ஐயா, அடுத்து இராஜேந்திரசோழனை எழுதத் திட்டமிட்டிருப்பதாய் நீங்கள் சொன்னது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. உடையாரில் கிறுகிறுத்துப் போய் கிடக்கிறோம். படித்ததையே திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். உண்ணமுடியவில்லை. உறங்க முடியவில்லை. தொடர்ந்து படித்து கழுத்து வலிக்கிறது. ஆனாலும், நிறுத்த முடியவில்லை. எப்படி எழுதினீர்கள்.
பாலகுமாரன்: பாராட்டுகளுக்கு நன்றி. கடும் உழைப்புதான் இதற்கு அடிப்படை. நல்ல அறிஞர்களின் கட்டுரைகள் தான் இதற்கு ஆணிவேர், பலமுறை பல ஊர்களுக்கு பயணப்பட்டு சோழதேசத்தை உணர்வு பூர்வமாய் அணுகியதுதான் இந்த நாவலின் கிளைகள். பெருவுடையார் கோவிலும், இராகு கால துர்க்கை என்று இப்போது அழைக்கப்படுகின்ற நிசும்பசூதனி கோவிலும், குடந்தைக்கு அருகேயுள்ள பழையாறையிலும், சோழன் மேட்டிலும், சோழன் மாளிகையிலும், உடையாளூரிலும் இரவு பகலாய் அலைந்தது தான் இந்த நாவல் சிறப்புக்கு காரணம்.
என் தாயார் தமிழ்ப் பண்டிதை ப.சு.சிலோசனா கற்றுக் கொடுத்த தமிழ்தான் என் எழுத்து சிறக்க பெரும் உதவி. இருதய நோயினால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டுமாதம் சுருண்டு கிடந்த அந்த நேரத்திலும் அதிகம் படித்து என்னை பலப்படுத்திக் கொண்டது தான் காரணம். என் எழுத்துப்பணிக்கு இடைஞ்சல் செய்யாது என்னை சீராட்டி வளர்த்த என் மனைவியர்தான் காரணம். என்னோடு இலக்கியம் பேசி என்னை உற்சாகப்படுத்தி ஏன் எழுதலை, எழுதுங்க...எழுதுங்க என்று நச்சரித்த என்னுடைய ஸ்நேகிதங்கள் தான் காரணம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் இலாகாவும், மத்திய தொல்பொருள் இலாகாவும், இராஜராஜசோழனைச் சார்ந்த பல கல்வெட்டுகளையும், பல இடங்களையும் மிக அற்புதமாக பராமரித்து வருகின்ற சிறப்பும் இந்நாவலை எழுதக் காரணம். நீங்கள் போன பிறவியில் இராஜராஜனா... பிரம்மராயனா... என்று தொலைப்பேசியில் உரக்கக் கேள்வி கேட்டு புலம்பலாய் பேசிய உங்களைப் போன்றவர்கள் காரணம்.
சோழதேசத்தின் பிரம்மராயருக்குக் கீழே ஒரு சாதாரணனாய் இருந்திருக்கக்கூடும் என்கிற எண்ணமும் இந்த நாவல் எழுதக் காரணம். பொன்னியின் செல்வன் என்ற நாவல்தொடராக எழுதப்பட்ட போது ஏற்படுத்திய போதை , புத்தகமாக வெளிவந்த போது பல பேர் இல்லங்களில் வாங்கப்பட்டது, வாசிக்கப்பட்டது. அது போலவே உடையாரும் பலபேர் இல்லங்களில் அலங்கரிக்கும் என்பது நிச்சயம். இது தமிழுக்கும், தமிழர் பெருமைக்கும் நான் அணிவித்த சிறிய மாலை. காவிரிக்கரை தமிழர் நாகரிகத்திற்கு நான் அளித்த மெல்லிய பாராட்டுப் பத்திரம்.
எப்படி நீங்கள் இப்படி எழுதினீர்கள் என்று என்னை நோக்கி வியப்பதை விட தோளில் பை போட்டுக் கொண்டு தஞ்சை மாநகருக்குப் போய் பெருவுடையார் கோயிலைப் பாருங்கள். கும்பகோணத்திற்கு நகர்ந்து இராஜராஜன் சம்பந்தப்பட்ட பல இடங்களைத் தேடி கவனியுங்கள். உடையார் குடிக்குப் போய் துரோகிகளான... என்ற வார்த்தையைத் தடவிப் படியுங்கள்.
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையையும், சோழன்மேட்டையும், குடந்தையிலிருந்து தஞ்சாவூர் போகின்ற பெருவழியையும் கவனித்து வாருங்கள். இதுவே உங்களை இன்னும் இராஜராஜசோழனுக்கு அருகே கொண்டுபோய் நிற்க வைக்கும்.
ஐயா, போன ஜென்மத்தில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலோடு நீங்கள் சம்மந்தம் உள்ளவராக நினைக்கிறீர்களாமே. இது உண்மையா, இதைப்பற்றி எழுதி இருக்கிறீர்களாமே. எனக்கும் அப்படியொரு எண்ணம் உண்டு. அதனால் கேட்கிறேன்.
பாலகுமாரன்: ஆமாம். பல கோயில்களுக்கு போய் வந்தாலும் சோழ தேசமும், சோழ தேசத்தின் சிற்சில கோயில்களும் எனக்கு மிக நெருக்கமானவை. நெஞ்சோடு அடர்ந்து இருப்பவை. பிரகதீஸ்வரர் கோயில் மட்டுமல்ல, குடந்தைக்கு அருகே இருக்கின்ற அமண்குடி என்று முன்பு அழைக்கப்பட்ட, இப்போது அம்மன்குடி என்று அழைக்கப்படுகின்ற ஊரும் எனக்கு நெருக்கமானது. அந்த ஊர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அஷ்டபுஜ துர்க்கையும் எனக்கு எப்போதோ பரிச்சயமானவர்கள் போலத் தோன்றும்.
சோழ மன்னனுக்கு சேனாபதியாக இருந்த மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் ஊர் அது. அவர் எழுப்பிய கோயில் ராஜரஜேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சிவனும், அம்பாளும் தனித்தனியாக இருக்க, மிக அற்புதமான கல்லில் செய்யப்பட்ட ஒரு வினாயகரும், சூரியனும், எட்டு கைகள் உடைய துர்க்கையும் அந்த கோயிலில் மிகப் பிரசித்தமானவர்கள். கோவில் சிறியதாக இருந்தாலும், அதன் கீர்த்தி பெரியது. அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். பெரியகுளம், வாய்க்கால், நல்ல விளைநிலங்கள் என்று வளமாக இருந்த கிராமம் அது. இப்போது சற்று வளம் குறைந்திருந்தாலும், வழிபாடுகள் குறையவில்லை. சோழ சாம்ராஜ்ஜியத்தோடு நெருக்கமானவர் என்ற நினைப்பு எவருக்கு இருப்பினும் அந்த அமண்குடி துர்க்கையை பார்த்து விட்டு வரலாம்.
அவள் உஷ்ணமானவள். உக்கிரமானவள். அவளை வேண்டிக் கொண்டால் எதுவும் நிறைவேறும், எனக்கு அந்தக் கோவிலில் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன, பிற்பாடு ஒரு சமயம் அதைப்பற்றிச் சொல்கிறேன். நிச்சயம் கோயிலிக்குப் போய் வாருங்கள். அந்த கிராமம் நல்ல மனிதர்களைக் கொண்டது. மிகுந்த பயபக்தியோடு சிறப்பான முறையில் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நல்ல கோயில்களுக்கு போக வேண்டும் என்று ஆசை உள்ளவர்கள்கூட அம்மன்குடி துர்க்கையை அவசியம் பார்த்துவிட்டு வரவேண்டும். அம்மன்குடி போக கும்பகோணத்திலிருந்து உப்பிலியப்பன் கோயில் வழியாக போக வேண்டும்.
Sunday, September 13, 2009
Posted by கிருஷ்ண துளசி at 7:35 PM
Labels: கேள்வி - பதில்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Dear Sir,
We are all awaiting for Rajendra Cholan Novel from Iyaa.
Could you please inform us when it will publish
please
with regards
arul kandan
\\ராஜேந்திரசோழனை எழுதத் திட்டமிட்டிருப்பதாய் நீங்கள் சொன்னது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. உடையாரில் கிறுகிறுத்துப் போய் கிடக்கிறோம்.\\
மகிழ்ச்சியான செய்தி
வாழ்த்துக்கள்
" படித்ததையே திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். "
Yes.
Thanks.
Anbudan,
Srinivasan.
vanakkam krishna thulasi,
very nice. No words to say. my eyes are filled with water.
All the best & convey my namaskaram to Iyya
Lovingly
Rekha Manavazhagan
ஐயாவின் கடும் உழைப்பு நன்றாகவே உணரமுடிகிறது. மேலும் இராஜேந்திர சோழனைப் பற்றி ஐயா எழுத வேண்டும் என்று மிக ஆவலோடு காத்திருக்கிறோம். அம்மன்குடி கோயில் பற்றி ஐயா அவர்கள் கூறியது எங்களை போன்ற நிறைய பேர்களுக்கு, அந்த கோயிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் அந்த வினாயகரை பார்க்க வேண்டும் என்று மிக விருப்பமாக இருக்கிறது. மிக்க நன்றி.
அன்புள்ள ஐயா, நான் உங்களுடைய "உடையார்" புதினத்தின் ௩ பாகங்களை தான் படித்தேன். மற்ற பாகங்களையும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். புதினத்தை படிக்கும் பொழுது அங்கு வாழ்வதைப் போல ஒரு பிரமையை அனுபவித்தேன்.
Post a Comment