Tuesday, August 18, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள் - கப்பல் கரை சேர்ந்ததே...

என் இருபத்து நான்கு வயதில் முதன்முதலாக விமானம் ஏறி பம்பாய் போனேன். அலுவலக வேலைக்காகப் போனேன். ஒரு வாரம் அருகேயிருந்து பம்பாயின் துறைமுகத்தில் இறங்கியிருந்த சரக்குகளை சென்னைக்கு லாரி பிடித்து அனுப்பும் வேலையை செய்யச் சொன்னார்கள்.

சுங்க அதிகாரிகளுக்கு எல்லாவித அனுமதிப் பத்திரங்களையும் காட்டி சுங்க வரியை கட்டிவிட்டு சரக்கை வெளியே எடுக்கக் காத்திருந்தேன். சரக்குக் கப்பல் பார்வைக்குத் தென்பட்டு விட்டது. ஆனால் வந்து இடம் பார்த்து கரை ஒதுங்க கூடுதலாய் ஒரு வாரம் ஆனது. ஒவ்வொரு நாள் காலையிலும் கப்பல் கரை ஒதுங்கி விட்டதா என்று கேள்வி கேட்டு இல்லையென்று அவர் சொல்ல, நான் ஹோட்டலில் உட்கார்ந்திருப்பேன். வேறு வழியில்லாமல் பம்பாயைச் சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.

“இப்போதான் முதல் தடவையா வர்றீங்களா. பம்பாயை சுத்திப் பார்த்திருக்கீங்களா. வாங்க காட்டுறேன்.” சேலத்திலிருந்து பேல்பேலாக காடா உற்பத்தி செய்து பம்பாய்க்கு கொண்டு வருகின்ற ஒரு நண்பர் பரிச்சயமானார். அந்த சேலத்து இளைஞர் வியாபாரி, கையில் காசுள்ள பிள்ளை. சுகவாசி. உல்லாசி. ஒரு டாக்சியை பிடித்துக் கொண்டு நாங்கள் பம்பாய் சுற்றிப் பார்க்க, அவர் அழைத்துப் போன இடங்களெல்லாம் கொத்து கொத்தாக பொதுமகளிர் இருக்கும் இடம்தான்.

ஆரம்பத்தில் மிகப் பரவசமாக இருந்தது. ‘ ஐயோ.. இத்தனை பெண்களா... ஒவ்வொன்றும் ஒரு ரகமா...’ என்ற எண்ணம் பேய்த்தனமாக உடம்பின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் கிளம்பியது.

ஆனால் காரில் அமர்ந்தபடியே வெகு அருகில் நிதானமாய் அவர்களை உற்றுப் பார்த்த பொழுது எல்லோர் முகத்திலும் சோகம். எல்லோர் முகத்திலும் ஒரு வேதனை. எல்லோர் முகத்திலும் ஒரு கடுகடுப்பு. எல்லோர் முகத்திலும் ஒரு அலட்சியம். அதில் மூன்று பெண்கள் ஒரு அப்பாவி மனிதனின் சட்டையைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் பதிலுக்குத் திமிராக கண்டமேனிக்கு வசைபாடிக் கொண்டிருந்தான்.
ஒரு மணிநேரம் அந்த இடத்தை சந்துசந்தாய் சுற்றிப் பார்த்த பொழுது எனக்கு ஒன்றுபட்டது. எந்தக் காரணம் கொண்டும் இந்த மாதிரிப் பெண்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இவர்களால் காதலிக்க முடியாது. காதலிக்க முடியாத இந்தப் பெண்களால் காம சுகமும் தரமுடியாது.

காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதலே இல்லை. காதல் இல்லாது எது செய்தாலும் பிழை. ஒரு உடம்பை விலைக்கு வாங்கி சுகித்துவிட முடியாது என்பதை அந்த ஒரு மணிநேரப் பயணம் எனக்கு உணர்த்தியது. பிறகு விலகியிருக்க முடிவு செய்தேன். திரும்பவும் ஹோட்டலுக்கு வந்துவிடலாம் என்று சொன்னேன். தாங்கவில்லையா என்று நண்பர் கேட்டார். ‘இல்லை. எனக்கு பயம்’ என்று சொன்னேன். நண்பர் வாய்விட்டுச் சிரித்தார். துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று சொன்னார். அவர் தொடர்ந்து சொன்ன வீரவசனத்தை இந்த இடத்தில் சொல்ல முடியவில்லை. ‘நான் கோழையாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று பதில் சொல்லிவிட்டேன். அவர் பாதி வழியிலேயே விடை பெற்று இறங்கிக் கொண்டார்.

நல்லவேளையாக கப்பல் கரை ஒதுங்கி விட்டது. நான் இரவு பகலாக வேலை செய்து சென்னையிலுள்ள கம்பெனிக்கு சரக்குகளை அனுப்பினேன். அந்த நண்பரிடம் விடைபெறாமலேயே விமானம் ஏறி ஊர் வந்தேன். அதன் பின் பம்பாய் பற்றி நினைக்கும் போது அங்கு இம்மாதிரிப் பெண்கள் இருப்பதும் ஒரு மனிதரை மூன்று பேர் சட்டையை பிடித்துக் கொண்டு மாறிமாறி அடித்ததும் தான் கண் முன் வரும். கெட்ட வார்த்தைகள் தான் காதில் நிறையும். அவர்களின் முகத்தில் தோன்றிய ஆக்ரோஷமும், அருவருப்பும்தான் உள்ளுக்குள் திரைப்படமாக ஓடும்.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, ஒரு திரைப்பட வசனத்திற்கு எனக்கு அரசாங்க விருது கிடைக்க, அங்கு பல போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தார்கள். ஒரு போட்டோகிராபர் என்னை நோக்கி வந்து தன்னுடைய கார்டு கொடுத்தார். சரியாக போட்டோ எடுத்திருக்கிறேன். பெரிது பண்ணி கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னார். நான் உடனடியாக காசு தருவதாக அவருக்கு உறுதியளித்தேன். நான்காவது நாள் அந்த பிள்ளை வந்தார்.

“எங்க அப்பா உங்க ப்ரெண்ட் ஸார்” என்று சொன்னார்.

“யாரு உங்க அப்பா.” என்று விசாரித்தபோது சேலத்தில் காடா தயாரிக்கின்ற அந்த நண்பரின் பெயர் சொல்லப்பட்டது.

“அடடே ஞாபகம் இருக்கிறது. எப்படி இருக்கிறார் உன் தந்தை.” என்று விசாரிக்க, “போன வருஷம் தான் ஸார் செத்துட்டாரு.”

“ஏம்பா” என்று கேட்க, அந்தப் பையன் மெளனமாக நின்றான். நான் மறுபடியும் விசாரிக்க பால்வினைநோய் என்று சொன்னான்.

“பம்பாய்க்கு போய் வாங்கிட்டு வந்துட்டாரு ஸார். நீங்களெல்லாம் கூட ஒரு ஹோட்டல்ல தங்குவீங்களாமே. லேடீஸ்னாலே நீங்க பயந்து ஓடுவீங்களாமே. இதெல்லாம் கடையில உட்கார்ந்து வேற ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லும்போது நான் ஒட்டு கேட்டிருக்கேன். அஞ்சாவது வருஷமே அவருக்கு நோய் வந்துடுச்சு ஸார். ஆனா மூடி மறைச்சு யாருக்கும் தெரியாமல் மருந்து சாப்பிட்டு, உடம்பு தோலுக்குள்ள அது அதிகமாகி, சொரிய ஆரம்பிச்சு நாத்தம் எடுக்க ஆரம்பிக்க, ஜட்டி பேண்ட்டெல்லாம் அசிங்கமா இருக்கிறதை கவனிச்சு வேற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய், இது தீரவே தீராது முத்திப்போச்சுன்னு சொல்லி, ஆனாலும் குறைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணி, வீட்லயே தனியா ஒரு இடத்துல வச்சிருந்து, அம்மா மட்டும்தான் போய் பார்ப்பாங்க. துணி துவைச்சு போடுவாங்க. சாப்பாடு கொடுப்பாங்க. நாங்க யாரும் பார்க்கறதேயில்லை. இந்த நோயோடயே பதினஞ்சு வருஷம் போராடி போன வருஷம்தான் செத்தாரு.”

“எய்ட்ஸா.” என்று கேட்டேன்.

“தெரியலை ஸார். அப்படித்தான் இருக்கும். சாதாரண மருந்து சாப்பிட்டு ஜீரம் வந்து ஜீரத்துக்கு மருந்து சாப்பிட்டு அதுவும் அடங்காது தனக்குத்தானே கொஞ்சம் கொஞ்சமா முனகி முனகி செத்துப் போயிட்டாரு. அப்போ ரொம்ப கஷ்டப்பட்டது எங்க அம்மாதான் ஸார். வருமானமே இல்லை. மருந்துக்கு மட்டும் செலவு. எங்கெங்கேயோ போய் கெஞ்சி கூத்தாடி அம்மா காசு வாங்கிட்டு வருவாங்க. இவருடைய ஒரு நிமிஷ சுகத்துக்காக எங்க வீடு மொத்தத்தையும் அழிச்சுட்டாரு ஸார். இந்த ஒரு கேமராகூட இல்லைனா நான் தெருவுல உட்கார்ந்திருப்பேன்.

எல்லா நேரமும் வேலை இருக்கிறவனுக்கு விவகாரம் பண்ணத் தோணாது ஸார். விவகாரம் இல்லாம இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் ஸார். உங்களைவிட அப்பா நாலு வயதுதான் பெரியவரு. அவரு செத்துட்டாரு. நீங்க அவார்ட் வாங்குறீங்க. என் வேலையை பிரியமா செய்யணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க ஸார். எனக்கு அப்பா இல்லை ஸார். நீங்க அப்பா மாதிரி.”

அவன் தொண்டை அடைக்க அழுதான். நான் மெல்ல எழுந்து அவனைத் தழுவிக் கொண்டேன். அவன் நெற்றியில் முத்தமிட்டேன்.

அன்று மட்டும் அந்தக் கப்பல் கரைத் தட்டாமல் போயிருந்தால் என் வாழ்க்கை குடி மூழ்கிப் போயிருக்கும். நல்லவேளை கண்ணுக்குத் தென்பட்ட கப்பல் கரைக்கு வந்து என்னை வேறு திசைக்கு அனுப்பியது.

11 comments:

said...

கணத்த நெஞ்சோடு மௌனம்.

said...

Anbulla THULASI,
Good Morning.
Thanks again.
Our Namaskarams to Aiya.
Anbudan,
Srinivasan.

said...

Dear Krishna Thulasi,

Vanakkam.

" ராஜ ராஜ சோழன் பற்றிய உடையார் நாவலும் தமிழின் வழமையான வெகுமக்கள் படிக்கும் சரித்திர நாவல்களைவிட பலமடங்கு
பக்குவத்தோடும் துல்லிய விவரணைகளோடும் எழுதப்பட்டுள்ளது. "
http://jeyamohan.in/?p=3560

When your leisure, permits, have a look.

God Bless.

Convey our NAMASKARAMS to Aiya.

Anbudan,
Srinivasan. V.

said...

Sir

wonderfull. Please publish Sir old questions and answers by weekly basis atleast

said...

Nice posting

said...

வணக்கம்

இளைஞர்கள் திசைமாற வாய்ப்புகள் அதிகம் உள்ள இந்த நவின யுகத்தில், மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி தெளிவாக ஐயா கூறியுள்ளது மிகவும் அருமை.ஒரு மனிதன் என்ன விதமாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்றும், அப்படி நடத்தவில்லையென்றால் அதனால் அவன் மட்டும் இல்லாமல் அவனை சுற்றியுள்ள மனைவி, பிள்ளைகள் எந்த விதமாக பாதிக்கப்படுவார்கள் என்று நன்றாக உணரமுடிகிறது. மிக்க நன்றி

கலைவினோத்

said...

கணநேர சுகத்துக்காக காலமெல்லாம் கஷ்டப்படவேண்டுமா ??.

நல்லதொரு சமுக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்வு.

said...

Tulasi Sir

indha padhivil oru unmai mattum vilangudhiradhu.. neengal paartha visayamum pengalum ungal nanbar paartha visayangalum pengalum ondrudhaan. adhai unarndhu konda muraidhaan veru..

pasikkumbodhu veettu saappaattoda rusi yaar manadhil veroondrukiradho.. avarukku nanmai payakkum..

said...

வணக்கம் பாலகுமாரன் சார். நான் தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்.
எனக்கு ஒரு சின்ன ஐயம் ஏற்பட்டுள்ளது. தங்களிடம் வினாவி அந்த ஐயத்திற்கு விடை தேடலாம் என நினைக்கிறேன்.

எனது வினா.

இப்பொழுதும் சரி, பழங்காலத்திலும் சரி, கோவில்களில் மூலவர் சிலைகளை அமைக்கும் போது அதன் அடியில் ஏன் நகைகளையும், பொன் ஆபரணங்களையும் போட்டு பின் அதன் மேலே கடவுள் சிலைகளை அமைகிறார்கள்.??

இதுவரையில் நான் கேட்டவரிடமெல்லாம் இவ்வினாவிற்கு சரியான விடை கிடைக்கவில்லை...
தங்களிடம் கிடைக்குமென நம்புகிறேன்..!

அன்புடன்
தி.வி.சரண்

said...

Great!Greetings from Norway!
http://worldtamilrefugeesforum.blogspot.com....sarvadesatamilercenter.blogspot.com

said...

நல்ல ஒரு எச்சரிக்கை பதிவு