Thursday, November 1, 2012


என்னைக் கலக்கிய மகாபாரதம்

    ஒரு எழுத்தாளன் தனக்குப் பிடித்த கதை என்று எழுத வேண்டுமானால், ஒன்று தன் கதையைச் சொல்வான். அல்லது தன் நெருங்கிய நண்பன் எழுதிய கதையைச் சொல்வான் என்கிற வழக்கு இங்கு உண்டு. நான் பேப்பர் கதையை விட்டுவிட்டு ஒரு செலூலாய்ட் கதையைச் சொல்ல விரும்புகிறேன். இன்னும் தியேட்டருக்கு வராத ஒரு திரைப்படத்தின் கதையை எனக்குப் பிடித்த கதையென்று சொல்கிறேன்.
 
     படத்தின் பெயர் ‘பகவத் கீதை’ கதை எழுதியவர் கிருஷ்ண பரமாத்மா. திரைக்கதை,வசனம் அமைத்தவர் ஜி.வி.ஐயர். தயாரிப்பாளர் ஆந்திரத்து வள்ளல் சுப்பிராமிரெட்டி. பத்திரிகையில் இதுபற்றி செய்தி பார்த்ததுமே, இது மத்திய அரசிடம் ‘தங்கத் தாமரை’ விருது பெற்றது என்று கேள்விப்பட்டதுமே கொஞ்சம் திகைத்துப் போனேன்.
 
     பகவத் கீதையை எப்படி படம் எடுக்க முடியும். ஒரு தத்துவப் புத்தகத்தை எப்படி ஒரு திரைப்படமாக்க முடியும் என்று யோசனை செய்தேன். ஆனால் கரூரில் பிறந்து பெங்களூரில் வாழும் ஜி.வி.ஐயர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவருடைய முந்தைய படங்களான ஹம்சகீதையும், பரமஹம்சரும் அவரைப் பற்றிய மதிப்பை எனக்கு பெரிதும் உயர்த்தியிருந்தன.
 
     பகவத் கீதை படம் பார்க்க உட்கார்ந்தபோது நெஞ்சின் உள்ளே கேள்விகளெல்லாம் அழிந்து படத்தோடு ஆழமாய் ஒன்றிப் போக முடிந்தது. பகவத் கீதை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் புரிந்தது. பகவத் கீதை என்பது மகாபாரதம் என்ற கதையில் வந்த இடைச்செருகல். அல்ல, தத்துவக் குவியல் அல்ல. பகவான் கிருஷ்ணன் சொன்ன தத்துவத்தின் விளக்கம் மகாபாரதம். ஒரு தத்துவத்தை ராஜா, ராணி கதையாய் விளக்க முற்பட்ட விஷயம் தான் மகாபாரத காவியம். கதையை விட தத்துவமே முக்கியம்.
 
     ஐ.வி.ஐயர், “குருஷேத்திரம் என்பது ஒரு ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே இருக்கிறது” என்றார். காமம், குரோதம், லோபம், மூர்க்கம், மதம், மாச்சரியம் என்று ஆறு குணங்களால் மனிதன் அவதிப்படுவதைச் சொல்கிறார். காமம் என்பது துரியோதனன், திரெளபதியை விரும்பியவன். குரோதம் என்பது கர்ணன், தெய்வத் தன்மை நிரம்பினாலும் பாண்டவர்கள் மீதுள்ள பொறாமையால் நாசமானவன். லோபம் சகுனி. மதம் துச்சாதனன் என்று அடுக்கிக் கொண்டு போகிறார்.
 
     அதுமட்டுமல்ல, கெளரவர்கள் பக்கமிருந்த பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா இவர்களையெல்லாம் ருசி, ரச வாசனை என்று பிரிக்கிறார். ‘புலன்களைத் தூண்டும் நல்லவைகள் போலத் தோன்றும் இவையும் கெட்டவைகள்’ என்கிறார்.
 
     ஐம்புலன்களைப் பஞ்சபாண்டவர்களாகவும் மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தியை திரெளபதியாகவும் வர்ணிக்கிறார். அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. பஞ்ச பூதங்களால் உணரப்படும் நல்லவை போல் தோன்றும் விஷயங்களை ஓதுக்கு, தீயதான காமக் குரோதங்களை ஓடுக்கி, உயிர்ச்சக்தியை ஒருவன் வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை என்கிறார். இதைச் செய்ய, மரணத்திற்குப் பின்னாலும் ஆத்மாவின் பயணம் நல்லபடி தொடரும்’என்கிறார்.
 
     இது ஐ.வி.ஐயரின் கோணம்.
 
     படம் போரிலிருந்து துவங்குகிறது. போர் நடக்கும் முன்பே போரின் கொடுமையை அர்ச்சுனன் நினைத்துப் பார்க்கிறான். கிருஷ்ணன் அர்ச்சுனன் கலக்கத்தை நீக்குவதற்காக இப்புவியில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார். “அர்ச்சுனா, நீ புல்லாய், புழுவாய், மீனாய், பறவையாய்ப் பிறந்து மனிதனானாய்” என்கிறார்.
 
     “உன் பயணம் மிகப் பெரியது. நீ அர்ச்சுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி, இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும், நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக் குரோதம் நீக்கி மூலாதாரச் சக்தியைத் தூண்டி விட்டு, அனாதஹம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, ரச,வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அச்சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம்” என்கிறார். இதுவே ஆத்ம பயணத்தின் வழி என்கிறார்.
 
     துரியோதனன, கர்ணனாக காமக் குரோதங்கள் சண்டையிடுவதும், பீஷ்மர், துரியோதனனாக இந்திரியங்கள் பின் தொடர்வதும், அர்ச்சுனன் சாதாரண மனிதனாகவும், இயற்கை அழகு என்பது மாயை என்கிற பெண்ணாகவும், ஆத்மாவின் பயணம் வெள்ளைவெளேரென்கிற பனிபடர்ந்த மலையாகவும் மிக நேர்த்தியாய் காட்டப்பட்டிருக்கிறது. பரவசமாகிப் போனேன்.
 
     திரெளபதி ப்ருத்வீ. அதாவது பூமியும், பூமியைச் சுற்றியுள்ள இடமும், துச்சாதனன் என்பவன் மனிதனின் மதம். அதாவது தான் என்னும் கர்வம். தன்னால் முடியும் என்கிற திமிர். துச்சாதனன் சபை நடுவே திரெளபதியைத் துகில் உரிக்கிறான். அதாவது விஞ்ஞானி என்கிற மனிதன் இந்த ப்ருத்வீயை ஆராய முற்படுகிறான். பிருத்வீயின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முற்படுகிறான். ஆனால் ப்ருத்வீயோ படல்படலாய் பல ஆடைகள் பூண்டவள். மனிதன் காலகாலமாய் துகில் உரியச் செய்தாலும் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது. களைத்து விழுவதைத் தவிர வேறு வழியும் இல்லை.
 
     திரெளபதி அதாவது புருத்வீ இன்னமும் ரகசியமானவள் என்கிற நாடகமும் இந்தத் திரைப்படத்தில் வருகிறது. நான் திகைத்துப் போனேன். தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் படம் தமிழிலும் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் மிக நேர்த்தியான இசை, மது அம்பாட்டின் கவிதையான கேமரா, மணிமணியாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் கூட்டம் படத்தில் நம்மை இழைய வைக்கின்றன. கடினமான தத்துவம் எளிதாகப் புரிகிறது. மரணத்திற்குப் பிறகும் விஷய வாசனைகள் தொடரும் என்பது பயமுறுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்வதின் அர்த்தம் புரிகிறது.
 
     ஜி.வி.ஐயருக்கு இந்திய திரைப்பட உலகம் கடன்பட்டிருக்கிறது. சினிமா பொழுதுபோக்கல்ல. அது தத்துவ வகுப்பு என்பதை ஜி.வி.ஐயர் நிருபித்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு வாழ்க்கையில் இடமே இல்லை. ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார். ஜி.வி.ஐயர் இன்றைய திரைப்பட இயக்குனர்களில் பிரம்மரிஷி வசிஷ்டமுனி. அவரின் ஞானத்திற்கு எழுத்தாளனாகிய நான், கை கூப்பி வணங்குகிறேன்.


4 comments:

said...

தங்கத்தாமரை விருது வாங்கி இருப்பது என்றால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று புரிகிறது... பகிர்வே அவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது... நன்றி...

said...

Wonderful,,the way Balakumaran presents the nuances of the film..VOW..Ramachandran

said...

வணக்கம், ஒரு சிறிய விண்ணப்பம். நிசும்பசூதனி கோவில் தஞ்சையில் எங்கே இருக்கிறது என்று அறிய முடியவில்லை. ஒரு முறை தேடிச் சென்ற போது கீழ வாசல் தெருவில் வட பத்ர காளியம்மன் (அ) ராகு கால காளியம்மன் என்ற கோவிலே நிசும்பசூதனி என காட்டினார்கள். உள்ளூர் வாசிகளுக்கும் நிசும்பசூதனியை பற்றி தெரியவில்லை. ஆனால், பிறகே பாலா அவர்களின் எழுத்தில் நிசும்பசூதனியை பற்றிய "நல்ல உயரம், அஷ்ட புஜங்கள், உக்ர ஸ்வரூபம்" என்ற வர்ணனையை படித்தேன். ஆக, நான் சென்ற கோவில் அதுவல்ல. எனவே நிசும்பசூதனி கோவில் எங்கே என தெளிவான வழி பாலா அவர்களிடம் கேட்டு அறிவித்தால், என்னை போல பலரும் நேரில் தரிசிக்கும் பேறு பெறுவார்கள். முடிந்தால் google maps link மிகவும் உதவியாக இருக்கும். மேலும், தஞ்சையை சுற்றி சோழர் காலத்தில் எட்டு திசைகளில் நிறுவப்பட்ட காளி கோவில்கள் பற்றி பாலா அவர்களிடம் அறிய ஆவலாக இருக்கிறேன். மிக்க நன்றி.

said...

Dear Thulasi,
Namaskaram.
I also have the same confusion.
My uncle and other friends in Tanjore are unable to locate and identify Exactly our Nisumbasoodhani temple.
Please guide.
Next week, I plan to be in Tanjore for few days, and it is one of my TOP priorities, to be in the Sannidhi of this temple.
Our Namaskarams,
Anbudan,
Srinivasan. V.
Perth.