Wednesday, November 7, 2012

இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன ?

                  சமீபத்தில் மிகக் கோரமான பட்டாசு வெடி விபத்துகளின் படங்களை பெரிதாகப் போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த வெடி விபத்துக்குக் காரணம் பட்டாசு வெடிக்கிறவர்கள் தான் என்பது போல சொல்லியிருக்கிறார்கள். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. பட்டாசு வெடிப்பதும், தயாரிப்பதும் கொஞ்சம் ஆபத்தான வழிதான்.  வருடா வருடம் பட்டாசு வெடி விபத்து நடந்து கொண்டுதான்  இருக்கிறது.  பட்டாசு தயாரிப்பில் அதிகம் ஆபத்து என்றால் கூட தீக்குச்சி தயாரிப்பிலும் வெடி விபத்து நிகழ்கிறது. தீக்குச்சி அவசியமா என்று கேட்பதில்லை.

                      பட்டாசு அவசியமில்லை என்று இளைஞர்களோ, சிறுவர்களோ சொல்லமாட்டார்கள்.  பட்டாசு ஆர்வம் குறைந்தவர்கள் தான் சொல்வார்கள்.
 பட்டாசை குறைந்த வயதினர் தான் சந்தோஷமாகக் கொளுத்தி அதன் சத்தத்தை, வர்ணத்தை , சீறலை ஒரு பயம் கலந்த தவிப்போடு அனுபவிக்கிறார்கள்.  ஒருவித வன்முறை இந்த பட்டாசு வெடிப்பதில் இருக்கிறது.  சீறலும், வெடிசத்தமும் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன.
நடுங்க  வைக்கின்றன.  அந்த த்ரில் தேவையாக இருக்கிறது.  ஒரு ரசனையாக இருக்கிறது. பட்டாசு காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதற்கிடையே
புகுந்து புறப்படுகிறவர்கள் இளைஞர்களோ அல்லது இள வயது மனம் கொண்ட மனிதர்களோ தான்.

                      இந்த குறுகுறுப்பான பயம் கலந்த குதூகலிப்பு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த குறுகுறுப்பு கலந்த திகிலை நாம் அனுபவிக்கலாம்.  இது அடிப்படையாக மனிதர்கள் விரும்பி அனுபவிக்கிற ஒரு சுவை. அதனால் தான் பட்டாசு மிக முக்கியமானதாக, சந்தோஷமூட்டுவதாக இருக்கிறது.

                         விபத்து நிகழ்கிறதே. நீங்கள் வாங்குவதால் தானே இத்தனை உயிர்கள் சாகின்றன என்றெல்லாம் கேட்கலாம்.  விமான விபத்துகள் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கருகி அடையாளம் தெரியாமல் மரணமடைந்திருக்கிறார்கள். விமானம் வேண்டுமா என்று யாருமே கேட்பதில்லை. நீண்ட நெடிய கப்பல் பயணங்களில் லட்சகணக்கான பேர் இருக்கிறார்களா , தப்பித்தார்களா என்று அடையாளம் காண முடியாதபடி இறந்து போயிருக்கிறார்கள். கப்பல் பயணங்கள் எதுவும் நின்றுவிடவில்லை.

                       நாம் அடிக்கடி பயணப்படுகின்ற ரயிலில் இதுவரையில் நிறைய பேர்  இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் கூட ரயில் ஓட்டம் நின்று விடவில்லை.

                   இவை அத்தியாவசியமானவை. பட்டாசு அனாவசியமானது என்று வாதிடலாம்.  வாணவேடிக்கை என்பது தீபாவளிப் பண்டிகையோடு
மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் வெடிப்பதைக் காட்டிலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, தலைவர் பிறந்த நாள் விழா, நினைவு
நாள் , ஒலிம்பிக், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் , கால்பந்து என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மிக வேகமாக, மிக உற்சாகமாக பலநூறு மடங்கு
பலம் கொண்ட விதவிதமான வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு பண்டிகையோடு அந்த சந்தோஷம் நின்று
விடாமல் அந்த பண்டிகையின் சந்தோஷத்தை பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் எடுத்து வருகிறார்கள். வெடிச்சத்தம் இல்லாமல் போகும் பிணம்
தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

                  திருவிழாக்களில் முத்தாய்ப்பாக, தேர்தல் வெற்றியில் முத்தாய்ப்பாக இரவு பதினொறு மணிக்கு மேல் வாணவேடிக்கை என்று போஸ்டர் அடித்து பட்டாசு வெடிக்கிறார்கள்.

                     இப்படி எல்லா விஷயத்திலும் நீக்கமற பட்டாசு சத்தம் நிறைந்திருக்கையில் தீபாவளிப் பண்டிகையை மட்டும் குறை சொல்வது என்பது  தவறான மனப்பான்மை. இந்த விபத்துகளுக்கு பட்டாசு தயாரிப்பவர்களும், பட்டாசு தயாரிக்கும் போது கவனக்குறைவான தொழிலாளர்களும் தான் காரணம். சில நட்சத்திர ஓட்டல்களில் அறையில் லேசான புகை ஏற்பட்டாலும் அலார சத்தத்தோடு நீர் பீய்ச்சி அடிக்கின்ற கருவிகள் எல்லா அறைகளிலும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் பத்து பேர் ஒன்று கூடி சிகரெட் பிடிக்க திடீரென்று மேலே இருந்து தண்ணீர் பீய்ச்சப்பட்டது. புகையின் அடர்த்தி அதிகமானதால் அந்த அபாய எச்சரிக்கை ஒலிக்கத் துவங்கிவிட்டது. அப்படி ஏதேனும் ஒரு வசதி பட்டாசு தயாரிப்பு இடத்தில் இருக்க வேண்டுமென்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா?  இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? ஏற்பட்டால், அதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

                          இந்துமதப் பண்டிகையோடு சம்பந்தப்பட்டது என்பதாலேயே பட்டாசால் விபத்து ஏற்படுகிறது . அதை வெடிக்க வேண்டாம் என்று சொல்வது அத்தனை குணமுள்ள விஷயமாக எனக்குத் தெரியவில்லை.  யாருடைய சந்தோஷத்தை பறித்துப் போகிறோம் என்பதை யோசிக்கவில்லை. இந்தத் தயாரிப்பில் விபத்து ஏற்படுகிறது என்பதை மட்டும் பார்த்தால் , தீக்குச்சி கூட தயாரிக்கக்கூடாது; தடை செய்யப்பட வேண்டும். 

                         ஆனால், மறுபடியும் இந்த உயிரிழப்பைப் பற்றி கவலைப்படாமல் பட்டாசு தயாரிக்கின்ற நகரங்கள், கிராமங்கள் முழு மூச்சோடு செயல்படுகின்றனவே, என்ன காரணம் ? இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா ? மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் ? விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் ? இது ஆராய வேண்டிய விஷயம்.

                          இதையெல்லாம் யோசிக்காது, ஒரு இந்துமதப் பண்டிகையின் சந்தோஷத்தில் கை வைப்பது அத்தனை குணமுடைய விஷயமல்ல. மத்தாப்பு வெளிச்சத்தில் இளைஞனைப் பார்க்கின்ற யுவதியும், யுவதியைப் பார்க்கின்ற இளைஞனும், குழந்தைகளும், பெரியவர்களும் வெடிச்சத்தத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்ற மனிதர்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.


                         சில மத போதகர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்துமதத்தை குறை சொல்ல வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி
பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. என்ன விலை கூடினாலும் அற்புதமான வியாபாரமாகத் தான் பட்டாசு இருந்திருக்கிறது. ஊர் மைதானத்தில் இடம்  போட்டுத் தருகிறேன் .இங்கு தனியாக வியாபாரம் செய் என்ற உத்தரவையும் வியாபாரிகள் புலம்பலாக மறுத்திருக்கிறார்கள்.

                            'அய்யோ வியாபாரம் போச்சே' என்று தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வர்ண விளக்குகளின் ஒளியில் அலங்காரமாக அடுக்கப்பட்ட பட்டாசு வகைகள் தடுக்கப்பட முடியவில்லை.  அந்த பட்டாசின் மீது ஜனங்களுக்கு உள்ள ஆர்வத்தை
எதனாலும் குறைக்க முடியவில்லை. 

                            ஜனங்கள் பட்டாசு வெடிப்பதை குறை சொல்வதை விட, அவை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்தும் அதற்கு சீரான ஒரு தீர்வு காணாமல், தீபாவளிக்குப் பட்டாசு அவசியமா என்பது வெறும் அலட்டல் தான்.

                             இது என் அபிப்ராயம்.

Thursday, November 1, 2012


என்னைக் கலக்கிய மகாபாரதம்

    ஒரு எழுத்தாளன் தனக்குப் பிடித்த கதை என்று எழுத வேண்டுமானால், ஒன்று தன் கதையைச் சொல்வான். அல்லது தன் நெருங்கிய நண்பன் எழுதிய கதையைச் சொல்வான் என்கிற வழக்கு இங்கு உண்டு. நான் பேப்பர் கதையை விட்டுவிட்டு ஒரு செலூலாய்ட் கதையைச் சொல்ல விரும்புகிறேன். இன்னும் தியேட்டருக்கு வராத ஒரு திரைப்படத்தின் கதையை எனக்குப் பிடித்த கதையென்று சொல்கிறேன்.
 
     படத்தின் பெயர் ‘பகவத் கீதை’ கதை எழுதியவர் கிருஷ்ண பரமாத்மா. திரைக்கதை,வசனம் அமைத்தவர் ஜி.வி.ஐயர். தயாரிப்பாளர் ஆந்திரத்து வள்ளல் சுப்பிராமிரெட்டி. பத்திரிகையில் இதுபற்றி செய்தி பார்த்ததுமே, இது மத்திய அரசிடம் ‘தங்கத் தாமரை’ விருது பெற்றது என்று கேள்விப்பட்டதுமே கொஞ்சம் திகைத்துப் போனேன்.
 
     பகவத் கீதையை எப்படி படம் எடுக்க முடியும். ஒரு தத்துவப் புத்தகத்தை எப்படி ஒரு திரைப்படமாக்க முடியும் என்று யோசனை செய்தேன். ஆனால் கரூரில் பிறந்து பெங்களூரில் வாழும் ஜி.வி.ஐயர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவருடைய முந்தைய படங்களான ஹம்சகீதையும், பரமஹம்சரும் அவரைப் பற்றிய மதிப்பை எனக்கு பெரிதும் உயர்த்தியிருந்தன.
 
     பகவத் கீதை படம் பார்க்க உட்கார்ந்தபோது நெஞ்சின் உள்ளே கேள்விகளெல்லாம் அழிந்து படத்தோடு ஆழமாய் ஒன்றிப் போக முடிந்தது. பகவத் கீதை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் புரிந்தது. பகவத் கீதை என்பது மகாபாரதம் என்ற கதையில் வந்த இடைச்செருகல். அல்ல, தத்துவக் குவியல் அல்ல. பகவான் கிருஷ்ணன் சொன்ன தத்துவத்தின் விளக்கம் மகாபாரதம். ஒரு தத்துவத்தை ராஜா, ராணி கதையாய் விளக்க முற்பட்ட விஷயம் தான் மகாபாரத காவியம். கதையை விட தத்துவமே முக்கியம்.
 
     ஐ.வி.ஐயர், “குருஷேத்திரம் என்பது ஒரு ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே இருக்கிறது” என்றார். காமம், குரோதம், லோபம், மூர்க்கம், மதம், மாச்சரியம் என்று ஆறு குணங்களால் மனிதன் அவதிப்படுவதைச் சொல்கிறார். காமம் என்பது துரியோதனன், திரெளபதியை விரும்பியவன். குரோதம் என்பது கர்ணன், தெய்வத் தன்மை நிரம்பினாலும் பாண்டவர்கள் மீதுள்ள பொறாமையால் நாசமானவன். லோபம் சகுனி. மதம் துச்சாதனன் என்று அடுக்கிக் கொண்டு போகிறார்.
 
     அதுமட்டுமல்ல, கெளரவர்கள் பக்கமிருந்த பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா இவர்களையெல்லாம் ருசி, ரச வாசனை என்று பிரிக்கிறார். ‘புலன்களைத் தூண்டும் நல்லவைகள் போலத் தோன்றும் இவையும் கெட்டவைகள்’ என்கிறார்.
 
     ஐம்புலன்களைப் பஞ்சபாண்டவர்களாகவும் மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தியை திரெளபதியாகவும் வர்ணிக்கிறார். அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. பஞ்ச பூதங்களால் உணரப்படும் நல்லவை போல் தோன்றும் விஷயங்களை ஓதுக்கு, தீயதான காமக் குரோதங்களை ஓடுக்கி, உயிர்ச்சக்தியை ஒருவன் வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை என்கிறார். இதைச் செய்ய, மரணத்திற்குப் பின்னாலும் ஆத்மாவின் பயணம் நல்லபடி தொடரும்’என்கிறார்.
 
     இது ஐ.வி.ஐயரின் கோணம்.
 
     படம் போரிலிருந்து துவங்குகிறது. போர் நடக்கும் முன்பே போரின் கொடுமையை அர்ச்சுனன் நினைத்துப் பார்க்கிறான். கிருஷ்ணன் அர்ச்சுனன் கலக்கத்தை நீக்குவதற்காக இப்புவியில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார். “அர்ச்சுனா, நீ புல்லாய், புழுவாய், மீனாய், பறவையாய்ப் பிறந்து மனிதனானாய்” என்கிறார்.
 
     “உன் பயணம் மிகப் பெரியது. நீ அர்ச்சுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி, இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும், நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக் குரோதம் நீக்கி மூலாதாரச் சக்தியைத் தூண்டி விட்டு, அனாதஹம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, ரச,வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அச்சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம்” என்கிறார். இதுவே ஆத்ம பயணத்தின் வழி என்கிறார்.
 
     துரியோதனன, கர்ணனாக காமக் குரோதங்கள் சண்டையிடுவதும், பீஷ்மர், துரியோதனனாக இந்திரியங்கள் பின் தொடர்வதும், அர்ச்சுனன் சாதாரண மனிதனாகவும், இயற்கை அழகு என்பது மாயை என்கிற பெண்ணாகவும், ஆத்மாவின் பயணம் வெள்ளைவெளேரென்கிற பனிபடர்ந்த மலையாகவும் மிக நேர்த்தியாய் காட்டப்பட்டிருக்கிறது. பரவசமாகிப் போனேன்.
 
     திரெளபதி ப்ருத்வீ. அதாவது பூமியும், பூமியைச் சுற்றியுள்ள இடமும், துச்சாதனன் என்பவன் மனிதனின் மதம். அதாவது தான் என்னும் கர்வம். தன்னால் முடியும் என்கிற திமிர். துச்சாதனன் சபை நடுவே திரெளபதியைத் துகில் உரிக்கிறான். அதாவது விஞ்ஞானி என்கிற மனிதன் இந்த ப்ருத்வீயை ஆராய முற்படுகிறான். பிருத்வீயின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முற்படுகிறான். ஆனால் ப்ருத்வீயோ படல்படலாய் பல ஆடைகள் பூண்டவள். மனிதன் காலகாலமாய் துகில் உரியச் செய்தாலும் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது. களைத்து விழுவதைத் தவிர வேறு வழியும் இல்லை.
 
     திரெளபதி அதாவது புருத்வீ இன்னமும் ரகசியமானவள் என்கிற நாடகமும் இந்தத் திரைப்படத்தில் வருகிறது. நான் திகைத்துப் போனேன். தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் படம் தமிழிலும் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் மிக நேர்த்தியான இசை, மது அம்பாட்டின் கவிதையான கேமரா, மணிமணியாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் கூட்டம் படத்தில் நம்மை இழைய வைக்கின்றன. கடினமான தத்துவம் எளிதாகப் புரிகிறது. மரணத்திற்குப் பிறகும் விஷய வாசனைகள் தொடரும் என்பது பயமுறுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்வதின் அர்த்தம் புரிகிறது.
 
     ஜி.வி.ஐயருக்கு இந்திய திரைப்பட உலகம் கடன்பட்டிருக்கிறது. சினிமா பொழுதுபோக்கல்ல. அது தத்துவ வகுப்பு என்பதை ஜி.வி.ஐயர் நிருபித்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு வாழ்க்கையில் இடமே இல்லை. ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார். ஜி.வி.ஐயர் இன்றைய திரைப்பட இயக்குனர்களில் பிரம்மரிஷி வசிஷ்டமுனி. அவரின் ஞானத்திற்கு எழுத்தாளனாகிய நான், கை கூப்பி வணங்குகிறேன்.


Tuesday, October 30, 2012


துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடுகிறார்கள் ?

     துளசி வெறும் தாவரமல்ல. அது மிகச் சிறந்த மூலிகை. மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய கபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. அறவே நீக்கவல்லது. கபம் மனிதருக்கு மிக மோசமான பிரச்சனை.வெகு சீக்கிரம் அது மரணம் வரை கொண்டு போய் விட்டுவிடும். முன்பெல்லாம் குழந்தைகள் தும்மினால் தீர்க்காயுசு என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு முறை தும்மினாலே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது என்று தான் அர்த்தம்.
     நுரையீரலில் நீர் சேர்ந்துவிட்டது என்பதற்கு அறிகுறி. நுரையீரலில் நீர் சேர்ந்தால் அது கபமாக மாறும்.நுரையீரல் பைகளை கபம் அடைத்துக் கொண்டால் மூச்சு விடுவது பிரச்சனை ஆகும். மூச்சு இழுத்து விடுவதில் பிரச்சனை என்றால் இதயத்தின் செயல்பாடுகள் வேகமாக குறையும். இதயத்தின் செயல்பாடு குறைந்தால் கிட்னியில் தாக்கம் ஏற்படும். கிட்னியில் தாக்கம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் மோசமாகும். பிறகு உடம்பு முழுக்க வலி மிகுந்து பிறகு ஜீரம் வரும்.
     கபம் என்பது ஓரிரு நாளில் உச்சக் கட்டத்தை எட்டும். சட்டென்று மூச்சுத் திணறி மரணம் ஏற்படும். போன வாரம் ஆடிக் கொண்டிருந்த பையன் இந்த வாரம் இறந்து போனான் என்பது கபத்தால் ஏற்படக்கூடும்.
     எனவே கபம் சேராமல் இருக்க, சேர்ந்த கபம் செயலிழக்க அவர்கள் துளசியை மிக முக்கியமான ஒரு மருந்தாக கருதி வந்தார்கள். எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு வீடு துளசியை வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள். தினமும் உண்ணுதல் நலம் என்றார்கள்.
     நீங்கள் நினைப்பது போல வெறும் தாவரம் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது. அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்வதற்காக அதற்குப் பின்னே கதைகள் ஏற்படுத்தினார்கள் . துளசியை பெண்ணாக உருவகித்தார்கள். அது கடவுளுக்கு உகந்தது என்று காரணம் சொன்னார்கள். அந்தக் கதைகளெல்லாம் துளசியை வீட்டுக்கு வீடு வளர்ப்பதற்காக . துளசியினுடைய வளர்ச்சி கபத்தை நீக்குகின்ற கைமருந்து என்பதற்காக. இது போல் பல்வேறு தாவரங்கள் இருக்கின்றன..
     வேப்பங்கொழுந்து ஒரு அற்புதமான  விஷயம். ஆனால் எல்லாவற்றையும் விட துளசியே முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Monday, January 24, 2011

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.
சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.

தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறூதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

Monday, January 10, 2011

சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்

ஜெய விஜயீ பவ !

டியர் மாஸ்டர்,

சொர்க்கம் நடுவிலே படித்து முடித்த பிறகு, உங்களை இப்படித் தான் முகமன் சொல்லி வரவேற்க வேண்டும்; அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கேசவன் நாராயணனோடு பயணித்துவிட்டு, இப்போது தான் பூமியில் இறங்கியது போலிருக்கிறது.

மரணத்தைப் பற்றிய அறிவைத் தந்து, மனித மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் பயத்தை ஒரே வீச்சில் துடைத்தெறிந்து விட்டீர்கள்.

எல்லோருக்கும் நீங்கள் பார்த்தசாரதி. ஆனால், இந்த பார்த்தன் உங்களுக்கு சாரதி. இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப் பேறை விட மிக உன்னதமான விஷயம் உங்களோடு காரில் பயணிக்கும் போது, நீங்கள் எழுதப் போகும் கதையைப் பற்றி விவரிப்பதைக் கேட்பது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். “பாலாஜி, நான் மரணத்திற்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதாக நிச்சயித்திருக்கிறேன். எமப்பட்டினம் என்றால் என்ன என்று ஒரு அரை மணி நேரம் உனக்கு சொல்லுகிறேன். கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுவாயா” என்று கேட்டீர்கள். உடனடியாகத் தயாரானேன்.

மரணம் என்றால் என்ன?  எமப்பட்டினம் என்பது என்ன?    எமகிங்கரர்கள் யார்?   மரணம் ஏன் வலி?   வலியில்லா மரணம் உண்டா?   நரகம் உண்டா?   சொர்க்கம் உண்டா?   நரகம் எது?   சொர்க்கம் எது?   என்ற  வாழ்வின் அடிப்படையான கேள்விகளை நீங்களே எழுப்பி, அதன் பதில்களை நீங்களே தெளிவாக விவரித்துக் கொண்டு போக, என் மனம் கை கட்டி, வாய் பொத்தி, உங்கள் உபநிஷத விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. கார் தன்னிச்சையாக ஓடிக் கொண்டிருந்தது அதிசயமே.

கனத்த ஒரு அமைதி என்னை சூழ்ந்து கொண்டது. நன்றாக புரிந்தது போலவும் இருந்தது. புரியவில்லையோ என்ற சந்தேகமும் இருந்தது.

இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை இவர் எப்படி நாவலாக்கப் போகிறார்? அப்படி நாவலாக்கினால் படிப்பதற்கு உவப்பாக இருக்குமா என்ற கவலையும் எழுந்தது. ஆண்-பெண் உறவு சிக்கல்களை விளக்கி வளமான வாழ்விற்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறைதேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக்குறி என் முன்னே நின்றது.
என்றோ ஒரு நாள் மரணம் நிகழப் போகிறது. அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுவையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? வாழும் வாழ்க்கையையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் மரணத்தைப் பற்றி ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். உங்களின் இந்த முயற்சி அவசியம் இல்லாத ஒன்றோ என்றும் தோன்றியது.
ஆனால்,

“நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர்த் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆயிற்று. இன்னும் பிறக்கவில்லை. இப்போது பூமியிலுமில்லாமல், பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். மரணத்திற்குப் பின் உடலில்லாத உலகத்திற்கு வருபவர்களுக்காக உதவிகள் செய்ய உத்தேசித்து இங்கே காத்திருக்கிறேன்”    

 என்று ஆரம்பிக்கப் போகிறேன் பாலாஜி’, என்று நீங்கள் கூறியவுடன் I understood that the magician is back at his work.

மரணம் மற்றும் மறுபிறப்பு என்ற சுழற்சியைப் பற்றி நீங்கள் விவரித்த விஷயங்கள் அறிவியல் உலகின் அடிப்படை விதிகளோடு மிகச் சரியாகப் பொருந்தியது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

For every action there is an equal and opposite reaction-

இது நியூட்டனின் மூன்றாம் விதி.

நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று நீங்கள் விளக்கும் கர்மா theoryஐ மறுக்கவே முடியவில்லை. நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லையே என்று யோசிக்கும் போது, மரணத்திற்குப் பின்னும் இந்த வாழ்வின் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வாழ்விற்குள்ளேயே வினைகளை நிறுத்தியவருக்கு ஏது மறுபிறப்பு, அப்படிப்பட்டவர்கள் தான் ஞானிகளோ!

இப்போது அறிவியலின் மற்றொரு விதியும் நினைவுக்கு வருகிறது.

‘Energy can neither be created nor be destroyed. It is transformed from one form to another’.

----இது   Law of conservation of energy.

விஞ்ஞானத்தின் அதிஉன்னத நிலை ஞானமோ. சத்தியத்திற்கு ஏது பிரிவினை.

இதுவரை பலப்பல ஞானிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளின் ஞான தத்துவங்களை சர்க்கரை மிட்டாயாகத் தந்து கொண்டிருக்கிறீகளோ.

உலகம் இரண்டு மாறுபட்ட நிலைகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பு-வெறுப்பு, இரவு-பகல், இன்ப-துன்பம், பாஸிடிவ்-நெகடிவ் என்பது உண்மையெனில் zero point என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. இந்த zero point தான் நீங்கள் சொல்லும் நடுநிலையோ. இந்த நடுநிலையிலேயே இருந்து நாம் செயலாற்றும் போது there won’t be any reaction, Isn’t it? இப்படித் தானே பிறப்புச் சங்கிலியை அறுக்க வேண்டும். இது தானே நீங்கள் சொல்வது.

“சொர்க்கம் நடுவிலே” படித்து முடித்த பிறகு “சக்தி விகடனில்” நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் தத்துவார்த்த விளக்கங்களை மீண்டும் படித்தபோது நன்கு புரிந்தது. Thank you master.

இதைவிட எளிமையாக வேதாந்த கருத்துகளை யாரால் எழுத முடியும்? Hats off எழுத்துச் சித்தரே.
வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து விடவில்லை. மரணத்திற்கு அப்பாலும் தொடர்கிறது. ஒவ்வொரு செயலின் எதிர்வினயையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும். தப்பித்துக் கொள்ளவே முடியாது என்பதை “சொர்க்கம் நடுவிலே” படித்துத் தெளியும் போது ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதும் புரிகிறது.

வாழ்வை பயம் கலந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்ற பொறுப்பை எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஏற்படுத்தி விடுவதே “சொர்க்கம் நடுவிலே”யின் வெற்றி. இதைவிட பெரிய சமூக சேவை வேறு என்ன இருக்கக் கூடும். தனி மனிதன் மாறாமல் இங்கு என்ன மாற்றம் கொண்டு வந்து விட முடியும். உங்கள் எழுத்தின் மூலம் சப்தமே இல்லாமல் பெரும்புரட்சி செய்து விட்டீர்கள்.

பாரத கலாசாரத்தின் ஆணிவேரான ஞான தத்துவங்களை மேற்கத்திய மோகம் நிறைந்த இந்த சூழலில் convincing ஆக விளக்கி, மக்கள் மனதை நேர்வழிபடுத்தும் உங்கள் எழுத்து இலக்கிய உலகின் உயரிய விருதான “சாகித்ய அகாடமி” விருதால் கெளரவிக்கப்பட வேண்டும்.

ஒரு வினைக்கு எதிர்வினை உண்டெனில்... விருது நிச்சயம் உண்டு.

‘நான் வெறும் உடலல்ல, நான் யார் என்று என் மனதைப் பார்க்கும் போது, என் எண்ணங்கள் புரிகிறது. எண்ணங்கள் புரிய தியானம் இயல்பாகிறது. நடுநிலையில் நின்று இந்த உலக விஷயங்களை உற்று நோக்க ஆரம்பிக்க நானும் கேசவன் நாராயணனாகி விட்டேனோ!’

‘சொர்க்கம் நடுவிலே’ படிக்கும் ஒவ்வொருவரும் கேசவன் நாராயணன் ஆவதைத் தவிர்க்க முடியாது.
Is the act witnessing itself Kesavan Narayanan, I think so.

சொர்க்கத்தை எந்த ஜென்மத்தில் அடைவோம் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையையே சொர்க்கமாக்கி விட்டீர்கள். பயனுள்ள வாழ்வு, பயமில்லா வாழ்வு சொர்க்கம் தானே!

இறப்பதற்கு முன்னாலேயே சொர்க்கத்தை அனுபவித்தால் அதைவிட பெரிய பேறு வேறு என்ன இருக்க முடியும்.

Your ‘sorgam naduvile’ is a tribute to mankind.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கேசவன் நாராயணன் அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு புதுமை. மிக அருமை.

அந்த கமாண்டோ வீரனின் மரணம் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை நினைவூட்டியது. அங்கு மாய்ந்த வீரர்களும் இப்படித் தான் சொர்க்கம் சென்றிருப்பார்களோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி.

உங்கள் எழுத்தின் மற்றுமொரு தாக்கம் என் உடனடியான ஸ்ரீரங்கப் பயணம். துலுக்க நாச்சியார் சந்நிதியில் உருகி நின்ற மணித்துளிகள்.

விதம் விதமான மரணங்களைச் சொல்லி அதன் நிலையையும் விளக்கி இருக்கிறீர்கள். ஞானியை பேச வைத்து பல சிறிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறீர்கள். மரணத்தருவாய் எப்படி இருக்கும் என்பதை ஒரு கிழவர் மூலம் விளக்குகிறீர்கள். உயிர்ப் பிரிவதை நேரடியாகப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்டவன் கூட மரணத்திற்குப் பின் அமைதியாகிறான். ஆனால், தற்கொலை மரணத்திற்குப் பின்னும் மிகப் பெரிய வேதனை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு அப்பாலும் கேள்விகள் எழும். வாசகர்கள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு தெளிய வேண்டியது தான்.


நீங்கள் வாழ்வதற்கு மட்டும் நல்ல வழிகாட்டி அல்ல. நல்ல மரணத்திற்கும் உங்களால் வழிகாட்ட முடியும். இந்த நாவலை படித்து முடித்த பிறகு இனி எந்த மரணத்தையும் முன் போல் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

இந்த பார்த்தன் மீண்டும் தயாராக இருக்கிறேன். கண்ணனோடு அடுத்த கார் பயணம் எப்போது.

At your service,
Your’s ever

Balaji Arun

Divisional Manager ,
Brakes India Ltd.

Friday, January 7, 2011

“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”

குரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா? செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா? குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா? குருவினுடைய தரிசனம் அப்படிப்பட்டது.
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட ஆனந்தத்தை, பணிவை உள்ளிருந்து பொங்கும் வணக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். எந்த முயற்சியுமில்லாமல், எந்த எண்ணமுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கரம் கூப்பி வணங்கியிருக்கிறேன். வெறுமே தொலைவிலிருந்து வணங்காமல் அவருடைய மேன்மையை அண்மையில் இருந்து பல்வேறு நாட்களில், பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு நல்ல குரு மிகவும் சூட்சுமமானவர். அவரைப் புரிந்து கொள்வது கடினம். அவரை சாதாரணமாக எடை போட்டு, அவரிடமிருந்து விஷயங்களை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், அது மிகவும் முட்டாள்தனம். யோகி ராம்சுரத்குமார் சூட்சுமத்திலும் சூட்சுமமானவர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
அவரை தரிசிக்க வேண்டுமென்று அடிக்கடி திருவண்ணாமலை போகின்ற விருப்பம் எனக்கு உண்டு. அப்படி செய்வது என் வழக்கம். ஒரு முறை திருவண்ணாமலைக்கு நேரடியாகப் போகும் பேருந்தில் ஏறி செளகரியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணப்பட்ட போது அந்த விரைவுப் பேருந்தில் ஜனங்களைக் குளிர்விப்பதற்காக ஒலிநாடா வைத்துப் பாட்டு போட்டார்கள்.

‘அடடா, இது சிந்தனை ஓட்டத்தை அறுக்குமே, வேறு பேருந்தில் ஏறிவிடலாமா’ என்று நினைத்த போது, போட்ட பாடல்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களாக இருந்தன. என்னுடைய இளம் வயதில் நான் ரசித்த பாடல்களை மறுபடியும் கேட்கும் போது மனம் சந்தோஷத்தில் குதித்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நான் பாடல்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். உள்ளுக்குள் என் குருவின் நாமமும், அவரைப் பற்றிய சிந்தனையும் தனியாக ஓடிக் கொண்டிருந்ததன. மிக விரைவாக திருவண்ணாமலையை பேருந்து அடைய, இறங்கி அவர் வீடு நோக்கி நடக்கும் போதும் உள்ளுக்குள் பேருந்தில் கேட்ட எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. குறிப்பாய் ஒரு பாடல் அதிகமாக ஓடியது. ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு நான் அவர் வீட்டு வாசலுக்குப் போனேன்.

எப்போது போனாலும் வாசற்கதவை உடனே திறந்து என்னை உள்ளே வரவழைப்பதும், தனக்கு அருகேயுள்ள பாயை விரித்து, அதில் உட்காரச் சொல்வதும் அவருடைய வழக்கம். அன்றும் அதே விதமான வரவேற்பு கிடைத்தது. எதிரே சில பெண்மணிகளும் எனக்கு வலது பக்கம் சில ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். எதிரே இருந்தவர்கள் குருவின் நாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டிருக்க, என் தோளில் கையை வைத்தபடி என்னையே என் குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு “என்ன பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.

“நான் மெளனமாகவல்லவா இருக்கிறேன், ஒன்றும் பாடவில்லை பகவான்” என்று சொன்னேன். “இல்லை. உள்ளே ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாய், என்ன பாட்டு அது”. நான் அப்போது தான் என்னை உள்ளே கவனித்தேன்,
உள்ளே
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா”
என்கிற எம்.ஜி.ஆர். படத்தின் காதற்பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பேருந்தில் போட்ட பாட்டு இன்னும் தொடர்ச்சியாக உள்ளே எந்தவித அர்த்தமுமின்றி, எந்தவித முயற்சியுமின்றி, எந்தவித திட்டமிடலுமின்றி, தானாக, சரியாக மூடப்படாத குழாயிலிருந்து நீர் வடிவதை போல ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன பாட்டு” .
நான் தயக்கத்தோடு “பேருந்தில் வரும் போது சினிமா பாடல்கள் போட்டார்கள். அதில் ஒரு பாட்டு உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது” என்றேன். “என்ன பாட்டு அது” என்றார்.
நான் சொல்வதற்கு தயங்கினேன். ஒரு மகத்தான குருவிடம் ஒரு சாதாரண சினிமா பாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உண்டா என்ற எண்ணம் ஏற்பட்டது.
“என்ன பாட்டு” மறுபடியும் கேட்டார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்று சற்று உரத்த குரலில் சொன்னேன்.

எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணிகள், வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ஆண்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். என் குருநாதர் சிரிக்கவில்லை. மிகக் கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
எதிரே இருந்த அம்மையார் ஒருவர் மெல்லிய குரலில் என்னை நோக்கி பேசினார், “பாலகுமாரன் இது அநியாயமாபடலே” என்று கேட்டார். மற்றவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.
“இரண்டு கல்யாணம் பண்ணிண்டு திருப்பியும் ‘கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா’ என்று சொல்றேளே, நன்னாயிருக்கா” என்று கேட்க, மறுபடியும் கூட்டம் குபீரென்று சிரித்தது. ஆனால், குருநாதர் சிரிக்கவில்லை. ஒரு கேலிக்கான பொருளாய் அங்கு இருப்பதைப் பார்த்து முகம் வெளிறி சிரித்தேன்.
“பேருந்தில் திரும்ப திரும்ப இந்தப் பாட்டை போட்டுக் கொண்டிருந்ததால், உள்ளுக்குள்ளே தங்கி விட்டது. என்னையும் அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்றபடி இந்தப் பாட்டினுடைய அர்த்தம் பற்றி எனக்கு கவலையில்லை” என்று அவரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவேயில்லை. காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர் என் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.
“தயவு செய்து அந்தப் பாட்டைப் பாடு” என்றார். இந்த முறை கூட்டத்தினர் ஆரவாரித்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஏதோ மிகப் பெரிய விளையாட்டு ஒன்று விளையாட, என்னை வைத்துக் கொண்டு நாடகம் போட தீர்மானித்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. நான் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன்.
அவர் தோள் உலுக்கி “பரவாயில்லை. பாடு” என்றார். “அது சினிமா பாட்டு” என்றேன்.
“அதனாலென்ன, நல்ல பாட்டு தானே, பாடு” என்றார். நான் தொண்டையை செருமிக் கொண்டேன். எதிரே உள்ள எல்லா முகங்களிலும் கேலி, கிண்டல் ததும்பியிருந்தது.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
நான் பாடினேன். மறுபடியும் யாரோ ஏதோ சொல்ல, அவர்கள் கைக் கொட்டி சிரித்தார்கள்.
‘என்ன’ என்பது போல் யோகி ராம்சுரத்குமார் சொன்னவரை உற்றுப் பார்க்க, “பாலகுமரான் ஏதோ திட்டமிட்டு தான் இங்க வந்திருக்காரு” என்று அவர் மறுபடியும் தன் கருத்தை சொன்னார். மீண்டும் கூட்டம் சிரித்தது. பரிதாபமாக குருவைப் பார்த்தேன்.
“பரவாயில்லை பாலகுமாரன், பாடு” என்று சொன்னார்.


ஒரு அளவுக்கு மேல் போய்விட்டது. இனி என்ன வந்தாலென்ன. சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினால் என்ன என்று நான் தொண்டையை செருமிக் கொண்டு இனிமையான குரலில், பாட்டு எந்த பாவத்தோடு இருக்க வேண்டுமோ, அந்த பாவத்தோடு பாட்டு பாடினேன்.
மூன்றாம் முறையும் “பாடு” என்று யோகி ராம்சுரத்குமார் கட்டளையிட்டார்.
அப்போது சாண், முழம் எல்லாம் தாண்டி தலைக்கு மேலே வெளிவர முடியாத உயரத்தில் வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இனி என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமென்று இந்த முறையும் மிக அழகான குரலில் பாடினேன்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” அவர் நெருங்கி என்னை அணைத்துக் கொண்டார்.
“கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” தோளை விடுவித்து, தன் கையை என் கையோடு பற்றிக் கொண்டார்.
“செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” தன் உடம்பு முழுவதையும் என் மீது சாய்த்தார்.
“சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடியவுடன், உடனே திடீரென்று இடுப்புக்குக் கீழே ஏதோ வெடித்துக் சிதறியது. சரக்கென்று மேலே ஏறியது. இடுப்பைத் தாக்கியது. நடுமுதுகைக் குத்தியது. மேலெழும்பி நெஞ்சைக் குறிபார்த்து எகிறி சிதறடித்தது. தொண்டைக்கு வந்து, நெற்றிக்குப் போயிற்று, உச்சியில் வந்து படீரென்று எரிமலையாய் வெடித்தது.
என்னால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்லை. என் உடம்பு பரிதவித்தது. நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வாய் விட்டு கதறினேன். யாரோ நெஞ்சில் ஈட்டியால் சொருகியதைப் போல கத்தினேன்.

என் உலகம் மாறிப் போயிற்று. அது ஜடப்பொருளாலான உலகமல்ல. மண், மரம், இரும்பு, தாமிரம், வெள்ளி, மனித உடல்கள் என்று பருப்பொருளாலான உலகமல்ல. அது வெளிச்சமான உலகம். முற்றிலும் வெளியான உலகம். எந்தத் தடையுமில்லாத உலகம். எந்த இலக்குமில்லாத உலகம். எந்தப் புள்ளியுமில்லாத உலகம். எல்லா இடமும் வெளிச்சம், நானும் வெளிச்சம். வெளிச்சம் வெளிச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இலக்கின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளியை கடந்தால் தானே வேகம் தெரியும். கடப்பதற்கு எந்த புள்ளியுமில்லை. தொடுவதற்கு எந்த எலையுமில்லை. அதனால் வேகம் மிகப் பெரிய வேகமாக இருந்தது. அந்த வேகம் என்னால் உணரப்படாமலிருந்தது.

வேகம் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகம் என்று தெரியவில்லை. நான் இருக்கிறேன். ஆனால் எதனுள் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நானும் வெளியும் வெவ்வேறல்ல. வெளி தான் நான். நான் தான் வெளி. எனவே நான், நீ என்ற பேதமில்லை. எல்லோரும் நான் தான். எல்லாமும் நீ தான். இரண்டு பேர் இல்லை. இரட்டைகள் இல்லை. அதனால் துவந்தமுமில்லை. போட்டியோ, பொறாமையோ, விருப்போ, வெறுப்போ எதுவுமில்லை. இது பேரமைதி. முடிவில்லாத சந்தோஷம் நெல்முனையளவும் குதியல் இல்லாத அமைதி.
இது தான் நான், இங்கிருந்து தான் நான். இதுவே என் இயல்பு. உடலற்று உணர்வாகத் திகழ்கிற போது இப்படித்தான் இருக்கிறேன்.

மெல்ல அந்த வெளிச்சம் வெளிறியது. உடம்பின் ஞாபகம் வந்தது. மனம் தானாக விழித்தது. நகர்ந்து போய் உடம்பிலிருந்து விழித்தது. உடம்பின் வழியாக உலகத்தைப் பார்த்தது.
இப்போது உலகம் துவந்தமயமானது. நான், நீ என்ற பேதமுடையதானது.

உணர்வான நானுக்கும், உடம்புள்ள நானுக்கும் உள்ள வித்தியாசத்தை சொடுக்கு நேரத்தில் என் குருநாதர் எனக்குக் காண்பித்தார். மிக சுகமான இடத்தில் என்னை உட்கார வைத்தார். வெளிச்சத்தை என்னுள் இறக்கி அந்த வெளிச்சத்தால் அபிஷேகம் செய்வித்தார். இது கல்யாணம். என் குருநாதரோடு எனக்குக் கல்யாணம். ஒரு குருவுக்கும், சீடனுக்கும் ஏற்பட்ட வாழ்வு பந்தம். பிரிக்க முடியாத உறவு. மறக்க முடியாத உறவு, பின்னிப் பிணைந்து தொடரும் உறவு.

எல்லோரும் போக முடியாத இடத்திற்கு எளிதில் அணுக முடியாத இடத்திற்கு குருநாதர் எந்தத் தவமுமில்லாத என்னைத் தூக்கிக் கொண்டு போய் இறக்கினார். அருளை அள்ளி எனக்குள் திணித்தார்.
“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்க்க சொல்லலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”
இப்போது சாதாரண சினிமா பாட்டு வேறு அர்த்தம் கொண்டது. ஒரு சீடனுக்கு பட்டாபிஷேகத்தை இந்தப் பாட்டின் மூலம் என் குருநாதர் நடத்தினார்.
அதுவரை எதிரே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமாய், திகைப்பாய் முகம் இறுகிக் கிடந்தார்கள். அப்போது என்னுள் ஏற்பட்ட ஆனந்தத்தை நிறுத்தி நான் சிரிக்கத் துவங்கினேன். எனக்கு எவரோடும் சண்டையில்லை. எந்தப் பிணக்குமில்லை. நான், நீ எல்லாம் ஒன்று. நீயே நான், நானே நீ என்று சிரிக்கத் துவங்கினேன். உயர்ந்த யோகியும் ஞானவானுமான ஒரு குருநாதர் மிகச் சாதாரணமான ஒரு சீடனை உன்னத நிலைக்குக் கொண்டு வந்ததற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

குருவிடம் பணிவோடு இருந்தால் போதும், வெட்கமின்றி இருந்தால் போதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருந்தால் போதும். எனக்குள் எந்தப் பாட்டுமில்லையே என்று நான் பொய் பேசவில்லை. உள்ளே என்ன இருந்ததோ, அதை கொட்டினேன். அந்த உண்மைக்குப் பணிவு முக்கியம். குருநாதர் மீது நம்பிக்கை முக்கியம். தெளிவில்லாத போது வார்த்தைகள் தடிமனாக வரும். அலட்டலாக வரும். அது எந்த உறவையும் பங்கப்படுத்தும்.

ஒரு குருநாதரை பணிவற்ற எவரும் அணுகவே முடியாது. அப்படியும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ஒரு மத்திம வயது பெண்மணி குருநாதர் தாடியை நீவிவிட்டு கொள்வதைப் பார்த்து “வெள்ளை வெளேரென்றிருக்கின்ற தாடி” என்று சொல்ல, குருநாதர், “ஆம்” என்று தலையாட்டினார். “நீங்க டை அடிச்சுக்குங்க பகவான், கருப்பு டை, தலைக்கு, தாடிக்கெல்லாம் அடிச்சுக்குங்க” என்று சொல்ல, சட்டென்று குருநாதர் அந்தப் பெண்மணியையே உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்மணிக்குத் தான் சொன்ன விஷயத்தின் அபத்தம் தெரியவில்லை. இளித்துக் கொண்டிருந்தார்.

“அம்மா எழுந்திரு, இந்தா என்னுடைய பிரசாதம்” என்று சில பழங்களைக் கொடுத்தார்.
“இந்தப் பிச்சைக்காரன் உன்னை வழியனுப்பிகிறேன், போய் வா” என்று சொன்னார். ‘என்ன’ என்று அந்த அம்மாள் வியப்போடு பார்த்தாள். “போய் வா” என்று மறுபடியும் சொல்ல, அந்த அம்மாள் மெல்ல நகர்ந்தார். திரும்பி வாசற்படியிலிருந்து குருநாதரைப் பார்த்தார்.
“இனிமேல் இங்கு வரவேண்டாம். இந்தப் பிச்சைக்காரனோடு உனக்கு எந்த தொடர்புமில்லை. ஏனெனில் நீ சொல்லும்படி என்னுடைய தலைமுடிக்கு சாயம் ஏற்றிக் கொள்ளப் போவதில்லை, அது அப்படித் தான் இருக்கும். எனவே நீ வரவேண்டிய அவசியமில்லை” என்று அவளைப் புறக்கணித்தார்.
ஒரு வாக்கியம் தப்பாகப் போனது. அந்த அம்மாவின் வாழ்க்கைத் திசை மாறிப் போனது. மகத்தான குருவின் நட்பை தேவையற்ற வாக்கியத்தின் மூலம் அந்த அம்மாள் இழந்தார். கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி சிதறியது போல ஒரு நல்ல நட்பு சிதறிப் போனது. குருவிடம் பொய் சொல்ல முடியாது. பணிவு உள்ளது போல் நடிக்க முடியாது. உள்ளுக்குள்ளே இருப்பதை நோண்டி வெளியே வீசியெறிய குருவிற்குத் தெரியும். அகந்தைக் கிழங்கை கிண்டி தூக்கி வெளியே “இது நான் நீ” என்று அவரால் காண்பிக்க முடியும்.


என் மகள் ஸ்ரீகெளரி நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பிளஸ் டூ தேறினார். அவருக்கு டாக்டர் சீட் கேட்டு சில முக்கியஸ்தரிடம் சொல்லி வைத்திருந்தேன், தமிழ்நாட்டில் உயர்பதவியிலிருப்பவர்கள், “உங்கள் மகளுக்கில்லாததா, நிச்சயம் தருகிறேன்” என்று சொன்னார். மதிப்பெண்களைக் காண்பித்து இந்த விஷயத்தை குருநாதரிடம் தெரிவித்தேன். குருநாதர் மதிப்பெண்களைப் பலமுறை தடவிக் கொடுத்தார். என் மகளிடம் திருப்பிக் கொடுத்தார்.
“ஸ்ரீகெளரி நீ டாக்டராக விரும்புகிறாயா” என்று கேட்டார்.
உடனே என் மகள் “உங்கள் விருப்பம் அதுவானால் என் விருப்பமும் அதுவே” என்று சொன்னாள்.
“உன்னுடைய விருப்பமென்ன கெளரி” என்று கேட்டார்.
“உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் பகவான்.”
“இல்லை, உன் விருப்பத்தைச் சொல்” என்று பகவான் மறுபடியும் வற்புறுத்தினார்.
“எனக்கென்று விருப்பம் ஏதுமில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை” என்று தீர்மானமாக சொன்னார். அருகிலுள்ளவர்கள், “அப்படி கேட்காதே, டாக்டராக வேண்டுமென்று அவரை கேள், நிச்சயம் ஆகிவிடுவாய்” என்று தூண்டிவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகெளரி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, நீங்கள் எனக்கு என்ன தருகிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை. உங்கள் சொல் மீறி, உங்கள் விருப்பம் மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் முற்றிலும் என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்” என்று சொல்ல, குருநாதர் கண்களில் கனிவு தோன்ற என் குழந்தையைப் பார்த்தார். கை வீசி ஆசிர்வதித்தார்.

“கெளரி டாக்டராவதென்றால் மிகக் கடினம். வாழ்க்கையை ரசிக்க முடியாது. பாட்டுப் பாட முடியாது, வேளைக்கு சாப்பிட முடியாது, ஓய்வாக இருக்க முடியாது. இவைகளில்லாது போனால் கெளரி உன்னால் தாங்க முடியாது. எனவே நீ வேறு ஏதேனும் படி” என்று திசை திருப்பி விட்டார்.

என் மகள் எம்.எஸ்ஸி பயோகெமிஸ்டரி முடித்து, முடித்த கல்லூரியிலேயே தலைமைப் பேராசிரியராகத் திகழ்ந்து, இப்போது திருமணமாகி ஷர்ஜாவில் தன் மகனோடும், கணவரோடும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வேளைக்கு சாப்பிடுவதும், கணவனுக்கும், குழந்தைக்கும் உதவியாக இருப்பதும், சந்தோஷமாக நடைபெறுகின்றன. தெளிந்த நீரோட்டம் போல அவள் வாழ்க்கை இருக்கிறது. ஒரு டாக்டருக்குண்டான பரபரப்பு அவளிடமில்லை. அது பெரிய நிம்மதி என்பதை இப்போது என் மகள் உணருகிறாள். பணிவு என் குழந்தையிடம் இயல்பாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷமடைந்தேன்.

நல்ல குரு ஒரு சந்தோஷம்; ஒரு வழிகாட்டி; ஒரு பாதுகாவலர்; நல்ல குரு கடவுளிடம் நம்மை கொண்டு போய் அலுங்காமல் சேர்ப்பவர்.

ஒரு குருவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியம் தான் வேண்டும்.

Monday, September 27, 2010

பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி

'இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.


' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.


வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.


............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்