இந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடு, ஆசியோடு அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நண்பர்களுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களோடு தினசரி தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தானே முன்வந்து அடிக்கடி தொடர்பு கொள்கிறார். இந்த நண்பர்கள் குடும்பமும் பாலகுமாரன் குடும்பமும் நன்கு பழகி வருகின்றனர்.
இந்த நண்பர்கள் பாலகுமாரன் எழுத்துக்களை முற்றிலும் படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசிப்பதாலேயே அவரைத் தொடர்பு கொண்டு அவரையும் நேசிக்கத் தொடங்கி அவருடைய அன்பை , அண்மையைப் பெற்றனர். கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் கொண்ட இந்த குழு இந்த வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு பலமுறை சுற்றுலாக்கள் சென்றும், பல விழாக்களில் கலந்துகொண்டும், அவர் பேசுவதை அருகிலிருந்து கேட்கவும், அவர் சொற்பொழிவாற்றும் போது அந்த சபையில் இருக்கவும் அவர்கள் இடையறாது முயற்சி செய்கிறார்கள். பலமுறை இவைகள் நடந்தும் இருக்கின்றன.
எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு இவர்கள் கொண்ட சினேகம் இவர்களுடைய சொந்த வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. அவருடைய வழிகாட்டல் இவர்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை துவண்டு போனால் அருகில் இருந்து பெரும் உதவிகள் செய்ய எழுத்துச்சித்தர் தயங்கியதில்லை. அந்த நன்றியின் காரணமாகவும் இவர்கள் அவருக்கு நெருக்க மானவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நண்பர்கள் கூட்டம் கிருஷ்ணதுளசி என்பவரைத் தலைமையாகக் கொண்டு இந்த வலைப்பக்கத்தை திறந்திருக்கிறது. தொடர்ந்து பல விஷயங்களை இந்த பலகணியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவர்கள் எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை வாசகர்கள் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வலைப்பக்கம் செயல்படப் போகிறது. அவர் எழுத்தை நன்கு அனுபவித்து உங்கள் சொந்த வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
எழுத்துச்சித்தரைப் பற்றிய சில புதிய குறிப்புக்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இருதய அறுவை சிகிச்சை இரண்டாயிரமாம் ஆண்டு நடந்து இரண்டு அடைப்புகள் நீக்கப்பட்டு ஒரு பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு காலையில் யோகா, மாலையில் துரித நடை என்ற தன் தினசரி நியதியை கடைபிடித்து வருகிறார். சர்க்கரை நோய் இருப்பதால் அளவான சாப்பாடு. தித்திப்பு அறவே கிடையாது. ஆனாலும் நொறுக்குத்தீனியில் ஆசை உண்டு, நண்பர்கள் கூட்டமும், அவர் துணைவியரும் கண்டித்து வைத்திருக்கிறார்கள் மற்றபடிக்கு சுறுசுறுப்பானவர். தினமும் காலையில் யோகாவிற்கு பிறகு தியானமும், அ தற்குப் பிறகு மூலமந்திரங்களோடு பூஜையும் செய்வது வழக்கம் .பிற்பகல் தூக்கம் நிச்சயம் உண்டு . இதற்கு காரணம் வயது என்று கூறுகிறார்.
எல்லோரோடும் பேசிப் பழக மாட்டார். அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப்பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் இன்னும் விளக்கம் சொல்வதற்கும் அவர் முயற்சிப்பதுண்டு . புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவரை அவர் போற்றி நெறிப்படுத்துவது வழக்கம்.
பாட்டு பாடுவதில் நல்ல ரசனை உண்டு. கர்நாடக சங்கீதம் உள்ள சினிமா பாடல்கள் மீது பிரியம் உண்டு. உதாரணத்திற்கு முல்லை மலர் மேலே, கல்யாணத்தேன் நிலா போன்ற பாடல்களை மிகவும் அனுபவித்துப் பாடுவார். ஆனால் சங்கீத கச்சேரிகளை கேட்பதிலோ, கேசட்டில் பாடல்களை கேட்பதிலோ அவருக்கு அவ்வளவு நாட்டமில்லை. ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்க அவ்வப்போது பாடல்கள் காதில் விழுந்தால் போதும். பாட்டிற்கென்று உட்காருகின்ற மனோபாவம் அவருக்கு இல்லை. நாம் யோசிப்பதை பாடல்கள் தடை செய்கின்றன என்று சொல்வது அவர் இயல்பு.
அவர் நன்றாக ஓவியம் வரைவார். கோட்டுச் சித்திரங்களாக மளமளவென்று ஓவியங்கள் வரைகின்ற அழகு கண்டு நண்பர்கள் வியப்பார்கள். எழுத்தாளன் கூர்மையாகப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவன், அதனால் அவனுக்கு ஓவியம் இயல்பாக வரும் என்று அவர் சொல்வது வழக்கம்.
அவருக்குப் பிடித்த சிற்றுண்டி தோசை, பிடித்த நொறுக்குத் தீனி ஓமப்பொடி . மற்றபடி உணவில் இது வேண்டும் அது வேண்டும் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று சொல்வதும், மற்றவரிடம் விரும்பி கேட்டு வாங்குவதும் அநாகரிகம் என்பது அவர் எண்ணம். இலையில் என்ன விழுகிறதோ அதை உண்டு விட்டு கை அலம்பி எழுந்து விட வேண்டும் . பசிக்குத்தான் உணவு, அதிகம் ருசித்தால் வாழ்வு பற்றிய தெளிவு வராது, உணவில் எவரும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது அவர் கொள்கை.
அவர் தன் குருவை அதிகம் கொண்டாடுவார் . எல்லா விஷயத்திலும் அவரைப் பற்றிய எண்ணத்தோடு தான் அணுகுவார். அவரை வேண்டிக் கொண்டு தான் துவங்குவார். குருவிற்கு அடுத்தபடி அவர் நன்றியோடு நினைப்பது அவரது தாயார், தமிழ் பண்டிதை பா.சு.சுலோச்சனா அவர்களை. அவர் தந்தையைப் பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. காரணம் வற்புறுத்தி கேட்ட போதும் சிரித்துக்கொண்டு விட்டுவிடுவார்.
முன்பெல்லாம் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் பழக்கம் உடையவர் இப்பொழுது வயதின் காரணமாக ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கிறார். இரவு தூங்க பதினோரு மணி ஆகிறது. அவருடைய உடைகள் எல்லாம் வெண்மை நிறமுடையவை, வேறு நிறம் உடுத்த அவருக்குப் பிடிப்பதில்லை. பனியன் அணிய பிடிக்காது.அது சங்கடமானது என்று சொல்கிறார். உடம்பை சுத்தமாக வைத்திருத்தலும், நகங்கள் திருத்தலும், உள்ளாடைகளை மிகத் தூய்மையாக வைத்திருத்தலும் அவர் குணங்களில் ஒன்று. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.
0 comments:
Post a Comment