங்கள் முன்பு கட்டப்பட்டது. இதன் கற்களின் எடை இத்தனை. பிளந்த கற்கள் இவ்வளவு. பிளக்காத கற்கள் இவ்வளவு. உயரே இருக்கின்ற கலசத்தின் எடை இவ்வளவு. சுற்றியுள்ள மதில்சுவரின் அளவு எத்தகையது. ‘இவர்தான் மூலவர் எல்லாரும் சாமி கும்பிட்டுக்கோங்க, சீக்கிரம் வெளியே வாங்க’ என்று ஒரு வழிகாட்டியைப் போல ஒரு எழுத்தாளன் செயல்படமுடியாது.

அந்தக் கட்டிடத்திற்கு அருகே போய் அண்ணாந்து பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதை எப்படிக் கட்டினார்கள். அவர்களெல்லாம் யார். என்ன கணக்கு, என்ன கருவி என்று எவர் வியக்கிறாரோ. நம்முடைய முன்னோர் எத்தனை நேர்த்தியாக இதைச் செய்திருக்கிறார்கள் என்று எவர் பெருமிதப்படிகிறாரோ, இதைச் செய்கின்ற ஆற்றல் இருக்குமென்றால் அவர்களுக்கு இன்னும் என்னென்ன ஆற்றல் இருந்திருக்க வேண்டும். அந்த ஆற்றல் உள்ளவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் எவ்விதமாக குடித்தனம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து யோசிக்கிறார்களோ அப்படி உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது இந்த நாவல்.



............................தொடரும்

8 comments:

said...

வணக்கம்
உடையார் முதல் பாகம் படிக்க ஆரம்பிக்கம்பொழுது தற்செயலாக தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் செல்லும் பாக்கியம் கிடைத்து.அப்பொழுது அங்கு பார்த்த சிற்பங்களீல் புத்த பிஷ்சு போன்ற ஒரு சிற்பம் பார்க்க நேரிட்டது. அப்பொழுது என்ன இங்கு புத்த பிஷ்சு சிற்பம் என்ற சந்தேகம் தோன்றியது. தொடர்ந்து ஐயாவின் உடையார் என்ற புதினத்தை படிக்கும் பொழுது என்னுடைய சந்தேகம் தீர்க்கப்பட்டது.
இதைப்போல் பல நபர்களின் சந்தேகம் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஒவ்வொரு முறை உடையார் படிக்கும்பொழுது புதியதாக படிப்பது போன்று ஒரு பிரம்மை ஏற்படிகிறது.அதுவும் கடைசி பாகத்தில் இராஜராஜசோழன் இறைவனடி சேர்ந்தார் என்று படித்து முடித்த பிறகு மனம் கனமாகிவிட்டது.நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இந்த தலைமுறையினருக்கு உணர்த்திய ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனபூர்வமான நன்றி. இதே போல் பல புதினங்கள் ஐயா அவர்கள் படைக்க வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் ஆவல்.

கலை வினோத்

said...

anivarukum anbu vanakkam,

iam reading this blog for quite some time, it is really very interesting & helpful to recall the books we read & the one which we missed out.

If some one post all the books & katturi & kavithai's of Bala sir's it is very helpful to collect all the books.

All the best to the Crew.

Anbudan
Rama senthilkumar

said...

வணக்கம் ஐயா,
உடையார் பற்றி யாராவது கூறமாட்டார்களா என்கிற தாபத்தை தீர்த்த உங்களுக்கு நன்றி. உடையார் முழுவதும் படித்து முடித்து திகைத்துப் போனேன். அதன் தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று.ஒரு மாமன்னின் வரலாறு முழுமையாக வர ஐயாவின் கடினஉழைப்பும், அவருக்கு உடையார் மீது இருந்த காதலும் தெரிந்தது. மனித நாகரீகத்தின் உச்சத்தை எப்பொழுதே நம் முன்னோர்கள் தொட்டு விட்டதை விவரித்து கூறியவிதம் சமுதாயத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது. இன்றைய தலைமுறைக்கும் புரியும்விதமாய் எளிய எழுத்துக்களால் ஆன்மீகத்தையும் கலந்து கொடுத்தது மிகவும் அருமை. உடையார் வெறும் சரித்திர நாவல் அல்ல. சரித்திர காவியம் பாதுகாக்கபட வேண்டிய பொக்கிக்ஷம். தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து கொடுக்க வேண்டிய பெட்டகம்.
நன்றி.

said...

Dear Thulasi,
This following ANALYSIS is very deep & thrilling.
I saw & read & relished it again in UDAYAR.
" நீங்கள் யார் ?
சித்த புருஷர் என்றால் என்ன ?
நீங்கள் மரணத்தை வென்றவரா ?
ஆம் எனில் அது எவ்விதம் ? ! "
Thank you for your postings.
Our Namaskarams to Aiya Balakumaran sir.
anbudan,
Srinivasan.

Anonymous said...

அய்யா வணக்கம்,
நான் தாங்கள் உடையார் நாவல் அனைத்து பாகங்களும் படித்தேன் முடிவில் என்னை அறியாமல் அழுதேன். நம் மூத்தோர்கள் திறமையை எப்படி என்று வியந்தேன். இத்தனைக்கும் மூன்று ஆண்டு காலம் தஞ்சையில் வாழ்ந்தேன் அப்பொழுதெல்லாம் பல முறை ஆலயம் செல்வதுண்டு சுற்றி பார்ப்பதோடு சரி உங்கள் எழுத்தை படித்துவிட்டு ஆவலோடு சமீபத்தில் தஞ்சை சென்று ஒவ்வொரு இடமும் தடவி தடவி பார்த்து உணர்ந்தேன் ஆனந்தகண்ணீர் தான் வியப்புதான்,
நான் தங்களது பல நாவல்கள் படித்துள்ளேன் பல முறை எழுத நினைத்தும் உள்ளே பயம் எனக்கு தகுதி இருக்கா என்று. நான் என்னுள் நிறைய மாற்றம் கண்டிருக்கின்றேன் குறி்ப்பாக அமைதி நிதானம் யோசித்தல் வெற்றி பெறுவது நீங்கள் நீடூழி வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். நன்றி அசோக். சிங்கப்பூர்.

said...

gud noon
In my life this is a good novel and easy to understand every words ..not only words worlde soo..

said...

nandri ithagaya novelai naan padikum pothu naan mei marakiren

said...

வணக்கம்
காலத்தால் நிலைத்து வாழும் எழுத்தாளருக்கு மரணம் உண்டா.உடையாரில் மூழ்கி வெளி வர மனம் மறுக்கின்றது.நன்றி