Monday, April 28, 2008

எழுத்துச் சித்தரின் - இரும்பு குதிரைகள் – கவிதை














ல்தோன்றி மண்தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழி வளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆ ண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்.
வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்;
போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்.

போர்காலம் காணாத அரசு இல்லை
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர் .
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி
பறையடித்து ஊர்முழுவதும் சேதி சொல்ல
ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு.














வன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக...
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன
கொள்ளுமட்டும் பயரிடவா வயலும் நீரும்
ஆ டுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்
மேய்ப்பதொன்றும் கடினமில்லை;கோல் அசையக் கூட வரும்.
குடும்பத்துப் பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்;
குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?


ன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார்; காரணம் சொன்னார்.
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும் ;
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்.
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது .
போருக்கும் பார்ப்பனர்களுக்கும் பொருத்தமில்லை
போரில்லாத வாழ்க்கையிதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான்; தலையசைத்தான் .
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான் ;
பார்ப்பனர்கள் சபை நீங்கி வணங்கி வந்தார் .













வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலகளிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும் ;
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல் வேண்டும்.
புரவிகளைப் பெண்டுகளால் ஆளமுடியுமா?
பேரரசே தயைசெய்யும் இது தாங்க முடியுமா.
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்துப் பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி தராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

டைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்.
போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என் செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கு ஒரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் ; யானை தருவீர்.
பேரரசன் யோசித்தான்; கவலை சூழ
கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோக















றுநாளே சபைகூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமி பேசலானான்.
குதிரையெனச் சொன்னது விலங்கா மக்கள்
புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர் ?
குதிரையதை சபை நடுவே நிறுத்திப்பாரும்.
உடல் முழுவதும் கைதடவி உணர்ந்து பாரும்

வ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காது கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும் .
உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆ வார்
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல ;
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்; வேறொன்றில்லை
புரியாத என்மக்காள் மந்தை ஆ டே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்
வெறும் பதரைக் கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா ஜனத்துக்கு அரசன் கேடா .
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்














குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியில் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர் .
கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்
கடவுளெனக் குதிரைவரும்; ஆ ட்சி செய்யும்.

ல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரையெனும் பெருணர்வே கைக்கொடுக்கும்
வளமான வாழ்வுண்டு; மனிதர் அன்று
தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்
கால்நடையில் ஆ டுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா .
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்
போய் வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான் .

லியென்னும் குதிரையதன் ஆ ட்சியின்று
கண்திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்.
தலைதுணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார் .
கலியென்ற குதிரை தன் ஆ ட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும் ;
யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா
ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலியென்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன் .

8 comments:

said...

Kavidhai is very good.

"பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்"

Above definition for war is very good. Each and every stage in our life is like a war.

said...

Kudharai Kavithigal...Rombavum arumai.
Adhanal dhan yenavo ‘chess’ game ‘il kuda Kudharaiku thanee yedam...

Its Fantastic...

said...

ஒரு வார‌ம் முன்பாக‌ வ‌ரிக‌ள் நினைவுக்கு வ‌ந்த்த‌தால்,

மீண்டும் ஒரு முறை எடுத்து ப‌டித்தேன்,

இங்கு வெளி வ‌ந்த‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி,

ச‌ஹ்ரித‌ய‌ன்.

said...

ஆஹா பிரமாதம்.
மிக அருமை.
எவ்வளவு ஒரு விரிந்த விசாலமான ஒரு வர்ணனை - வரவேற்பு. ?
பல தளங்களை தொட்டு விவரித்திருக்கும் இந்த குதிரை மதி முதிர்ச்சி படிக்க கிரகிக்க உள்வாங்கி சிந்திக்க சுகமாக இருக்கிறது துளசி.
ஐயாவுக்கு எங்கள் நமஸ்கரங்களை மீண்டும் சமர்ப்பிக்கவும்.
இந்த குதிரை கவிதையை குறித்து பாராட்ட எனக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதை பூரணமாக உணர்ந்து ரசித்த நன்றியோடு வணங்கி மகிழ்கிறேன்.
மிகுந்த நன்றி.
வணக்கம்
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.

said...

" தேடிச் சோறு தினம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ? "

என்ற பாரதி பாடல் நினைவிற்கு வருகின்றன. தன்னை அறியும் வாழ்வு தானே பெருவாழ்வு....

said...

நன்றி சஹ்ரிதயன்..

said...

உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது பாபு.

நன்றி.......

said...

மீண்டும் நன்றிகள் பல........ ஸ்ரீனிவாசன்....