Tuesday, September 7, 2010

சூரியனோடு சில நாட்கள் -7

சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.

நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.

சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.

இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷ படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.

சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.

‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.

இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.

எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.

"உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.

மூன்றாவது மாணிக்பாட்ஷவிற்கு வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.



ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.

இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “என்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் , கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷ நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.

6 comments:

said...

மிகவும் அருமை. தலைவர் இவ்வளவு உயரத்திற்கு சென்றதற்கு காரணம் மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பளிப்பது தான். இது அனைவருக்கும் ஒரு நல்ல முன்னுதாரனமாக இருக்கும். பாலகுமாரன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போல் நிறைய கருத்துக்களை தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதே என் ஆசை.

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

said...

பாட்ஷா படப்பிடிப்பின் செட்டில் நடந்த விஷயங்கள் இங்கே மிக அழகாய் விளக்கப்பட்டுள்ளது...

இது போன்ற விஷயங்களை (எங்களுக்கு உங்களை போன்றோர் சொல்லாமல் தெரிய வாய்ப்பில்லை) தெரிந்து கொள்ளும் போது, உங்கள் மேல், ரஜினி மேல், சுரேஷ் கிருஷ்ணா மேல் என்று அனைவரின் மேலுள்ள மதிப்பு பல மடங்கு உயர்கிறது...

பகிர்வுக்கு நன்றி...

அடுத்த பாகம் படிக்க ஆவலுடன் உள்ளேன்...

said...

Nice Articles...Thanks Guru (Bala Sir )

- Mahesh

said...

this is not a comment. read yesterday that bala is not doing well and admitted to appollo. can you please let me know how he is.

the love of people to whom he taught what love is will take care of him

said...

please let me know how bala sir is doing. read that he has been hospitalised.

just, if possible, make him know that the love of countless people to whom he taught what love is, will take care of him and his family always.

said...

Dear sir,
Your enquiries have been conveyed.

Thanks