Monday, April 28, 2008

எழுத்துச் சித்தரின் - இரும்பு குதிரைகள் – கவிதை


ல்தோன்றி மண்தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழி வளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆ ண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்.
வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்;
போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்.

போர்காலம் காணாத அரசு இல்லை
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர் .
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி
பறையடித்து ஊர்முழுவதும் சேதி சொல்ல
ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு.


வன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக...
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன
கொள்ளுமட்டும் பயரிடவா வயலும் நீரும்
ஆ டுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்
மேய்ப்பதொன்றும் கடினமில்லை;கோல் அசையக் கூட வரும்.
குடும்பத்துப் பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்;
குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?


ன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார்; காரணம் சொன்னார்.
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும் ;
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்.
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது .
போருக்கும் பார்ப்பனர்களுக்கும் பொருத்தமில்லை
போரில்லாத வாழ்க்கையிதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான்; தலையசைத்தான் .
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான் ;
பார்ப்பனர்கள் சபை நீங்கி வணங்கி வந்தார் .

வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலகளிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும் ;
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல் வேண்டும்.
புரவிகளைப் பெண்டுகளால் ஆளமுடியுமா?
பேரரசே தயைசெய்யும் இது தாங்க முடியுமா.
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்துப் பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி தராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

டைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்.
போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என் செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கு ஒரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் ; யானை தருவீர்.
பேரரசன் யோசித்தான்; கவலை சூழ
கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோகறுநாளே சபைகூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமி பேசலானான்.
குதிரையெனச் சொன்னது விலங்கா மக்கள்
புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர் ?
குதிரையதை சபை நடுவே நிறுத்திப்பாரும்.
உடல் முழுவதும் கைதடவி உணர்ந்து பாரும்

வ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காது கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும் .
உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆ வார்
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல ;
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்; வேறொன்றில்லை
புரியாத என்மக்காள் மந்தை ஆ டே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்
வெறும் பதரைக் கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா ஜனத்துக்கு அரசன் கேடா .
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்


குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியில் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர் .
கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்
கடவுளெனக் குதிரைவரும்; ஆ ட்சி செய்யும்.

ல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரையெனும் பெருணர்வே கைக்கொடுக்கும்
வளமான வாழ்வுண்டு; மனிதர் அன்று
தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்
கால்நடையில் ஆ டுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா .
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்
போய் வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான் .

லியென்னும் குதிரையதன் ஆ ட்சியின்று
கண்திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்.
தலைதுணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார் .
கலியென்ற குதிரை தன் ஆ ட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும் ;
யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா
ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலியென்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன் .

Monday, April 21, 2008

திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்
ஐயா, திபெத் ஒரு சூட்சமமான தேசம் என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது ஒரு வாக்கியம் சொல்லிருக்கிறீர்கள். திபெத்தில் அப்படி என்ன சூட்சமம் இருக்கிறது?
திபெத், உட்கார்ந்து தியானம் செய்வதற்கு இயற்கை அளித்த அற்புதமான இடம். திபெத்தினுடைய உயரமும், மலைச் சரிவும், குகைகளும், தட்ப வெப்ப நிலையும் ஆ ழ்ந்து உள்ளுக்குள்ளே அமர்வதற்கு உதவி செய்யும். வெயிலடித்தால் மின்விசிறி வேண்டும். ஆ னால் குளிர் காற்று வீசுகின்ற திபெத்தில் ஒரு கம்பளி இருந்தால் போதும். அங்கு பசி குறைவாக எடுக்கும். மலை மீது ஏறி இறங்குவதால் நுரையீரல்கள், ஹிருதயகோசம் மிக நன்றாக இயங்கும். இவை இரண்டும் நன்றாக இயங்குவதால் ரத்த ஓட்டம் நல்ல துடிப்போடு இருக்கும். வெயிலால் ஏற்படுகின்ற ரத்தக் கொதிப்பு திபெத்தில் இருக்காது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் போக்குவரத்து இல்லாத இடமாக இருப்பதால் சப்தம் குறைவு. அது தவிர இந்த இடத்தினுடைய செள க ரியத்தால் பரம்பரை பரம்பரையாக பலர் அந்த இடத்தில் இடையறாது மந்திர உச்சாடனம் செய்து அந்த இடத்தை பலப்படுத்திருக்கிறார்கள். எனவே சுமாராக தியானம் தெரிந்தவர் அங்கு போனாலும் ஆ ழ்ந்து இறுக்கி உட்கார்ந்து விட முடியும். மந்திர ப்ரயோகம் என்று தியானத்தில் ஒரு நிலை உண்டு. ஒரு இடம் நோக்கி மந்திரத்தால் சில காரியங்களை செய்து கொள்ளலாம். அப்படி மந்திர ப்ரயோகம் செய்வதால் நல்லது, கெட்டது நடைபெறலாம். இவ்வளவு வலிமை இருந்தும் சீனாவிடம் உதவி வாங்கிக் கொண்டிருக்கிறதே அந்த தேசம் என்று தோன்றுகிறதா. இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.

Monday, April 14, 2008

சிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின் பார்வையில்….

தன்னுடைய எண்ணத்திற்கும், அதிலிருந்து வெளியாகும் செயலிற்கும் நேர்மையாக இருப்பவர்களே இறைத்தன்மை உடையவர்கள் ; காலங்கடந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றவர்கள் என்பதை சொல்லும் ஒரு அற்புதமான கதையை நினைவூட்டும் சிலையைப் பற்றி எழுத்துச்சித்தர் விவரிக்கிறார். கண்ணப்ப நாயனாரின் உண்மையான அன்பைக் கண்டு பிரமிப்பதா அல்லது அந்த உணர்வை தன் கலைப்படைப்பில் மிகச் சரியாக வெளிக்கொணர்ந்த சிற்பியைப் பாராட்டுவதா….
இதோ எழுத்துச் சித்தரின் பார்வையில்….Saturday, April 12, 2008

சினிமாவில் எழுத்துச்சித்தர் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைபட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப்பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை.

சினிமா எனக்கு வேறு ஒரு உலகை, வேறுவிதமான மனிதர்களை, நல்ல அனுபவங்களை, அந்த அனுபவத்தால் புத்தி தெளிவை, நிதானத்தை கொடுத்திருக்கிறது. வாழ்க தமிழ் சினிமா. ஒரே ஒரு சம்பவத்தை இங்கு சொல்லி சினிமா எப்படி உதவி செய்தது என்பதை உங்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அந்த உதவி இயக்குனர் வேலையில் ஒன்று கன்டின்யுடி. அதாவது ஒரே ஒரு சீனை முதல் நாள் எடுத்து, பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்து, பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் தொடர்வார்கள். அதாவது தோட்டத்தில் ஆடி பாடிய பெண் அதே உடைகளோடு தானே வீட்டிற்குள் நுழைவாள். தோட்டத்தில் ஆடி பாடியது ஜனவரி 1-ம் தேதி என்றால், வீட்டிற்குள் நுழைவது பிப்ரவரி 3-ம் தேதியாக இருக்கும். அப்படித்தான் ஷுட்டிங் நடக்கும்.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழையும் போது தோட்டத்தில் ஆடிய போது என்ன நகைகள் அணிந்திருந்தாளோ அதோடு இருப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதற்குத்தான் கன்டின்யுடி என்று பெயர். காதில் தோடு, கை வளையல்கள், கழுத்து நகைகள், மூக்குத்தி, கால் மெட்டி, புடவை, ரவிக்கை, தலை வாரலுடைய அமைப்பு இவையெல்லாம் ஒரு உதவி இயக்குனர் குறித்துக் கொள்ள வேண்டும்.

அவர் மிகப் பெரிய நடிகை. நன்கு நடிக்க கூடியவர். அவர் படப்பிடிப்பில், நான் அவருடைய நகைகளை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு அவரிடம் இருந்தது. படப்பிடிப்புமுடிந்த போது தயவு செய்து அந்த நகைகளை கழட்டி கொடுத்து விடுங்கள் அது மறுபடியும் கன்டின்யுடிக்கு தேவைப்படுகிறது என்று சொன்னேன். அவர் இப்பொழுது வேண்டாம் களைப்பாக இருக்கிறது. நாளைக்கு காலையில் வந்து தருகிறேன் என்று சொன்னார். அவர் கிளம்பிபோனதும் நாளைக்கும் இதே இடத்தில் இதே சீனை எடுக்கப்போகிறேன் என்று டைரக்டர் சொன்னார்.

சரி .காலையில்தான் நடிகை நகைகளை கொண்டுவந்து விடுவாரே என்று நான் சந்தோஷமானேன். மறுநாள் காலை நடிகை வந்து இறங்கியதும் ஓடிப்போய் நகைகளைக் கேட்டேன். கழுத்துச்செயின், மூக்குத்தி , கைவிரல் மோதிரங்கள், உடுப்பு, ரவிக்கை, தலைவாரல் எல்லாம் அப்படியே இருந்தது. காதில் வேறு தோடு போட்டிருந்தார். அந்த தோடு இல்லையே என்று கேட்டதற்கு அது காணவில்லை. எங்கேயோ தொலைந்து விட்டது என்று சாதாரணமாக சொன்னார்.

தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .அந்த தோடு வேண்டும் என்று கூறினேன். என்னிடம் இல்லை . நேற்றே வாங்கி வைக்க வேண்டியதுதானே. ஏன் இப்போது வந்து உயிரை வாங்குகிறீர்கள் என்று சள்ளென்று என் மீது எரிந்து விழுந்தார். காலங்காலையில் உரக்க ஒரு நடிகை என்னைப் பார்த்து கோபமுறுவதை யூனிட்டில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது.

நான் என்ன செய்வது என்று காஸ்ட்யூமரோடு போய் ஒட்டிக் கொள்ள,அந்தக் காஸ்ட்யூமர் மிகவும் பிரயத்தனப்பட்டு கிட்டத்தட்ட அதே போல ஒரு நகையை தேர்ந்தெடுத்து அவரை அணிய சொன்னார். அவரும் ஆஹா கிட்டத்தட்ட அதே நகையை கொண்டுவந்து விட்டீர்களே பாராட்டுக்கள் என்று கூறி அணிந்து கொண்டார். நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

ஆனால் அந்த காஸ்ட்யூமர் அப்படி மகிழவில்லை. கோபமாக அந்த நடிகையை திட்டிக்கொண்டே நகர்ந்து போனார். அவர் திட்டியது என் காதில் மட்டும்தான் விழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்தது. இரண்டு டேக்குகள் முடிந்தன. மூன்றாவது டேக்கு ஆரம்பிக்கிறபோது ஒரு க்ளோசப் ஷாட் வைத்திருந்தது.

நடிகை டைரக்டரை கூப்பிட்டார். இந்த தோடு நேற்று போட்டதல்ல, வேறு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார். டைரக்டருக்கு கடுங்கோபம். என்னைக் கூப்பிட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். காஸ்ட்யூமரை அழைத்தார். என்ன இது என்று கேட்டார். நாங்கள் விவரிக்க முயல்வதற்குள் நடிகை மேலும் தூண்டிவிட, கோபத்தின் உச்சிக்குப் போனார். நான் புதியவன் என்பதால் என்னை அதிகம் திட்டவில்லை. காஸ்ட்யூமருக்கு பலமாக இரண்டு அடி விழுந்தது.

காஸ்ட்யூமர் தலைக்குனிந்து பல பேர் முன்னால் அவமானத்தோடு மெளனமாக நின்றார். ஒன்றும் பெரிதாக தெரியாது என்று மற்றவர்கள் சொல்ல, காமிராமேன் வாக்குறுதி கொடுக்க, காது அருகில் தெரியாதபடி க்ளோசப் ஸாட் மாற்றி வைக்கப்பட்டு அந்த சீன் எடுக்கப்பட்டது. அந்த நடிகை அன்று மாலை படப்பிடிப்பு விட்டு போகும்போது நான் நகைகளை கொடுத்தே ஆ க வேண்டும் என்று நிற்க, அவர் மிகவும் ஒழுங்கு பிள்ளையாய் நகைகளை கழட்டிக் கொடுத்தார். பெட்டியிலிருந்த முந்தைய நாள் நகையையும் எடுத்துக் கொடுத்தார். நான் திகைத்துப்போனேன்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று கெஞ்சலாக கேட்டேன். வாழ்க்கை போரடிக்கிறது என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார். எனக்குத் திகைப்பாய் இருந்தது.

காஸ்ட்யூமரிடம் இதைப் போய் சொன்னேன். அவர் பலப் படங்களுக்கு பணியாற்றியவர் . மறுபடியும் கோபமாக திட்டினார். நான் திகைத்துப் போனேன்.

அந்த நடிகை அதற்குப் பின்னால் ஒரு உச்சிக்குப் போய் மெல்ல சரிந்து, கல்யாணம் என்று ஆரம்பித்து, விவாகரத்து என்று மாறி, குழந்தை வேண்டும் என்று சொல்லி, குழந்தை வேண்டாம் என்று தள்ளி, சொத்துபற்றி வழக்குப் போட்டு, சொத்து சேர்ப்பதற்காக பொய் சொன்னார் என்று வழக்குப் போட்டு விதவிதமான சிக்கல்களில் சிக்கிக் கொண்டார். அவமானப்பட்டார்.

நான் யோசித்துப் பார்த்தேன்.

வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக இவைகள் எல்லாம் செய்கிறாரோ என்று யோசனை செய்தேன். மனிதர்கள் எது வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்று எனக்கு அப்போது புரிந்தது. எல்லோர் மீதும் எப்போதும் சந்தேகத்தோடு இருப்பதே சரி என்பதும் எனக்கு உறுதி ஆயிற்று.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் .சில சமயம் மனிதர்களுக்கு கிறுக்குப் பிடிக்கும். பொறுத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவேண்டும். இது சினிமா எனக்குக் கற்றுத் தந்த முதல் பாடம்.

Monday, April 7, 2008

சில கேள்விகள் – எழுத்துச் சித்தர் பதில்கள்

ஐயா, தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு. நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள். எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.


ஐயா, பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தினால் என்ன?

ஆஹா! செய்யாலாமே. மற்ற எல்லா விஷயங்களையும் வரைமுறைப்படுத்தி விட்டோம். பாலியல் தொழில் ஒன்றுதானே பாக்கி. இதையும் வரைமுறைப்படுத்தி விடலாமே. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நம் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லை. பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்துவது என்பது நடக்கத்தான் போகிறது. வெகு விரைவில் செய்யதான் போகிறார்கள். ஆனால் இது மனிதரின் திருட்டு புத்தி. இருட்டுப் பக்கம். விலங்கின உறவு. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது வேகமாய் எழுகின்ற அலட்சியம். மற்றவரை அவமானப்படுத்துவதில் உண்டான ஆனந்தம். பிணத்தை தழுவுவது போல என்கிறார் வள்ளுவர். மனம் செத்துப் போனவர்கள் தான் பிணத்தை தழுவுவார்கள்.

ஐயா, பீஜாட்சரம் என்றால் என்ன?

பீஜம் என்றால் அடி, ஆரம்பம், நுனி. தோன்றும் இடம். அட்சரம் என்றால் வார்த்தை, சப்தம். உலகில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு சப்தம் இருக்கின்றது. அந்த அசைவின் அடி, அந்த அசைவின் நுனி, அந்த அசைவின் கரு இவைகளிலிருந்து அந்த சப்தம் கிளம்புகிறது. அந்த சப்தத்திற்குதான், அந்த அசைவிற்குதான் பீஜாட்சரம் என்று பெயர். உதாரணமாக ஹ்ருதயம் அசைகிறது. அந்த ஹ்ருதயத்தினுடைய சப்தம் என்ன என்பதை கவனித்திருக்கிறார்கள். "செளஹு" என்ற சப்தம் ஹ்ருதயத்தின் சப்தம். மூளையினுடைய சப்தம் என்ன என்று கவனித்திருக்கிறார்கள். "ரும்" என்பது மூளையின் சப்தம். இதை போல நாடி நரம்புகளுக்கு, நுரையீரல்களுக்கு, வயிற்றுக்கு, தொண்டைக்குழிக்கு, முதுகெலும்பின் அடிப்பகுதிக்கு என்று பல சப்தங்கள் உண்டு. இந்த வெளியுனுடைய சப்தம் "ஓம்". இந்த "அஉம்" என்ற சப்தம் தான் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது. இது எப்பொழுதோ ஏற்பட்ட அசைவினால் தொடர்ந்து கேட்கின்ற சப்தம். ஒரு அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி, அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எப்பொழுது துவங்கியது என்று யோசித்து தடம் பார்த்து போக ஒரு பீஜத்தில், ஒரு கருவில், ஒரு நுனியில் முடியும். அங்கிருந்து தோன்றிய சப்தம் என்பதால் அதற்கு பீஜாட்சரம் என்று பெயர். இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. இதை யோசித்து, யோசித்து, யோசித்து அடி ஆழம் போய் உணர்வதின் மூலம் இதை ஒரு வேளை புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.


ஐயா, கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜரை அதிகம் கொண்டாடுகிறார்களே ஏன்?

தியாகராஜரை கொண்டாடவில்லை. தியாகராஜரின் பாடல்களில் இருக்கும் சத்தியத்தை கொண்டாடுகிறார்கள். சத்தியத்தை எல்லோரும் எல்லா நேரமும் உணர்ந்து கொண்டாட முடியாது. ஏதோ ஒரு தொந்திரவை சத்தியம், மனித மனத்தில் ஏற்படுத்தும். அதை சத்தியம் என்று தெரியாதவர்கள் தியாகராஜரை ரூபமாக உணர்ந்து கொண்டாடுவார்கள். "கன கன ருசிரா கனக வசனுமு நின்னு" என்ன அற்புதமான ருசி உன்னுடைய தங்க நிற முகம் என்று தியாகையர் பேசுகிறார். உள்ளே ராமனை கற்பனை செய்து உறவாடி வந்த வார்த்தைகள் வெளியே எளிதாய் கவிதையாய் மாறுகின்றன. தியாகராஜர் ராமன் என்று கொண்டாடியது சத்தியத்தை. சத்தியம் என்பதற்கு ஒரு மனித ரூபம்
கொடுக்கப்பட முடியுமானால், அதற்கு ராமன் என்று பெயர். அதனால்தான் தியாகராஜருடைய வாழ்வில் அரசாங்கம் பொருள்களும், பெரும் நிதியும் கொண்டு வந்து கொடுத்தப்போது "நிதி சால சுகமா" என்று அழகாக பாடி மறுத்து விடுகிறார். பணம் என்று ஒன்று வந்தால் அது தன்னை எவ்வளவு கீழே இறக்கும் என்பதை புரிந்துக் கொண்டு சத்தியத்தை இறுகப்பற்றி கொள்கிறார். இன்னும் அதோடு நெருக்கமாகிறார். இது எனக்கு தேவையில்லையே என்கிறார். அவர் வாழ்வு சத்தியத்தோடு நெருக்கமாகி தெளிவானது. அந்த தெளிவுதான் அவர் பாடல்களிலும் இருக்கின்றன.. எங்கு தெளிவு இருக்கின்றதோ அங்கு கவிதை நயமும், சுகமும் வந்து விடும். சொல்லும் அதன் பொருளும் அதை தூக்கி கொண்டுவரும் ராகமும் ஒன்றாக இணைந்து, குழைந்து இருக்கிறபோது அதை மற்றவர்கள் விரும்பி உண்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏன் ஜாங்கிரி இனிக்கிறது என்று யோசித்துக் கொண்டா சாப்பிடுகிறார்கள். ஜாங்கிரி இனிக்கிறது.சாப்பிடுகிறார்கள். எதனால் இனிக்கிறது என்ற கணக்குக்கு யாரும் போவதில்லை.

ஐயா, அநியாயமாக வாஸ்துவைப் பற்றி இப்போது எல்லோரும் அலட்டிக் கொள்கிறார்களே. இது நியாயமா?

உங்களுக்கு வாஸ்துவைப் பற்றி தெரியுமா? தெரிந்திருந்தால் அநியாயமாக என்று பேச மாட்டீர்கள். உங்களுக்கு அணுகுண்டைப் பற்றியும் தெரியாது. ஆனால் அணுகுண்டு உபயோகப்படுத்தப்படும் என்பது நம்புகிறீர்கள். உங்களுக்கு செவ்வாய் கிரகம், சந்திரன் பற்றியும் தெரியாது. ஆனால் அங்கெல்லாம் போக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். வாஸ்துவை மறுப்பதற்கு முன்பு வாஸ்துவைத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பிறகு மறுப்பதும், ஏற்பதும்தான் தெளிவு. தெரியாமல் மறுப்பதற்கு பெயர் திமிர். வாஸ்து என்பது இந்தியாவின் புராதன மான ஒரு கலை. இந்திய புராதன விஷயங்கள் தொடர்புகள் அற்று போய் மறைபொருளாக இருக்குமே தவிர, ஒருகாலும் புராதன விஷயங்கள் பொய்யாக இருந்ததில்லை. ஒன்றை அலட்சியபடுத்தும் முன்பு ஆராய்ந்து பிறகு செயல்படுங்கள்.

ஐயா, பித்ருக்கடன் என்ற விஷயத்தை ஆண்கள் மட்டும் செய்கிறார்களே. பெண்களுக்கு இதில் பங்கு இல்லையா?

இந்தியா என்று அழைக்கப்படும் பரத கண்ட சம்பிரதாய வாழ்க்கையில் ஆணுக்கு எந்த விதமான நேர்த்திக்கடனையும் பெண்ணில்லாமல் செய்வதற்கு உரிமையே இல்லை. மனைவி இல்லாதவர் பித்ருக்கடன் செய்யும்போது ஒரு தர்ப்பைக் குச்சியை அருகே நிற்க வைத்துவிட்டு அதை மனைவியாக பாவித்துதான் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.பித்ருக்கடன் செய்வது ஆண்கள் மட்டுமே அல்ல இந்திய சம்பிரதாய சாஸ்திரப்படி பெண் உத்தரணியிலிருந்து ஜலம் எடுத்து அந்த தட்சணையில் ஊற்றினால்தான் அந்த தட்சணையை அவன் செய்து வைக்கும் புரோகிதருக்கு தரமுடியும். அதாவது எவ்வளவு தட்சணை கொடுக்கிறார்கள் என்பதை பெண் அறிந்திருக்க வேண்டும். யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். பித்ருக்கடனின் ஒவ்வொரு இடத்திலும் ஆணின் வலப்பக்கத்தில் நின்று தர்ப்பை முனையை ஆண் தோளில் படும்படி பிடித்துக்கொண்டு அவன் பேச்சை, செயலை கவனித்திருக்க வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து செய்வதை விட, ஒருவர் செய்ய அடுத்தவர் அதை கவனமாக பார்த்து செய்ய தூண்டுவதுதான் விஷேசம். ஒரு நாளும் பெண்களை இந்து சம்பிரதாய வாழ்க்கை புறக்கணித்ததே இல்லை. மனம் முழுவதும் செய்யும் காரியத்தில் ஈடுபட அழகான ஒரு அமைப்பில் வைத்திருக்கிறார்கள். அருகே இருந்து கவனிப்பது என்பது செய்வதைக் காட்டிலும் கூர்மையானது.ஐயா, இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்மீகம் என்ற விஷயத்தை பெற்றோர்கள் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்?

பெற்றோர்கள் ஆன்மீகமான வாழ்வை வாழ்வது பார்த்தே குழந்தைகள் தானாக கற்றுக்கொள்ளும். நீங்கள் அலட்டலாய், ஆரவாரமாய், ஆபாசமாய் இருந்தால் குழந்தைகள் அதை உடனே பின்பற்றும். நீங்கள் அமைதியாய், அன்பாய், அறிவார்த்தமாய் இருப்பின் குழந்தைகள் அதை எளிதில் கிரஹித்து கொள்ளும். அன்பாகவும், அடக்கமாகவும் இருப்பதே ஆன்மீகம். கடவுள் வழிபாடோடு ஆன்மீகத்தை சம்பந்தபடுத்த வேண்டாம். கடவுள் வழிபாடு செய்து கொண்டே காட்டுக் கூச்சலாய் இருக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கத் தெரியுமானால் அது குழந்தைகளை சந்தோஷப்படுத்தும். அவைகள் வெகு எளிதில் எதிர்ப்பார்ப்பில்லாத நேசத்தைப் பொழியத் துவங்கிவிடும். நீங்கள் நடக்கும் பாதையில் உங்கள் குழந்தைகள் பின் தொடரும். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை.

Wednesday, April 2, 2008

சிலை சொல்லும் செய்தி –இரண்டு – எழுத்துச்சித்தர் பார்வையில்

கலையும், கலைஞனும் அவன் வடித்த சிலையும் எங்கணம் காலங்களைத் தாண்டி நின்று நம் பழந்தமிழ் நாகரீகத்தின், சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன என்பதை பனிரெண்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட யானை உரி போர்த்த சிவன் சிலை சொல்லும் செய்தியை அதன் புறக்காரணங்களைத்தாண்டி அகழ்ந்தாய்ந்து தருகிறார் எழுத்துச்சித்தர்.