Friday, November 27, 2009

கற்றுக்கொண்டால் குற்றமில்லை


அறிதல் என்பது ஒரு மனிதனின் ஆயுள் முழுவதும் பரவிக்கிடக்கிற விஷயம். அறிதலில் வேகமும், அறிய வேண்டிய தேவையும் மனிதனின் ஒரு காலகட்டத்தில் அதிகமாகவும், ஒரு காலகட்டத்தில் குறைவாகவும் இருக்குமே தவிர, அறிதலற்ற வாழ்க்கை என்பதில்லை. அறிதல் என்பது இவ்வுலகத்தின் தொடர்ந்த நியதி. அறிதலில் இன்னொரு விதமான வார்த்தை பாகுதான் கற்றுக்கொள்ளல். இந்த கட்டுரையை படிக்கவும் இதை பற்றி சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை படிப்பதின் மூலமும் ஒன்றை கற்றுக் கொள்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள், படித்ததைப் பற்றி சிந்திப்பது கற்றுக் கொள்வதில் ஒரு பகுதி, ஒரு பரிமாணம்.

இதைப் போலவே பார்ப்பதும், பேசுவதும், எதையோ இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. கற்றுக் கொள்வது என்றால் என்ன? செய்ததை செய்வது. கொச்சையாக சொன்னால் காப்பியடிப்பது, அப்படி செய்வதில், அல்லது காப்பியடிப்பதில் ஒரு வளர்ச்சியை காண்கிறீர்கள். நெருப்புக்கு பயந்த ஆதி மனிதன், காட்டு தீயில் பொசுங்கி போன கன்று மாமிசத்தை தின்று பார்த்து விட்டு ஒரு ருசியை கண்டு கொண்டான். ஒரு உணவை இப்படி பக்குவப்படுத்தலாமோ என்று கற்றுக் கொண்டான். அப்படி கற்றுக் கொண்டதுதான் இன்றைய இடியாப்பம், வடைகறியாக, பிஸ்கட் ஐஸ்கிரீமாக, தந்தூரி சிக்கனாக இருக்கிறது.

உடையும், உறைவிடமும் இப்படி மாறி இருப்பதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும், ஒரு தனி மனித வளர்ச்சியில் இந்த கற்றுக் கொள்வதுதான் அளவிடப்படுகிறது.

எனவே கற்றுக் கொள்வது என்பது தனி மனித வளர்ச்சி என்பது மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியாகவும் கருதப்படும். வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளரும் விஷயம். இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம். நான் கம்ப்யூட்டர் தெரிந்து கொள்ளாமலேயே மத்திம வயதை தாண்டிவிட்டேன். என் பிள்ளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும், இல்லாவிடில் அவன் வாழ்க்கை சிக்கலாகும். இது அவனுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்.

எனவே கற்றுக்கொள்வது காப்பியடிப்பது மட்டுமல்ல அதை தாண்டியும் போவது. அதே பதினாறாம் வாய்ப்பாடுதான். கருவிதான் வேறு. கற்றுக்கொண்டே இருப்பதில் முன்னேறிக் கொண்டே இருப்பதும் ஒரு நிர்ப்பந்தம்தான். சரி, ஏன் கற்கவேண்டும்? வாலிழந்த நரிக்கூட்டத்தில் வாலுள்ள நரி விநோதம். பைத்தியம். நெருப்பு எதற்கு என்று பச்சையாக மாமிசம் சாப்பிட்டால் இளக்காரமாகும். ஏதோ போல் இருக்கும். உணவில் மட்டுமல்ல இனி குடுமியும், கோவணமும்தான் உடை. என் மூதாதையர்கள் அப்படிதான் இருந்தார்கள் என்று நாம் பேசக்கூட அனுமதிக்கவில்லை. பேண்ட் அத்தியாவசியம்.

கற்றுக்கொள்வதில் ஊரோடு ஒத்து வாழ் என்கிற அர்த்தமும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி ஒட்டவில்லையெனில் ‘பல கற்றும் கல்லார்’ என்று சொல்லப்படாமல் இருப்பதற்கே நாம் கற்றாக வேண்டும். எதற்கு எழுதப் படிக்க தெரிய வேண்டும் என்ற காலம் போய் நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. நானும் உங்களுக்கு சிலதை கற்றுக்கொடுக்கப் போகிறேன். நான் எங்கோ கற்று கவனித்து தெளிந்து செயல்பட்டதை உங்களுக்கு சொல்லப்போகிறேன். நீங்கள் இதற்கு பிற்பாடு கவனித்து தெளிந்து பிறருக்கு நான் சொன்னதை காட்டிலும் தெளிவாய் சொல்லக்கூடும். இப்படிதான் மனிதன் இனம் வாழ்ந்தது. இனியும் வாழும்.

உங்களுக்கு யாரும் சொல்லித் தராததை சொல்லப் போவதில்லை. இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரிந்திருப்பின் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள். தெரியாதிருப்பின் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விஞ்ஞானி இல்லை. வேறு எந்த ஞானமும் கைவரப்படவில்லை. என் நாற்பத்தேழு வயதில் நான் ஊன்றி கவனித்து பழகியவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். எனவேதான் கற்றுத்தருகிறேன் என்ற கர்வம் காட்டுவதுகூட செய்யாதிருக்க தோன்றியது. அனுபவ பகிர்தலை அவசியமான பாடம் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

என் அனுபவத்தை நீங்கள் அறிந்து கொண்டால் அதாவது கற்றுக் கொண்டால் பெரிய குற்றம் வந்துவிடாது என்கிற தலைப்பு கொடுத்தேன். இது அவையடக்கமாக சொல்லப்பட்ட தலைப்பு அல்ல. ஆராய்ந்து ஆராய்ந்து ஆதார விளக்கங்களுடன் அதற்கான புத்தக குறிப்புடன் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதற்காகவே இந்த தலைப்போடு இக்கட்டுரையை தொடர்கிறேன்.

காலையில் எழுந்திருப்பது என்கிற விஷயத்திலிருந்து பேசத் துவங்கி விடுவோமா, உறக்கம் கலைந்து படுக்கையை விட்டு எழுந்திருப்பது எப்படி என்பதைப் பற்றி பேசுவோமா?

மதரீதியான எந்த விளக்கமும் நான் உங்களுக்கு சொல்லப் போவதில்லை. வலது உள்ளங்கையில் சரஸ்வதி இருக்கிறாள் என்றெல்லாம் விளக்கப் போவதில்லை, ‘முருகா’ என்று படுக்கையில் அலறிவிட்டு அமர்ந்தபடியே படுக்கையை விட்டு எழுந்திரு என்கிற உபந்நியாசம் இல்லை. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். உங்கள் இஷ்டம். இவையாவுமே நன்றாக விழிப்பு கொடுத்தவுடன் வரும் முற்றிலும் மனம் தெளிவடைந்த பிறகு வரும் செயல்கள்.

நான் சொல்லப் போவது வேறு. உறக்கத்திற்கும் விழித்தபின் ஏற்படும் முழுத் தெளிவுக்கும் பின் உருவாகும் ஒரு நிலை. உறக்கம் கலைந்து மறுபடி உறக்கம் வருமே, மறுபடி உறங்கத் தோன்றுமே அந்தநேரம் அந்த நேரத்தில் இரண்டு செயல்கள் செய்யும் சாத்தியம் உண்டு. ஒன்று அந்த தூக்கத்தைப்பற்றி, ஆராய்ந்து, இரண்டு விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது.

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?

தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.

உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.

சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.

எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.

சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.

நான் சொல்வதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.

இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

இங்கே துணிச்சலாய், “அடச்சீ போ” என்று மனசை அறுத்து விட வேண்டும். இங்கே மனசை அறுக்க சுலபமான வழி எழுந்து படுக்கையில் உட்கார்ந்து விடுவதுதான் முழு விழிப்பையும் அனுபவிக்கத் துவங்குவதுதான். அடுத்த முறை முதல் விழிப்பு வந்த போது கண்ட கனவு பற்றியோ அல்லது மேற்கொள்ளப் போகும் நினைவு பற்றியோ மனதை யோசிக்க வைக்க முயலுங்கள்.

இந்த கட்டுரை புரியலையே என்று படித்து விட்டு சொல்ல வேண்டாம். நான் சொன்னதை பழகிப் பார்த்து விட்டுப் பேசுங்கள். அப்போது நான் சொன்னதையும் தாண்டி பலதும் புரியும். “நானா எங்க எழுந்துக்கறேன், அப்படி எழுந்தாத்தானே பாதி முழிப்பு எங்க வீட்டுல சுளீர்ன்னு தண்ணி ஊத்தி அடிச்சித்தான் எழுப்புவாங்க, நான் அலறிதான் எழுந்திருப்பேன்” என்பவர்களுக்கும் இக்கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.

“தினம் ராத்திரி தண்ணி போட்டோமா, காலையில புரண்டு படுத்தா தலை நோவறாதுதான் தெரியுது. கனவும் தெரியலை காட்சியும் தெரியலை” என்று சொல்பவர்களுக்கும் எந்தக் கட்டுரையும் அவசியமில்லை.
படுக்கையில் இருந்து எழுந்து பிறகு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்கிறேன்.


.........................................“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”................தொடரும்.

5 comments:

said...

தூக்கம் என்பது தினந்தோறும் நடக்கும் ஒரு வித செயல் என்று இத்தைனை நாட்கள் நினைத்திருந்தோம், ஆனால் இதில் எவ்வளவு விஷயங்கள் அடங்கி உள்ளன என்று இப்பொழுது தான் புரிகறது. இதை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
நன்றி
கலைவினோத்

said...

கற்றது கைமண்ணளவு.....

கல்லாதது உலகளவு..

ஔவை மூதாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது..

ஆம்.. கற்றுக் கொண்டால் குற்றமில்லை....

said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. இது கற்றுக்கொடுத்தல் அல்ல என்ற கட்டுரையின் துவக்கம் மிகவும் கவர்ந்தது...

said...

பாலா அவர்களின் அறிவுரையை படித்து, உள்வாங்கி அதன் படியே யாரேனும் செயல்படுவார்களே ஆனால், வாழ்வில் மிக மிக உன்னதமான நிலையை அடைவர் என்பது திண்ணம்...

இதை வாழ்வில் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தவன்...

நன்றி கிருஷ்ண துளசி...

said...

மிக அருமை ..விழிப்பு நிலைக்கு முயல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.நல்ல விதை விதைத்து உள்ளீர்கள்,நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் செடியினை ..நன்றி.