Saturday, February 23, 2008

“உடையார்” - “அபொகலிப்டோ” – ஒப்பீடு செய்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்…..

ஐயா, வார இதழான குமுதத்தில் மெல்கிப்ஸனின் “அபொகலிப்டோ என்ற அற்புதமான படத்தைப் பற்றி வியந்திருந்தீர்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அதைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு அவ்வளவு தான் இருக்கிறதா.வேறு என்ன பாதிப்பு அந்த படத்திலிருந்து உங்களுக்கு ஏற்பட்டது।




“உடையார்” நான் எழுதிய போது சில விஷயங்களை எவ்விதம் கற்பனை செய்தேனோ அவ்விதமாகவே “அபொகலிப்டோ” இருந்தது. அத்தனையும் இந்திய முகங்கள். ஏன் திராவிட முகங்கள். மயன் நாகரிகமும், திராவிட நாகரிகமும் நெருக்கமாக இருந்திருக்கிறது என்பதை அந்த படம் பார்த்து விட்டு உணர்ந்தேன்।

வளைந்த உதடுகள்,நெற்றிப்பொட்டு,கருமையான கூந்தல், கருநிற விழிகள்,ஒரு அளவான உடம்பு , மாநிறம் என்பவை நம்முடைய குணாதிசயங்கள்। இவை அனைத்தையும் மிக மகிழ்வாக அனுபவித்தேன். இந்தப் படம் பார்க்கின்ற போது இப்பொழுது எழுதுகின்ற இராஜேந்திர சோழனுடைய படையெடுப்பு பற்றியும் எனக்கு எண்ணங்கள் ஏற்பட்டன.

ஒரு ஊரை உள்ளே சென்று பாழ் செய்வது என்பது,எரியூட்டுவது என்பது, ஆண்களையும், பெண்களையும் கைது செய்து கிழவர்களைக் கொன்று குழந்தைகளைத் துன்பப்படுத்தி, பெண்களை மானபங்கம் செய்து அடிமைகளாக இழுத்துப் போவது என்பது இவ்விதம் தான் நடந்திருக்குமோ. மேலைச் சாளுக்கியத்தை இராஜேந்திரன் சூரையாடியது இப்படித் தானோ என்ற எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன.

மனிதனுடைய நாகரிகம் அழிவதற்குக் காரணம் வெளியிலிருந்து வந்தவர்கள் இல்லை. உள்ளே இருப்பவர்களே அந்த நாகரிகத்தை அழிக்கிறார்கள் என்பது மிகச் சத்தியமான வார்த்தை. இந்திய நாகரிகம் கணவாய் வழியாய் வந்த அரேபியர்களாலோ,கடல் வழியாக வந்த ஐரோப்பியர்களாலோ அழியவில்லை. இந்திய நாகரிகம் சேர, சோழ , பாண்டியர்கள் என்று பிளவுபட்டு , கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று துண்டாடப்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதிலேயே அழிந்து போயிற்று.நாம் பலவீனர்களாக இருந்ததால் அந்நியர்கள் எளிதாகப் படையெடுத்தார்கள் என்பதையும் மெல்கிப்ஸனின் படம் எனக்கு உணர்த்தியது.

என்ன அற்புதமான படப்பிடிப்பு. என்ன இயல்பான நடிப்பு.ஒரு நிமிடம் கூட நம்மை தளர விடாமல் நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்த அற்புதமான காவியம் “அபொகலிப்டோ” .சரித்திரத்தின் மீது காதலுள்ளவர்கள் அத்தனை பேரும் பார்க்க வேண்டிய அற்புதமான சித்திரம்.

இதே மாதிரி ஒரு படம் உடையாரைப் பற்றி மெல்கிப்ஸனோ அல்லது வேறு எவரேனும் எடுக்க மாட்டார்களா என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. “அபொகலிப்டோ” காலம் கற்காலம். உலோகம் பயன்படுத்தாத காலம். கத்திகளெல்லாம் கருங்கற்களால் ஆனவை. கட்டைகளே ஆயுதங்களாய் இருந்தன. ஆனால் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழருடைய காலமும், இராஜேந்திர சோழருடைய காலமும் உலோகத்தினுடைய மகிமையை முற்றிலுமாக உணர்ந்து சகல விதமாகவும் உலோகத்தைப் பயன்படுத்திய அற்புதமான காலம்.

தமிழில் தமிழர் நாகரிகம் பற்றிய ஒரு படம் வருமா என்பது எனக்கு சந்தேகமே.இதை ஐரோப்பிய சினிமாக்காரர்களோ, அமெரிக்க சினிமாக்காரர்களோ தான் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்மவர்கள் இன்னும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு ஹீரோ ஒரு ரவுடி. ஹீரோயின் ஒரு பணக்கார வீட்டுப் பெண். இரண்டு பேரும் நடுரோடுல திடீர்னு பாத்துக்கறாங்க.காதலிக்கறாங்க என்று தான் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்கள்.

நல்ல படம் என்பது மக்களுடைய ரசனையைப் பொறுத்தது. வலுவுள்ள இயக்குநர்கள் இங்கிருப்பினும் அவர்கள் வியாபார சூழலில் சிக்கி மக்களுக்கேற்றவாறு படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல படத்திற்கு மக்கள் தவிக்கின்ற காலம் அருகில் இல்லை. சற்று தூரத்தில் தான் இருக்கிறது.

11 comments:

said...

இராஜேந்திரன் காலத்தின் என்ன, இந்தக் காலத்திலேயே, எங்கள் மாநிலம், எங்களுக்கு மட்டும் தான் இங்கே பிழைக்க உரிமை, மற்ற மாநிலத்தவெரல்லாம் ஈனப்பிறவிகள் என்கிற எண்ணம் தான் சகஜமாக இன்றைக்கும் பார்க்கிறோமே?
இதற்கு மொழி உணர்வு, இன உணர்வு என்கிற பட்டம் வேறு...

said...

உண்மை ஜீவா

said...

ஆழமான விமர்சனம்.. ஐயா அவர்கள் சொல்வது போல நம் நாகரீகத்தை கூட யாரோ ஒரு ஐரோப்பியரோ அமெரிக்கரோ தான் ஆய்ந்தறிந்து படமாக்க முயல்வார்கள் போலும்..!

said...

வருக சிங்கையன். ஐயா அவர்கள் பல முறை ஆழ்ந்து பார்த்து நுணுக்கங்களை நன்கு ரசித்துப் பார்த்த படம். உடையார் சரித்திரத்தை இப்படி யாராவது என்றாவது எடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையைத் தந்த படம்.

said...

அபோகலிப்ப்டோ... பார்த்த பாதிப்பு பல நாட்கள் இருந்தது.

'மருதநாயகம்' இப்படிப்பட்ட ஒரு முயற்சியாக இருந்திருக்க / இருக்கக்கூடீய வாய்ப்புகள் அதிகம்.

பிரேவ்ஹார்ட் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

said...

வணக்கம் ஸ்ரீதர் நாராயணன்.பிரேவ் ஹார்ட் பார்த்திருக்கிறோம். ஆனால் ஐயா அவர்களை அபோகலிப்டோ பாதித்த அளவு பிரேவ் ஹார்ட் பாதிக்கவில்லை.

said...

Comparison is very nice

I feel like watching this movie once again.....

said...

We also had the same feeling like yours and we watched the movie once again after hearing iyya's review about the movie. we were able to appreciate the nuances of the film much better.

said...

I think Madan has responded a little differently about the ethnic cleansing of the tribes by the invaders. He had stated that Mel Gibson cleverly twisted the truth by saying that the invading white skins "educated" and "modernised" the native tribes.

White skins are always White skins. Hope we can expect a similar line of thought if he were to film our Rajaraja's or Rajendra's history.

Thanks
Muthu

said...

Hi,

ayya's review was excellent.I feel like watching this movie.
what jeeva said is correct.we can take karnataka issues as a sample.

Thanks
sandhiya

said...

///இந்திய நாகரிகம் சேர, சோழ , பாண்டியர்கள் என்று பிளவுபட்டு , கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று துண்டாடப்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதிலேயே அழிந்து போயிற்று.நாம் பலவீனர்களாக இருந்ததால் அந்நியர்கள் எளிதாகப் படையெடுத்தார்கள் என்பதையும் மெல்கிப்ஸனின் படம் எனக்கு உணர்த்தியது.//////



கிட்டத்தட்ட 1500 [கி.மு (300) முதல் கி.பி.(1200)] வருடங்கள் ஆட்சி புரிந்த நமது தமிழ் (சேர, சோழ, பாண்டிய) மன்னர்கள் எங்கு விழுந்து விட்டார்கள் என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்தது..
அய்யாவிற்கு நன்றிகள் பல..