Friday, November 27, 2009

என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்கிறபொழுதே யாராவது கொடுத்து விட்டார்களா என்பது போலத் தான் தொனிக்கிறது. கொடுத்துப் பெறுவதல்ல சுதந்திரம். அடித்துப் பிடுங்கப்படுவது. பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்று கேட்பீர்களாயின் அதை நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ‘போர்’ முனையில் வெகு வேகமாக தங்களுடைய சுதந்திரம் குறித்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
இன்றைய பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சுதந்திரம் என்பது என்ன.ஆண்-பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள். யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும். நான் அலுவலகத்திற்கு போகிறேன். நீ பாவாடை அணிந்து கொள் என்று அட்டகாசம் செய்வதா.


இல்லை. தனக்கு வேண்டும் என்பதை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது அறிவின் பாற்பட்ட சுதந்திரம்.


‘இந்த ப்ளவுஸ், இந்தப் புடவைக்கு மேச்சா இருக்காடி’ என்று நான்கு தோழிகளோடு இரண்டு ப்ளவுஸுக்கு கடை கடையாய் ஏறுவது சுதந்திரம் என்று எனக்குத் தோன்றவில்லை. எதிலேயோ அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.


‘அந்தப் பையன் என்னைப் பார்த்து லவ் யூன்னு சொல்றான். நான் என்ன செய்யட்டும்’ என்று தன்னுடைய தோழிகளோடு ஒருத்தி புலம்புவாளாயின் அவள் சுதந்திரம் பெற்றவளாக நான் நினைக்க மாட்டேன்.
‘நான் வேலைக்குப் போகட்டுமா, வேலைக்குப் போனா ரெண்டாயிரம் ரூபா காசு கிடைக்கும். காசு கிடைச்சா நம்ம வீட்ல அரிசி பருப்புக்கு உதவும்’ என்று அனுமதி கேட்டு கை பிசைந்து நின்றால், அவளுக்கும் ஏதோ அடிமை சிரமம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.


சுதந்திரம் என்பது தன்னுடைய விஷயங்களை தானே மிக சுயமாகச் சிந்தித்து செயலாற்றுவதுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சுதந்திரம் திருமணமான பெண்களுக்கும், இனி திருமணமாகப் போகிற பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே என் அபிப்ராயம்.
பெண்களுக்கு சில விஷயங்களில் தீர்மானம் செய்யும் அறிவு போதாது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிற அகம்பாவம் காரணம் அல்லது அவர்கள் சொல்வது சரிதான் என்று இவர்கள் கிடக்கின்ற அடக்கமும் காரணம்.


‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். அது பட்டுப்புடவையாக இருந்தாலும் சரி, கெட்டிக்கார புருஷனாக இருந்தாலும் சரி. ‘அவன் இல்லையெனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்ற பிடிவாதம் பிடிப்பது ஆரோக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நோய்த்தன்மை இருக்கிறது.
வாழ்க்கையை மிக லகுவாக எடுத்துக் கொள்வதும், அடுத்த கட்டத்திற்கு விரைவாக போவதும், விஷயங்களைத் தானே தீர்மானிப்பதும் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்கள். இதற்கு பொருளாதார விடுதலை நிச்சயம் உதவி செய்யும். பொருளாதார விடுதலை வேண்டுமாயின், படிப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். படிப்பு என்கிற விஷயத்திற்கு ஒரு முரட்டுத்தனம், வைராக்கியம் தேவைப்படுகிறது. தான் பெண், தான் மெல்லியவள், தான் நாசூக்கானவள், தான் பஞ்சுபோல் மிருதுவானவள் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்து மனதில் திண்மையும், மனத்திண்மையால் உடைகளில் மாற்றமும் ஏற்படுத்தி கம்பீரமாக தன்னை நடத்திக் கொண்டு போவதே சுதந்திரத்தின் அடிப்படையான விஷயம்.
ஆரம்ப கட்டங்களில் பெற்றோர்களின் சிறிய ஒத்துழைப்பு இருந்தால் போதும். கூடப் பிறந்தவர்களின் அனுசரணை இருந்தால் போதும். அப்படி வளர்ந்த பிறகும் அது கிடைக்கவில்லையெனில் அந்த இடத்தை விட்டு விலகி தனியாக வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.


தனிமையை உணர்ந்த எல்லோருமே விடுதலை பெற்றவர் என்பது யோக மார்க்கம் சொல்கின்ற வழி. தனிமையில் இருக்க பயந்து கொண்டுதான் பல பெண்கள் பிறரை சார்ந்தும், சார்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.


வன்முறையை தன்மீது ஏவி விட்டால், எந்த நிலையிலும் எப்படியும் சந்திக்கத் தயார் என்ற திமிரும், வீராப்பும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் வரவேண்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று பாரதி இதைத்தான் சொன்னான்.


மெத்தப்படிப்பு, மெல்லிய ரெளத்திரம், பொருளாதார மேன்மை, தன்னைத் தானே எடைப்போட்டு தான் யார் என்று தெளிகின்ற மேன்மை, அதனால் வரும் உன்னதம் அடைந்த பெண்ணுக்கு சுதந்திரம் காலுக்குக் கீழே இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இந்தவித விடுதலை நோக்கி பெண்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பது உண்மை. ஆனால் வெகுதூரம் போகவேண்டும்.

2 comments:

said...

பெண் சுதந்திரம் பற்றி ஐயா கூறியுள்ளது நன்றாக இருக்கிறது. எல்லா பெண்களும் இதை உள்வாங்க வேண்டிய விஷயம். பெண்கள் எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் புரிகிறது.
நன்றி
கலைவினோத்

said...

ஐயா
இதைபடித்தபிறகுதான் நான் சதந்திரமாக இருக்கின்றேனா என்று யோசிக்கவே ஆரம் பித்தேன். பெண் சுதந்திரம் பற்றி நீங்கள் உங்களுடை பல கதைகளில் பலவிதமாக எழுதியதில் ஈர்க்கப்பட்டு படித்திருக்கிறேன் என்பதை இப்பொழுது யோசிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய புத்தகங்களுடைய வழிகாட்டலில் நான் மெல்ல மெல்ல என்னுடைய சுதந்திரம் நோக்கி ந்ட்க்கிறேன் என்று புரிந்தது.
நன்றி