Sunday, November 8, 2009

சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்

அது ஒரு ப்ரிவியூ தியேட்டர்...

திரைப்படம், வழக்கமான தியேட்டர்களில் திரையிடப்படும் முன் இங்கே டெக்னீஷியன்களுக்காகவும், நடிக நடிகையருக்காகவும், விநியோகஸ்தர்களுக்காகவும் திரையிட்டுக் காட்டப்படும். அந்தப் ப்ரிவியூ தியேட்டரில் ‘ஜென்டில்மேன்’ திரையிடப்பட்டிருந்தது. உள்ளே ரஜினி படம் பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியாது. படம் பார்த்துவிட்டு, சக டெக்னீஷியன்கள் படம் எப்படி என்று அபிப்பிராயம் சொல்வார்கள். கேட்போம் என்று போனேன். படம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.

அந்தத் தியேட்டரில் நாலு பேர் போகக்கூடிய லிஃப்ட் இருந்தது. ஏறி கதவு சார்த்தி இரண்டாவது மாடி குமிழ் அழுத்த, பெட்டி உயரே நகர்ந்தது, லிஃப்ட் இரண்டாவது மாடி தொட்டது. மாடியில் சிரிப்புச் சத்தம் கேட்டது.

கதவு திறக்க, ரஜினிகாந்த். நான் வெளியே வர முயல, ரஜினி என்னை மறுபடி லிஃப்டுக்குள் தள்ளினார். “பாலகுமார் சார்... க்ளாஸ்... ஏக்ளாஸ் படம், ரொம்ப நல்லா வந்துருக்கு” கைகுலுக்கினார். அவரும் இன்னொரு நண்பரும் உள்ளே வர, லிஃப்ட் கதவு சார்த்தி தரை நோக்கி போகும் குமிழை அந்த நண்பர் அழுத்த, லிஃப்ட் கீழிறங்கத் தொடங்கியது. ஐந்தடிக்கு ஐந்தடிபெட்டியில், அவர் மூச்சு என்மீது படும் அளவு நெருக்கமாய் நின்று படம் பற்றி சில வாக்கியங்கள் சொன்னார். என் காதில் ஏறவில்லை. எல்லாம் பாராட்டுக்கள் என்று தெரிந்தது. ஆனால், மனசுள் வாங்கவில்லை.

ரஜினிகாந்த் அருகே இருக்கும் திகைப்பு மட்டுமல்ல காரணம். ஒரு சிறிய வெட்கமும் உள்ளே சேர்ந்தது. அவர் கூறும் பாராட்டுக்களை ஏற்க மறுத்தது. சினிமா ஒரு டீம் ஓர்க். ஒரு படத்தின் வெற்றிக்கு இன்னார்தான் காரணம் என்று கூற இயலாது. ஒரு நூறு பேர் மிக கவனமாய் ஒருங்கிணைந்து, புரிந்து கொண்டு பரஸ்பரம் விட்டுக்கொடுத்து செயலாற்ற வேண்டிய இடம். நாவல் ஒரு தனிமனிதனின் சக்தி. ஒரு நாவல் சிறப்புடையதானால் எழுத்தாளரே கொண்டாடப்பட வேண்டியவர். நாவல் வந்த பத்திரிகையோ, அச்சிட்டவரோ, கம்பாஸிடரோ அங்கு பேசப்படுவதில்லை.
ஆனால் சினிமா நூறு துடுப்புகள் போடப்பட்ட நீண்ட ஓடம். எந்தத் துடுப்பால் படகு வேகமாயிற்று என்று சொல்வது கடினம். நடுவே நாலு துடுப்பு சரியாகப் போடவில்லையெனில், வேகம் குறைந்து ஆட்டம் அதிகமாகும். மற்ற துடுப்புகளுக்குச் சிரமம் வரும் என்பதும் நிச்சயம். போடப்பட்ட நூறு துடுப்பில் ஏழாவது துடுப்பைப் பார்த்து, ரொம்ப சந்தோஷம்... ஜெயிச்சுட்டீங்க என்றால் என்ன பதில் சொல்வான் அந்தத் துடுப்புகாரன்.

பாராட்டை ஏற்றும், ஏற்காமலும் கைகூப்பி நிற்க வேண்டியதுதான்.

பாராட்டிய ரஜினிகாந்துக்கும் இது தெரியும். அவரும் பல நீண்ட ஓடங்களை ஓட்டிய துடுப்புக்காரர்தான். ஜெயித்து கரையேறிய போது, எதிர்ப்பட்ட துடுப்பாளை ரஜினிகாந்த் கைகுலுக்கிப் பாராட்டுகிறார் என்பது சிறிது நேரம் கழிந்து புரிந்தது.

லிப்ட் தரை தொட்டது.

“எல்லாப் பெருமையும் டைரக்டருக்கே” என்று சொன்னேன்.

“உண்மை...” ரஜினி பதில் சொன்னார். “அதோடு கூட இது ஒரு நல்ல டீம். படத்தின் எல்லா கலவையும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.” மறுபடி அவர் மூச்சுக்காற்று என்மீது பட்டது. என் காற்றும் அவரைத் தொட்டிருக்கும்.

லிஃப்ட் திறக்க, சரட்டென்று வெளியேறி கார் ஏறிப் பறந்து போனார்.

வேகமான ஒரு சுழல்பந்து தலை உரசிப் போனது போல, அந்தப் பந்தை எப்படி விளையாடுவது என்று தெரியாத பேட்ஸ்மேன் போல திகைத்துக் கிடந்தேன்.

‘டேய், பாலகுமார் தம்பி, முட்டற மாதிரி ரஜினி எதிர்க்க வந்தே...அதனால் பாராட்டு கிடைச்சுது. ரொம்ப எமோஷனலாயிடாதே... இது மரியாதை...அன்பு. பெரிய முக்கியத்துவம் உனக்கு எதுவும் இல்லை. அடடா... ரஜினியே கைகுலுக்கினார்... நாலுபேர்கிட்ட பேசாதே... சும்மா இரு.’ திகைப்பிலிருந்து வெளிவந்தேன்.

மற்ற நண்பர்கள் தியேட்டர் வாசலில் பாராட்டினார்கள். இன்னொரு காட்சி ப்ரிவியூ தியேட்டரில் ஆரம்பமாக, வீடு திரும்பினேன்.

படியேறினேன்.

“ரஜினி வீட்டுலேர்ந்து போன் வந்தது... ஜெயராம் கேட்டாரு உங்களை”... வீட்டில் கூறினார்கள்.

“அப்படியா... இப்பதானே பேசிட்டு வரேன்.” நான் எண்களைச் சுழற்றினேன். ரஜினியின் உதவியாளர் ஜெயராம் போனை எடுத்தார். “அண்ணன் பேசணும்னார் சார்” ஒரு நிமிஷம், சில விநாடிகள் நகர்ந்தன. “ஹலோ பாலகுமார் சார்... பிரமாதமா பண்ணிட்டீங்க... அங்க நிறைய பேச முடியவில்லை, வாசல்ல கும்பல் ஜாஸ்தியாயிடுச்சு. அடுத்த ஷோ நம்மால ஜாம் ஆயிடக்கூடாதுன்னு வண்டியேறிட்டேன். படத்துல பல இடங்கள் தனியா தெரிஞ்சுது. ஷங்கர் யாரு... யார்கிட்ட இருந்தாரு”. பத்து நிமிடங்கள் படத்தின் பல சிறப்புகள் பற்றிப் பேசி.. மனதாரப் பாராட்டி.. வாய் விட்டு சிரித்து.. அப்படியானால் வெறுமே எதிர்ப்பட்டதால் வெளிவந்த பாராட்டில்லையா... உண்மையாகவே என் வேலை பிடித்திருக்கிறதா... இது மனசு திறந்த பாராட்டா...சக தொழிலாளியைக் கட்டிப் பிடித்து உற்சாகமூட்டும் செயலா.

சினிமா ஒரு டீம் ஓர்க்...

இதனால் சில சங்கடங்கள் உண்டு. நாவலில் கிடைக்கிற தனித்துவம் சினிமாவில் எவருக்கும் கிடையாது. ஒரு காட்சி அமைப்பு, காமிரா, நடிக நடிகையரின் மேக்கப்; செட் ப்ராப்பர்டி, லொகேஷன் போன்றவையும் காரணமாய் இருக்கலாம். ஒரு நல்ல காட்சி வசன பலமின்மையால், வசன பலமிருந்தாலும் காமிரா கோணம் சரியின்மையால் காமிரா, வசனம் சரியாய் இருப்பினும் நடிகர் உணர்ந்து செயலாற்றாததால்; நடிப்பு, காமிரா, வசனம், சரியாய் இருப்பினும் எடிட்டரின் கவனக்குறைவால் சிதையலாம்.

சினிமா ஒரு நெட்டி வேலை...

ஒரு நெட்டி பொம்மையை, கோவில் கட்டடம் போன்ற நெட்டி பொம்மையை நூறு பேர் சேர்ந்து செய்யும் வேலை. ரஜினி தனித்தனியே எல்லோரையும் என்னிடம் பாராட்டினார். “ எனக்கு டைரக்டர் நம்பர் தெரியாது. அதனால் உங்ககிட்ட என் பாராட்டைச் சொல்றேன். ஷங்கர் கிட்டே என் பாராட்டை சொல்லுங்க”.

நண்பர் ரஜினிகாந்தின் பாராட்டு பற்றி யூனிட்டில் சொல்ல, அங்கே பலபேருடைய முகம் மலர்ந்து.. மகிழ்ந்து மறுபடி என்னைச் சொல்லச்சொல்லி கேட்டு புளகாங்கிதமடைவதை நான் உணர்ந்தேன். ரஜினிகாந்த் இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு அவ்வளவு முக்கியம். அவர் பாராட்டு மிகப்பெரிய பெருமை.

சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை இப்படி மனம் நிறைய பாராட்டுபவர்கள் மிகக்குறைவு. ப்ரிவியூ தியேட்டரில் நான் பல முகங்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். “படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நிச்சயம் நூறு நாள் கவலையேபடாதீங்க”. டைரக்டரிடம் கைகுலுக்கிவிட்டு, தியேட்டர் தாண்டி தெருவுக்கு வந்ததும், எப்படி படம் என்று எதிர்ப்பட்டவர் கேட்க, “ஊத்திக்கிச்சு. ஊத்திக்கிச்சு” என்று நீட்டி முழக்கி சிரிப்பவர்களை கண்டிருக்கிறேன்.

‘கிட்டதட்ட இதே ஸ்டோரி நான் சொன்னேன். எவனும் கேட்கலை, இப்ப அதே கதையே வச்சு சக்ஸஸ் ஆக்கிட்டாம் பார்...’

“சக்ஸஸுன்றே...”

“அட, நாப்பது நாள் ஓடும்பா...பாட்டு சரியா அமைஞ்சு போச்சு. நடிகர் சரியா அமைஞ்சு போச்சு.. வசனம் கூட சரியா வுழுந்துடுச்சுப்பா”. இந்த வெற்றி, பிறர் திறமை என்பது ஏற்காமல், தெய்வச் செயல், எதேச்சை என்று பாராட்டும் பாதி மனங்களை கண்டிருக்கிறேன்.

ரஜினி முழுமையானவர்...

பிறகு ஒருநாள் அவரிடம், நீங்கள் இத்தனை மனமுவந்து பாராட்டிப் பேசுவீர்கள் என்று நினைக்கவேயில்லை என்று சொல்ல, சிரித்தார் ,நிதானமாய் பேசினார். “சினிமாவில் ஒரு படம்கூட ஃபெயிலியர் ஆகக்கூடாது. சுமாரான படத்தைக் கூட நல்லா பாராட்டணும். நல்ல படத்தை வாய்விட்டு மனசார பலமுறை பாராட்டணும். அந்தப் பாராட்டால இன்னும் நாலு நல்ல படம் சம்பந்தபட்டவங்க தரணும். சினிமா இன்டஸ்ட்ரில ஒரு படம் கூட ஃப்பெயிலியர் ஆகக்கூடாது. அது யார் படமா இருந்தாலும் சரி... என்னவிதமான படமா இருந்தாலும் சரி...”

தனக்கு ஒரு கண் போனாலும்,பிறருக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று வேண்டும் உலகத்தில் இந்த மனிதர் வித்தியாசமானவர்.

எதனால் இப்படி.. பலபேருக்கு இல்லாத இந்தத் தெளிவு ரஜினி எப்படி வந்தது. “இது மொத்தமும் ட்ராமா, இந்த நடிகன் அந்தஸ்து, பணம், புகழ், கைதட்டல், பூமாலை, பூத்தூவல் எல்லாம் நாடகம். இந்த நாடகத்துக்கு வேற யாரோ ஒருத்தர் தான் டைரக்டர்.

இந்த உலகத்துல உங்களுக்கு ரைட்டர் வேஷம். எனக்கு நடிகன் வேஷம். அவருக்கு மேக்கப் மேன் வேஷம். கொடுத்த வேஷத்தை டைரக்டர் திருப்தி ஆகற மாதிரி செய்யணும். அந்த டைரக்டர் பேரு கடவுள், ஆண்டவர், அல்லா, ராம், சிவா, புத்தன், விஷ்ணு எதாவது வச்சுக்கலாம். எல்லாப்பணமும், புகழும் ட்ராமா, நாடகம், இது நானில்லை.”

ஒரு நாள் ரஜினி பேச, எனக்கு கேள்வி வந்தது,

ரஜினி புரிந்து பேசுகிறாரா.. இல்லை, எவரேனும் பேசியது கேட்டு பேசுகிறாரா.. சந்தேகம் வந்தது.நான் எழுத்தாளன்... எதையும் சந்தேகத்தோடு பார்ப்பதே என் வழக்கம்.

7 comments:

said...

மிக மிக அருமை கிருஷ்ண துளசி அவர்களே..

நான் பாலகுமாரன் அவர்களின் வெகு தீவிர ரசிகன்... அதிலும், இந்த "சூரியனோடு சில நாட்கள்" எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை...

சூரியனோடு பழகிய அந்த நாட்களை பற்றி பாலா விவரிக்க நாம் கேட்க வேண்டும்... அடடா... தேனில் முக்கிய பலாச்சுளை போலிருக்கும்...

அவரின் பல படைப்புகளை நான் மிக வியப்புடன் படித்திருக்கிறேன்... எப்படி இப்படியெல்லாம் எழுதறார்னு... குறிப்பாக சட்டென நினைவுக்கு வருவது :

திருப்பூந்துருத்தி
தலையணை பூக்கள்
என் இனிய யட்சிணி

said...

நன்றி கோபி

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று புத்தகங்களும் முத்தானவை.

அதிலும் திருப்பூந்துருத்தி கிடைத்தற்கரிய நல் கருப்பு முத்து.

போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய சொத்து.

said...

மிக மிக அருமை. மிக்க நன்றி.

எழுத்துச் சித்தரை நான் சமீபத்தில் சந்தித்து சூப்பர் ஸ்டார் அவர்களை பற்றி பேசிய விபரத்தை என் தளத்தில் Onlysuperstar.com வெளியிட்டிருக்கிறேன்.

ஐயாவிற்கு நீங்கள் தான் ப்ளாக் நடத்த உதவுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

"சூரியனோடு சில நாட்கள்" என்னும் இந்தப் பதிவை பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான போது (குங்குமம் தானே?) படித்து அகமகிழ்ந்திருக்கிறேன். நண்பர்கள் என் தளத்தில் வெளியிடுமாறு கேட்டனர். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீங்களே வெளியிட்டு பரவசப்படுத்திவிட்டீர்கள்.


மிக்க நன்றி
- சுந்தர்
Onlysuperstar.com

said...

நன்றி சுந்தர்

ஏற்கனவே படித்திருந்தாலும் பல வருடங்கள் கழித்து மீண்டும் படிக்கும் போது புரிதல் இன்னும் அதிகமாகி உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

திரு. ரஜினி அவர்களின் கல்யாண குணங்களும் மாறாமல் மேலும் மெருகேறியுள்ளன என்பதும் போற்றத்தக்க உண்மை.

கற்றாரை கற்றாரே காமுறுவர்.........

said...

கிருஷ்ணதுளசி அவர்களுக்கு,

இந்த post மட்டுமல்லாமல் இந்த blog-ல் வரும் அனைத்துமே மிக அருமை. (நானும் பாலகுமாரன் அவர்களின் வாசகர்களுள் ஒருவன்). அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. ஏதேனும் email id இருந்தால் எனக்கு தெரிவிக்க முடியுமா?

நன்றி

தும்பிக்கையாழ்வான்.

said...

வணக்கம் தும்பிக்கையாழ்வான்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

உங்கள் கேள்விகளை
krishnathulasi07 @ gmail.com
என்ற e mail idக்கு அனுப்புங்கள்

said...

பாலகுமாரன் அவர்கள் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் தலைவர் ரஜினியை பற்றி படிக்க கூடுதல் சுவை..

இதை எங்களுக்கு பகிர்ந்ததில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்