Sunday, October 25, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - என்னை நெகிழ்த்திய சம்பவம்

ஜனனம் என்கிற படத்திற்காக திருச்சியில் ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருந்தேன். சினிமா நண்பர்கள் சற்று தாமதமாக தூங்கி எழுவார்கள். ஒன்பதரை மணிக்கு ஒன்று கூடுவார்கள். விடியலில் எழுந்து விடுவது என் பழக்கம் என்பதால் எழுந்து குளித்து பூஜை முடித்து ஏதேனும் கோயிலுக்குப் போய் எட்டு எட்டரை சிற்றுண்டிக்காக ஹோட்டலுக்குத் திரும்பி விடுவேன். ஹோட்டல் வாசலில் நின்றபடி எதிர்ப்பக்க சினிமா போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஆட்டோ வேகமாக கடந்து போயிற்று. அதே வேகத்தில் கிறீச்சிட்டு நின்றது. வட்டமடித்து திரும்ப என்னிடம் வந்தது.

ஆட்டோவிலிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இறங்கினார். படித்தவர் போலும், எங்கோ வேலை செய்பவர் போல காணப்பட்டார். அவர் தோளில் வேலைக்குப் போகும் பெண்கள் வைத்திருந்த பை இருந்தது. மெல்லத் தயங்கியபடி கீழிறங்கி ‘நீங்கள் பாலகுமாரன் தானே’ என்றார். ‘ஆமாம்’ என்று சொன்னேன். ‘இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று வியப்போடு கேட்டார்.

‘ஜென்னிஸ் ரெசிடென்சியில் தங்கியிருக்கிறேன். போஸ்டரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன விஷயம்’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

அவர் தன் பெயரையும், உத்தியோகத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைச் சந்தித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று கூவினார். வாசகர்கள் என்னைச் சந்திக்கும்போது, சிலர் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். எனினும் இந்த அம்மாள் சட்டென்று கண்ணீர் பெருக்கெடுக்க கைகூப்பி உதடு துடிக்க நின்றது சற்று வித்தியாசமாக இருந்தது.

‘ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நான் ஒரு சாதாரண எழுத்தாளன்’ என்று அமைதியாகச் சொல்ல, அந்த அம்மாள் வேகமாக தலையாட்டி மறுத்தார்.

‘ நீங்கள் யாருக்கு சாதாரண எழுத்தாளன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் வீட்டில் உங்களை வேறுவிதமாக நாங்கள் கொண்டாடுகிறோம். குறிப்பாக என் தாய் உங்களை மிக உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாள். அனேகமாக தினமும் பாலகுமாரன் புத்தகம் புதிதாக ஏதாவது வந்திருக்கிறதா என்று கேட்பார். வரவில்லை என்றதும், ஏதேனும் ஒரு படித்த புத்தகத்தைச் சொல்லி, அதைக் கொடு . படித்துப் பார்க்கிறேன் என்று அந்தப் புத்தகம் வாங்கி பாதியிலிருந்து படிக்க ஆரம்பிப்பார். பலமுறை படித்த புத்தகங்கள். இருப்பினும் கையில் பென்சிலோடு உட்கார்ந்து அடிக் கோடிட்டு அந்தப் புத்தகத்தை அனுபவித்துப் படிப்பார். அப்படிப் படிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய டைரியில் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். மகனைப் பற்றியோ, மகளைப் பற்றியோ, புருஷனைப் பற்றியோ, வேறு உறவுகள் பற்றியோ அவர் அதிகம் எழுதவில்லை. வந்தார்கள், போனார்கள் என்ற விவரம்தான் இருக்கும். ஆனால் உங்களைப்பற்றி மட்டுமே நிறைய அபிப்ராயங்கள் சொல்லியிருக்கிறார்.
அம்மாவின் டைரியை படிப்பதற்காக நான் எடுத்து வந்தேன். இதோ பாருங்கள்’, என்று பையிலிருந்த ஒரு நீலநிற டைரியை பிரித்துக் காண்பித்தார்.
அந்த டைரியில் அழகான கையெழுத்தில் நிறைய என் கதைகளைப் பற்றிய அபிப்ராயங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘சபாஷ்.. பாலகுமாரா.. சபாஷ். நீ அபிராமிபட்டரா’ என்று கேள்வி ஆச்சரியக்குறி எல்லாம் போட்டிருந்தது.

‘உன் கேள்வி பதிலைக் கூட தனிப்புத்தகமாகப் போடலாம். எத்தனை விஷயங்கள் சொல்லித் தருகிறாய்’ என்று எழுதியிருந்தது.

என் தாயார் இறந்தபோது குமுதத்தில் நான் உருக்கமாக எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றிய அபிப்ராயம் இருந்தது.
‘பாலகுமாரன் தாயார் கொடுத்து வைத்தவள். புண்ணியவதி. இந்தக் கட்டுரை முடிவில் இதை படிக்க அம்மா இல்லை என்று பாலகுமாரன் எழுதியிருக்கிறார். அந்த அற்புதமான கட்டுரையை எப்படி அவன் அம்மாவால் படிக்காமல் இருக்க முடியும். அவன் அம்மா இந்தக் கட்டுரையையும் படித்திருப்பாள். படித்து நெகிழ்ந்திருப்பாள். என் மகனே.. என் மகனே.. என்று அவனை கட்டித் தழுவி கொஞ்சியிருப்பாள். பாலகுமாரனுக்கு இது தெரியாது போயிருக்கும். சூட்சுமமாக அவனை நிச்சயம் ஆசிர்வதித்திருப்பாள். பாலகுமாரன் தாய் புண்ணியவதி’ என்று எழுதியிருந்தது.

நான் சற்று மனம் தடுமாறினேன்.
கடவுளே.. யார் யார் மனதையோ நான் தொட்டிருக்கிறேன் என்று நெகிழ்ந்தேன்.

‘அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள் சொல்லுங்கள். உங்கள் வீடு எங்கே இருக்கிறது. அவரை நான் பார்க்கலாமா’ என்று கேட்டபோது அந்த பெண்மணி திகைத்து என்னை பார்த்தாள்.

“என் அம்மா இறந்து மூன்று மாதம் ஆகிறது. மாதாந்திரச் சடங்குகள் அவளுக்காகச் செய்து வருகிறோம். இன்றைக்கு அந்தச் சடங்குகளை முடித்துவிட்டு நான் தாமதமாக அலுவலகத்திற்குப் போகிறேன். அதனால்தான் உங்களைப் பார்த்தேன். உங்களை இந்த நாளில் அம்மாவின் டைரியோடு நான் சந்திக்க முடிந்தது ஆச்சரியம். அம்மாவே உங்களை சந்தித்தாள் என்பது போல எனக்குத் தோன்றியது. என் அம்மா மட்டும் இந்த இடத்தில் உங்களைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியாது. அந்த எழுபத்தியாறு வயது கிழவி உங்களை காலில் விழுந்து நமஸ்கரித்திருப்பாள். கட்டித் தழுவி முத்தமிட்டு ஆசிர்வத்திருப்பாள்” என்று சொல்லி அழத் துவங்கினார்.

ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு பெண்மணி, என் எதிரில் குலுங்கி குலுங்கி முகம் பொத்தி அழ, சுற்றி இரண்டு மூன்று ஆட்கள் நின்று பார்த்தார்கள். நான் மெளனமாக அந்த துக்கத்தை ஏற்றுக் கொண்டேன். அவர் ஆத்மா சாந்திடைய பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன்.

அவர் அழுததற்கு மன்னிப்பு கேட்டு, முகம் துடைத்துக் கொண்டு, என்னிடம் விடைபெற்று ஆட்டோ ஏறி பறந்து போனார். நான் சற்று தள்ளாட்டமாக ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

ஒருவர் மனமுவந்து பாராட்டியிருப்பதை அவர் இறந்த பிறகு அறிந்து கொள்வது என்பதை நான் அப்பொழுது தான் முதன்முதலில் உணர்கிறேன். ஒரு சந்திப்பு நிகழாமலேயே போய்விட்டது என்று ஒரு துக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்னொரு ஜென்மத்தில் நானும், அந்த அம்மாவும் நிச்சயமாக எங்கேனும் சந்திப்போம், உறவாகவோ, நட்பாகவோ, ஒருவரையொருவர் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது.

எல்லா நம்பிக்கையும் அன்பின்பாற்பட்டது.

2 comments:

said...

உண்மையாகவே நெஞ்சை நெகிழ வைக்கிறது. ஐயா அவர்கள் மீது இது போல என்னற்ற வாசகர்கள் இருக்கிறார்கள், அவருடைய புத்தகங்கள் அவர்களின் வாழ்க்கையையே திசை திருப்பி நல்முறை படுத்தி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒருவிதமான அன்போடு இருப்பவர்கள்.

கலைவினோத்.

said...

இது சத்தியம்!

என் வாழ்கையும் இவரால் மாறியதுதான், என்னுடைய 16 வது வயதில்....

உடையார் ஒரு பிரம்மாண்டம் ஆம் அந்த இறை தான் இவருள் இறங்கி எழுத வைத்திருக்கும், என்னை போன்ற எத்தனையோ ஜடங்களுக்கு ஆயிரம் வருட சரித்திரம் இவரைபோல எவரால் சொல்ல முடியும்?

போன மாதம் பெரிய கோயில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது, நானும் என் digital கேமரா வும் ஜென்ம சாபல்யம் அடைந்த தினம் அது! மேலும் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காலை 8 மணி சூரிய வெளிச்சத்தில் கோவிலை கண்டது, கயிலையே கண்டதுபோல் இருந்தது. எழுத்து சித்தருக்கு உன் நமஸ்காரங்கள்.