Friday, July 3, 2009

என்னைச் சுற்றி சில நடனங்கள்

முதல் கதை உருவானது எப்படி

இந்த இரண்டாயிரத்து இரண்டில் என் வயது ஐம்பத்தியேழு. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு பரபரப்பு. உடம்பில் ஒரு அதீத துடிப்பு என்னை அவஸ்தைக்குள்ளாக்கியிருந்தது. நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் ஒரே இரவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தேன். புகழ் என்கிற விஷயத்தின் மீது அடங்காத தாகம் இருந்தது. ஆத்திரம் இருந்தது. எல்லோரும் என்னை கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெரிய ஏக்கம் இருந்தது.

நான் அறிந்து கொண்டது மிக குறைவு. ஆனால் அதிகம் தெரிந்து கொண்டு விட்டதான ஒரு பிரமையில் இருந்தேன். ஒரு ஆங்கில புத்தகத்தைப் பற்றி யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு, அந்த ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பை மற்றவரிடம் சொல்லி, ‘இதை படித்திருக்கிறாயா’ என்று நான் படித்தவன் போல பீற்றிக்கொண்டேன்.

உண்மையும் இல்லை, உழைப்பும் இல்லை, ஆனால் உயர வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. எனக்கருகே இருந்த பல நண்பர்களுக்கு உயர வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதனால் தனித்து விடப்பட்டேன். ‘வெளியே எங்கும் போகக்கூடாது. மற்றவரோடு அதிகம் பழகக்கூடாது’ என்ற தந்தையின் கட்டளையால் வெளியுலகம் தெரியாமல் இருந்தது.

யார் நல்லவர்.. யார் கெட்டவர்.. எவருக்கு என்ன தெரியும்.. எவருக்கு எது தெரியாது’ என்று புரியாமல் இருந்தது. நான் மிக நன்றாக பாடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கேயோ பிசகியது. ஒவியம் வரையத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில கோடுகள் தவறாகவே விழுந்தன. தட்டிக் கொடுத்து வழி நடத்துபவர் என்று எவருமே இல்லை.

‘அவன் அந்த வேலையில் சேர்ந்துட்டான், இவன் இந்த வேலையில் சேர்ந்துட்டான்’ என்று நூற்றிநாப்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தவனை மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்று எனக்கு காண்பிக்கப்பட்டார். துணிந்து எந்த காரியத்திலும் ஈடுபட முடியாதவர்கள், நல்லவர்கள் என்று வர்ணிக்கப்பட்டார்கள்.
நான் வேலை செய்த சிம்சன் குரூப் கம்பெனியில் ஒரு தகராறு நடந்தது. தொழிலாளர்களுக்கு, முதலாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது அரசுக்கெதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்து, முதன் முதலாக சந்தித்த எதிர்ப்பு அது. மிக வேகமாக அதை அடக்க வேண்டுமென்று அரசு நினைத்தது. அந்த போராட்டத்தின் நீள, அகலம் தெரியாமல் அதில் ஈடுபட்டேன், மிகக் கடுமையாக போலீஸாரால் தாக்கப்பட்டேன்.

‘ஓடிப் போயிடு, ஆளுங்கட்சிக்காரங்க கொன்னுருவாங்க, இல்லை, போலீஸ்காரங்க அடிச்சு உள்ள போட்டுருவாங்க, எங்கனா தப்பிச்சுக்க.’ என்று பயமுறுத்த, அந்த பயமுறுத்தலை உள்வாங்கிக்கொண்டு, நான் சிறிதளவு காசோடு ஊரைவிட்டு வெளியேறினேன். கிட்டதட்ட இரண்டு மாத அலைச்சல்.

எங்கெங்கோ, எந்தெந்த இடத்திலோ வாழ்க்கை. அந்த நேரம் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்பவரின் புத்தகம் கிடைத்தது. அதைப் படிக்க படிக்க நான் தெளிவடைந்தேன். ‘நான் உண்மையாக இருக்கிறேனா’ என்று எனக்கு நானே சோதிக்கின்ற, கேள்வி கேட்டு கொள்கிற, ஆழ்ந்து உற்றுப் பார்த்து கொள்கிற ஒரு வார்த்தையை அந்த புத்தகம் அதாவது, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தான் சொல்லிக் கொடுத்தார்.
"தொழில் நுட்பத்தில் மனிதன் நம்பவே முடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளான். ஆனாலும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே இன்றும் சண்டையிட்டுக் கொண்டு, பேராசையுடையவனாக, பொறாமையுடையவனாக, பெரும் துக்கத்தைச் சுமந்து கொண்டு வாழ்கிறான்”
--- ஜே. கிருஷ்ணமூர்த்தி


‘எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் நான் இன்னவிதம் என்று ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனைகளையெல்லாம் உடைத்தெறிந்து ‘உண்மையில் எனக்கு என்ன தெரியும். நான் யார்’ என்று ஆராய, ஒன்றுமே பிடிபடாமல் ஒரு வெறுமை ஏற்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல என்னை நான் பலப்படுத்திக் கொள்ளத் துவங்கினேன். எவரோடும் பேசாமல் எதிரே நடப்பதை உற்றுப் பார்க்க துவங்கினேன். நடந்தவைகளை எண்ணிப் பார்த்தேன்.

அடி தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அடி தாங்க முடியாத அலட்டுகிற ஒரு மனிதனைப் பற்றி, சிந்தித்து கதையாக்கினேன். அதற்குத்தான் ‘மெர்க்குரி பூக்கள்’ என்று பெயர்.

‘எழுத்து ஒரு தந்திரம். இசை ஒரு தந்திரம். சினிமா ஒரு தந்திரம். எல்லா கலைகளுக்கு பின்னாலும் தந்திரம் இருக்கிறது. தந்திரமற்ற வாழ்க்கை இருக்குமோ’ என்று யோசித்தேன். ‘சந்தேகமற்று மற்றவர்களை நம்பினால் என்ன ஆகும்’ என்று சோதனை செய்து பார்த்தேன்.

என்னை வந்து சந்தித்தவர்களை முழுவதும் நம்பினேன். முகத்தில் குத்து விழுந்தபோதும் நம்பினேன். உள்ளே அமைதியாக இருந்து, மற்ற வாழ்க்கையின் தந்திரங்களை, மற்ற மனிதர்களின் ஆசாபாசங்களை உற்றுப் பார்க்க, எழுத நிறைய கிடைத்தது. எழுத எழுத மனம் பக்குவப்பட்டது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. என் வேலை என்ன என்று தெரிந்து.. நான் எழுத்தாளன் என்பதை புரிந்து கொண்டேன். மற்ற வேலைகளில் அவ்வப்பொழுது பேராசையின் காரணமாக மூக்கு நுழைத்தபோதும் மெல்ல பின்வாங்கி ‘என் வேலை எது’ என்று தெரிந்து.. அதில் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறேன். என் எழுத்தும் மற்றவரை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது.


8 comments:

said...

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும்
அனைவரும் வேகத்தின் காரணமான முட்டி மோதி அவனமானப்பட்டு பல வேதனைகளை கடந்து வந்து ஜெயித்தாலும் அதை பெருதன்மையுடன், சத்தியத்துடன் ஒத்துக் கொள்ளள ஐயா ஒருவரால் மட்டுமே முடியும்.

said...

எற்றைக்கும்... ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு
உற்றோமே யாவோம்...
பாலா

said...

Happy birthday bala sir(5/7/09).

I am again reading your book "Tulasi" in that you have given the same message where Dharumasanan talks to his father, in this world every one is born to do some work, if you know for what you are here then the job what you are doing will be perfect.
"வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. என் வேலை என்ன என்று தெரிந்து.. நான் எழுத்தாளன் என்பதை புரிந்து கொண்டேன்"

We are blessed to have such a writer in our decade.

said...

அய்யா பட்ட கஷ்டங்கள்,துயரங்கள் கொஞ்சமா?எவ்வளவு துரோகங்களை சந்தித்திருப்பார்?இந்த இலக்கிய மற்றும் சினிமா உலகில்.?
எதைபற்றி எழுதினாலும் அதை பற்றி "thesis" செய்து அதன் பின்னர் எழுதும் எழுத்தாளர் எவர் உண்டு?
இன்றைய "படாடோப"அவதூறு பறப்பி,ஒருவரை ஒருவர் முகத்தில் உமிழ்ந்து,முஷ்டி மடக்கி குத்த வரும் உலகில் ,என் ஆசான் அமைதியான உற்றுநோக்குதலையும் அவருக்கே உரிய தொனியில் கொடுக்கும் சுவையான நூல்கள் .
மென் மேலும் அவரின் சிறந்த படைப்புகள் "மெர்குரி பூக்களை,திருப்பூந்துருத்தியை,உள்ளம் கவர கள்வனை,மிஞ்சும் படைப்புகளை அவர் தர வேண்டும்.
இந்த தளத்தில் அய்யாவின் படைப்புகளை வாங்கும் வசதியும் ஏற்படுத்தினால் ரொம்ப மகிழ்வோம்.
இந்த கொடும் உலகில் கஞ்ச கருப்புவை,விஜயகாந்தை ,மாட்டு டாக்டர் விசையை,விசாலை பற்றிய புத்தகங்கள் எல்லாம் மவுசை அழுத்தி வாங்க முடிகிறது.
என்ன சொல்லுவது கணினி யுகத்தில் குப்பைகளெல்லாம் விளம்பர யுத்தியினால் விலை போகின்றதே..
என் அய்யாவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

said...

வணக்கம்

மிக அருமையாக இருக்கிறது ஐயாவின் என்னைச்சுற்றி சில நடனங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் உண்டு, ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதில்லை, அதை நாம் தான் கூர்ந்து கவனித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உண்மையாக வெறியோடு உழைத்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பது நன்றாக புரிகிறது. இதை படிக்கும் போது “என்னை சுற்றி சில நடனங்கள்” என்ற புத்தகதை மீண்டும் படிக்க ஆவல் ஏற்படுகிறது. இது போல் பலமுறை ஆவல் ஏற்பட்டு, படிப்பதால் நிறைய விஷயங்கள் உணர முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இதைப்போல் பல விஷயங்களை வெளியிட்டு, மீண்டும் மீண்டும் ஐயாவின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிற இந்த Blog ற்கு மிக்க நன்றி.

said...

மீண்டும் இந்த பதிப்பை நமது தளத்தில் படிக்க உதவியதற்கு நன்றி....

said...

ஆஹா..மெர்க்குரிப்பூக்களின் எல்லா கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு செய்தியை ஒளித்துவைத்திருக்கும்.!

அழகான பதிவு!

said...

Dear Sir,

This is really wonderful thoughts from our Guru.

We reqeust you to publish one article from our guru atleast weekly

please

arul kanthan