Saturday, March 8, 2008

அவதாரா- பாலகுமாரன் சொன்ன ஜோக்









ஐயா, நீங்கள் எப்பொழுதுமே முறைப்பான ஆள்தானா? உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி ஏதாவது சொல்லக் கூடாதா?

னக்கு நகைச்சுவையின் மீது எந்த கோபமும் இல்லை. சிரிக்க கூடாது என்று நான் யாரையும் சொன்னதில்லை. என்னையும் கட்டுப்படுத்திக் கொண்டதில்லை. நீங்கள் ஜோக் வேண்டும் என்று கேட்டதால், ஒரு விஷயம் சொல்கிறேன்.

என்னுடைய இருபது வயதில் நான் நண்பர்களோடு பெங்களூருக்கு போனேன். ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்ற நண்பர்கள் நாற்பது பேர் பயணப்பட்டோம். பெங்களூர், மைசூர், கோவா என்று பல்வேறு இடங்களை குறி வைத்து ஓடினோம்.

இதில் பெங்களூர் பயணம் பாதி பேருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது. சென்னையில் மது விலக்கு கடுமையாக அமுலில் இருந்ததால் பெங்களூர் போனவுடன் குடிக்கலாம் என்ற எண்ணத்தில் பல பேர் இருந்தார்கள். எனக்கு மதுவின் மீது பயம் உண்டு. குடிப்பதில் ஒரு பிடித்தமின்மை இருந்தது. எனக்கு இணையானஎன்னோடு வந்த மூன்று நண்பர்கள் பேருந்தை விட்டு இறங்கியதும் ஓடிப் போய் சாண் உயர சப்பை பாட்டிலை வாங்கி
டம்ளரில் ஊ ற்றி சியர்ஸ் என்ற குடிக்க, நான் கலர் கோலி சோடா வாங்கிக் கொண்டேன். கிட்டதட்ட எல்லா திரவங்களும் ஒரே நிறமாகத் தான் இருந்தன.

வேகமாகக் குடித்த மூன்று நண்பர்களும் மெல்லிய போதை தலைக்கேற, குடிக்கும் இடத்தை விட்டு வெளியே வந்தார்கள். இரண்டு பேருக்கு உடனே அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. எனக்கு அடுத்து இருந்த நபர் சைவம் மட்டும் தான் சாப்பிடுவார். ஆனால் அவருக்கும் பசித்தது. எ னவே நானும் அவரும் சைவ ஓட்டலுக்கு போய் உண வெடுத்துக் கொண்டோம். நேரம் ஆக ஆக அவர் போதையில் தள்ளாடினார். ஒரு வழியாய் உணவு முடித்து வெளியே வந்ததும் பெங்களூரின் மாலை நேரத்துக் காட்சிகள் அவர் மனதை கொள்ளைக் கொண்டன . பெரிய அகலமான வரிசையான மரங்கள் அடர்ந்த சாலை அவரை கிளுகிளுக்க வைத்தது. அவர் அந்த தார் சாலைக்கு நடுவே கைகளை வீசிக் கொண்டு நடந்து போக, நான் பதறியபடியே அவர் பின்னால் போனேன். அவர் சாலையைக் கடக்க வேண்டிய இடத்தில் கடக்காமல் குறுக்கே பாய்ந்து ஒரு போலீஸ்காரர் இருக்கின்ற கூண்டு நோக்கி நடந்து இடுப்பில் கை வைத்து அந்த போலீஸ்காரரைப் பார்த்து மென்மையாக நகைத்தார். போலீஸ்காரருக்கு கடுங்கோபம். எதிரே வரும் வாகனங்கள் பலத்த ஹாரன் சத்தத்துடன் போனதால் எரிச்சலானார்.

"ஏநு அவதாரா?" என்று என் நண்பரை பார்த்துக் கேட்டார்.

நண்பருக்கு அந்த கேள்வி புரிந்து விட்டது. நெஞ்சை நிமிர்த்தினார். இடுப்பில் கை வைத்தார். இரண்டு புறமும் பார்த்தார். யார் கேட்டாரோ அந்த போலீஸ்காரரை நோக்கி நெஞ்சை நிமிர்த்தி "நானு ராம அவதாரா". என்னை பார்த்து "இவரு லட்சுமண அவதாரா". இப்பொழுது போலீஸ்காரரைப் பார்த்து "நீனு ஹனுமந்த அவதாரா" என்று சொன்னார்.

போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது. கூண்டிலிருந்து குதித்து ஓடி வர ராமர் அசையாது இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தார். கன்னடத்தில் வேகமாக திட்டிக்கொண்டே கை ஓங்கிய ஹனுமாரை, லட்சுமணர் கையை பிடித்துக் கெஞ்சி நடு ரோட்டில் ராமருக்காக காலில் விழுந்து வணங்கி அவரை சமாதானப்படுத்தினார். ராமரும், ஹனுமாரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு பிரிந்து போக, லட்சுமணர் ராமரைத் தள்ளிக் கொண்டு போனார்.

உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா. எனக்கு இல்லை. இந்த நண்பர் அதற்கு பிறகு பதினான்கு வருடம் கழித்து ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து போனார். அவர் நினைவு மட்டும் என்னோடு இருக்கிறது. அதற்கு பிறகு இன்னும் வெகு நாள் கழித்து ஒரு வாலிபமான பையனை சந்திக்க நேர்கையில் ஏ தோ உள்ளே உறுத்த, அவருக்கு அருகே போனேன். அவரும் வேகமாக வந்து கைப்பற்றிக் கொண்டார். "உங்களை அப்பா எனக்கு அறிமுகப்படுத்திருக்கிறார். நான் உங்கள் நண்பரின் மகன். அம்மாவும் உங்களை பற்றி சொல்லிருக்கிறார்" என்று பணிவாக பேசினார். அது இறந்த போன என் நண்பரின் மகன் என்று தெரிந்துக் கொண்டேன். பெயர் என்ன என்று வெகு ஆவலாக கேட்டேன். "ராமன்" என்று பதில் சொன்னார். மேற்கொண்டு அவரோடு பேச எனக்கு வெகு நேரம் ஆயிற்று.




2 comments:

said...

உண்மைதான், உறவும் நட்பும் உயிரோடு இருக்கும் வரைதான் சிரிப்பும் கும்மாளமும், அவர் மறைந்த பின் அவரோடு தொடர்புடைய கலகலப்பான நிகழ்வுகள் கூட நெகிழ்வோடும், சற்றே கனத்த மனதோடுமே எண்ணிப்பார்க்கப்படும். ஆனால் இது அனைவர்க்கும் சாத்தியமல்ல, அன்பின் ஆளுமையும், அதைக்குறித்த தேடலுள்ளவர்க்குமே இது சாத்தியம். - மற்றுமொரு பாடம் நன்றி

said...

நன்றி நண்பரே.
மிகுந்த நிறைவாயிருக்கிறது உங்களின் பதிவுகளை படித்து கிரஹிக்கும்போது.
உங்கள் வாழ்வு செழிக்க பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
நீங்கள் முழுசை உடையர் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.
உங்கள் அபிப்ராயத்தை எழுதவும்.
அந்த மாபெரும் படைப்பை இப்போதைய நம் இலக்கிய சூழல் எப்படி எதிர் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து சிலாகிக்க ஆசை.
ஐயாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
அவரது ஆரோக்யத்துக்கு எங்களது பிரார்த்தனைகள்.
நன்றி.
வணக்கம்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.