Thursday, June 18, 2009

தர்மம் வெல்லுமா ? - பாலகுமாரன் பேசுகிறார்.

ஐயா, வாழ்க்கையில் வெற்றி பெற சூழ்ச்சி மிக முக்கியமா.. சூழ்ச்சியில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா.. நான் நல்லவன், தர்மம் தலை காக்கும் என்றிருந்தால் அது இழிவான விஷயமா..

பாலகுமாரன் : இது முழுக்க முழுக்க ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றலைப் பொறுத்த விஷயம். வலி தாங்கும் திறன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கொக்கரிக்கும் திறன் போன்ற பல திமிர்களை உள்ளடக்கியது.

சூழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது இன்று நேற்றல்ல.. சகுனியின் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் வாக்கியம். இல்லை என்று சகுனியின் காலத்திலேயே தரும புத்திரரால் மறுக்கப்பட்டும் வந்தது.
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பது பாரதியின் வரிகள். அதாவது சூது, சூழ்ச்சி என்பவை தற்காலிகமாக ஒரு வெற்றியின் தோற்றத்தை தரக்கூடியவை என்பது தான் இதற்குப் பொருள். புளகாங்கிதம் அடைந்து சூழ்ச்சியினால் ஜெயித்து விடலாம் என்று சிலர் மார் தட்டலாம். அடி வாங்கி உருளும் போது அவர் வார்த்தைகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அல்லது நான் மறுபடியும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுவேன் என்று பாதிக்கப்பட்டவரே மார் தட்டவும் செய்யலாம். அதனால் தான் சொல்கிறேன். இது தனிப்பட்ட மனிதனுடைய உரம் பொறுத்த விஷயம்.

அவமானம் தாங்கும் சக்தியைப் பொறுத்த விஷயம். அவமானத்திற்கு துடித்துப் போகிறவர்கள் சூழ்ச்சியில் இறங்க முடியாது, அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது. இளம் வயதிலேயே மானப்பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடிக்கு அஞ்சாமல் இறங்கி அங்கேயே உரம் பெற்றால் தான் சூழ்ச்சி செய்கின்ற அல்லது சூழ்ச்சியை தேடிக் கண்டு பிடிக்கின்ற ஒரு மனோபாவம் வரும். சிறு வயதில் பொத்தி வளர்க்கப்பட்டு கிடைக்க வேண்டியவை கிடைத்து வெகுளியாக வளர்ந்தவருக்கு சூழ்ச்சி செய்ய முடியாது. சூழ்ச்சியை எதிர் கொள்ளவும் முடியாது.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது ஆசை. ஆசை என்பது பேராசையாகி விஸ்வருபம் எடுத்து உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து, என்ன செய்தாவது வெற்றி அடைந்தாக வேண்டுமென்ற வெறி ஏற்படும். அது சூழ்ச்சி செய்யும். சூழ்ச்சிகளை முறியடிக்கும். கத்திக்கு கத்தி, வெட்டுக்கு வெட்டு, களவுக்கு களவு என்று களமிறங்கும். ஆசை எப்போது பேராசையாகும், சிறுசிறு வெற்றிகள் கிடைப்பதின் மூலம் ஆரம்ப நாட்களில் கிடைக்கும் விருதுகளின் மூலம் மிகப்பெரிய ஆசை வளரும். அது மட்டுமல்லாது சுற்றியுள்ள ஒரு தோழர் வட்டம் உங்களை உசுப்பேற்றி உலுக்கி உயரக்கொண்டு போய் வைத்துவிடும்.

நீங்கள் கார் விட்டு கீழே இறங்குகிற போது, ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று உங்கள் காரைச் சுற்றிக் கொண்டு நூறு பேர் உரக்கக் கத்தினால் கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். மண்டையிலுள்ள கர்வச் செதில்கள் வளர்ந்து விஸ்வரூபமாகும். கொம்புகள் முளைக்கும், சந்தேகமின்றி ‘நான் வருங்கால தமிழக முதல்வர் தான்’ என்று உங்களுக்கேத் தோன்றும்.

வருங்கால முதல்வர் என்று யாரைச் சொல்வார்கள். கொஞ்சம் காசு இருக்கிறவரை, கொஞ்சம் கூட்டம் சுற்றுகிறவரை ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று கூட்டம் கூடி சொல்வார்கள். அப்படி யாரையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சினிமா டைரக்டரை, நடிகரை, கவிஞரை, ஒரு ஜோசியரைக் கூட ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள், இதே போல சூழ்ச்சித்திறன் பெற்றவர்கள் தான் சொல்கிறார்கள்.“அண்ணா,நீங்க முதல்வர்னா பொதுப்பணித்துறையை எங்ககிட்ட விட்ருங்கண்ணா”. “ஏண்டா...ஏன் பொதுப்பணித்துறையை கேட்கற..”. “அதுலதாண்ணா சம்பாதிக்கலாம். உங்களுக்காக நான் நிறைய செலவு பண்ணிட்டேண்ணா. அதை எடுக்க வேணாமாண்ணா”
தம்பி சிரித்துச் சொல்ல, அண்ணனும் உரத்துச் சிரிக்க, அந்தச் சபையில் ஆனந்தப் பரவசம் கூத்தாடும். ஒருவர் தோளை ஒருவர் பற்றிக் கொண்டு மேலே வந்துவிடலாம் என்ற பேராவல் எழும்பும்.

“அவன் நமக்கு வேணும்ப்பா, கட் பண்ற நேரத்துல கட் பண்ணி விட்டுவிடலாம். நீ கவலைப்படாதே...” என்று ஒருவனை மற்றவனுக்கு எதிரியாக நியமித்து இடையறாது.. இடையறாது தந்திரம் செய்வார்கள்.
அவர் தேவரு.. இவர் வன்னியரு.. அந்த ஏரியாவோ தேவரு ஏரியா, நான் யாரை பிரசிடெண்ட் ஆக்குவேன். உங்களுக்குத் தெரியாதா, இல்லைன்னா இவராண்ட துட்டு இருக்கு, துட்டு என்னப்பா துட்டு, துட்டு எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆளுங்க சம்பாதிக்கறது தான் கஷ்டம். இப்போதைக்கு நமக்குத் தேவை ஆள் படை, படைபலம். படைபலம் இருந்து பதவி கிடைச்சிடிச்சுன்னா துட்டை காலுக்குக் கீழ் கொட்டுவாங்க. அப்படியே மணல் ஒதுக்கறா மாதிரி காலாலயே துட்டு ஒதுக்கி எடுத்துட்டுப் போயிடலாம்”

கலையிலிருந்து அரசியலா அல்லது அரசியலே கலையா. இடையறாது நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும். சூழ்ச்சி வெற்றியை நோக்கி விறையும். அந்த சமுத்திரத்தில் இறங்கி நீந்தி நெஞ்சாழம் போய்விட்டால் போதும், பிறகு கரைக்கு மீளுவது கடினம். உங்களைத் தாண்டிப்போன அலைகள் திரும்ப வந்து உங்களை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்குமே தவிர, வெளியே சேர்க்காது.

சமுத்திரம் உங்களை எப்போது கரை சேர்க்கும் தெரியுமா, நீங்கள் செத்த பிறகு. செத்து மிதந்த பிறகு தான் உங்களை கரையில் ஓதுக்கும். அதனோடு இருந்து கைகால் அசைக்க அசைக்க நடு சமுத்திரத்திற்கு இழுத்துப் போகப்படுவீர்கள். சூழ்ச்சி வெகு நிச்சயம் வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எதற்காக சூழ்ச்சி? வெற்றி பெற, எதற்காக வெற்றி. அதுவொரு சந்தோஷம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு சந்தோஷமாய் இருக்க இயலுமா, நிம்மதியாய் சாப்பிட முடியுமா, அமைதியாய் தூங்க முடியுமா, நலமாய் புணர முடியுமா, யாரைக் கண்டாலும் கனிந்து கைகூப்ப முடியுமா, முடியாது. பெற்ற தாய் மீது சந்தேகம் வரும், மனைவியை வெறுக்கத் தோன்றும். மகனை ஆள் விட்டு கண்காணிக்கத் தோன்றும், பெண்களை விலைக்கு வாங்கத் தோன்றும். சூழ்ச்சி என்று ஆரம்பித்துவிட்டால் எல்லைகள் உண்டா, எல்லா நாகரிகமும் உடைத்து நாசமாக்கி, சூழ்ச்சி மட்டுமே சூழ்ந்து நிற்கும்.

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்பது வேதவாக்கு. சூழ்ச்சியை எடுத்தவன் சூழ்ச்சியாலேயே மரணமடைவான் என்பதைத் தான் அந்த வாக்கியம் சொல்கிறது. இதில் மோசமானது என்ன தெரியுமா, சூழ்ச்சியில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டி ஊர் வலம் வந்து பிறகு சூழ்ச்சியால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டு துவண்டு கீழே சரிந்து விழுந்த பிறகு ஊரும், உற்றாரும் பழிக்க வெற்றி பெற்ற நாட்களில் எப்படியெல்லாம் சிலிர்த்துக்கொண்டோம் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டு குலைந்து இறுதி நேரத்திற்காக காத்திருக்கிற நிலைதான் கொடுமையானது. அப்போதும் சூழ்ச்சி எண்ணம் தோன்றும், அது இன்னமும் கொடுமையானது.


சூழ்ச்சி ஓரு போதையான விஷயம். ஒருமுறை செய்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு திரும்ப திரும்ப செய்யத்தான் தோன்றும். சூழ்ச்சி வேண்டாம். தர்மம் தலைகாக்கும் என்று பலநூறு கதைகள் நம்மிடையே புழங்கி வருகின்றது. ஆனாலும் சூழ்ச்சி தான் உத்தமம் என்று சொல்லி வருபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்வார்கள்.

4 comments:

said...

வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளை முன்வைக்கின்றீர்கள். எழுத்துச்சித்தரின் வரிகள் எங்கள் வாழ்விற்கும் அமைக்கும் பாதைகளுக்கு பதிலாய் நாங்கள் என்ன தந்துவிட முடியும் அளப்பரிய முடியாத அன்பை பிறருக்கு செலுத்துவதைத்தவிர வேறெப்பெடி எங்கள் நன்றியை காட்டிவிட முடியும்.

said...

migavum arpudhamana padhil, suzhchi seyyum gunam udayavargal indha padhilai padikka nerndhaal oru murai thaan seivadhu saridhana endru yosikka vaikkum.

chandru

said...

வணக்கம்
மிக நேர்த்தியானகேள்வி , அதற்கு ஐயாவின் கருத்து மிக அருமை. பேராசை எதில் கொண்டு சேர்க்கும் என்பது நன்றாக விளங்குகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அறிந்து பின் பற்ற வேண்டிய விஷயம்.தர்மத்தின் படியே நடப்போம்.
மிக்க நன்றி இதோ போன்ற விஷயங்களை உணர்த்தியதற்க்கு

கலை வினோத்

said...

//அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது//

மறுக்க முடியாத உண்மை.. உடன் நாம் வளரும் சூழ்நிலையையும் பொறுத்தது