என் அனுபவத்தில் மனித வாழ்க்கையில் சந்தோஷம் தான் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்குமெனில், பணம் மிக முக்கியம். இந்த சந்தோஷத்தை பணம் கொடுக்காதெனில், பணம் எனக்கு தேவையற்ற விஷயம். பணம், சந்தோஷம் தருமா, தராதா என்பது நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயம்.
‘எத்தனை வந்தாலும் போதவில்லை’ என்று பல பேர் புலம்புவதை நான் காதார கேட்டிருக்கிறேன். அது எப்படி என்று வியந்திருக்கிறேன்.
பத்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தவருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தபோது போதவில்லையா. இருபதாயிரம் ரூபாயாக வருமானம் உயர்ந்தபோது இன்னும் மூச்சு திணறலா. இருபதாயிரம் ரூபாய் வருமானம் தாண்டி முப்பதாயிரம் வந்தபோது சுற்றிலும் நிறைய கடனா. ‘ஆமாம்.. ஆமாம்’ என்கிறார்கள் பலபேர். என் வாழ்க்கையை நான் உற்றுப் பார்த்தபோது எனக்கு இதற்கு விடை கிடைத்தது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று பள்ளியிறுதித் தேர்வில் தேறினேன். அப்போதே டைப் ரைட்டிங் ஹையர் முடித்து, அடுத்த வருடம் ஷார்ட்ஹேண்ட் பரீட்சையும் எழுதி ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்குச் சம்பளம் நூற்று எழுபத்தைந்து ரூபாய். வீட்டிற்கு கொண்டு போய் அப்படியே காசைக் கொடுத்துவிட, நூற்றைம்பது ரூபாய் அம்மா எடுத்துக் கொண்டு இருபத்தைந்து ரூபாய் எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்த இருபத்தைந்து ரூபாயை எனக்கு செலவு செய்யத் தெரியாது. அடிக்கோடிட்டுச் சொல்கிறேன். அந்த இருபத்தைந்து ரூபாயை எப்படி செலவு செய்வது என்று எனக்குத் தெரியாது.
ஒரு மசால் தோசை இரண்டனா. ஒரு மைசூர்பாகு நாலணா. பாதாம் ஹல்வா முக்கால் ரூபாய். இத்துடன் காபியும் சாப்பிட்டுவிட்டு நான் பொஹேவ்.. என்று பெரிய ஏப்பத்தோடு வெளியே வருவேன். மனம் நிறைய சந்தோஷம் தளும்பும். மனதில் கர்வம் ஏறி கிறுகிறுக்க வைக்கும். அப்பேர்பட்ட அற்புத அனுபவத்திற்கு என்னை ஆளாக்கிய கடவுளுக்கு மனம் நன்றி சொல்லும்.
இந்த சம்பளத்தை கொடுத்த கம்பெனிக்கு இன்னும் உண்மையாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஏக்கம் படரும். எட்டரை மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கு போயிடணும் என்று உள்ளுக்குள் ஆவேசம் பீறிட்டுக் கிளம்பும்.
வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, நல்ல செருப்பு, ரூபாய்க்கு நாலு என்று வாங்கின கைக்குட்டைகள், பாக்கெட்டில் கொஞ்சம் சில்லரை. மிக மிக ஆனந்தமான நாட்கள் அவை. ஆனால் நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்திலிருந்து அறுநூறு ரூபாய், எழுநூறு ரூபாய் சம்பளத்திற்கு தாவியபோது போதவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டது. ராலே சைக்கிள் வாங்கி அதற்குப் பிறகு லாப்ரெட்டா ஸ்கூட்டர் வாங்கி வாழ்க்கையின் தேவைகள் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டபோது எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை ஏற்பட்டது. லட்ச ரூபாய் வருமானம் தாண்டிய போதும் பட்ஜெட்டில் இடித்தது. நூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தின் சந்தோஷம் அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் வரவேயில்லை.
என்னிடம் என்ன தப்பு. நான் யோசித்தேன். என்னிடம் தவறு இல்லை. நான் பிரம்மாண்டமாக பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்டேன். என் தேவைகள் அதிகரித்து விட்டன.
‘காசு சேர்த்து வீடு வாங்கறதுங்கறது முடியாதுடா. கடன் வாங்கி கமிட் பண்ணிக்கோ. இங்க ஓடி, அங்க ஓடி காசு சம்பாதிச்சு அந்த காசைக் கொண்டு போய் கடனை அடை. பத்து வருஷத்துல வீடு உனக்குச் சொந்தம் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆஹா.. சொந்த வீடா. எனக்கா.. முடியுமா.
திகைப்பு ஏற்பட்டது. என்னுடைய இளம் வயதில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லுகின்ற பழமொழி ஒன்று உண்டு.
‘கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு நூறு வீடு’.
நானும் இதைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், சொந்தமாய் வீடு வாங்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்ட போது , இந்தப் பழமொழிகள் உடைத்து எறியப்பட்டன.
‘எத்தனை நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட போய் வாடகை கொடுத்துட்டு கை கட்டிண்டு நிக்கறது. என் வீடு, என் இடம்னு ஒன்று வேண்டாமா.’ என்ற அகங்காரம் தோன்றியது.
வீட்டிற்கு பெரிதாகக் கடன் வாங்கி சிறிது சிறிதாக அடைத்தாலும், ஒரு மாதம் கூட தவறக்கூடாது. யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று நாலாபுறமும் ஓடி கடன் அடைக்கிற போராட்டத்திலும் வெற்றி காண முடிந்தது. அதிலும் சுவை இருந்தது.
“என்னய்யா சினிமாக்கெல்லாம் டயலாக் எழுதற. ஸ்கூட்டர்ல போற. கார் வாங்குய்யா.” என உசுப்பேற்றுவார்கள். அதற்கு நடுவே காரில் போய் போய் பழக்கமாகிவிட்டதல்லவா.. கார் சுகம் தெரிந்து விட்டதல்லவா. இதுவரை காரையே அதிகம் ஏறிட்டுப் பார்க்காத புத்தி. எதிரே போகின்ற கார் எவருடையது என்று குறிப்பெடுத்துக் கொள்கிறதல்லவா.. இந்த புத்தி வந்த பிறகு சொந்தமாகக் கார் வாங்க வேண்டுமென்ற ஆசையும் வந்துவிட்டது. மறுபடியும் கடன். இன்னும் அதிக ஒட்டம். இன்னும் அதிக சம்பாத்தியம். அந்தக் கார் பழையதாகி விட இன்னொரு கார். கார் மட்டுமே போதாது ஸ்கூட்டர். மயிலாப்பூரைச் சுற்றிவர ஸ்கூட்டர்தான் செளகரியம்.
வருமானம் பெருத்ததால் செலவுகள் பெருத்ததா. செலவுகள் பெருத்ததால் வருமானம் பெருத்ததா. நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா.. இரண்டும்தான் என்று மனம் முடிவு செய்தது.
ஆனால், இந்த எலி ஓட்டத்தில் இறங்கி ஆயிற்று. இனி நிற்க முடியாது.
‘மின் விசிறி இல்லாமல் வராண்டாவில் அரை நிக்கரோடு வெறும் மார்போடு படுத்துக் கிடந்த காலங்கள் முற்றுலும் மறைந்து போய் ஏ.சி. குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குகின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆனால், எந்த இடமும் என் கையை அத்துமீறாமல் இருக்கிற வண்ணம் நான் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். கடனைத் திருப்பி அடைப்பதில் மிகப்பெரிய மும்முரம் காட்டினேன்.
கடனைத் திருப்புவதில் சின்ன பிசகும் ஏற்படக்கூடாது என்பதில் கண்குத்திப் பாம்பாக இருந்தேன். அந்த நேர்மை மிக முக்கியம் என்று நினைத்தேன். ‘ஏமாற்றிய பணக்காரனாக இருப்பதைவிட, பொய் சொல்லி வாழ்வதைவிட , சீட்டுகள் நடத்தி ஏமாற்றி ஜொலிப்பதை விட உண்மையாக இருப்பதுதான் அழகு.’ என்பதை என் நெஞ்சு உணர்ந்திருந்தது. எனவே, எதற்குக் கடன் வாங்கலாம். எவ்வளவு கடன் வாங்கலாம் என்கிற ஒரு கணிதம் எனக்குள் நிரந்தரமாக இருந்தது.
குவாலிஸ் வாங்கலாம் என்று வீடு சொன்னபோது, இல்லை.. நமக்குண்டான மரியாதை மாருதி ஜென் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். பலபேருக்கு வருத்தம். ஆனால், என் யோக்கியதை என்ன என்பது எனக்குத் தெளிவாக தெரிந்திருந்தது.
“என்ன சார். உங்கள் பிள்ளை கார்ல போறான். நீங்க ஸ்கூட்டர்ல போறீங்க.” என மயிலாப்பூர்வாசிகள் கேட்பார்கள். “அவங்கப்பா பணக்காரர். அதனால அவன் கார்ல போறான். எங்கப்பன் ஏழை.அதனால நான் ஸ்கூட்டர்ல போறேன்..” என்று நான் பதில் சொல்வேன்.
வழக்கமான ஜோக் தான். ஆனால், உண்மையும் இருக்கிறது.
“இதற்கு காரணம் என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்படுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.
மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தும், மகனுக்கு நல்ல மேற்படிப்பு ஏற்பாடு செய்து திருப்தியாக இருக்கக் காரணம் குடும்பக் கட்டுப்பாடு. அதனால் குழந்தைகளை செளகரியமாக வளர்க்க முடிந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த இடத்தையும் பார்க்கவில்லை. ஆனால், மெரினா பீச்சில் என் குழந்தைகளோடு நான் பேயாட்டம் ஆடியிருக்கிறேன். கழுத்துவரை அலையில் நின்று கும்மாளமிட்டிருக்கிறேன். ஐம்பது ரூபாய் செலவில் போதும் போதும் என்ற சந்தோஷம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனக்கு காசு கொடுக்காமல் சினிமா கம்பெனிகள் ஏமாற்றியிருக்கின்றன. ஆனால், நான் யாரையும் ஏமாற்றியதில்லை. அடைக்க முடிந்த கடன்களையே வாங்கியிருக்கிறேன். அந்த அளவில் வளர்ந்திருக்கிறேன்.
மாமனாரைத் துன்புறுத்தி தங்க பிரேஸ்லெட்டும், தடித்த செயினும் மாட்டிக் கொள்ளவில்லை. நண்பர்களை ஏமாற்றி, ஊரார் காரை என் கார் என்று சொல்லவில்லை. யார் சொத்தையோ என் சொத்து என்று போலிப் பத்திரம் காட்டவில்லை. எனவே, என்னுடைய மனம் சந்தோஷமாக இருப்பதை முகம் வெளியே காட்டுகிறது. முகத்தில் இருக்கின்ற நம்பிக்கை நல்லவர்களை அருகே வரவழைக்கிறது. நல்லவர்கள் அருகே இருப்பதால் என்னுடைய நாணயம் இன்னும் வலுவாகிறது.
ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை ஆனபோதும் அறுவை சிகிச்சையான முப்பதாம் நாளே நான் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். அதற்குக் காரணம் என்னைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும், அந்த நல்லவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் நான் நடந்து கொள்வதும் தான். ஏதாவது ஒரு இடத்தில் ஏமாற்றினாலும்கூட அதன் விளைவு பல இடங்களுக்கு பரவி நம் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. மற்றவர்க்கு ஏற்பட்ட அவநம்பிக்கை நமக்குள் நமக்கே தெரியாமல் பொதிந்து கொள்கிறது.
அவநம்பிக்கை கொண்ட மனது எந்த குற்றத்திற்கும் தயாராகி விடும்.
ஆரவாரமில்லாத செல்வ செழிப்பே உன்னதமானது என்பது என் அபிப்ராயம்.
எனவே செல்வம் துக்கமில்லை. நம்பிக்கை.
6 comments:
நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்! எங்கள் எழுத்து சித்தர், சத்குரு நாதன் யோகி ஸ்ரீ ராம் அரவணைப்பில் இருக்கும் குழந்தையாயுற்றே!
//என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்படுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.//
இது உண்மையாக இருந்தாலும்..நாம் கணக்கை எழுதி வைப்பது என்னென்ன செலவுகள் செய்கிறோம்..நம்மை அறியாமல் செய்யும் அனாவசிய செலவுகள் என்ன என்பதை அறியலாம் அல்லவா!
பதிவு அருமை..
வணக்கம்
இத்தனை நாட்கள் பணம் சந்தோஷம், கவலை இரண்டையுமே தரும் என்று நினைத்து இருந்தோம், ஆனால் இப்பொழுது புரிகிறது பணத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்ற விதத்திலே அது உள்ளது. இதை படித்தபின் இன்னும் அதிக அளவில் நேர்மையான முறையில் உழைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.
மிக்க நன்றி.
கலைவினோத்.
மிக அருமையான விளக்கம்...
காசு பற்றிய பாலகுமாரன் அவர்களின் தெளிந்த நீரோடை பொன்ற விளக்கம் படிக்கும்போது மகிழ்ச்சி அளித்தது...
I have one reason to be happy...I have been more or less like this in handling money matters.
Makes me feel even better to know that there is someone who has done that earlier. Thank you Master!
உங்களை எப்படி விளிப்பது என்றே தெரியவில்லை.. ஒரு சமயம் திரு பாலா என்கிற தோற்றம்.. ஒரு சமயம் குரு என்கிற தோற்றம்.. ஒரு சமயம் நண்பர் என்கிற தோற்றம்.. இந்த பதிவில் நான் என்னை பார்கிறேன்.. 8 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மாத சம்பளம் ரூ500 .. அன்று நான் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை இன்று நான் லட்சங்களில் சம்பாதித்தாலும் மனம் நிம்மதியாக இல்லை... அடுத்து என்ன.. அடுத்து என்ன என்று மனம் அலை பாய்கிறது.. கடன் வாங்குவதிலும் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை... நமது நிலை அறியாமலா செலவு செய்தால் பிறகு பிரச்சினை நமக்கு தான்..
அருமையான பதிவு... நன்றி குருவே..
Post a Comment