Tuesday, September 7, 2010

சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்

கண்ணும் காதுமில்லாதது காதல் என்று ஒன்றுமில்லாத காதலுக்காக உயிரை விடுகிறார்களே?

நீங்கள் காதலித்ததில்லை. காதல் ஒன்றுமில்லாதது என்று எவரேனும் சொன்னால் அவரை விட முட்டாள் எவரும் இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம். தன்னை மட்டும் யோசித்துக் கொண்டிருந்த மனிதரை ஒருமுகப்படுத்தி, தன்னைப் போல் இன்னொருவரையும் யோசிக்க வைக்கின்ற ஒரு முயற்சி தான் காதல். இதற்கு காரணங்கள் பல்வேறாக இருந்தாலும், இந்த முயற்சியில் பல பேர் கனிந்து விடுகிறார்கள். நல்ல மலர்ச்சியை அடைந்து விடுகிறார்கள். காதல் உண்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் தந்திரமாக இருப்பது போல காதலில் தந்திரமாக இருப்பவன் தான் உயிரை விடுகிறான். ஏனெனில் ஏமாற்ற ஆசைப்படுகிறவன் தான் ஏமாறுகிறான்.

ஐயா, உங்களுடைய பலம் என்று எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்.

அவமானத்திற்கு அஞ்சாதது. எதையும் பரீட்சித்து பார்ப்பது. வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலையில்லை. எல்லாமுமே ஒரு அனுபவம் என்று முழு மனதாக இறங்கி விடுவது. வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல அனுபவங்களும், மிக மோசமான அனுபவங்களும் தான் என்னை நன்றாக பக்குவப்படுத்தியிருக்கின்றன. இல்லையெனில் தொட்டாச்சிணுங்கியாக இருந்திருப்பேன். என்னுடைய கதைகள் பலதும் உண்மைச்செறிவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என் அனுபவங்கள். நான் வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கயிறு திரிப்பவன் அல்ல.



இவ்வளவு ஆன்மீகம் எழுதுகிறீர்களே, நீங்கள் துறவியாகி விடுவீர்களா?

அது நேருமாயின் நேரட்டும். துறவியாக வேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. ஆகக்கூடாது என்கிற பிடிவாதமும் இல்லை. என் அபிப்ராயத்தில் அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷம்.


ஒரு மூலையில் உட்கார்ந்து வெறுமே மந்திர ஜபம் செய்தால் சிறந்துவிட முடியுமா. இது மூடநம்பிக்கையாக உங்களுக்குப் படவில்லையா. இதை எப்படி ஆதரித்து கதை எழுதுகிறீர்கள்.

பறக்க முடியுமா என்று மனிதன் யோசித்து, யோசித்து இடையறாது பல நூற்றாண்டுகள் முயற்சி செய்து இப்பொழுது வானம் முழுவதும் அவன் ஆட்சி செய்கிறான். பூமிதாண்டியும் பல கிரகங்களில் போய் கால் வைக்கிறான். முடியுமா என்று கேட்கிறபோதே முடியும் என்கிற நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் அவசியம். மந்திரஜபம் என்ன செய்யும் என்று மந்திரஜபம் செய்துவிட்டு பேசவேண்டும். வெறுமே எல்லாம் தெரிந்தது போல அலட்டக் கூடாது.

காமத்தை ஜெயிப்பது எப்படி.

ஏன் ஜெயிக்க வேண்டும். தட்டிக் கொடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எங்கும் தவறாகப் போய்விடாதே என்று பிரியமாய் அதை உன்னித்து கவனித்தபடி இருக்க வேண்டும். காமத்தை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. உண்ணுதல்போலும், உறங்குதல்போலும் அது சாதாரணமானது.

4 comments:

arulkanthan said...

Dear Krishna thulasi,

After 4 months back Iyaa question answer really nice to read.
Particularly which is his strength answer “Good or bad both experience only made me like this " wonderful thought.

Even pictures of Iyaa ( Is it taken in Haridwar? Near Manasadevi temple) also good

thanks krishna Thulasi

with love

kandan SA

R.Gopi said...

அருமையான பதில்கள்....

எழுத்துச்சித்தரின் முதிர்ச்சி ஒவ்வொரு பதிலுலும் வெளிப்பட்டுள்ளது...

குறிப்பாக மந்திர ஜெபம் பற்றி சொன்னது, பிரமிக்க வைத்தது...

இன்று இது போலவே, எந்தவொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே அது சிறந்ததா, இது தேவையா என்று கேள்விகள் கேட்பவர்களுக்கு பாலா அவர்கள் தெளிவாக பதில் சொல்லியுள்ளார்....

Shakthiprabha (Prabha Sridhar) said...

நன்றி. பாலகுமாரன் அவர்களின் இந்த பரிமாணத்திற்கு என் ஆழ்ந்த மரியாதைகள்.

xxx said...

your answer to LUST(kamam) is good. this is the comment i had in my mind, even i used to share to everyone.thanks.