Saturday, April 24, 2010

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - நல்ல உணவுப் பழக்கம்

எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு குழந்தைகளும் எகிறி குதித்து பல ஹோட்டல்கள் பெயரைச் சொன்னார்கள். பல சிற்றுண்டிகள் பெயரைச் சொன்னார்கள். எங்கே சீக்கிரம் உணவு தயாராகுமோ அங்கே போகலாம் என்று ஒரு விரைவு உணவுக் கடைக்குப் போனோம். குழந்தைகள் கொடுத்த உணவுப்பட்டியல் கைக்கு வர தாமதாமாயிற்று.

ரசித்து சாப்பிட்டவரை சந்தோஷம் என்று காசு கொடுத்து விட்டு வந்தோம். சாப்பிட்ட அரை மணியில் சிறிது சிறிதாய் ஏப்பம் வந்தது. அடுத்த ஒரு மணியில் இரைப்பையிலிருந்து நீர் கிளம்பி நெஞ்சைத் தாக்கியது. இரண்டு மணி நேரம் பொறுத்து வயிற்றில் இடைவிடாது சங்கடம், வீட்டுக்கு வந்ததும் வயிற்றைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் கூட ஒரு வேதனையான அனுபவம்.

அன்று இரவு படிக்கக் கூட முடியாமல் ஒரு ஆயாசமும், மந்தமும் பற்றிக் கொண்டது, எனக்கு மட்டும் தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா? வீட்டில் உள்ளவர்களை விசாரித்தேன். யாரெல்லாம் உணவுக் கடையில் விதம் விதமாய் தின்றோமோ அவர் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். “நம்ம வீட்ல யாருக்குமே வயிறுபலம் கிடையாது”. என் அம்மா அடிக்கடி சொல்வாள். கொஞ்சம் பழக்கம் பிசகினாலும் பிய்த்துக் கொள்ளும் என்று அலுத்துக் கொள்வார்.

‘செரிமானம் பரம்பரை சமாச்சாரமா? இதற்கும் மரபு அணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா? அந்த விரைவு உணவுவிடுதியில் வேறு சில நண்பர்களை பார்த்தோமே? பெரிய பட்டளமாய் உயர டேபிளைச் சுற்றி நின்றபடி ஏகப்பட்ட விஷயங்களை ஆர்டர் செய்தார்கள், அங்கும் வயிற்றுப் பொருமல் உண்டா, யாரைச் சந்திக்தோம்..யோசித்து டெலிபோனில் எண்கள் சுழற்றினேன்.

“மத்தியானம் போனான், வரவேயில்லையே” நான் தேடியவனின் தாயார் கவலையோடு பேசினார்கள். மறுநாள் காலை வயிறு ஊதித் திணறிக் கொண்டிருந்தது. மகள், மகன் இருவருமே என்னை விடவும் மோசமான நிலையில் இருந்தார்கள். சுருண்டு படுத்தார்கள், உற்சாகமின்றி நடந்தார்கள். அன்று வழக்கத்தை விட அதிக தூரம் வேண்டுமென்றே வேகமாக நடந்தேன், எப்படியாவது வயிற்றிலுள்ள விஷயத்தை வெளியேற்றி விடவேண்டும் என்று விரும்பினேன். உண்ட இருபத்திநாலு மணி நேரம் கழித்து உள்ளே கண்ட இடங்களை ரணப்படுத்தி விட்டு அந்த உணவு வெளியேறியது.

படிக்கவோ, எழுதவோ முடியவில்லை என்பது மட்டுமில்லை. சுமுகமாகப் பேசவும் முடியவில்லை. வயதாகிவிட்டதால் ஜீரண சக்தி குறைந்து விட்டது என்று நான் நினைக்க, என் மகளும், மகனும் பட்ட அவஸ்தை ஞாபகம் வந்தது. நான் போனில் தேடிய நண்பரிடமிருந்து இரண்டு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. “வயிற்றுப் போக்கு புரட்டி எடுத்து விட்டது. அது தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன விஷயம்”, என்று கேட்க, அதே விஷயத்தை அவரிடம் சொன்னேன்.

சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை. மற்றவரோடு பேசிக் கொண்டிருக்கிறது.

உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு, இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.

உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.

இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.

அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.

ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. “ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. “எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.

நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். “பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.

அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது.

உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம். உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.

நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. “மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”


வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.

7 comments:

said...

நல்ல பதிவு பாலகுமாரன் அவர்களே!
இன்றைய இளைஞர்களுக்கு தேவையானப் பதிவு!

said...

நல்ல பதிவு சார்...முயற்சிக்கிறேன்..

said...

Dear Sir,

What ever iyyo told that always true. before he told everything he had expereinced himself after that only he conveying.

But layman like me whenever we saw his books, comemnts, CD speeach that time its impact to follow after some times it slowly forgetting not able to stick his words...

these how to take it regularly big question?

Only one option we have to Pray & surrender him.....

Sathguru balakumaran jayaguru raya..

with love n true
arul kanthan

said...

வணக்கம்,

உணவைப் பற்றி எந்த ஒரு விழிப்பு உணர்வும் இல்லாத இந்த காலக்கட்டத்தில் அதைப் பற்றி ஐயா மிக அருமையாக கூறியுள்ளார், இதை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.. மனிதன் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற எல்லா விஷயங்களிலும் அவனால் ஈடுபடமுடியும். இது போல் பல நல்ல பதிவுகளை வெளியிட்ட கிருஷ்ணதுளசி அவர்களுக்கு மிக்க நன்றி.
கலைவினோத்

said...

//நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.//

என் அனுபவமும் இது தான் ......
தேவையான பதிவு கிருஷ்ண துளசி................

said...

Vanakam krishna thulasi

Namaskaram to Iyya. Very nice. nalla unavu pazhakam namakku katru koduka yarum illai. vazhayadi vazhayaga nam munnorgal undathai pol namum vegavaithu ungirom. arokyamai vazha intha unavu pazhakathai merkondal nalamaga vazhalam. ithai nam pinpatrinam nam pillaigal thanaga pinpattruvargal. very useful krishna thulasi.

with lots of love
Rekha Manavazhagan.

said...

இன்றைய `அவசர தலைமுறை’ படிக்க வேண்டிய அருமையான கட்டுரை. நன்றி அய்யா!

http://mayakrishnanv.blogspot.com/2010/04/blog-post_20.html