Friday, July 10, 2009

சிவனுக்கு மதுரை என்றால் பிடித்தமா? சோழர்கள் அந்நியமா?

சோழர்கள் பல கோவில்கள் கட்டினார்கள். கற்றளிகள் எழுப்பினார்கள். ஆனால் திருவிளையாடல் புராணம் என்று சிவன் விளையாடியது மதுரையில் தானே? சிவனுக்கு மதுரை என்றால் பிடித்தமா? சோழர்கள் அந்நியமா?



இல்லை. அது அப்படி அல்ல. சோழ நாகரிகமும், பாண்டிய நாகரிகமும் வெவ்வேறு ஆனது.

சோழ நாகரிகம் அந்தணர்களுடைய பாதிப்பால் வடமொழியில் ஈடுபாடு வைத்து, ஆகம விதிமைகளை முன்னிறுத்தி, கோவில்கள் எழுப்பி, பூஜை புனஸ்காரங்கள், ஹோம யக்ஞாதிகளை முக்கியமாக வைத்து, பிறகு தனித்திருந்து ஜபம் செய்தலை தன்னுடைய இயல்பாக, கொள்கையாக வைத்தது.

ஆனால் பாண்டிய மக்களுக்கு வேத விஷயங்களில் ஈடுபாடு இல்லை. அந்த விவாதங்களில், விவகாரங்களில் மனம் செல்லவில்லை. தங்களுக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொரு ஆள் இருப்பதை பாண்டிய மக்கள் விரும்பவில்லை. சிவன் தன் வீட்டுப்பிள்ளை, தன்னோடு விளையாடும் பிள்ளை என்ற நினைப்பை கொண்டவர்கள். விதியின் விளையாட்டை இறைவன் விளையாட்டாக கருதியவர்கள். எப்பொழுதும் இடையிறாது இறைவனோடு இருக்கிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர்கள். இதனால் சிவன் விளையாட்டை திருவிளையாடற் புராணம் என்று சொல்லி மிகச் சாதாரண, மிக உயர்ந்த, பொருளாதாரத்தினால் நலிந்த, மேம்பட்ட மக்களோடு இறைவன் நேரடியாய் வந்து பழகுகிறான் என்பதை கதையாக்கி அனுபவித்து வளர்த்து வந்தார்கள்.

வேத வழி சோழ வழி. பக்தி நெறி பாண்டியன் வழி. இரண்டும் கடவுளுக்கு அருகே வெகு வேகமாக இழுத்துப் போகக்கூடிய வல்லமை உடையவை.

சீன ஸென் கதைகளை பற்றி உயர்வாக சொல்கிறார்களே. உங்களுக்கு அவைப் பற்றி ஏதும் தெரியுமா?


ஆஹா என் இளம் வயதில் பல ஸென் கதைகளை கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவை நீதி நியாயம் சொல்கிற கதைகள் அல்ல. கேட்டுவிட்டு மறந்து விடுகின்ற விடுகதைகள் அல்ல. ஆழ்ந்த தத்துவம் உள்ள அடக்கமான திருக்குறள் வடிவான கதைகள். இரண்டு வரியில் பெரிய தத்துவத்தை திருக்குறள் சொல்லவில்லையா. அதே போல ஒரு சிறுகதையை சொல்லி வாழ்வின் தத்துவத்தை, பிரமாண்டத்தை ஸென், க்வான் என்படும் இந்தக் கதைகள் முயற்சி செய்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். அது ஒரு மிகப் பெரிய மடாலயம். அதில் பல சீடர்களோடு ஒரு தலைமை துறவி இருந்தார். ஒவ்வொரு சீடராக ஞானம் பெற்று, குருவிடம் விடை பெற்று வெளியேறினார்கள். ஒரு சீடர் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படவில்லை.அடுத்த வருடம் போகலாம், அடுத்த வருடம் போகலாம் என்று பல வருடங்கள் அந்த சீடனை இருக்க வைத்துவிட்டார்கள். அந்த சீடன் மனம் நொந்தான். ஒரு வருடத்தில் சின்ன பையன்கள் எல்லாம் வெளியேறி விடுகிறபோது, பண்ணிரண்டு வருடம் வேலை செய்தும் என்னை வெளியேற்றவில்லையே என்ன காரணம் என்று யோசித்தான். கோபமானான். நேரே குருவிடம் போனான்.
‘நான் நன்றாக பெருக்குகிறேன், நன்றாக வேலை செய்கிறேன், சுத்தமாக தோட்ட வேலை செய்கிறேன். உங்கள் துணிகளை எல்லாம் துவைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுத்தம் செய்து வைக்கிறேன். அவ்வப்போது சமையலும் செய்து வைக்கிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறேன். இவ்வாறெல்லாம் பணி செய்வதால் என்னை வெளியே அனுப்பாமல் நீங்களே எப்பொழுதும் என்னை வேலைக்காரனாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேலைக்காரனாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. இங்கு வந்தது ஸென் தெரிவதற்கு எனக்கு எப்பொழுது ஞானம் வரும். எப்பொழுது வெளியே அனுப்புவீர்கள். அவர்கள் எல்லாம் ஞானிகளா, நான் இல்லையா’ என்று உரத்த குரலில் கத்தினான்.

அவன் பேசத் துவங்கும் போதே குரு கெட்டிலில் உள்ள தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தான். தொடர்ந்து குருவும் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அவன் இடையறாது கத்திக் கொண்டிருந்தான். குருவும் இடையறாது தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார். தேநீர் கோப்பையில் வழிந்து, போப்பையிலிருந்து தட்டில் விழுந்து, தட்டிலிருந்து மேஜையில் விழுந்து, மேஜையிலிருந்து தரையில் விழுந்து மொத்த தேநீரும் கொட்டும் வரை குரு அசையவில்லை. தேநீர் மொத்தமும் கீழே வழிந்து ஓடியது. அந்த தேநீர் குவளையை டக்கென்று ஒரு சத்ததோடு அவர் மேஜையில் வைத்தார். அந்த சீடன் விழித்துக்கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. ‘எனக்கு ஞானம் வந்து விட்டது’ என்று சொன்னான். குரு அவனை வணங்கி ‘போய் வா’ என்று விடை கொடுத்தார்.

என்ன புரிகிறது. உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருந்து, இடையறாது மனம் பேசிக் கொண்டிருந்தால். மனம் பேசுவதை வாய் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. உள்ளே இருப்பது மொத்தமும் வெளியே கொட்டி விடப்பட்டால், அப்பொழுது டக்கென்ற காலி ஓசை கேட்கும். உள்ளே காலியாக இருக்கிறது என்று எவனுக்கு தெரிகிறதோ அவனே ஞானி. இது போல பல கதைகள் இருக்கிறது.

இன்னொரு கதையும் சொல்வேன்.

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

11 comments:

said...

ஸென் கதைகளும், சோழ, பாண்டிய நாகரிகம் பற்றிய பதிலும் மிகவும் அருமை.

சந்துரு.

said...

அருமையான கேள்விகளும் அய்யாவின் அருமையான பதில்களும்.
நல்ல பதிவு.
அய்யாவின் பிட்டுக்கு மண் சுமந்த சொக்கரின் கதை எழுத்துநடை மீண்டும் நினைவுக்கு வந்தது.என்ன அருமையான உரைத்தல்?.மீண்டும் தேடி படிக்க வேண்டும்.

said...

நன்றி சந்துரு

said...

வணக்கம் கார்த்திகேயன். தங்கள் பாராட்டுக்கு நன்றி.

அய்யாவின் எழுத்துநடையைப் போல் அவருடைய உணர்ச்சிமயமான நேரடி விளக்கங்களும் மிக அற்புதமாக இருக்கும்.

It is a thing to admire and cherish for a long time. The essence of his explanation just goes into our mind and starts transforming us. It would be so convincing and eye-opening that we accept the changes willingly.

said...

மிக நல்ல கேள்வி.ஐயாவின் பதில் அருமை. திருவிளையாடல் புராணம் மதுரையில் விளையாடியது பற்றி இத்தனை நாட்கள் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இன்று புரிந்தது. கடவுளுக்கு அருகே செல்வதற்கான வழிகள் இரண்டு. ஒன்று வேத வழி மற்றொன்று பக்திநெறி என்றும் அதில் சோழர்கள் வேத வழி, பாண்டியர்கள் பக்தி வழி என்று எங்களைப் போன்றவர்களுக்கு உணர்த்தியதற்கு மிக்க நன்றி.. சீன ஸென் கதைகளின் தத்துவங்கள் படித்து உள்வாங்க வேண்டிய விஷயம்.என்ன அருமையான தத்துவங்களை உள்ளடக்கியது, ஐயா அவர்கள் கூரிய இந்த இரண்டு கதைகளை படிக்கும்போது, மேலும் ஸென் கதைகள் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. இது போல் இன்னும் பல கேள்விகளை தொடுக்க வேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுகொள்கிறோம்

கலைவினோத்

said...

Its amazing answers, I very much enjoyed the answers, especially zen stories and chola

Thank you for the posting, we expecting more

Rajmohan

said...

ஜென் விளக்கங்கள் மிக அருமை. அனேகமாக ஓஷோ போல ஜென் கதைகளின் மறைபொருள் விளக்கங்களை பாலாவை எழுதச்சொல்லுங்கள். (முதல் கதையை Forbidden Kingdom ஆங்கிலப்படத்தில் ஜாக்கிசான் கோடி காட்டியிருப்பார்)

மேலும் பாலாவின் சினேகமுள்ள சிங்கம் நாவலில் அம்மா பெண்ணிற்கிடையில் உரையாடலாய் ஒரு கேள்வி பதில் வரும்.

அம்மா : ஒரு பெரியவர் உன்னை வாழ்த்தி ஒரு ரோஜாப்பூ பரிசளித்தால் நீ என்ன செய்வாய் ?
பெண் : நன்றி சொல்லி வாங்கிக்கொள்வேன்.
அம்மா : ம்ஹூம்
பெண் : எதுக்கு கொடுத்தார் என்று தீவிரமாக யோசிப்பேன்
அம்மா : ம்ஹூம்
பெண் : ஏதோ கெட்ட எண்ணம் அதான் கொடுத்தாரா ?
அம்மா : ம்ஹூம்
பெண் : பின்ன என்ன செய்யணும் சொல்லேன் ? நீ என்ன செய்வே ?
அம்மா : ஒரு பெரியவர் என்னை வாழ்த்தி ஒரு ரோஜாப்பூ பரிசளித்தால் நான் அவரை பளாரென்று அறைவேன்.

காரணம் கேட்ட பெண்ணிற்கு அம்மா பதிலே சொல்லமாட்டார்.

இதுகூட ஏதோ ஜென் வாசனை அடிப்பதாக எனக்கொரு எண்ணம்.

என்ன என்பதை கொஞ்சம் கேட்டுச்சொல்ல இயலுமா ?

அன்புடன்
முத்துக்குமார்

said...

This things really wonderful.

Is it possibe could you please collect all question & answers which he said from the beginning and make it separate book.

It will more helpful to the youngsters & ager also.

arulkanthan

said...

Could you please collect his question and answer which printed various books,

make it separate book, It will useful for the youngsters.

said...

Please ask following topics to Ayya. It will be useful to many seekers

1. God Realization
2. Meditation
3. Mantras
4.Food
5.Yoga
6.Seva

said...

ஒரு சில திருத்தங்கள்....

இறைவன் (திரு நிறை செல்வ தியாகேசன்), திரு ஆருரில், 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தி உள்ளார்.

தொண்டருக்கு தொண்டராக தூது நடந்தது....திருவாருரில் தான். (சுந்தரமூர்த்தி நாயனாருக்காக, பரவை நாச்சியார் வீட்டிற்கு) தூது நடந்தது.... முதல் நிறைய உண்டு.

சுவாமி நாதன்.
98403 57892