Sunday, August 30, 2009

குருவிடம் வெறும் தத்துவம் மட்டும் தான் பேச வேண்டுமா?

குருவிடம் உலக விஷயங்களை பேசலாமா அல்லது வெறும் தத்துவம் மட்டும் தான் பேச வேண்டுமா?

உலக விஷயங்களை குருவிடம் பேசிப் பாருங்களேன். உலக விஷயங்களை பேசும் போது குருவினால் அதில் ரகசியமாய் தத்துவத்தை வைத்துவிட முடியும். நல்ல குரு உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை விதம் விதமாக உணர்த்திக் கொண்டு தான் இருப்பார். உங்களுக்கு என்னுடைய அனுபவம் ஒன்றை இங்கே சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.

திருவண்ணாமலைக்கு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். யோகி ராம்சுரத்குமார் அவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். பேருந்தின் ஒலி நாடாவில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன. “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்கிற பாடல் மட்டும் மனசில் தங்கி உள்ளுக்குள்ளே ஆழமாக பதிந்து போயிற்று. திருவண்ணாமலைக்கு வந்து யோகி ராம்சுரத்குமார் அவர்களை பார்த்து நமஸ்கரித்து அவருக்கு அருகே உட்கார்ந்து உலக விஷயங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்த போது, அவர் சட்டென்று திரும்பி ‘என்ன பாடிக் கொண்டிருக்கிறாய்’ என்று என்னைப் பார்த்து கேட்டார். நான் எதையும் பாடவில்லையே என்று சொன்னேன். இல்லை. மனதிற்குள் ஏதோ பாடிக் கொண்டிருக்கிறாய் என்று மறுபடியும் சொன்னார். நான் மெல்லத் தயங்கினேன். என்ன பாட்டு அது என்று கேட்டார். சினிமா பாட்டு என்று சொன்னேன். எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு சிறிய சபை வாய் விட்டு சிரித்தது. என்ன சினிமா பாட்டு, பாடு என்று கட்டளையிட்டார். நான் தயங்கினேன். மீண்டும் வற்புறுத்தினார்.

மெல்லிய குரலில் “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா, செல்லாத இடம் நோக்கி செல்லலாமா, சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடினேன். இரண்டு திருமணங்கள் முடித்து திரும்பவும் இந்த பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாயே என்று சொல்ல, சபை வாய் விட்டுச் சிரித்தது. நான் வெட்கப்பட்டேன். மறுபடியும் பாடச் சொல்லி என்னை வற்புறுத்தினார். மீண்டும் பாடினேன். “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்கிற போது என்னை நெருங்கி அணைத்துக் கொண்டார். “கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” என்கிற போது என் கையைக் கோர்த்துக் கொண்டார். “செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” என்கிற போது நான் காணாமல் போனேன். “சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்கிற போது எனக்குள் மிக கனமாக ஏதோ ஒரு விஷயம் கிளர்ந்து எழுந்தது. என் ஆத்ம சக்தியை என்னால் தரிசிக்க முடிந்தது. நான் பரவசமானேன். அது சாதாரணமான காதலன்-காதலி பாடும் சினிமா பாடல்தான். ஆனால் அந்த பாடல் எனக்கு கடவுளைக் காட்டியது.

ஒரு நல்ல குரு எந்த விஷயம் பேசினாலும் அதற்குள் இறைத் தன்மையை ஒளித்து வைத்து உள்ளுக்குள் இறக்கி விடுவார். உலக விஷயங்களை குருவோடு பேசிப் பாருங்களேன்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி குருவை மூன்றாம் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே. குரு முக்கியமில்லையா?

நீங்கள் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பாலூட்ட தாய் தேவைப்படுகிறாள். சுத்தம் செய்து, சுமந்து, வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் காப்பாற்றி உங்களை ஆசுவாசப்படுத்த தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. உங்களை ஆசுவாசப்படுத்தி, நல்ல உணவு கொடுத்து, நன்கு வளர்ப்பதற்காக அந்த தாயின் பக்கபலமாக, பின்பலமாக தந்தை தேவைப்படுகிறார். உங்களுடைய நான்காவது, ஐந்தாவது வயதில் நீங்கள் போடுகின்ற ஆட்டமும், பேச்சும், சிரிப்பும், உங்களை மேலும் பலப்படுத்த தந்தை உதவியாய் இருக்கிறார்.

ஆனால் பதினாறு வயதில் உலகம் பற்றிய ஞானத்தை தேடுகின்றவனாய், வாழ்வு குறித்த கேள்விகள் உள்ளவனாய் நீங்கள் வாலிபனாய் நிற்கிறபோது உங்களுக்கு குரு என்பவரே மாதா. குரு என்பவரே பிதாவாக இருந்து தெய்வத்திடம் அழைத்துப் போகக் கூடியவராக இருக்கிறார். தாயும் தந்தையுமாகி நிற்கின்ற குரு நீங்கள் வளர்ந்த பிறகு உதவி செய்பவர். உங்கள் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்துகிறவர். உங்களை வழி நடத்துகிறவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறும் வரை குரு என்பவர் உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் வாலிபமான பிறகு குரு என்பவர் இல்லாது வாழ்க்கை இல்லை. குரு என்பவருக்குள் மாதா, பிதாவும் ஏன் கடவுளும் அடக்கம்.

Tuesday, August 18, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - கப்பல் கரை சேர்ந்ததே...

என் இருபத்து நான்கு வயதில் முதன்முதலாக விமானம் ஏறி பம்பாய் போனேன். அலுவலக வேலைக்காகப் போனேன். ஒரு வாரம் அருகேயிருந்து பம்பாயின் துறைமுகத்தில் இறங்கியிருந்த சரக்குகளை சென்னைக்கு லாரி பிடித்து அனுப்பும் வேலையை செய்யச் சொன்னார்கள்.

சுங்க அதிகாரிகளுக்கு எல்லாவித அனுமதிப் பத்திரங்களையும் காட்டி சுங்க வரியை கட்டிவிட்டு சரக்கை வெளியே எடுக்கக் காத்திருந்தேன். சரக்குக் கப்பல் பார்வைக்குத் தென்பட்டு விட்டது. ஆனால் வந்து இடம் பார்த்து கரை ஒதுங்க கூடுதலாய் ஒரு வாரம் ஆனது. ஒவ்வொரு நாள் காலையிலும் கப்பல் கரை ஒதுங்கி விட்டதா என்று கேள்வி கேட்டு இல்லையென்று அவர் சொல்ல, நான் ஹோட்டலில் உட்கார்ந்திருப்பேன். வேறு வழியில்லாமல் பம்பாயைச் சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.

“இப்போதான் முதல் தடவையா வர்றீங்களா. பம்பாயை சுத்திப் பார்த்திருக்கீங்களா. வாங்க காட்டுறேன்.” சேலத்திலிருந்து பேல்பேலாக காடா உற்பத்தி செய்து பம்பாய்க்கு கொண்டு வருகின்ற ஒரு நண்பர் பரிச்சயமானார். அந்த சேலத்து இளைஞர் வியாபாரி, கையில் காசுள்ள பிள்ளை. சுகவாசி. உல்லாசி. ஒரு டாக்சியை பிடித்துக் கொண்டு நாங்கள் பம்பாய் சுற்றிப் பார்க்க, அவர் அழைத்துப் போன இடங்களெல்லாம் கொத்து கொத்தாக பொதுமகளிர் இருக்கும் இடம்தான்.

ஆரம்பத்தில் மிகப் பரவசமாக இருந்தது. ‘ ஐயோ.. இத்தனை பெண்களா... ஒவ்வொன்றும் ஒரு ரகமா...’ என்ற எண்ணம் பேய்த்தனமாக உடம்பின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் கிளம்பியது.

ஆனால் காரில் அமர்ந்தபடியே வெகு அருகில் நிதானமாய் அவர்களை உற்றுப் பார்த்த பொழுது எல்லோர் முகத்திலும் சோகம். எல்லோர் முகத்திலும் ஒரு வேதனை. எல்லோர் முகத்திலும் ஒரு கடுகடுப்பு. எல்லோர் முகத்திலும் ஒரு அலட்சியம். அதில் மூன்று பெண்கள் ஒரு அப்பாவி மனிதனின் சட்டையைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் பதிலுக்குத் திமிராக கண்டமேனிக்கு வசைபாடிக் கொண்டிருந்தான்.
ஒரு மணிநேரம் அந்த இடத்தை சந்துசந்தாய் சுற்றிப் பார்த்த பொழுது எனக்கு ஒன்றுபட்டது. எந்தக் காரணம் கொண்டும் இந்த மாதிரிப் பெண்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இவர்களால் காதலிக்க முடியாது. காதலிக்க முடியாத இந்தப் பெண்களால் காம சுகமும் தரமுடியாது.

காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதலே இல்லை. காதல் இல்லாது எது செய்தாலும் பிழை. ஒரு உடம்பை விலைக்கு வாங்கி சுகித்துவிட முடியாது என்பதை அந்த ஒரு மணிநேரப் பயணம் எனக்கு உணர்த்தியது. பிறகு விலகியிருக்க முடிவு செய்தேன். திரும்பவும் ஹோட்டலுக்கு வந்துவிடலாம் என்று சொன்னேன். தாங்கவில்லையா என்று நண்பர் கேட்டார். ‘இல்லை. எனக்கு பயம்’ என்று சொன்னேன். நண்பர் வாய்விட்டுச் சிரித்தார். துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று சொன்னார். அவர் தொடர்ந்து சொன்ன வீரவசனத்தை இந்த இடத்தில் சொல்ல முடியவில்லை. ‘நான் கோழையாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று பதில் சொல்லிவிட்டேன். அவர் பாதி வழியிலேயே விடை பெற்று இறங்கிக் கொண்டார்.

நல்லவேளையாக கப்பல் கரை ஒதுங்கி விட்டது. நான் இரவு பகலாக வேலை செய்து சென்னையிலுள்ள கம்பெனிக்கு சரக்குகளை அனுப்பினேன். அந்த நண்பரிடம் விடைபெறாமலேயே விமானம் ஏறி ஊர் வந்தேன். அதன் பின் பம்பாய் பற்றி நினைக்கும் போது அங்கு இம்மாதிரிப் பெண்கள் இருப்பதும் ஒரு மனிதரை மூன்று பேர் சட்டையை பிடித்துக் கொண்டு மாறிமாறி அடித்ததும் தான் கண் முன் வரும். கெட்ட வார்த்தைகள் தான் காதில் நிறையும். அவர்களின் முகத்தில் தோன்றிய ஆக்ரோஷமும், அருவருப்பும்தான் உள்ளுக்குள் திரைப்படமாக ஓடும்.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, ஒரு திரைப்பட வசனத்திற்கு எனக்கு அரசாங்க விருது கிடைக்க, அங்கு பல போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தார்கள். ஒரு போட்டோகிராபர் என்னை நோக்கி வந்து தன்னுடைய கார்டு கொடுத்தார். சரியாக போட்டோ எடுத்திருக்கிறேன். பெரிது பண்ணி கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னார். நான் உடனடியாக காசு தருவதாக அவருக்கு உறுதியளித்தேன். நான்காவது நாள் அந்த பிள்ளை வந்தார்.

“எங்க அப்பா உங்க ப்ரெண்ட் ஸார்” என்று சொன்னார்.

“யாரு உங்க அப்பா.” என்று விசாரித்தபோது சேலத்தில் காடா தயாரிக்கின்ற அந்த நண்பரின் பெயர் சொல்லப்பட்டது.

“அடடே ஞாபகம் இருக்கிறது. எப்படி இருக்கிறார் உன் தந்தை.” என்று விசாரிக்க, “போன வருஷம் தான் ஸார் செத்துட்டாரு.”

“ஏம்பா” என்று கேட்க, அந்தப் பையன் மெளனமாக நின்றான். நான் மறுபடியும் விசாரிக்க பால்வினைநோய் என்று சொன்னான்.

“பம்பாய்க்கு போய் வாங்கிட்டு வந்துட்டாரு ஸார். நீங்களெல்லாம் கூட ஒரு ஹோட்டல்ல தங்குவீங்களாமே. லேடீஸ்னாலே நீங்க பயந்து ஓடுவீங்களாமே. இதெல்லாம் கடையில உட்கார்ந்து வேற ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லும்போது நான் ஒட்டு கேட்டிருக்கேன். அஞ்சாவது வருஷமே அவருக்கு நோய் வந்துடுச்சு ஸார். ஆனா மூடி மறைச்சு யாருக்கும் தெரியாமல் மருந்து சாப்பிட்டு, உடம்பு தோலுக்குள்ள அது அதிகமாகி, சொரிய ஆரம்பிச்சு நாத்தம் எடுக்க ஆரம்பிக்க, ஜட்டி பேண்ட்டெல்லாம் அசிங்கமா இருக்கிறதை கவனிச்சு வேற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய், இது தீரவே தீராது முத்திப்போச்சுன்னு சொல்லி, ஆனாலும் குறைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணி, வீட்லயே தனியா ஒரு இடத்துல வச்சிருந்து, அம்மா மட்டும்தான் போய் பார்ப்பாங்க. துணி துவைச்சு போடுவாங்க. சாப்பாடு கொடுப்பாங்க. நாங்க யாரும் பார்க்கறதேயில்லை. இந்த நோயோடயே பதினஞ்சு வருஷம் போராடி போன வருஷம்தான் செத்தாரு.”

“எய்ட்ஸா.” என்று கேட்டேன்.

“தெரியலை ஸார். அப்படித்தான் இருக்கும். சாதாரண மருந்து சாப்பிட்டு ஜீரம் வந்து ஜீரத்துக்கு மருந்து சாப்பிட்டு அதுவும் அடங்காது தனக்குத்தானே கொஞ்சம் கொஞ்சமா முனகி முனகி செத்துப் போயிட்டாரு. அப்போ ரொம்ப கஷ்டப்பட்டது எங்க அம்மாதான் ஸார். வருமானமே இல்லை. மருந்துக்கு மட்டும் செலவு. எங்கெங்கேயோ போய் கெஞ்சி கூத்தாடி அம்மா காசு வாங்கிட்டு வருவாங்க. இவருடைய ஒரு நிமிஷ சுகத்துக்காக எங்க வீடு மொத்தத்தையும் அழிச்சுட்டாரு ஸார். இந்த ஒரு கேமராகூட இல்லைனா நான் தெருவுல உட்கார்ந்திருப்பேன்.

எல்லா நேரமும் வேலை இருக்கிறவனுக்கு விவகாரம் பண்ணத் தோணாது ஸார். விவகாரம் இல்லாம இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் ஸார். உங்களைவிட அப்பா நாலு வயதுதான் பெரியவரு. அவரு செத்துட்டாரு. நீங்க அவார்ட் வாங்குறீங்க. என் வேலையை பிரியமா செய்யணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க ஸார். எனக்கு அப்பா இல்லை ஸார். நீங்க அப்பா மாதிரி.”

அவன் தொண்டை அடைக்க அழுதான். நான் மெல்ல எழுந்து அவனைத் தழுவிக் கொண்டேன். அவன் நெற்றியில் முத்தமிட்டேன்.

அன்று மட்டும் அந்தக் கப்பல் கரைத் தட்டாமல் போயிருந்தால் என் வாழ்க்கை குடி மூழ்கிப் போயிருக்கும். நல்லவேளை கண்ணுக்குத் தென்பட்ட கப்பல் கரைக்கு வந்து என்னை வேறு திசைக்கு அனுப்பியது.