Monday, March 31, 2008

குரு வழிபாடும் - இல்லறமும் – எழுத்துச் சித்தர் பதிலளிக்கிறார்.

ஐயா, துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார் ? துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா ?

ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது.

குரு என்பவர் யார் தன்னை நமஸ்கரிக்கிறாரோ அவருக்கு மட்டுமே அருள்புரிபவர் அல்ல. தன்னை நமஸ்கரிக்கிறவர்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்குமே அவர் ஆசிர்வாதம் செய்யக் கூடியவர். தன்னுடைய சீடர்களின் குடும்பத்தினர் ஒன்றாக இருந்தால் தான் சீடன் முழுமையாக இருப்பான், ம லர்ச்சியாக இருப்பான் என்பது ஒரு குருவுக்கு நன்கு தெரியும். எனவே, ஒரு குடும்பம் முழுவதையும் உள்ளுக்குள் வாங்கி அந்த குடும்பத்தை போற்றி பாதுகாத்து வ ரவேண்டியது ஒரு குருவினுடைய இயல்பாகிறது.
ஸ்ரீராமானுஜருடைய ஆச்சாரியர் பெரியநம்பி. பெரியநம்பிக்கு அத்துழாய் என்று ஒரு மகள் இருந்தாள். அத்துழாய்க்கு விமரிசையாக திருமணம் நடந்தது. அவளுக்கு பெரியநம்பி புத்திமதிகள் சொல்லி புக்ககம் அனுப்பி வைத்தார். இனி மாமனாரையும், மாமியாரையும் தான் தாய் தந்தையாக நினைக்க வேண்டும் என்று அவளுக்கு எடுத்து சொல்லி, அங்கே நன்கு பழகி சகல ரையும் கவரும் வண்ணம் பேசி,சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

அத்துழாய் கெட்டிக்கார பெண். புக்ககத்தில் எல்லோரோடும் பரிவோடும், பிரியத்தோடும் நடந்து கொண்டாள். ஆனால், அத்துழாய் மாமியாருக்கு அவளின் மீது அதிக பிடிப்பில்லை. பெரியநம்பி ஸ்ரீரங்கத்தில் ஒரு மதிப்பான ஆள் என்பதால் எல்லோரும் திருமணத்திற்கு தலையாட்டி விட்டார்களே தவிர, பெரியநம்பி செய்த சீரை விட அதிகம் சீர் செய்து, இன்னும் அழகியான பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்திருக்கலாம் என்ற குறை அவளுக்கு இருந்தது. சீர் போதவில்லை என்று சொல்வதற்கும் பயமாக இருந்தது. எனவே, நேரிடையாக சொல்லாமல் அத்துழாய் மீது சிடுசிடுப்பாக இருந்தாள்.

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் தான் மாமியாருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது போலும். எனவே, அ வ ளை காவேரிக் கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு அவளுக்கு குளிர குளிர சொம்பில் நீர் ஊற்றி, முதுகு தேய்த்துவிட்டு, வேண்டுமென்ற பணிவிடைகள் செய்து இடையிடையே தன் மனதையும் வெளிப்படுத்தி தன்னை மகள் போல நடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்து வரலாம் என்ற எண்ணம் கொண்டு அத்துழாய் மாமியாரை காவிரிக்கு நீராட வருமாறு அழைத்தாள்.

மாமியாருக்கு சுள்ளென்று கோபம் வந்தது.

"நீ அதிகாலையில் குளிப்பதற்காக காவிரிக்குப் போக என்னை ஏன் துணைக்கு கூப்பிடுகிறாய். வேண்டுமென்றால் ஒரு சீதன வெள்ளாட்டியை கூட்டிக்கொண்டு போக வேண்டியது தானே" என்று இடித்துரைத்தாள்.

அதென்ன சீதன வெள்ளாட்டி?
முன்பெல்லாம் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவளோடு அவளுக்கு வேலை செய்வதற்கென்று ஒரு வேலைக்காரியையும் அனுப்புவது வழக்கம். அந்த வேலைக்காரிக்கு சீதன வெள்ளாட்டி என்று பெயர்.

எந்த சீதனமும் சரியாகச் செய்யாமல் இருந்த பெரியநம்பியை கேலி செய்யும் வண்ணம், அவர் கையாலாகாத்தனத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம் 'வேண்டுமென்றால் ஒரு சீதன வெள்ளாட்டியை அழைத்துக் கொண்டு போயேன்' என்று மாமியார் சொன்னது அத்துழாய்க்கு சுருக்கென்று வலித்தது. தந்தையினுடைய இயலாமையை எவ்வளவு மோசமாக சுட்டிக் காட்டுகிறாள் என்று வருத்தப்பட்டாள்.

"இன்னும் சீர் வேண்டும் போலிருக்கிறது அப்பா. என் மாமியாருக்கு நீங்கள் செய்த சீர் போதவில்லை. எப்போதும் சிடுசிடுவென்று இருக்கிறாள். காவிரிக்கரைக்கு காலார போய்வரலாம் என்று பிரியமாக கூப்பிட்டாலும் 'நான் என்ன சீதன வெள்ளாட்டியா' என்று கோபித்துக் கொள்கிறாள்" என்று அத்துழாய் விசும்பலோடு சொல்ல, பெரியநம்பி, "இதை நீ என்னிடம் சொல்வானேன். இப்போது நமக்கு இருக்கிற ஜீயரான ஸ்ரீராமானுஜரிடம் போய்ச் சொல், நம் குடும்பத்துக் குறைகளை அவர்தான் தீர்ப்பார்' என்று சொன்னார்.

அத்துழாய்க்கு ஸ்ரீராமானுஜர் மீது மிகுந்த பக்தி. சிறுவயதிலிருந்தே அவரை நமஸ்கரித்து குருவாய் உள்ளுக்குள் ஏற்றுக் கொண்டு, சகல நேரமும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருந்த அத்துழாய் ஸ்ரீராமானுஜரிடம் ஓடினாள். தாள் பணிந்து நடந்த விஷயத்தைச் சொன்னாள்.

"அவ்வளவுதானே. உங்கள் மாமியார் கேட்பது நியாயம் தான். உன் தகப்பனால், சீதன வெள்ளாட்டியை அ னுப்ப முடியாவிட்டால் என்ன. இதோ நான் அனுப்புகிறேன். முதலியாண்டானை கூட்டிக்கொண்டு போ. அவன் உனக்கு சீதன வெள்ளாட்டியாக இருப்பான். வேலைக்காரிக்கு பதில் வேலைக்காரனை அனுப்புகிறேன். அவனை ஏவி என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்,'' என்று தன்னுடைய சீடர்களில் முதல்வரான முதலியாண்டானை அனுப்பினார்.

முதலியாண்டான் அத்துழாயோடு அவள் வீட்டிற்குப் போனார். அங்கே மாமியார் இல்லை. வீடு முழுவதும் பெருக்கினார். ஒட்டடை அடித்தார். முற்றத்தை சுத்தம் செய்தார். அங்குள்ள பாத்திரங்களைக் கழுவினார். துணிமணிகளை மடித்து வைத்தார். கொல்லைப்புறம் இருக்கிற புற்களைச் செதுக்கினார். வாசலில் நீர் தெளித்தார். திண்ணையை சாணமிட்டு பெருக்கினார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினார். சமையலுக்கு விறகு பிளந்து வைத்தார். தானியங்களை சுத்தப்படுத்தினார்.

மாமியார் எங்கோ ஊர் முழுவதும் சுற்றிவிட்டு மாலை வந்தபோது வீடு பளிச்சென்று இருப்பதைப் பார்த்து வியந்தாள்.

'யார் இத்தனை வேலை செய்தது" அத்துழாயிடம் கேட்டாள்.

"எனக்காக அப்பா அனுப்பித்த வேலையாள் செய்தார்" அத்துழாய் சொன்னாள்.

"யார் அந்த வேலையாள்" மாமியார் விசாரிக்க, முதலியாண்டான் அவள் முன் கைகட்டி நின்றார்.

"இன்னும் ஏதேனும் வேலை இருந்தால், சொல்லுங்கள் அம்மணி. என்னை இங்கு சீதன வெள்ளாட்டியாக இருக்க, என்னுடைய குரு பணித்திருக்கிறார். மேலும், ஏதும் வேலைகள் இருந்தால் சொல்லுங்கள். வெகு நிச்சயமாய் இந்த வீட்டிற்காக செய்கிறேன்" என்று முதலியாண்டான் சொல்ல, மாமியார் பதறினாள்.

'ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடர். வேதமறிந்தவர். ஞானவித்து. தமிழிலும், சம ஸ்கிருத்திலும் புலமை மிக்கவர். வைணவ சம்பிரதாயங்களில் ஊறித் தேர்ந்தவர். பரம பாகவதர். அந்த முதலியாண்டானை வீட்டு வேலையாளாக எப்படி வைத்து கொள்வது. எவ்வளவு பெரிய அபச்சாரம் இது'

அவள் பயந்தாள். அத்துழாயிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். ஒடிப்போய் ஸ்ரீராமானுஜர் காலில் விழுந்து, "நான் ஏதோ ஒரு ஆத்திரத்தில் பேசிவிட்டேன். அதற்காக உங்கள் சீடரை எனக்கு சீதன வெள்ளாட்டியாக அனுப்பலாமா. தயவு செய்து அவரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். என்னுடைய மருமகளுக்கு நான் இனிமேல் நான் சீதன வெள்ளாட்டியாக இருக்கிறேன். அவளுக்குண்டான வேலைகளை நான் செய்கிறேன். என்னுடைய கர்வத்தை நீங்கள் அழித்து விட்டீர்கள். இனி ஒருபொழுதும் அத்துழாயை நான் கடுமையாகப் பேசமாட்டேன். அவளை என் மகளாக நினைப்பேன்" என்று வாக்குறுதி கொடுத்தாள்.

முதலியாண்டானை ஸ்ரீராமானுஜர் திரும்பப் பெற்றுக் கொண்டார். அத்துழாயின் மாமியாருக்கும், அன்பையும், பண்பையும், நாராயண மந்திரத்தையும் உபதேசித்தார்.

ஒரு குடும்பத்திலிருந்து குருவிடம் ஒருவர் வந்தால் போதும். அந்த ஒருவரைப் பின்பற்றி அந்த குடும்பம் முழுவதுமே குருவிடம் சரணடைய விரைந்தோடி வரும். இன்று இல்லையெனினும் ஒரு நாள் நிச்சயம் வரும்.

ஏனெனில்,குருவின் எல்லையில்லாத கருணை எந்த பிரதிபலனையும் எதிர்பாராதது. குருவின் அரவணைப்பு ஒரு சுகம். ஒரு நிம்மதி.

Saturday, March 29, 2008

சிலை சொல்லும் செய்தி - எழுத்துச்சித்தரின் பார்வையில்

எழுத்துச்சித்தரோடு பல ஊர்களுக்கு அவரது நண்பர்கள் பயணப்படுவதுண்டு. குறிப்பாய் கோயில்கள் நிறைந்த நகரங்களுக்கு விரும்பி செல்வார்கள். வெறும் பிரார்த்தனைக்காக மட்டுமில்லாது வரலாறு அறியவும் , தத்துவங்கள் தெளியவும் அந்த சுற்றுலா உதவியாக இருக்கும். சிற்பங்களை எப்படி ரசிப்பது என்றும் சொல்லித் தருவார்.


மற்ற படங்களைப் பார்க்க போட்டோவின் மீது "க்ளிக்" செய்யவும்.
நரசிம்மரும் பிரகலாதனும்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் எழுத்துச்சித்தருக்கு மிகவும் பிடித்த கோயில். அங்குள்ள சிற்பங்களை தூண் தூணாய் நின்று தடவி விவரிப்பார். எழுத்துச்சித்தர் ரசிக்கும் ஸ்ரீரங்கசிற்பங்களில் அவர் மிகவும் நேசித்து விவரித்த சிற்பம் இது.

ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி நேர் எதிரே உள்ள நாற்கால் மண்டபத்தின் ஒரு தூணில் இந்த நிற்கும் நரசிம்மர் சிலை உள்ளது. அருகே உள்ள பிரகலாதனை மெல்ல விரல் பற்றி ஆறுதலாய் நிற்கும் நரசிம்மரின் ஒன்றரை அடி உயர சிற்பத்தில் நரசிம்மரின் கனிவு தெளிவாகத் தெரியும். நிற்றலில் ஒரு ஒயில் இருக்கும். புஜபலம் புரியும். இரணியனை அடித்துத் துவைத்துக் கொன்று விட்டு "நானிருக்கிறேன்" என்று பிரகலாதனுக்கு சொல்லாமல் சொல்கின்ற ஆபத்பாந்தவம் விளக்கப்பட்டிருக்கும்.

Monday, March 17, 2008

பாலகுமாரன் – சில கேள்விகள்-சில பதில்கள்

ஐயா, செல்போன் வைத்திருப்பது வரமா, சாபமா?

எல்லா வரமும் சாபம்தான். உபயோகப்படுத்துவதில் ஒழுக்கமில்லாதவரை.

ஐயா,சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?

நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும்.
மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும். நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர். வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது. சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும். தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.


ஐயா, பெரும்பாலும் துறவிகளும், மகான்களும் தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கிறார்களே காரணம் என்ன?

தலைப்பாகை என்பது இந்தியாவின் வெயிலிலிருந்து தலையை பாதுகாக்கும் முயற்சி. முன்பெல்லாம் இல்லறத்தார்களும் கண்டிப்பாக தலைப்பாகை அணிந்து கொண்டுதான் வெளியே போவார்கள். ஆனால் மூளையின் செயல்பாடு கடுமையாக இருக்கும்போது தலையை இறுக்கி கொள்ளும் வண்ணம் ஒரு உணர்வு தோன்றும். தலைக்கு மேலே ஒரு தலை இருப்பின், தலையை சுற்றி ஒரு அழுத்தம் இருப்பின் சுகமாக இருக்கும் என்ற காரணமாக இருக்கலாம்.

ஐயா, எழுத்தாளர் அமரர் சுஜாதா பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை உண்மையாக இருந்தது. அற்புதமாக இருந்தது. வேறேதுனும் சொல்ல செய்தி இருக்கிறதா?

சுஜாதாவினுடைய அந்திம சடங்கிற்கு, எரியூட்டலுக்கு நான் என் மனைவியோடு போயிருந்தேன். வாய்க்கரிசி நாங்கள் இருவரும் போட்டு வலம் வந்து நமஸ்கரித்தோம். நெஞ்சில் வறட்டி வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி படுத்திருந்த அவரை கொதிக்கின்ற எரி அடுப்புக்குள்ளே தள்ளுகிற வரை, கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று கை கூப்பி அவரை வழி அனுப்பும்வரை, நானும் என் துணைவி சாந்தாவும் இருந்தோம். இது ஒரு ஆச்சார்ய மரியாதை. அன்று எனக்கு அவர் அன்போடு கதை எழுதுவதை பற்றி விவரிக்கவில்லை என்றால் நான் வேறேதுனுமாய் திரும்புவதற்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. அன்று அவர் கை கொடுத்து கரையேற்றிய என் பயணம் மிக நன்றாக அமைந்துள்ளது. நானே முயற்சி செய்து பணம் சம்பாதித்து இருப்பேன், ஆனால் இன்று எனக்குள்ளே என் இலக்கியம் ஒரு தெளிவு கொடுத்திருக்கிறது, அமைதி கொடுத்திருக்கிறது. அதற்கு காரணமானவரை நன்றியோடு நினைக்கும் வண்ணம் நானும் என் மனைவியும் அவரை வழி அனுப்பிவிட்டு வந்தோம். நான் சொல்வது புரிகிறதா?


ஐயா, அழகு சாதனங்கள் அதிகரித்து வருகின்றனவே?

தோற்றப்பொலிவுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். ஏன் தோற்றப்பொலிவுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? மனிதர்கள் தொடர்பு கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு வீட்டின் பின்கட்டில் எவரையும் சந்திக்காது கதவு இடைவெளி மூலம் மனிதர்களைப் பார்த்து கதவின் பின் பக்கம் இருந்து மனிதர்களிடம் பேசிய பெண்கள், கதவின் இடுக்கு வழியே அ டுத்தவரை பார்க்காது, கதவின் பின் இருந்து மற்றவருக்கு குரல் கொடுக்காது நேரடியாய் வெளியே வந்து நலமா என்று விசாரித்து, விசாரித்தவர் நலம் என்று சொல்லி தொடர்ந்து பேச பெண்களுக்கு உரிமை அதிகரித்து விட்டது. பெண்கள் வீட்டின் பின் கட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்படி போய்கொண்டிருக்கிற பெண் தன் மீது மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டுமென்பதற்காக தன் தோற்ற பொலிவைக் கூடுதலாக்கி கொள்ள விரும்புகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக வருவது அதிகரித்தால் அழகு சாதனங்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இதில் என்ன ஆச்சரியம் என்றால் பெண்களை பார்த்து ஆண்களும் அழகு சாதனங்கள் உபயோகப்படுத்துகிறார்கள். அழகு சாதனங்கள் என்பது இப்பொழுது ஆண் பெண் பேதமில்லாமல் பொதுவுடமை ஆகி விட்டது. அழகு சாதனங்கள் இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் எடுத்தவுடனேயே தோற்ற பொலிவின் மூலமாக ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பது இங்கு முதன்மையாய் நிற்கிறது.


ஐயா,கங்கையில் குளித்திருக்கிறீர்களா? கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று சொல்கிறார்களே? உண்மையா?

கங்கை நதியின் தீரத்தில் பல கோவில் தலங்களில் ஆனந்தமாகக் குளித்திருக்கிறேன். கங்கையில் குளித்தால் பாவம் போகுமா என்பது ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட அபிப்ராயம். ஆனால் பாவம் போக வழி இருக்கிறது. கங்கையினுடைய பிரம்மாண்டம், வேகம் பார்க்கிற போது இடையறாது, இடையறாது வெகு காலத்திற்கு முன்னமிருந்தே ஓடிக் கொண்டிருக்கிற நதியை கவனிக்கின்ற போது, மனித வாழ்வைப் பற்றிய சிந்தனையும், காலம் பற்றி விரிவும் உண்டாகின்றன. இவ்வளவு பெரிய நதிக்கு முன்னால் தான் தூசு. பெரிய பெரிய மகான்கள் குளித்து, அவதாரங்கள் குளித்து கரையேறிய இந்த நதியின் தொன்மைக்கு முன்னால் தான் ஒன்றுமே இல்லை. தன் வயதில் ஒரு அர்த்தமே இல்லை என்று தெரிய வர தன் நிலையாமை புரியும். தன் நிலையாமை புரிய, தன்னுடைய இருப்பு மிக சாதாரண விஷயம் என்று தெரிய, கர்வம் கரைந்து போகும். கர்வம் கரைய, தான் என்ற அகங்காரம் கரைய உள்ளுக்குள் இருந்தே தான் யார் என்ற கேள்வியும், அதற்குண்டான சத்தியமான பதிலும் பிடிபடும். இதுவே பாவம் கரைதல். ஒரு பிரம்மாண்டத்தின் முன் நிற்கும் போது ஏற்படுகின்ற உணர்வு உண்மையை உங்களுக்கு அருகே கொண்டு வந்து கொடுக்கும்.

இதுதான் கைலாசம் போவதற்கும், கோவில்கள் போவதற்கும், தகதகத்து எரிகின்ற அக்னி முன்பு அமர்வதற்கும் காரணம். கடலின் பிரம்மாண்டம் கூட இதை கொடுத்துவிடும். தான் ஒன்றுமே இல்லை என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொள்ள முன்னோர்கள் தனிமையில் பயணம் செய்தார்கள். பயணங்கள் உங்களை உங்களுக்கு காட்டும். தன்னை அறிவதே பாவம் போக்கும் வழி. ஆனால் கங்கையில் குளிப்பதற்கும் கும்பலாக போய், கூச்சலாக இறங்கி, குழப்பமாக குளித்து சிறு சிறு சண்டைகளோடும், மனஸ்தாபங்களோடும் வெளியே வர காரியம் கெட்டுப் போகிறது. சில சமயம் பாவமும் சேர்ந்து விடுகிறது.குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது என்பது இது தான்.


ஐயா, குழந்தைகள் உலகம் பற்றி ஒன்றுமே சொன்னதில்லையே?

தேனைப் பற்றி என்ன சொல்ல முடியும். பாலைப் பற்றி எப்படி விவரிக்க முடியும். திகழொளியைப் பற்றி என்ன விதமாய் பகிர்ந்து கொள்ள முடியும். குழந்தைகள் உலகம் உட்கார்ந்து அனுபவிக்கதக்கது. நம்மை மறந்து, நம் வஞ்சனை மறந்து மெல்ல மெல்ல மேலே படிந்த அகம்பாவம் மறந்து அவர்களை கவனிக்கத் துவங்கும் போது ஆனந்தம் ஏற்படுகிறது. இதை விளக்கவோ, விவரிக்கவோ முடியவில்லை. வெறும் குழந்தைகள் என்பது சந்தோஷம் எனினும், உங்களுடைய குழந்தைகள், உங்கள் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகள் என்று வம்சாவளியின் நெருக்கத்தில் பார்க்கின்ற போது இன்னும் அபரிதமான ஒரு நெகிழ்வும், சந்தோஷமும் ஏற்படுகின்றது. என் முகத்தை என் பேரனிடம் நான் கவனிக்கிறேன். அவன் அசைவுகளில் என் அசைவை காண்கிறேன். அவன் கெட்டிக்காரத்தனம் என்னுடைய கெட்டிகாரத்தனத்தை விட அதிகமாக இருப்பது கண்டு பூரித்துப் போகிறேன். குழந்தைகள் உலகம் அனுபவிக்கதக்கது. பேச முற்பட்டால் வெறும் சப்தமாகத்தான் இருக்கும். மிகச் சிறந்த ஒரு உணர்வை பல சமயம் சொல்ல முடிவதே இல்லை.

Wednesday, March 12, 2008

ஜனநாயகக் கோயில் – சரித்திரப்பக்கம் – இரண்டு

இது ஒரு கோயிலில் வெளிப்படும் தமிழரின் ஜனநாயக நாகரீகம். காலத்தால் அழியாத சின்னம். ஆயிரத்து இருநூறு வருடத்து அதிசயம். தமிழராய் பிறந்தவர் விழுந்து வணங்கி கொண்டாட வேண்டிய புண்ணிய பூமி. நமது பொக்கிஷம்.

கூழாம்பந்தலில் கண்ட கங்கை கொண்ட சோழீச்வரத்தை தொடர்ந்து எழுத்துச்சித்தர் வைகுந்தப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்று உண்மைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

உலக நாகரீகத்தின் முன்னோடியாய் விளங்கிய தமிழர் நாகரீகத்தின் ஒர் ஆதாரம்.


இந்த நிகழ்படக்குறுந்தொகுப்பை தகவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Saturday, March 8, 2008

அவதாரா- பாலகுமாரன் சொன்ன ஜோக்

ஐயா, நீங்கள் எப்பொழுதுமே முறைப்பான ஆள்தானா? உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி ஏதாவது சொல்லக் கூடாதா?

னக்கு நகைச்சுவையின் மீது எந்த கோபமும் இல்லை. சிரிக்க கூடாது என்று நான் யாரையும் சொன்னதில்லை. என்னையும் கட்டுப்படுத்திக் கொண்டதில்லை. நீங்கள் ஜோக் வேண்டும் என்று கேட்டதால், ஒரு விஷயம் சொல்கிறேன்.

என்னுடைய இருபது வயதில் நான் நண்பர்களோடு பெங்களூருக்கு போனேன். ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்ற நண்பர்கள் நாற்பது பேர் பயணப்பட்டோம். பெங்களூர், மைசூர், கோவா என்று பல்வேறு இடங்களை குறி வைத்து ஓடினோம்.

இதில் பெங்களூர் பயணம் பாதி பேருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது. சென்னையில் மது விலக்கு கடுமையாக அமுலில் இருந்ததால் பெங்களூர் போனவுடன் குடிக்கலாம் என்ற எண்ணத்தில் பல பேர் இருந்தார்கள். எனக்கு மதுவின் மீது பயம் உண்டு. குடிப்பதில் ஒரு பிடித்தமின்மை இருந்தது. எனக்கு இணையானஎன்னோடு வந்த மூன்று நண்பர்கள் பேருந்தை விட்டு இறங்கியதும் ஓடிப் போய் சாண் உயர சப்பை பாட்டிலை வாங்கி
டம்ளரில் ஊ ற்றி சியர்ஸ் என்ற குடிக்க, நான் கலர் கோலி சோடா வாங்கிக் கொண்டேன். கிட்டதட்ட எல்லா திரவங்களும் ஒரே நிறமாகத் தான் இருந்தன.

வேகமாகக் குடித்த மூன்று நண்பர்களும் மெல்லிய போதை தலைக்கேற, குடிக்கும் இடத்தை விட்டு வெளியே வந்தார்கள். இரண்டு பேருக்கு உடனே அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. எனக்கு அடுத்து இருந்த நபர் சைவம் மட்டும் தான் சாப்பிடுவார். ஆனால் அவருக்கும் பசித்தது. எ னவே நானும் அவரும் சைவ ஓட்டலுக்கு போய் உண வெடுத்துக் கொண்டோம். நேரம் ஆக ஆக அவர் போதையில் தள்ளாடினார். ஒரு வழியாய் உணவு முடித்து வெளியே வந்ததும் பெங்களூரின் மாலை நேரத்துக் காட்சிகள் அவர் மனதை கொள்ளைக் கொண்டன . பெரிய அகலமான வரிசையான மரங்கள் அடர்ந்த சாலை அவரை கிளுகிளுக்க வைத்தது. அவர் அந்த தார் சாலைக்கு நடுவே கைகளை வீசிக் கொண்டு நடந்து போக, நான் பதறியபடியே அவர் பின்னால் போனேன். அவர் சாலையைக் கடக்க வேண்டிய இடத்தில் கடக்காமல் குறுக்கே பாய்ந்து ஒரு போலீஸ்காரர் இருக்கின்ற கூண்டு நோக்கி நடந்து இடுப்பில் கை வைத்து அந்த போலீஸ்காரரைப் பார்த்து மென்மையாக நகைத்தார். போலீஸ்காரருக்கு கடுங்கோபம். எதிரே வரும் வாகனங்கள் பலத்த ஹாரன் சத்தத்துடன் போனதால் எரிச்சலானார்.

"ஏநு அவதாரா?" என்று என் நண்பரை பார்த்துக் கேட்டார்.

நண்பருக்கு அந்த கேள்வி புரிந்து விட்டது. நெஞ்சை நிமிர்த்தினார். இடுப்பில் கை வைத்தார். இரண்டு புறமும் பார்த்தார். யார் கேட்டாரோ அந்த போலீஸ்காரரை நோக்கி நெஞ்சை நிமிர்த்தி "நானு ராம அவதாரா". என்னை பார்த்து "இவரு லட்சுமண அவதாரா". இப்பொழுது போலீஸ்காரரைப் பார்த்து "நீனு ஹனுமந்த அவதாரா" என்று சொன்னார்.

போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது. கூண்டிலிருந்து குதித்து ஓடி வர ராமர் அசையாது இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தார். கன்னடத்தில் வேகமாக திட்டிக்கொண்டே கை ஓங்கிய ஹனுமாரை, லட்சுமணர் கையை பிடித்துக் கெஞ்சி நடு ரோட்டில் ராமருக்காக காலில் விழுந்து வணங்கி அவரை சமாதானப்படுத்தினார். ராமரும், ஹனுமாரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு பிரிந்து போக, லட்சுமணர் ராமரைத் தள்ளிக் கொண்டு போனார்.

உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா. எனக்கு இல்லை. இந்த நண்பர் அதற்கு பிறகு பதினான்கு வருடம் கழித்து ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து போனார். அவர் நினைவு மட்டும் என்னோடு இருக்கிறது. அதற்கு பிறகு இன்னும் வெகு நாள் கழித்து ஒரு வாலிபமான பையனை சந்திக்க நேர்கையில் ஏ தோ உள்ளே உறுத்த, அவருக்கு அருகே போனேன். அவரும் வேகமாக வந்து கைப்பற்றிக் கொண்டார். "உங்களை அப்பா எனக்கு அறிமுகப்படுத்திருக்கிறார். நான் உங்கள் நண்பரின் மகன். அம்மாவும் உங்களை பற்றி சொல்லிருக்கிறார்" என்று பணிவாக பேசினார். அது இறந்த போன என் நண்பரின் மகன் என்று தெரிந்துக் கொண்டேன். பெயர் என்ன என்று வெகு ஆவலாக கேட்டேன். "ராமன்" என்று பதில் சொன்னார். மேற்கொண்டு அவரோடு பேச எனக்கு வெகு நேரம் ஆயிற்று.
Thursday, March 6, 2008

குதிரைகள் ஒரு ராஜஸ்நேகம் – எழுத்துச்சித்தர் சொல்லும் இன்னொரு பாடம்.

குதிரைகள் சொல்லும் இன்னொரு பாடமாக எழுத்துச்சித்தரின் புதிய குதிரை கவிதை ….. உங்களுக்காக….

னிதர்கள் நிமிர்ந்த நேரம்
மிருகத்தை அடிமை செய்தார்.
குரங்கின வழியில் வந்த
கோலத்தை மறந்து போனார்.
தோழமை என்றார் ; ஆனால்
தொல்லைகள் பலவும் தந்தார்.

தோழமை என்றால் என்ன
பரஸ்பரம் மதித்தல் தானே
தான்மட்டும் சிறந்தோர் என்ற
தன்மையை மறத்தல் தானே
மிருகங்கள் நட்பாய் வரினும்
தனித்தனி அளவு கோல்கள்

யானையோ மிரட்டும் உருவம்
சிங்கமோ கர்வம் அதிகம்
புலி சிறுத்தை போக்கிரித்தனம்
நுழைநரி வஞ்சகப் பிராணி
ஒட்டகம் முற்றும் கோணல்
குரங்கது அலையும் தன்மை

கரடியோ அழுக்கு மூட்டை
கழுதைப் புலி அருவறுப்பு
பூனைக்கோ கள்ளம் அதிகம்
நாயது அடிமை புத்தி
குதிரைகள் மட்டுமிங்கே
மனிதருள் நெருக்கமாச்சு.குதிரைகள் ராஜ ஸ்நேகம்
எவரையும் வெறுக்கா மனது
காமத்தைக் காட்டும் உருவம்
காதலின் உண்மை வேகம்

ஓய்வில்லா தன்மை காட்டும்
உழைப்புக்கு உவமை யாகும்
ஒருமுறை ஸ்நேகம் கொண்டால்
மற்றவை விலகிப் போகும்.

மனிதர்கள் முழுதாய் வளர
குதிரையே பெரிதும் காரணம்
- இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இன்னொரு பாடம்.


Sunday, March 2, 2008

அமரர் சுஜாதா – சில நினைவுகள்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் மறைந்து விட்டாரே. உங்களுக்கு சொல்ல ஏதும் இருக்கிறதா?சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன.

அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிக்கையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வந்தேன் என்று சொல்ல, சற்றும் தயங்காமல் நான் உங்கள் எழுத்தை படித்திருக்கிறேன். எனக்கு அது பேருதவி செய்திருக்கிறது என்று சிறிது கூட சலனமில்லாமல் உண்மையான பணிவோடு பதில் சொன்னார். தொட்டதெற்கெல்லாம் சீறி விழும் எங்களை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அந்த பணிவு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.

நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.

"நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை" .இது முதல் பேரா.

அடுத்த பேராவில் "அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।" என்று எழுது அல்லது "அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது" என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும்.

பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.

பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு கால கட்டத்து இளைஞர்களை வெகு அழகாக தமிழ் இலக்கியத்திற்கு இழுத்து வந்தார். கட்டுரையாயினும் சரி. கதையாயினும் சரி. படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமான கட்டளையாக ஏற்று எல்லா படைப்புகளையும் மிக நேர்த்தியாக நெய்து வந்தார்.

எழுத்தாளர் திரு। சாவி அவர்களுடன் பெங்களூருக்கு ஒரு சுற்றுப்பயணம் போனோம்। அதில் எழுத்தாளர் ராணி மைந்தன், சுப்ரமணியராஜூ, விசிட்டர் அனந்த், நான் என்று பலர் இருந்ததாக நினைவு। நாங்கள் எல்லோரும் திரு. சுஜாதா வீட்டிற்கு ஒரு காபி குடிக்க போய் அவரோடு பேசி விட்டு வந்தோம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு பத்திரிக்கையில் எழுதுவதற்காகப் போனதாய் சம்பவம் உண்டா. இது போல் முன் எப்போதும் நடந்ததில்லை. இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.

அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும் இருந்தது. சுஜாதாவின் மறைவு தமிழ் உரைநடைக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. சுஜாதா ஸ்தூலமாக இல்லாது போனாலும் எவரெல்லாம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடைய நெஞ்சில், அவர்கள் ஆசையில் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.